குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (20.05.19 முதல் 26.05.19 வரை)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

மேஷம்:

வார ஆரம்பத்தில் ராசிநாதன் செவ்வாய் ராகுடன் இணைந்திருந்தாலும் பரிவர்த்தனை நிலையில் ராசியோடு தொடர்பு கொள்வதால் மேஷ  ராசிக்காரர்கள் சிக்கல்களில் இருந்து வெற்றிகரமாக வெளியே வரும் வாரம் இது. அதேநேரத்தில் செவ்வாய் சனியின் பார்வையில் இருப்பதால் உங்களில் சிலருக்கு மனம் பதற்றப்படும் விஷயங்கள் நடக்கும். எதிலும் நிதானமாகவும் இருக்க வேண்டிய வாரமிது.. இரண்டில் இருக்கும் சூரியனால் சிலருக்கு கொடுக்கல் வாங்கல்களில் ஏமாற்றம் இருக்கும் என்பதால் பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை.

பொதுவாக மேஷத்தினர் கோபக்காரர்களாக இருப்பீர்கள். பள்ளிப் படிப்பை விட அனுபவத்தை வைத்தே வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். சுலபத்தில் உங்களை யாரும் ஏமாற்ற முடியாது. யாராவது உங்களை அன்பு காட்டி ஏமாற்றினால்தான் உண்டு. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அருமையான வாய்ப்புகள் வரும். அலுவலகத்தில் பிறரால் மதிக்கப்பட்டு பாராட்டுப் பெறுவீர்கள்.  தெய்வதரிசனம் கிடைக்கும். வெகு நாட்களாக திட்டம் போட்டுக் கொண்டிருந்த வடமாநில புனிதயாத்திரை போகமுடியும். இது உங்களுக்கு யோக வாரம்தான்.

ரிஷபம்:

ராசிநாதன் சுக்கிரன் 12-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நல்ல வாரம் இது. ராசியின் யோகர்களான சுக்கிரன், சனி, புதன் மூவரும் ராசியுடனும் ஒருவருக்கொருவரும் நல்லமுறையில் தொடர்பு கொள்வதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன நிம்மதி உண்டு குறிப்பாக ரோகினி நட்சத்திரக்காரர்கள் நற்பெயர் பெறுவீர்கள். இளைய பருவத்தினருக்கு  எதிர்கால நல்ல வாழ்க்கைக்கு அஸ்திவாரமாக அமையக்கூடிய சம்பவங்களும் அறிமுகங்களும் இப்போது நடக்கும். இதுவரை இல்லாத அளவிற்கு வீட்டில் நிம்மதி இருக்கும்.

செலவுகள் அதிகம் இருக்கும் என்றாலும்  வருமானம் வரும். எவரிடமும் கருத்து மோதல்களிலோ, வாக்குவாதங்களிலோ ஈடுபட வேண்டாம். யாரையாவது நீங்கள் கோபப்பட்டு திட்டினால் அது நீண்டநாள் மனஸ்தாபத்தில் கொண்டு போய்விடும். 21 ம் தேதி அதிகாலை 2.29 மணி முதல் 23ம் தேதி காலை 11.44 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ, நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். இந்த நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

மிதுனம்:

ராசிநாதன் புதன் பனிரெண்டில் மறைந்தாலும் அவருக்கு குரு பார்வை இருப்பதால் மிதுனத்தினர் சாதிக்கும் வாரம் இது. அதேநேரத்தில் ஆறுக்குடைய செவ்வாய் ராசியில் இருப்பதால் வருமானம் விரையமாகும் நிலையும் உண்டு. உங்களில் திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் சுக போகங்களுக்காகவும், வீண் ஆடம்பரத்திற்காகவும், தேவையின்றி செலவு செய்வீர்கள். ராசிநாதன் நட்பு வீட்டில் வலுவாக இருப்பதால் அனைத்து விஷயங்களிலும் மன உறுதியுடன் செயல்படுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் சண்டை போடும் வாரம் இது.

