குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (10.06.19 முதல் 16.06.19 வரை)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

மேஷம்:

மேஷத்தினருக்கு இது யோக வாரமே. உங்களில் சிலருக்கு ஒரு குறிப்பிட்ட பலனாக ஒன்பதாம் வீட்டில் இருக்கும் சனி, கேதுவால் அப்பாவைப் பற்றி அல்லது அவரது ஆரோக்கியத்தைப் பற்றி வருத்தமான சம்பவங்கள் இருக்கலாம். தந்தையின் உடல்நிலையை அக்கறையுடன் கவனியுங்கள். ஒருமுறை ஊருக்கு சென்று அப்பாவைப் பார்த்து பேசி அவரின் ஆசிகளைப் பெற்றுத் திரும்புங்கள். இளைய பருவத்தினர் மிகவும் யோகமான நிகழ்ச்சிகளை சந்திப்பீர்கள். எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் வாரம் இது.


உங்களில் சிலருக்கு எதிர்காலத்தில் எந்தத் துறையில் இருக்கப் போகிறீர்கள் என்பதை இந்த வாரம் நிர்ணயிக்கும். எதிர்ப்புகள் பலவீனமாகும். கடன் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில் லாபங்கள் உண்டு. அரசு, தனியார்துறை ஊழியருக்கு இது நல்ல வாரமே. 11,12 ஆகிய நாட்களில் பணம் வரும். 15-ம் தேதி அதிகாலை 4.01 மணி முதல் 17-ம்தேதி காலை 10.43 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் நீண்ட தூர பயணங்களை தள்ளி வைப்பது நல்லது.

ரிஷபம்:

ரிஷப ராசிக்கு கெடுபலன்கள் எதுவும் சொல்ல இயலாத வாரம் இது. ராசிநாதன் சுக்கிரன் ராசியிலேயே ஆட்சியாக இருப்பது மிக நல்ல அமைப்பு. உங்களில் சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டமும், பங்குச்சந்தை சூதாட்டம் போன்ற ஸ்பெகுலேசன் துறைகளில் லாபம் வருவதும் இப்போது உண்டு. தந்தைவழி உறவினர்களிடம் நெருக்கம் உண்டாகும். இதுவரை இருந்துவந்த பங்காளிப் பிரச்னை தீரும். பூர்வீக சொத்துக்களில் உங்கள் பாகம் சேதமில்லாமல் கிடைக்கும். பெரியப்பா சித்தப்பாக்கள் மற்றும் தந்தையுடன் பிறந்த அத்தைகளால் லாபம் இருக்கும்.

ராசிநாதன் வலுவாக இருப்பதால் இந்த வாரம் நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் வெற்றி பெறுவது நிச்சயம். பெண்களுக்கு வேலைப்பளு அதிகம் இருக்கும். சிலருக்கு தாயார் வழியில் செலவுகளோ, விரயங்களோ இருக்கும். வீடு ரிப்பேர், வாகன பழுது போன்றவைகளை செய்ய வேண்டி இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும் என்றாலும் அதற்கு சரியாக வீண் செலவுகளும் இருக்கும் என்பதால் ஒன்றுக்கு இரண்டுமுறை யோசித்து செலவு செய்யவும். அரசுத்துறையில் இருப்பவர்களுக்கு இது யோகவாரம்தான்.

மிதுனம்:

மிதுன ராசிக்கு இது தடைகள் உள்ள வாரமாக இருக்கும். ராசிநாதன் புதன் ராசியிலேயே இருப்பதால் கெடுதல்கள் எதுவும் இருக்காது. ஒரு குறிப்பிட்ட பலனாக உங்களில் கோர்ட்டு, கேஸ் என்று அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு நிம்மதி கிடைக்கும் நேரம் இது. தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு சில சங்கடங்கள் இருக்கும். அடுத்தவர்களை நம்பி எதையும் செய்ய வேண்டாம். கீழே வேலை பார்ப்பவரிடம் எந்த விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அதனால் சிக்கல்களும் நம்பிக்கை துரோகங்களும் இருக்கும்.

இளைய பருவத்தினருக்கு திருமண காலம் கூடி வந்து விட்டது. தடைகள் நீங்கி வரன்கள் கூடிவந்து நவம்பருக்கு மேல் திருமணம் நடக்கும். காதலித்துக்     கொண்டிருந்தவர்களுக்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். ஒரு சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து வாழ்க்கைத் துணைவரை அடையாளம் காண்பீர்கள். எவரையும் நம்பி முதலீடு செய்வதோ, அடுத்தவரை நம்பி ஜாமீன் கையெழுத்து போடுவதோ வேண்டாம். புதிதாக வேலை தேடிகொண்டிருக்கும் இளைய பருவத்தினருக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும்.

