குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (17.06.19 முதல் 23.06.19 வரை)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

மேஷம்:

ராசிநாதன் செவ்வாய் ராகுவுடன் இருப்பதால் குறிப்பிட்ட சில மேஷத்தினர் இந்த வாரம் ஏற்றுமதி இறக்குமதி மற்றும் வெளிநாடு சம்பந்தப்பட்ட துறைகளில் நன்மைகளைப் பெறுவார்கள். பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் எச்சரிகையுடன் இருக்கவும். விரயங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சூதாட்டம், லாட்டரி சீட்டு போன்றவைகளை நம்ப வேண்டாம். மனதில் இருப்பதை வெளிப்படையாக எவரிமும் பகிர்ந்து கொள்ளவும் வேண்டாம். தாயார் வழியில் செலவுகள் வரலாம். தாயாரின் உடல்நிலை கவனிக்கப்பட வேண்டும்.

நாற்பது வயதைக் கடந்தவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். யாருக்கும் ஜாமீன் போட வேண்டாம். எக்காரணத்தைக் கொண்டும் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். சகோதர உறவு சற்று முன் பின்னாகத்தான் இருக்கும். வாழ்க்கைத்துணையால் ஆதாயங்கள் இருக்கும். சிலருக்கு விரும்பிய வேலை கிடைக்கும். அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் நேர்மையற்ற வழிகளில் வரும் வருமானத்தின் போது கவனமுடன் இருப்பது நல்லது. சிலருக்கு செய்யாத தவறுக்கு வீண்பழி வரலாம்.

ரிஷபம்:

ராசிநாதன் சுக்கிரன் ஆட்சியாக இருக்கும் யோக வாரம் இது. உங்களின்  எதிர்கால வாழ்க்கைக்கு உதவும் நபர்களை சந்திப்பீர்கள்.. வியாபாரிகளுக்கு சிக்கல்கள் எதுவும் இல்லை. பங்குச்சந்தை, சூதாட்டம் போன்ற சிறிய லாபங்கள் கிடைக்கும். வேலையின் காரணமாக பிரிந்திருந்த கணவன் மனைவியர் ஒரே இடத்திற்கு மாற்றலாவார்கள். வழக்குரைஞர்கள் சிலர் தங்களின் தனிச் சிறப்பான வாதத்தால் பிறரால் கவனிக்கப் பெறுவார்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்திற்கான ஆரம்பங்களோ அல்லது திருமணமோ நடக்கும்.

பணவரவுக்கு தடை இல்லை. பொருளாதார நிலைமை நன்றாகவே இருக்கும்.  தொழில் முட்டுக்கட்டைகள் விலகும். வேலையில் நிம்மதி கிடைக்கும்.  வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் உண்டு. 18,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 17-ம் தேதி காலை 10.43 முதல் 19-ம்தேதி இரவு 7.59 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் தூரப்பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம்.

மிதுனம்:

ராசிநாதன் புதன் ராசியிலேயே ராகு, செவ்வாயுடன் இணைந்துள்ளதால் இந்த வாரம் மிதுன ராசிக்கு தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் சிக்கல்களும், குறைகளும் இருக்கும். பணவரவில் சுணக்கம் இருக்கலாம். எதிர்பார்ப்புகள் இழுபறியாக இருக்கும் என்பதால் எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது. மனதில் குழப்பங்களும் முடிவெடுக்க முடியாத தடுமாற்றங்களும் இருக்கும். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். எவருக்கும் எதுவும் செய்து தருவதாக வாக்குக் கொடுத்தால் நிறைவேற்றுவது கடினம்.

சுக்கிரன் வலுவாக இருப்பதால் சிலருக்கு தாமதித்து வந்த வேலை இப்போது கிடைக்கும். வேலை பற்றிய தகவல்கள் வந்து சேரும். பணியில் இருப்போருக்கு இருக்கும் சிக்கல்கள் தீரும். 17,22,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 19-ம்தேதி இரவு 7.59 மணி முதல் 22-ம்தேதி காலை 7.39 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் புதிய முயற்சிகள், ஆரம்பங்கள் எதையும் செய்யாமல் தவிர்ப்பது நல்லது. எவரிடமும் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

கடகம்:

உங்களில் முதல் திருமணம் தோல்வி அடைந்து வேதனையில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் எதிர்கால நல்வாழ்விற்கான அடித்தளங்கள் அமையும். புதிதாக தொழில் தொடங்க இருப்பவர்களுக்கு மற்றவர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். முப்பது வயதிற்கு உட்பட்டவர்களுக்கு ஒரு மாற்றம் உண்டு. சிலர் வெளிமாநில வெளிநாடு பயணம் செல்வீர்கள். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத்துணை விஷயத்தில் இனிமையான சம்பவங்கள் உண்டு. இளைய பருவத்தினருக்கு சந்தோஷமான விஷயங்கள் இருக்கும்.