செவ்வாய், ராகு ராசியில் இருப்பதால் திடீரென மூட்அவுட் ஆவீர்கள். முகத்தை சிடுசிடுவென மாற்றிக்கொள்வீர்கள். நண்பர்கள் உங்களை புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறிப் போவார்கள். நீங்களே இந்த வாரம் மற்றவர்களுக்கு புரியாத புதிராகத்தான் இருப்பீர்கள். 22,24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 23 ம் தேதி காலை 11.44 மணி முதல் 25ம் தேதி இரவு 11.43 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

கடகம்:

ஐந்திற்குடைய செவ்வாய் ராகுவுடன் இணைந்து சனியின் பார்வையில்  பனிரெண்டில் மறைவதால் இந்த வாரம் நீங்கள் சொல்வதை பிள்ளைகள் கேட்காமல் அவர்கள் இஷ்டத்திற்கு ஏதாவது செய்து, அது சிக்கலில் முடிந்து, கடைசியில் அந்த சிக்கலையும் நீங்களே தீர்க்க வேண்டிய வரும். பிள்ளைகளின் மேல் ஒரு கண் வைக்கவும். உங்களில் ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் குழப்பமாகி முடிவெடுக்க முடியாத நிலையில் இருப்பீர்கள். நீண்டநாள் இருந்து வந்த பிரச்னைகள் இந்த வாரம் முடிவுக்கு வரும்.

வியாபாரிகள், விவசாயிகள், சொந்தத்தொழில் செய்பவர்கள் வேலைக்காரர்களை அதிகம் நம்ப வேண்டாம். எந்த நேரமும் பரபரப்பாக அலைந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் அதற்கு தகுந்த பிரதிபலன் கிடைப்பது கஷ்டமாக இருக்கும். 21,28 ஆகிய நாட்களில் பணம் வரும். 25 ம் தேதி இரவு 11.43 மணி முதல் 28ம் தேதி பகல் 12.19 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள். சோதனைகள் எதுவும் இல்லாத வாரம் இது.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள் தொழில்துறையில் சாதிக்கின்ற வாரம் இது. ராசிநாதன் சூரியன் பத்தில் இருப்பதால் இந்த வாரம் வருமானம் உண்டு. உங்களில் சிலர் மறைமுகமான ரகசிய வேலைகளில் ஈடுபட்டு பெயரைக் கெடுத்து கொள்ளாமல் அதில் வெற்றியும் பெறுவீர்கள். உங்களில் பூரம் நட்சத்திரக்காரர்கள் சகல மேன்மையும் பெறுவீர்கள். அஷ்டம, விரைய ஸ்தானங்கள் வலுப்பெறுவதால் இந்த வாரம் வீண்செலவுகள் இருக்கும். மகம் நட்சத்தினருக்கு தொழில்ரீதியான பயணங்கள் இருக்கும். வெளி மாநிலங்களுக்கு செல்வீர்கள்.

மனதில் உற்சாகமும் சந்தோஷமும் இருக்கும். ஏதாவது ஒரு விஷயத்தில் மனதைப் போட்டுக் குழப்பிக் கொண்டும், எதற்காக கலங்குகிறோம் என்று தெரியாமல் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் தெளிவு பிறக்கும். சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் சுப வலுவுடன் இருப்பதால், வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா போன்ற பெண்கள் சம்பந்தப்பட்ட மங்கள நிகழ்ச்சிகளால் நீங்கள் சகோதரிகளுக்கோ, மகள்களுக்கோ, பேத்திகளுக்கோ கடன் வாங்கி சுபச்செலவு செய்ய வேண்டி இருக்கும். சாதிக்கும் யோக வாரம் இது.

கன்னி:

ராசிநாதன் புதன் ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து, செவ்வாய் பத்தில் இருக்கும் யோக வாரம் இது. கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் எவ்வித தடங்கலும் இல்லாமல் நினைத்த காரியம் நன்றாகவே முடியும். உங்களில் அஸ்தம்  நட்சத்திரக்காரர்களுக்கு இருந்து வந்த கடன் தொல்லை, உடல்நலக் கோளாறுகள் தீரும். பெண்களுக்கு நல்ல பலன்கள் அதிகம் இருக்கும்.  வேலைக்கு செல்லும் பெண்களுக்கும், குடும்பத்தலைவியாக இருக்கும் பெண்களுக்கும் அதிகமாக நன்மைகள் நடைபெறும். மனம் தெளிவாக இருக்கும்.

திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு இப்போது திருமணம் கூடி வரும். குறிப்பிட்ட சிலர் விரும்பிய வாழ்க்கைத்துணையை அடைவீர்கள். வீட்டிற்குப் பயந்து காதலை மனதிற்குள் பூட்டி ஒளித்து வைத்திருந்தவர்கள் தைரியம் வந்து பெற்றோரிடம் சொல்லி அவர்களின் சம்மதத்தையும் பெறுவீர்கள். வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் இதுவரை இருந்து வந்த தடங்கல்களும் எதிர்மறை அனுபவங்களும் இனிமேல் இருக்காது. தொழில் நல்லபடியாக நடக்கும். வியாபாரம் மேன்மேலும் பெருகும். 

