குருஜியின் 2019 – வைகாசி மாத பலன்கள் -GURUJIYIN VAIGAASI MADHA PALANGAL

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

மேஷம்:

மாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் ராகுவுடன் இணைந்து  பலவீனமாக இருந்தாலும் மாத ஆரம்பத்தில் அவர் புதனுடன் பரிவர்த்தனை ஆவது நல்ல அமைப்பு என்பதால் வைகாசி மாதம் கவலைப்படத் தேவையில்லாத மாதமாக இருக்கும். இளைஞர்களுக்கு இது முன்னேற்ற மாதம். இப்போது ஏற்படும் அனுபவங்களால் உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். அவைகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. இந்த மாதம் முழுவதும் பங்குச்சந்தையில் உஷார். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எல்லோரையும் அனுசரித்து போவது நல்லது.

செவ்வாய் பாபத்துவமாக இருப்பதால் நீங்கள் செய்வது தவறாகவே இருந்தாலும் அதை ஒத்துக் கொள்ள மாட்டீர்கள். உங்களின் பிடிவாத குணம் அதிகரிக்கும். பணிபுரியும் இடங்களில் உங்களுக்கு கெட்டபெயர் ஏற்படுத்த சிலர் முயற்சிப்பார்கள். பெண்கள் விஷயத்தில் செலவு இருக்கும். உங்களில் சிலருக்கு கண்களில் பிரச்னை வரலாம். கண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். சிலருக்கு வாகன யோகம் இருக்கிறது. மாத இறுதியில் அலுவலகத்திலோ அல்லது ஏதேனும் ஒரு அமைப்பிலோ தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு நெருக்கடிகள் இருக்கும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும்.

ரிஷபம்:

மாத பிற்பகுதியில் ராசிநாதன் சுக்கிரன் ராசியில் அமர்வதால் வைகாசி உங்களுக்கு நல்ல மாதமே. ஆனாலும் சனி எட்டில் இருப்பதால் அனைத்திலும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத மாதம் இது. ரிஷபத்தினர் இப்போது எதிலும் நேர்மையை கடைப்பிடிப்பது நல்லது. குறுக்கு வழி வேண்டவே வேண்டாம். முறைகேடான வழியில் பணம் வரும்போது கவனமாக இருங்கள். மாட்டிக் கொள்வீர்கள். தேவையற்ற வீண்பழி, கைப்பொருள் திருட்டுப் போகுதல் போன்ற பலன்கள் இப்பொது நடக்கும். உங்களில் சிலர் செல்போனை தொலைப்பீர்கள். மன அடக்கம் தேவைப்படும் மாதம் இது. அனைத்திலும் நிதானமாக இருங்கள்.

ராசிநாதன் சுக்கிரன் வலுவான நிலையில் இருப்பதோடு ராசியும் குருபார்வை பெறுவது உங்கள் தைரியத்தையும், தன்னம்பிக்கையும் அதிகப்படுத்தும். எதிரிகள் உங்களுக்கு விரோதமாக எதையும் செய்யத் தயங்குவார்கள். யாரிடமும் கோபப்பட வேண்டாம். புதிய ஆரம்பங்கள் மற்றும் முயற்சிகளைச் செய்வதை தவிர்ப்பது நல்லது. ராசியும் ராசிநாதனும் வலுவாக இருப்பதால் பின்னடைவுகள் எதுவும் வருவதற்கு வாய்ப்பு இல்லை. வீண் விரயங்கள் இருக்கும் என்பதால் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்குமுன் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செலவு செய்யுங்கள். வழக்கை முடிப்பதற்கு அவசரப்பட வேண்டாம்.

மிதுனம்:

மாத பிற்பகுதியில் ராசிநாதன் புதன் குருவின் பார்வையில் இருப்பதும், பாக்கியாதிபதி சனி குருவின் வீட்டில் இருந்து ராசியைப் பார்ப்பதும் மிதுனராசிக்கு நல்ல பலன்களைத் தரக்கூடிய அமைப்பு என்பதால் வைகாசி மாதம் மிதுனத்திற்கு வசந்த மாதமாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். பெண்களுக்கு  நன்மை தரும் மாதம் இது. சிறு காரணத்திற்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் இப்போது கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரம் நல்லபடியாக நடக்கும். போட்டியாளர்களால் தொந்தரவு இருக்காது. விவசாயிகளுக்கு  நன்மைகள் உண்டு.