பங்குச்சந்தை, சூதாட்டம் போன்ற யூக வணிக தொழிலில் உள்ளவர்களுக்கு சிறப்பு நற்பலன்கள் உண்டு. போட்டி, பந்தயங்கள் வெற்றியை தரும். நீண்ட நாள் சந்திக்காத ஒரு உறவினரையோ, நண்பரையோ இந்த வாரம் சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள். 19,20,21,24 ஆகிய தினங்களில் பணம் வரும். 22-ம்தேதி காலை 7.39 மணி முதல் 24-ம்தேதி இரவு 8.19 மணி வரை சந்திராஷ்டம தினங்கள் என்பதால் இந்த நாட்களில் அலைச்சல் தரும் வேலைகளைச் செய்ய வேண்டாம். வெகுதூர பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது.

சிம்மம்:

பதினொன்றில் இருக்கும் ராகுவால் உங்களால் இப்போது எதையும் சாதித்துக் காட்ட முடியும். அன்னிய இன, மத, மொழிக்காரர்கள் சரியான நேரத்தில் நல்ல உதவிகளை செய்வார்கள். குறிப்பாக கிறிஸ்துவ நண்பர்களால் நன்மைகள் இருக்கும். சிலருக்கு வெளிமாநில அல்லது வெளிநாட்டு பயணங்களும், இட மாறுதல்களும் இருக்கும். கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்து சாதிப்பீர்கள். வெளிநாட்டில் இருக்கும் மகன், மகளிடமிருந்து நல்ல செய்தி வரும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் லாபங்களை பெறுவார்கள்.

வாழ்க்கைத் துணைவர் மூலம் சந்தோஷங்கள் உண்டு. அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள். மேல் அதிகாரியின் தொந்தரவு இருக்காது. சம்பள உயர்வுக்கு முதலாளி இப்போது சம்மதிப்பார். பணவரவிற்கு குறையில்லை என்பதால் பற்றாக்குறை இருக்காது. கடன் தொல்லைகளால் சிக்கல்களில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் கடனை தீர்ப்பதற்கான வழிகள் தெரிய ஆரம்பிக்கும். சிலர் உல்லாசப்பயணம் செல்வீர்கள். அனைத்து தரப்பினருக்கும் கெடுதல்கள் இல்லாத வாரம் இது.

கன்னி:

பரம்பொருளின் அருளினால் இந்த வாரம் கன்னி ராசிக்கு அனைத்து விதமான நன்மைகளும் தாராளமாக உண்டு. குறிப்பிடத்தக்க அளவில் பணவரவுகள் இருக்கும் என்பதால் பொருளாதார நிலையும் மேன்மையாகவே இருக்கும். உங்களின் எதிர்ப்புகளும் எதிரிகளும் பலம் இழக்கும் வாரம் இது. யோகாதிபதிகள் வலுப்பெற்று இருப்பதால் அனைவருக்கும் ஏதேனும் ஒரு விஷயத்தில் நிச்சயமாக மனதிற்கு சந்தோஷமான சம்பவங்களும், லாபங்களும் உண்டு. குடும்பத்தில் புதிய வெளிச்சம் இருக்கும்.

ஏழுக்குடையவன் மூன்றில் வலுவாகி ஏழைப் பார்ப்பதால் வாழ்க்கைத்துணை வழியில் இலாபங்களும், வரவுகளும், ஆதரவான நிலையும் இருக்கும். சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைத்துணையை இன்னார்தான் என்று தெரியாமல் சந்திப்பீர்கள். தந்தையைப் பிரிந்து இருப்பவர்கள் அவரைத் தேடிச் சென்று ஆசிகளைப் பெற்று வாருங்கள். அனைத்தும் சிறக்கும். பெண் தொழிலாளிகளை கொண்ட தையல், எக்ஸ்போர்ட் போன்ற நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு இந்த வாரம் மிகச்சிறந்த வாரம்.