துலாம்:

வாரம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் ராசியைப் பார்க்கும் நிலையில்  இருப்பதால் துலாம் ராசிக்கு நன்மைகள் மட்டுமே நடக்கும் வாரம் இது. 2-க்குடைய செவ்வாய் ஒன்பதாம் வீட்டில் ராகுவுடன் இருப்பதால் மறைமுகமான  லாபம் உண்டு. தொழில் துறையினர் நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். நூதனக் கருவிகளை இயக்கும் துறையினர் முன்னேற்றம் அடைவார்கள். உங்களின் திறமைகள் இப்போது வெளிப்படும். போட்டி இருந்தால்தானே ஜெயிக்க முடியும் என்பதற்கு இணங்க இந்த வாரம் எதிரிகளை வெல்வீர்கள்.

யோகாதிபதி சனி கேதுவுடன் இணைந்து பனிரெண்டாம் வீட்டைப் பார்ப்பதால் பயண விஷயங்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய நன்மைகள் இருக்கும். வார ஆரம்பத்தில் தேவையற்ற மனக்கலக்கம் உருவானாலும் ராசியின் நண்பர்கள் வலுவான நிலைமையில் இருப்பதால் எந்த ஒரு பிரச்சினையையும் உங்களால் சமாளிக்க முடியும். மருத்துவத் துறையில் இருப்பவர்கள், ரியல் எஸ்டேட்காரர்கள், வீடு கட்டித்தரும் புரோமோட்டர்கள், இறைச்சி வியாபாரிகள் போன்றவர்களுக்கு நன்மைகள் இருக்கும்..

விருச்சிகம்:

ராசிநாதன் செவ்வாய் பரிவர்த்தனை நிலையில் இருக்கும் நல்ல வாரம் இது. விருச்சிக ராசிக்கு கஷ்டங்கள் விலக துவங்கி விட்டது. இனிமேல் நல்ல வாழ்க்கைக்கு திரும்புவீர்கள். இனி உங்களுக்கு கெடுபலன்கள் எதையும் சொல்வதற்கு இல்லை. அதேநேரத்தில் எதுவும் படிப்படியாகத்தான் நடக்கும். நொந்து கொள்ளாதீர்கள். ஐந்து வருடம் நீங்கள் அனுபவித்த தொல்லைகள் ஐந்து நிமிடத்தில் போய் விடாது. அப்படிப் போனால் அது தொல்லையாக இருக்காது. உங்களின் நம்பிக்கை திரும்பக் கிடைக்கும் வாரம் இது.

சுக்கிரன் ஆறில் இருப்பதால் எந்த ஒரு நல்லதும் கடுமையான முயற்சிகளுக்குப் பிறகே கிடைக்கும். மறைமுக எதிரிகளும், போட்டிகளும் இருக்கும். எந்த ஒரு விஷயமும் நீண்டமுயற்சிக்கு பின்பே வெற்றியைத் தரும். கடினஉழைப்பும் விடாமுயற்சியும் தேவைப்படும். அனைத்து விஷயங்களிலும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது. கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு நிம்மதி தெரியும் வாரம் இது. வசந்த காலம் வந்து விட்டது. நீங்கள் நன்றாக இருக்கப் போகிறீர்கள்.

தனுசு:

சனிபகவான் ஜென்மச்சனியாக ராசியில் இருந்து தொல்லைகளைக் கொடுக்கும் சவாலான வாரம் இது. உங்களில் இளம்பருவ மூலம், மற்றும் பூராடத்தினருக்கு சகல விஷயத்திலும் நெருக்கடிகள் இருக்கும். குறிப்பாக தொழில் இடங்களில் முதுகில் குத்துதல், காலை வாருதல் போன்ற நம்ப முடியாத எதிர்மறை விளைவுகளால் மனக்கலக்கம் அடைவீர்கள். ஆயினும் ராசியின் யோகர்கள் வலுவாக இருப்பதால் நீங்கள் எதிரிகளை ஜெயிக்கும் வாரம் இது. பணம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளும் வாரம் இது.