கடகம்:

எதிர்ப்புகள் அனைத்தையும் நீங்கள் வெற்றி கொள்ளும் அருமையான வாரம் இது. ஆறாம் இடத்தில் உள்ள சனியும், கேதுவும் எதிர்ப்புகள் அனைத்தையும் ஒடுக்கி உங்களுக்கு வெற்றியைத் தேடித் தருவார்கள். உங்களில் சிலருக்கு தந்தையிடமிருந்து ஆதாயம் இருக்கும். இளைஞர்களுக்கு விரும்பிக் கேட்கும் ஒரு பொருளை உங்கள் அப்பா வாங்கித் தருவார். வெளிநாட்டு விஷயங்கள் நல்ல பலன் அளிக்கும் என்பதால் இப்போது வெளிநாட்டு வேலைக்கோ அல்லது வெளி தேசத்தில் மேற்படிப்பு படிக்கவோ செல்ல முடியும்.

தெய்வ வழிபாடு செய்வீர்கள். தொழில் விஷயங்களில் எந்தவித சிக்கல்களும் வருவதற்கு வாய்ப்பு இல்லை. வேலையும் சுமுகமாகவே நடைபெறும். வேலை மாற்றத்தை எதிர்பார்க்கும் இளைய பருவத்தினருக்கு மாற்றங்கள் உண்டு. அரசு ஊழியர்கள் அதிக வருமானத்திற்கு ஆசைப்பட்டு நேர்மையற்ற விஷயங்களை செய்யாதீர்கள். சென்ற காலங்களில் உங்களை வாட்டி வதைத்த சோம்பல், மந்தம், விரக்தி மற்றும் தோல்வி மனப்பான்மைகள் இனிமேல் உங்களிடம் நெருங்காது. கடகத்தின் யோக வாரம் இது.

சிம்மம்:

உங்களின் கை சற்றுத் தாழ்ந்து உங்களைப் பிடிக்காதவர் கை ஓங்கும் வாரம் இது. ராசிநாதன் சூரியன் பாபர்களுடன் சேருவதால் உங்களின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவைப்படும். சிலருக்கு மருத்துவச் செலவுகள் இருக்கலாம். பாபத்துவமாக சனியில் பார்வையில் இருக்கும் செவ்வாயால் உங்களுக்கு இந்த வாரம் அதிகம் கோபம் வரக்கூடும். யாரையாவது நீங்கள் கோபப்பட்டுத் திட்டி அதனால் ஏதாவது எதிர்மறையான விளைவுகள் ஏற்படலாம் என்பதால் கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது.

இளைய பருவத்தினர் வேலையில் அக்கறையுடன் இருங்கள். ஐந்தில் இருக்கும் கிரகங்கள் உங்களை எங்கே கொண்டு போய் கவிழ்க்கலாம் என்று செயல்படும் என்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. சுக்கிரன் வலுவாக இருப்பதால் பெண்கள் விஷயத்தில் நன்மைகள் நடக்கும். சகோதரிகள் உதவுவார்கள். குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் இன்னும் நான்கு வாரங்களுக்கு ஒருவிதமான முடக்க நிலையை சந்திப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் இருக்க வேண்டும்.

கன்னி:

ராசிநாதன் புதன் பத்தாம் வீட்டில் வலுவாக இருப்பதும் யோகாதிபதிகளான சுக்கிரனும், சனியும் நல்லநிலையில் இருப்பதும் கன்னிக்கு குறைகள் எதுவும் சொல்ல முடியாத அமைப்பு. அதேநேரத்தில் செலவுகளை குறிக்கும் விரயாதிபதி சூரியன், பாபர்களான சனி, செவ்வாய், ராகுவுடன் இணைவதால் உங்களில் பெரும்பாலானவர்களுக்கு பெண்கள் சம்பந்தப்பட்ட விரையங்கள் உண்டு. முக்கிய பலனாக இந்த வாரம் என்றைக்கோ ஒருநாள் பிரதிபலன் பாராமல் செய்த உதவியால் இப்போது உங்களுக்கு நல்லபலன்கள் கிடைக்கும்