துலாம்:

ஐந்திற்குடையவன் சனியாகி மூன்றில் அமர்ந்து பாபர் தொடர்பு பெறுவதால்  இந்தக் வாரம் உங்களில் சிலருக்கு பிள்ளைகள் வழியில் செலவு இருக்கும். பிள்ளைகள் ஏதாவது வம்பு இழுத்துக் கொண்டு வரலாம் என்பதால் குழந்தைகளின் மேல் அக்கறை வையுங்கள். அவர்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருக்கிறதா என்பதை கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். சுக்கிரன் வலுவாக இருப்பதால் கலைஞர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. வேலை செய்யும் இடத்தில் பிரச்னைகள் எதுவும் இருக்காது. நிம்மதி இருக்கும்.

வியாபாரத்தில் இலாபம் உண்டு. சிலருக்கு சொல்லிக் கொள்ளும்படியான பணவரவு கிடைக்கும். பணக்கஷ்டங்கள் தீரும். மறைமுக இலாபங்கள் மற்றும் வருமானங்கள் இருக்கும் வாரம் இது. இளைய பருவத்தினருக்கு இந்த வாரம் காதல் வரும். சிலர் ரகசியமான காரியங்களை செய்வீர்கள். அவற்றில் வெற்றியும் பெறுவீர்கள். தூர இடங்களில் இருந்து நல்லசெய்திகள் கிடைக்கும். தந்தையின் ஆதரவும் ஆசிகளும் இந்த வாரம் உண்டு. இன்சூரன்ஸ், மார்க்கெட்டிங், போன்ற துறையில் இருப்பவர்களுக்கு இது நல்ல வாரமாக அமையும்.

விருச்சிகம்:

இதுவரை வேதனைகளையும் அவுமானங்களையும் மட்டும் சந்தித்த விருச்சிக ராசி இளைய வயதினர் இனிமேல் முன்னேற்றத்தை காண்பீர்கள். ஏழரைச் சனியால் அவதிப்பட்ட உங்களுக்கு இந்த வாரம் யோகாதிபதி சந்திரன் நல்லநிலை பெறுவதால்  தொழில், வியாபாரம், வேலை முதலிய ஜீவன அமைப்புகளில் ஆறுதலான வகையில் நல்ல பலன்கள் நடக்கும். சிரமங்கள் குறையும். உங்களில் திருமணம் ஆகாதவருக்கு இப்போது உறுதி ஆகும். விருச்சிகத்திற்கு நல்ல பலன்கள் நடைபெறும் வாரம் இது.

கடன் தொல்லைகளில் சிக்கி நிம்மதியை இழந்தவர்களுக்கு அதில் இருந்து விடுபடுவதற்கான வழிகள் தோன்றவும், செயல்படவும் ஆரம்பிக்கும். வேலையில் இருப்பவருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு, நீண்டநாள் நிலுவையில் இருக்கும் தொகைகள் கிடைத்தல் போன்ற பலன்கள் நடைபெறும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் சந்தோஷத்தை தருவார்கள். விரும்பிய இடங்களுக்கு குடும்பத்துடன் போய் வருவீர்கள். விருச்சிக ராசிக்கு இது பயனுள்ள வாரமாகவே இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

தனுசு:

தனுசுக்கு இந்த வாரம் மகிழ்ச்சி நிகழ்ச்சிகள் உள்ள வாரமாக இருக்கும். பத்துக்குடைய புதன் ஆட்சி பெற்று ராசியைப் பார்ப்பதால் நல்ல வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு இப்போது பொருத்தமான வேலை அமையும். கலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். உடல்நலம் சரி இல்லாதவர்கள் ஆரோக்கியம் மேம்படுவார்கள். ஏழில் செவ்வாய் பாபவலுப் பெறுவதால் எதற்கெடுத்தாலும் எரிச்சலும் கோபமும் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்.

என்ன பிரச்னை என்றாலும் குருபகவான் செவ்வாயின் நட்பு வீட்டில் இருப்பதால் பணவரவு இருக்கும். மூத்த சகோதரர்கள் உதவி உண்டு. சிலருக்கு சொந்த ஊருக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னை முடித்து வைக்கப்படும். வெளிநாட்டில் இருக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல மாற்றங்கள் நடக்கும். எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடிய சில விஷயங்களை இப்போது செய்வீர்கள். ஒரு சிலருக்கு வீடு அல்லது வாகனம் புதியதாகவோ ஏற்கனவே உள்ளதை மாற்றியோ அமையும் வாய்ப்புகள் உள்ளது.