விலை உயர்ந்த பொருட்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டியது அவசியம். எவரையும் நம்பி ஜாமீன் போடுவதோ, யாருக்கும் வாக்கு கொடுப்பதோ கூடாது. போட்டி பந்தயங்கள் லாட்டரி சீட்டு ரேஸ் போன்றவை தற்போது கை கொடுக்காது. நெருங்கியவர்களே எதிராகத் திரும்ப வாய்ப்பு இருப்பதால் அனைத்திலும் கவனமாக இருங்கள். உறவினர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்கள், சிறு சண்டைகள் வரலாம். வேலைப்பளு அதிகம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

மகரம்:

நாற்பது வயதுகளுக்குள் இருக்கும் மகர ராசிக்காரர்களுக்கு பண விஷயத்தில் சில அனுபவங்கள் கிடைக்கும் வாரம் இது. உங்களில் உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு யாரையாவது நம்பி ஏமாறும் கசப்பான அனுபவம் உண்டு. தகுதி இல்லாதவரை நம்புவது உங்கள் குற்றம் என்பதால் ஏமாற்றுபவரை குறை சொல்லி பிரயோஜனம் இல்லை. மகர ராசிக்காரர்களுக்கு பணம், உறவு, நட்பு ஆகியவைகளை பற்றி கிரகங்கள் சொல்லி கொடுக்கும் வாரம் இது. ஆயினும் எதுவும் எல்லை மீறாது. கவலை வேண்டாம்.

உதவி ஸ்தானம் வலுப்பெறுவதால் இதுவரை யாரிடமாவது நீங்கள் உதவி கேட்டு அதைச் செய்ய முடியாத நிலையில் இருந்தவர்கள் இந்த வாரம் உங்களுக்கு உதவுவார்கள். பிள்ளைகள் விஷயத்தில் ஏதேனும் மனவருத்தம் வரலாம். நிதானம் தேவைப்படும் வாரம் இது. அரசு, தனியார்துறை ஊழியருக்கு இந்த மாதம் மிகவும் நல்ல மாதமே. குறிப்பாக காவல்துறை போன்ற அதிகாரம் மிக்க துறையினர் வளம் பெறுவார்கள். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. மாணவர்கள் நன்கு படிப்பீர்கள்.

கும்பம்:

சுக்கிரன் ஒன்பதாம் வீட்டைப் பார்க்கும் நல்ல வாரம் இது. சுக்கிர தயவால் உங்களை எதிர்த்து கொண்டிருந்தவர்கள் இப்போது அடிபணிவார்கள். உங்களின் கருத்துக்களுக்கு இதுவரை கிடைக்காத அங்கீகாரம் தற்போது கிடைக்கும். உங்களில் அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு குடும்ப விஷயங்களில் நல்ல திருப்பங்கள் உண்டு. குடும்பத்து பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். குழந்தைகள் விரும்பும் பள்ளியிலோ, படிப்பிலோ அவர்களை சேர்த்து விட முடியும். நல்ல காலேஜில் சீட்டு கிடைக்கும்.

இளைய பருவத்தினர் சிலருக்கு காதல் வரும். ஐந்து, பதினொன்றில் இருக்கும் ராகு-கேதுவால் சிலருக்கு மறைமுகமான வருமானங்கள் இருக்கும். இதுவரை எதிர்ப்பு உருவாகிக் கொண்டிருந்த விஷயங்கள் இப்போது சாதகமாக முடியும். வரும் குருப்பெயர்ச்சி முதல் தென்றல் வீசும் நந்தவனத்திற்குள் குளிர்ந்த மனதுடன் உள்ளே நுழையும் அனுபவம் கிடைக்கும் என்பதால் இப்போதிருக்கும் பிரச்னைகளைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. எதிலும் நிதானமாக இருப்பதன் மூலம் நீங்கள் சாதிக்கும் வாரம் இது.

மீனம்:

வார ஆரம்பத்தில் இருக்கும் கிரகநிலைகளால் நண்பர்கள் விஷயத்தில் சண்டை, சச்சரவுகள், கருத்து வேறுபாடு தோன்றும் என்பதால் எதிலும் விட்டுக் கொடுத்து போவது நல்லது. மற்றவர் செய்யும் தவறையும் பொறுத்துப் போங்கள். பணவரவிற்கு குறை எதுவும் இருக்காது. இரண்டில் சுக்கிரன் இருப்பதால்  எத்தகைய பணப் பிரச்னைகளையும் சமாளிப்பீர்கள். இன்னும் சில மாதங்களில் நடக்க இருக்கும் சனிப் பெயர்ச்சியின் மூலம் யோககாலம் ஆரம்பிக்க இருப்பதால் இந்த வாரம் மீனத்திற்கு யோக வாரம்தான். 

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு இருந்து வந்த குழப்பங்கள் தீரும். தன, பாக்யாதிபதி  ராகுவுடன் இணைந்து சனியின் பார்வையில் இருப்பதால் பொருளாதார சிக்கல்கள் வரும். சனி கேது இனைவால் உங்களில் சிலருக்கு ஞானிகளின் ஜீவசமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். கலைஞர்கள் வளம் பெறுவார்கள். சோதனைக்குப் பிறகு மீனத்தினர் சாதிக்கும் வாரம் இது.

(20.05.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.