விரயாதிபதி பாபத்துவ வலுவாக இருப்பதால் போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். அவைகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது கடினம். தேவை இல்லாமல் யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். கூடுமானவரை எல்லோரையும் அனுசரித்து போவது நல்லது. நான்காமிடத்தில் பாபக் கிரகங்கள் அனைத்தும் தொடர்பு கொள்ளுவதால் இந்த வாரம் தாயார், வீடு, வாகனம் வழியில் மன வருத்தங்கள் வரும். வீடு கட்டுபவர்கள் காண்ட்ராக்டர்களிடம் ஏமாற நேரிடும். கவனமாக இருங்கள். 12,16,17 ஆகிய நாட்களில் பணம் வரும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு எண்ணம் போலவே எல்லாம் நடக்க இருக்கின்ற வாரம் இது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் சுக்கிரன் ஆட்சியாக இருப்பதால் பெண்களின் மூலமான அனுகூலங்களும், நீண்ட நாட்களாக எதிர்பார்த்து கிடைக்காமல் போன சில விஷயங்களும் இப்போது வெற்றிகரமாக கிடைக்கும். சுக்கிரன் எட்டில் இருப்பதால் உங்களில் சிலருக்கு வாகனச்செலவுகள் இருக்கலாம் அல்லது வீடு ரிப்பேர், வீட்டை அழகுபடுத்துதல் போன்ற செலவுகள் இருக்கலாம். வீடு வாகன விஷயங்களில் புதிய மாற்றங்கள் இருக்கும்.

உங்களில் சிலருக்கு ஒரு காரியத்தை நல்லவிதமாக முடித்து பாராட்டுப் பெறக்கூடிய சம்பவங்கள் இருக்கும். மூன்றாமிட சனியால் பொருளாதார மேன்மைகள் இருக்கும். அதிகாரம் செய்யும் பதவியில் உள்ளவர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரம். சிலருக்கு எதிர்பார்த்த சிலவிஷயங்கள் கிடைக்காமல் தள்ளிப் போவதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றன. அனைத்து விஷயங்களிலும் பொறுமையை கடைப்பிடியுங்கள். நடுத்தர வயதுக்காரர்களுக்கு வாழ்க்கைத்துணை விஷயத்தில் சிறப்பான சம்பங்கள் இப்போது இருக்கும்.

விருச்சிகம்:

அனுஷம் நட்சத்திரத்தினரின் ஆனந்த வாரம் இது. தடைகள் எதுவும் இந்த வாரம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். நிலுவையில் இருக்கும் விஷயங்கள் முடிவுக்கு வந்து உங்களுக்கு சாதகமாக அனைத்தும் நடக்கும். புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். நல்லவை நடக்கும். காவல்துறை, கோர்ட் போன்றவற்றில் வழக்கு இருப்பவர்கள் சந்தோஷப்படும் அளவிற்கு வழக்கு சாதகமாகும். வேலை செய்யும் இடத்தில் உங்களைப் பிடிக்காதவரின் கை தாழ்ந்து உங்கள் கை உயரும்.

கேட்டை நட்சத்திரத்தினரின் வேதனைகள் தீரப் போகிறது. தெய்வ அனுகூலம் முழுமையாக கிடைக்கும். அனைத்து விஷயங்களிலும் இருந்த வந்த தொல்லைகள் தடைகள் தாமதங்கள் விலகப் போகிறது. இனி எல்லா நாட்களும் உங்கள் நாட்கள்தான். உங்களில் சிலருக்கு வேலைக்கு செல்லும் மனைவியால் உதவிகளும் தேவைகள் நிறைவேறுதலும் இருக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். அடைக்கப்பட்ட அனைத்து கதவுகளும் விருச்சிக ராசிக்கு இனி திறக்கும். நீங்களும் அதை உணருவீர்கள்.

தனுசு:

இந்த வாரம் இளைஞர்களுக்கு ஒரு சிறப்பு பலனாக உங்களில் மூலம், பூராடம் நட்சத்திரக்காரர்களில் மது அருந்தும் பழக்கம் உள்ள இளைஞர்கள் சிறிது காலம் அதனைக் கை விடுவது நல்லது. இயலாவிடில் அந்த நேரத்தில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். தகராறுகள் வரும் வாரம் இது. சனி உங்கள் ஜென்மராசியில் சென்று கொண்டிருப்பதால் பலவிதமான தொல்லைகளை அவரது காரகத்துவமான மதுப் பழக்கத்தின் மூலமாகவே தருவார் என்பதால் மனதை ஜெயிக்க முடிந்தால், மரணத்தையும் ஜெயிக்கலாம்.