மகரம்:

ஆறாமிடத்தில் இருக்கும் ராகுவால் தொழிலும், சொந்த வாழ்க்கையிலும் இருக்கும் எதிரிகளையும், எதிர்ப்புகளையும் ஜெயிக்க முடியும். கடன்தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். இதுவரை பயமுறுத்திக் கொண்டிருந்த கடன்காரர்கள் உங்கள் மேல் நம்பிக்கை வைப்பார்கள். புதிய கடன் வாங்கி பழைய கடன்களை அடைக்க முடியும். ராசிநாதன் சனி சூட்சும வலுவில் இருப்பதால் சொந்தத் தொழில், வியாபாரம் போன்றவைகள் நன்றாக நடக்கும். குறிப்பாக ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு அனைத்து விஷயங்களும் கை கொடுக்கும்.

மஞ்சள் நிற பொருட்களால் லாபம் அடைவீர்கள். பிடிவாத குணத்தால் சில நல்ல வாய்ப்புகளை இழப்பீர்கள். கலைஞர்களுக்கு சிறப்புக்கள் சேரும். அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு பிரச்னைகள் எதுவும் இருக்காது. குறிப்பிட்ட சிலருக்கு வேலை மாற்றம் நல்லது பணி இடமாற்றம் இருக்கும். உங்களில் சிலருக்கு தூரப்பயணங்களால் லாபங்கள் உண்டு. சொன்ன வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இதுவரை பாராட்டாதவர்கள் இப்போது உங்களின் தனித்திறமையை உணரும்படி நடந்து கொள்வீர்கள்.

கும்பம்:

கும்பத்திற்கு இப்போது அனைத்திலும் மேன்மையான பலன்களே நடக்கும். ராசிநாதன் சனி வலுவுடன் இருப்பதால் உங்களின் நீண்டநாள் எண்ணங்களையும் லட்சியங்களையும் இப்போது நிறைவேற்றி கொள்ள முடியும். தனாதிபதி குருவும் நன்மை தரும் அமைப்பில் உள்ளதால் வருமானத்திற்கு குறைவு இருக்காது. பணப்புழக்கம் கையில் இருக்கும். நான்கில் சுக்கிரன் ஆட்சியாக இருப்பது சாதகமான அம்சம் என்பதால் இது எதிர்மறை பலன்கள் எதுவும் இல்லாத வாரமாக இருக்கும்.

அதிக பணம் புரளும் இடங்களில் பணி புரிபவர்கள், வங்கித் துறையினர் இந்த வாரம் அலுவலகங்களில் மதிப்பு, மரியாதைகளை பெறுவார்கள். மூன்றாம் அதிபதி செவ்வாய் ராகுவுடன் இணைவதால் அடிக்கடி பயணங்கள் செய்ய வேண்டி இருக்கும். அதனால் லாபங்கள் உண்டு. வெளிநாடு சம்மந்தப்பட்ட மல்டிநேஷனல் கம்பெனிகளில் வேலை செய்பவர்களுக்கு சிறப்புகள் சேரும். பெண்களால் இந்த வாரம் செலவுகள் இருக்கும். மனைவிக்கு ஏதேனும் நகை வாங்கி கொடுப்பீர்கள்.

மீனம்:

மூன்றில் சுக்கிரன் ஆட்சியாகி முயற்சி ஸ்தானம் வலுப்பெறுவதால் உங்களில் சிலருக்கு இதுவரை இருந்து வந்த தன்னம்பிக்கை இல்லாத நிலை விலகும். எல்லாவற்றிலும் விடாமுயற்சியுடன் இறங்கி சாதித்து காட்டுவீர்கள். எடுத்துக் கொண்ட காரியங்களை நல்லவிதமாக முடித்து பெயர் எடுப்பீர்கள். தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். அப்பாவின் அன்பு கிடைக்கும். சிலருக்கு ஆலய திருப்பணிகளில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். சிலரின் கணவருக்கோ, மனைவிக்கோ முக்கியமான விஷயங்களில் எதிர்பாராத நன்மைகள் இருக்கும்

சகோதரர்களுடன் அனுசரித்துப் போவது நல்லது. இரும்பு ஆயுதங்களை கையில் வைத்து பணிபுரியும் டெய்லர் போன்ற துறையினருக்கு இந்தவாரம் லாபங்கள் உண்டு. யாரையும் நம்ப வேண்டாம். எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். யாருக்கும் வாக்கு கொடுப்பதோ, எவரையும் நம்பி பணம் தருவதோ கூடாது. பத்தாம் வீடு வலுப்பெறுவதால் இந்த வாரம் போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். அலுவலகங்களில் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்கள் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவார்கள்.

(17.06.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.