ராசியிலிருக்கும் ராகுவால் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு வரும். அது வராமல் இருக்கக்கூடிய முயற்சிகளை தம்பதிகள் எடுத்துக் கொள்வது நல்லது. மனைவியின் பேச்சை கேட்பதனால் ஒன்றும் குறைந்து விடாது என்பதால் முக்கியமான விஷயங்களில் தம்பதிகள் இருவரும் கருத்தொற்றுமையோடு முடிவெடுப்பது நல்லது. கடன் தொல்லைகளால் அவதிப்பட்டவர்களுக்கு பிரச்னைகள் தீரும். தாயார்வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வரும். முப்பது வயதுகளில் இருக்கும் இளைஞர்கள் தன்னம்பிக்கையுடன் எதையும் சாதிப்பீர்கள். பாக்கியங்கள் உள்ள மாதம் இது.

கடகம்:

கடக ராசிக் காரர்களின் மனம் மகிழும் மாதம் இது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் உண்டு. குடும்பத்தினர் கேட்கும் பொருட்களை வாங்கி கொடுத்து செலவு செய்வீர்கள். பெண்களினால் உதவிகளும், நல்ல பலன்களும் இருக்கும். பணத்திற்கு பஞ்சம் இருக்காது. வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். வாக்குப் பலிக்கும். சினிமா தொலைக்காட்சி போன்ற துறைகளில் இருப்போர் இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். சூரியன் லாபஸ்தானத்தில் இருப்பது யோக அமைப்பு. குரு ராசியைப் பார்ப்பது பணவரவைத் தரும்.  கடகத்திற்கு வைகாசி தொல்லைகள் தராமல் எதிலும் ஒரு சீரான செயல்பாட்டை தரும்.

வீடு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு வீட்டுக்கனவு நனவாகும். தந்தை வழி நன்மைகளும் அப்பாவின் ஆதரவு மற்றும், பூர்வீக சொத்து கிடைப்பதும் இப்போது உண்டு. ஞானிகள் தரிசனம், புனிதயாத்திரை, கோவில் திருப்பணி என ஆன்மிகத் தொண்டு செய்வீர்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் மூலம் ஆதரவு உண்டு. பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். பிள்ளைகளுக்கான கடமைகளை பெற்றோர்கள் சரியாகச் செய்ய முடியும். பயணங்களால் லாபங்கள்  இருக்கும். எதிர்காலத்தில் நீங்கள் நன்றாக வாழக்கூடிய அமைப்புக்கு அஸ்திவாரம் போடும் மாதம் இது.

சிம்மம்:

சிம்மநாதன் சூரியன் வலுவான நிலையில் பத்தாம் வீட்டில் இருப்பதால் வைகாசி சிம்மத்திற்கு நல்ல மாதமே. மாதம் முழுவதும் சூரியன் எவ்வித பங்கமும் இன்றி இருப்பதால் சிம்மத்திற்கு இந்த மாதம் சிறப்புக்களைத் தரும். சிம்மத்திற்கு இனி தடைகள் எதுவும் இல்லை. பதினொன்றில் செவ்வாயுடன் இணைந்திருக்கும் ராகுவால் சிலருக்கு சூதாட்டம், பங்குச்சந்தை, லாட்டரி போன்றவைகளில் ஆர்வம் வரும். அதனால் லாபங்கள் இருக்கும். உங்களில் சந்திர தசை, சந்திர புக்தி நடப்பவர்கள் தற்போது ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபட வேண்டாம். எதிர்பார்க்கும் இடத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

குரு நான்கில் இருப்பது செலவுகளை தந்தாலும் அதற்கேற்ப பண வரவுகளையும், குடும்ப சந்தோஷங்களையும் தரும். சகோதர சகோதரிகளின் விஷயங்களில் நல்ல சம்பவங்களும் ஒருவருக்கொருவர் ஆதரவான நிகழ்வுகளும் இருக்கும். மனைவிக்கு நகை வாங்கித் தருவீர்கள். வீட்டில் ஆபரணச் சேர்க்கையும் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குதலும் நடக்கும். வெளிநாட்டுப் பயணங்களும் உண்டு. அரசாங்கம் சம்பத்தப்பட்ட அனைத்தும் கைகூடி வரும். ஏதேனும் ஒரு பொறுப்பு கிடைக்கும். மற்றவர்களை வழி நடத்துவீர்கள். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும்.