முக்கிய பலனாக குழந்தைகளில் உடல்நலத்தில் அக்கறையும், கவனமும் தேவைப்படும். சிறு குழந்தைகளுக்கு சாதாரண உடல்நலக் குறைவு என்றால் கூட அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்வது நல்லது. எக்காரணத்தைக் கொண்டும் அதிக வட்டிக்கு கடன் வாங்குவதை தவிருங்கள். அவசரம் என்று கிடைக்கும் வட்டியில் பணம் வாங்கினால் பின்னால் கடன் பிரச்னைகளால் மனக் கலக்கம் வரலாம். பணியிடங்களில் எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். பொறுமை தேவைப்படும் வாரம் இது,

மகரம்:

மகர ராசியினர் திருப்புமுனையான நல்ல விஷயங்களை சந்திக்கும் வாரம் இது. அதேநேரத்தில் முப்பதுவயதுகளில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு ஏழரைச் சனி அமைப்பின் காரணமாக பின்னடைவுகள் வரக்கூடும் என்பதால் எதிலும் அகலக்கால் வைக்காமல், புதிய முயற்சிகளைத் தொடங்காமல் கவனத்துடன் இருக்க வேண்டிய வாரமாகவும் இது இருக்கும். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியம். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

பிள்ளைகள் விஷயத்தில் சிலருக்கு மனவருத்தங்களும் செலவுகளும் இருக்கும். சனி குழந்தைகளின் போக்கில் மாற்றங்களை உண்டு பண்ணுவார் என்பதால் பருவ வயதுக் குழந்தைகளின் மேல் ஒரு கண் வைப்பதும் அவர்களை கண்காணிப்பதும் நல்லது. சிலருக்கு வாழ்க்கைத்துணைவர் விஷயத்தில் சில ஏறுக்குமாறான விஷயங்கள் நடக்கும். கணவன் மனைவி உறவில் கருத்து வேறுபாடுகள் இருக்கும். இருவரில் ஒருவர் பொறுத்துப் போவதன் மூலம் எதையும் சமாளிக்கலாம் என்பதால் பொறுத்துப் போங்கள்.

கும்பம்:

வாரம் முழுவதும் ராசிநாதன் சனி வலுவான நிலையில் இருப்பதும், வீடு, வாகனம், தாயார், கல்வி போன்றவைகளை தரும் நான்காம் அதிபதியான சுக்கிரன் ஆட்சியாக இருப்பதும் கும்ப ராசிக்கு நன்மைகளை தரும் அமைப்பு என்பதால் நல்லவை நடக்கும் வாரம் இது. சிலர் எதிர்கால வாழ்க்கைத் துணையை இப்போது சந்திப்பீர்கள். சுக்கிரன் வலுவாக இருப்பதால் உங்களில் சிலருக்கு காதல் வரும் நேரம் இது. இளைய பருவத்தினர்களுக்கு மளமள வென்று வரன்கள் நிச்சயிக்கப்பட்டு திருமணம் கூடி வரும்.

இந்த வாரம் வீண் செலவுகளும், தேவையற்ற விரயங்களும் இருக்கும் என்பதை கிரகநிலைகள் குறிப்பாக உணர்த்தினாலும் செலவு செய்வதற்கு ஏற்ப தேவையான வருமானமும், பணவரவும் நிச்சயம் இருக்கும் என்பதை உறுதி செய்கின்றன. கவலைகளுக்கு இடமில்லை. 12,13 ஆகிய தினங்களில் பணம் வரும். 10-ம்தேதி இரவு 8.00 மணி முதல் 12-ம்தேதி இரவு 11.21 மணி வரை சந்திராஷ்டம தினங்கள் என்பதால் இந்த நாட்களில் அலைச்சல் தரும் வேலைகளைச் செய்ய வேண்டாம். வெகுதூர பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது.

மீனம்:

மீன ராசிக்கு சிறப்புகளைத் தரும் வாரம் இது. மீனத்தினர் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அனைத்தையும் ஜெயித்து உங்களுடைய சாமர்த்தியத்தை நிலை நாட்டுவீர்கள் என்பதால் மீனத்திற்கு ஒருபோதும் சரிவுகள் இல்லை. இந்த வாரம் இளைய பருவத்தினர் சிலருக்கு மனம் விரும்பிய வாழ்க்கை கிடைக்கும். காதலர்களுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். பிள்ளைகளால் நல்ல விஷயங்கள் நடக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல் உண்டு. சிலருக்கு குடும்பத்தில் சுப காரியங்களுக்கான நிச்சய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

வேறு வேறு ஊர்களில் பிரிந்து வேலை செய்யும் கணவன் மனைவிக்கு இப்போது ஒரே ஊருக்கு டிரான்ஸ்பர் கிடைக்கும். வார இறுதி நாட்களில் மட்டும் குடும்பத்தோடு இருந்த நிலை மாறி குடும்பம் ஒன்று சேரும். புனித இடங்களை வழிபடும் பாக்கியம் உண்டாகும். 14,15,16 ஆகிய நாட்களில் பணம் வரும். 12-ம்தேதி இரவு 11.21 மணி முதல் 15-ம்தேதி அதிகாலை 4.01 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் தொல்லைகள் எதுவும் இருக்காது. ஆயினும் மனம் ஒருநிலையில் இருக்காது என்பதால் புது முயற்சிகளைத் தவிர்க்கவும்.

(10.06.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.