கன்னி:

ராசிநாதன் புதன் குருவின் பார்வையில் இருப்பதால்  வைகாசி உங்களுக்கு யோக மாதம்தான். அதேநேரத்தில் மாத முற்பகுதியல் ராசிநாதன் புதன் எட்டில் மறைவதால் சிலருக்கு மனவருத்தங்கள் தரும்படியான சம்பவங்கள் நடக்கும். எட்டிற்குடைய செவ்வாய் ராகுவுடன் இணைந்து ராசியைப் பார்ப்பதால் உங்கள் செயல்கள் அனைத்திலும் பதற்றமும், படபடப்பும் இருக்கும். அதேநேரம் மனோதைரியம் கூடுதலாகும். சுக்கிரன் வலுவான நிலையில் இருப்பதால் அனைத்தும்  உங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். குறிப்பிட்ட பலனாக இந்தமாதம் சில புதிய அறிமுகங்கள் உங்களுக்கு உண்டு. அதனால் நன்மைகளும் உண்டு.

கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை இருந்து வந்த தடைகள் விலகும். வழக்குகள் இனி உங்களுக்கு சாதகமாக திரும்பும். இளைய பருவத்தினருக்கு எதிர்கால வாழ்க்கைக்கான திருப்புமுனை சம்பவங்கள் நடக்கும். சிலர் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இப்போது சந்திப்பீர்கள்.  அலுவலகத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிருங்கள். அதிகாரம் செய்யக்கூடிய பதவியில் இருப்பவர்களுக்கு இரண்டுங்கெட்டான் நிலை இருக்கும். சிலர் இரண்டு அதிகார மையத்துடன் போராடுவீர்கள். உங்களைப் புரிந்து கொள்ளாமல் சிலர் உங்களை விட்டு விலகுவார்கள்.

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன் ராசியைப் பார்ப்பதும், பின்னர் ஆட்சி நிலை பெறுவதும் எதிர்ப்புகளை வெல்லும் நிலை என்பதால் வைகாசி துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல மாதமாக அமையும். உற்சாகமாக இருப்பீர்கள். நண்பர்கள் உதவி கிடைக்கும். பெண்களால் செலவுகள் உண்டு. அன்னிய இன, மத, மொழிக்காரர்கள் உதவுவார்கள். இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகள் விலகும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். ராசியை சுபர் பார்ப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். இளையவருக்கு கையில் பணம் இல்லாமல் இருந்த நிலை மாறி இனிமேல் சம்பாதிப்பீர்கள். மனஅழுத்தத்திலிருந்தும் விடுபடுவீர்கள்.

முதல் திருமணம் தோல்வியில் முடிந்தவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்லமுறையில் அமைவதற்கான ஆரம்பங்கள் இருக்கும். சிலர் வெளிநாடு செல்வீர்கள். பிறந்தநாட்டை விட்டு வேறு நாட்டில் இருப்பவர்களுக்கு  நன்மைகள் நடைபெறும். முப்பது வயதுக்குட்பட்டவர்களுக்கு வேலை விஷயத்தில் நல்ல தகவல்கள் உண்டு. திறமையை முதலீடாக வைத்து சம்பாதிப்பவர்களுக்கு நல்ல பணவரவு இருக்கும் அந்தஸ்து கௌரவம் உயரும். மகன் மகள் விஷயத்தில் இருந்து வந்த கவலைகள் தீரும். உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் குணம் அடைவார்கள். நடுத்தர வயதினருக்கு  நல்ல செய்திகள் இருக்கும்.

விருச்சிகம்:

ஏழரைச்சனியின் கடுமையான  கெடுபலன்களால் அவதிப்பட்ட விருச்சிகம் இளைப்பாறும் மாதம் இது. வைகாசி உங்களுக்கு வருத்தங்களைத் தராமல் நல்ல நிலையையும், நல்ல வாய்ப்புகளையும் மட்டுமே தரும். குறிப்பாக கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு இனிமேல் பிரச்னைகள் எதுவும் வராது. இனி எல்லாம் நல்லபடியாக நடக்கப் போகிறது. தாமதமாகிக் கொண்டே வந்த மகன், மகள் திருமணத்தை நல்லபடியாக நடத்த முடியும். கடந்த சில வருடங்களாக சிக்கலில் இருந்து வந்த விருச்சிகத்தினருக்கு நல்ல பாதை தெரியும். விருச்சிகத்திற்கு இனிமேல் குறைகள் எதுவும் இல்லை. படிப்படியான முன்னேற்றம் உண்டு.

திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்காக கடன் வாங்க வேண்டியது இருக்கும். தேவையில்லாத விஷயத்திற்கு கூட கடன் வாங்கும்படி எட்டில் ராகுவுடன் இணைந்திருக்கும் செவ்வாய் செய்வார் என்பதால் ஆடம்பரங்களுக்காக கடன் வாங்காதீர்கள். நவம்பரில் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி முதல் முழுமையான நன்மைகள் நடக்கும். சிலருக்கு வாடகை வீட்டை மாற்றி புதிதாக ஒத்திக்கு எடுத்தல் அல்லது புது வீடு வாங்குதல் போன்றவைகள் இப்போது நடக்கும். அலுவலகத்தில் டிரான்ஸ்பர், பதவிஉயர்வுடன் கூடிய இடமாற்றம் போன்றவைகள் இருக்கலாம். சிலருக்கு கம்பெனி சார்பில் வெளிநாடு பயணங்கள் இருக்கும். 

தனுசு:

வைகாசி மாதம் தனுசுராசிக்கு சுலபமாக நடக்கக் கூடிய விஷயங்கள் கூட கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கும் மாதமாக இருக்கும். எட்டாமிடம் சுபவலுப் பெறுவதால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டமாக ஒரு நல்ல பணவரவு இருக்கும். இளைய பருவத்தினருக்கு இண்டர்வியூ அழைப்பிற்கான கடிதங்கள் வரும். இதுவரை இழுத்தடித்த வேலை கிடைக்கும். சிலருக்கு தாய்வழி சீதனம் போன்று ஏதேனும் கிடைக்கும். மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் தேவையற்ற மனக் கலக்கங்களும் சிறிய விஷயங்களை பெரிதாக்கி பார்ப்பதும் உண்டு. இளைஞர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய கவலைகளும் இருக்கும். அறிவால் எதையும் சாதிப்பீர்கள்.

சனி ராசியில் இருப்பது கெடுபலன்கள் எதுவும் நடக்காவிட்டாலும் ஏதேனும் தவறாக நடந்து விடுமோ என்ற மனக்கலக்கத்தை தரும். கொடுக்கல் வாங்கல்களில் நிதானம் தேவை. செலவுகள் அதிகமாக இருக்கும். சேமிப்பு இருக்க வேண்டியது அவசியம். யாரிடமும் தேவையற்ற வீண் வாக்குவாதம் வைத்துக் கொள்ள வேண்டாம். நல்ல நண்பர்களும் சிறு பிரச்னைகளால் எதிரிகளாக மாறுவார் எனபதால் தேவையற்ற பிரச்னைகளில் தலையிட வேண்டாம்.  எதிர்பார்க்கும் இடத்தில் இருந்து பணம் கிடைப்பதில் தடைகள் இருக்கலாம். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய நெருக்கடிகள் இருக்கும்.

மகரம்:

வைகாசி மாதம் முழுவதும் ஆறு, பனிரெண்டில் பாபக் கிரகங்கள் இருப்பதால் மகர ராசிக்கு யோகமாகவே இருக்கும். இந்த மாதம் உங்களுடைய எண்ணங்கள் யாவும் பலிக்கும். குறைப்பட்டுக் கொள்ள எதுவும் இல்லை. பணப்புழக்கம் கையில் இருக்கும். கொடுக்கும் வாக்கை காப்பாற்ற முடியும். வீடு வாங்குவதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கும். இளைய பருவத்தினருக்கு படிப்புக்குத் தகுந்த நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, நிலுவைத்தொகை  கைக்கு வரும். வாழ்க்கைத்துணையின் பங்காக ஏதேனும் ஒரு சொத்தோ, அல்லது ஒரு தொகையோ கிடைக்கும்.

வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி போன்றவைகளிலும், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் வகைகளிலும் இருப்பவர்களுக்கு இந்தமாதம் நல்ல வருமானம் இருக்கும். வெளிமாநில, வெளிதேச பிரயாணங்கள் இருக்கும். அதனால் நன்மைகள் உண்டாகும். திரவப்பொருட்கள், வெள்ளைநிறம் சம்பந்தப்பட்ட தொழில், ஆற்றுமணல், கட்டுமானப்பொருள் தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. சுயதொழில், வியாபாரம் போன்றவைகளில் இதுவரை இருந்து வந்த மந்த நிலை விலகி அனைத்தும் இனிமேல் சுறுசுறுப்பாக நடக்கும். விவசாயிகளுக்கு இந்தமாதம் மிகுந்த நன்மையை அளிக்கும். விவசாயிகளுக்கு மேன்மை உண்டு.

கும்பம்:

ராசிநாதன் சனி ராசியைப் பார்ப்பதும் சுக்கிரன், புதன் நல்ல நிலையில் இருப்பதும் யோகம் என்பதால் வைகாசி மாதம் கும்பராசிக்கு நன்மைகளை தரும். பிறந்த ஜாதகத்தில் யோக தசா,புக்திகள் நடப்பவர்களுக்கு அதிர்ஷ்ட நிகழ்வுகள்  இருக்கும். மதிப்பு மரியாதை அந்தஸ்து கௌரவம் தொழில்மேன்மை குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. தசாபுக்தி அமைப்பு நன்றாக இல்லாத உங்களில் சிலருக்கு கடன்காரர்களுக்கு சொல்லும் தேதியில் பணம் தரமுடியாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது. அலைச்சல்களும் வீண்தொந்தரவுகளும் இருக்கும். யோகாதிபதிகள் வலுப் பெறுவதால்  பிரச்னைகளை சமாளிக்கும் தைரியமும் உண்டாகும்.

வேலை செய்யும் இடத்தில் இருந்த அதிருப்திகளும் சஞ்சலங்களும் விரக்தியும் இனி இருக்காது. பதவிஉயர்வு கிடைக்கும். வீடு, வாகனம், தாயார் போன்றவைகளில் நல்ல மாற்றங்கள் வரும். ஆன்மிக விஷயங்களில் ஈடுபாடு கொள்வீர்கள். சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். தாயார் விஷயத்தில் சொல்லிக் கொள்ளும்படியான நன்மைகள் இருக்கும். சிலருக்கு இடமாற்றங்கள் உண்டு. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் இருந்த முட்டுக்கட்டைகளும் அதிருப்தியான நிலைமையும் மாறி தொழில் சூடு பிடிக்கும். வேலை செய்பவர்களும் பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள்.

மீனம்:

மீனராசிக்கு நன்மைகளுக்கு அச்சாரம் போடும் மாதம் இது. தடைகள் விலகி விட்டதால் இனி கவலை எதுவும் இல்லை. இளைய பருவத்தினர் சிலருக்கு எதிர்கால வாழ்க்கைத் துணையைப் பார்க்கும் வாய்ப்பும் பருவத்திற்கே உரிய காதல் அனுபவங்களும் உண்டு. அனைத்து மீனத்தினரின் மனக் கவலைகள் குழப்பங்கள், எதிர்மறை எண்ணங்கள் தடைகள் போன்றவைகள் தீரும். உடலிலும் மனதிலும் புதுத் தெம்பு பிறக்கும். உற்சாகமாக இருப்பீர்கள்.. எந்த ஒரு செயலையும் நிறைவேற்ற முடியும். வாக்குப் பலிதம் ஏற்படும். உங்களுடைய பேச்சை அனைவரும் கேட்பார்கள். சிலருக்கு வேலை மாற்றங்கள் உண்டு.

பெண்களுக்கு இது வேலைச்சுமையைத் தரும் மாதமாகும். அலுவலகத்தில்  பணிகளை சமாளித்து விட்டு வீட்டிற்கு வந்தால் வீட்டிலும் நீங்கள்தான் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டியது இருக்கும். வருமானம் வந்தாலும் அதற்கு ஏற்ப செலவுகளும் இருக்கும். கலைஞர்கள் வேலை செய்த பணத்தை பெற போராட வேண்டி இருக்கும். பெரியதொகை பரிமாற்றங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். பத்திரிக்கை, ஊடகங்கள் போன்ற துறையில் இருப்பவருக்கு அலைச்சலும், வேலைப்பளுவும் இருக்கும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். நீங்கள் எதையும் சமாளிக்கும் மாதம் இது. 

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.