குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (13.05.19 முதல் 19.05.19 வரை)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

மேஷம்:

யோகாதிபதி சூரியன் இரண்டில் இருப்பதும், ராசிநாதன் செவ்வாய் ராகுவுடன் இணைந்தாலும் பரிவர்த்தனை யோகத்தில் ராசியில் இருக்கும் அமைப்பு பெறுவதும் விசேஷமான நிலை என்பதால் மேஷ ராசிக்காரர்களின் மனக் கஷ்டங்களும், பணப்பிரச்சினைகளும் ஓயும் வாரம் இது. உங்களில் பரணி நட்சத்திரக்காரர்களை சென்ற காலங்களில் வாட்டி வதைத்த சோம்பல், மந்தம், விரக்தி மனப்பான்மைகள் இனி இருக்காது. அனைத்திலும் இருந்த தடைகள் தாமதங்கள்  விலகப் போகிறது. இனி எல்லா நாட்களும் உங்கள் நாட்கள்தான்.

ராசிநாதன் செவ்வாய் நல்லநிலையில் இருந்தாலும் என்றாலும் அவரே உங்களின் அஷ்டமாதிபதி என்பதால் எட்டுக்குடையவனின் பரிவர்த்தனையால் உங்களில் சிலருக்கு அடங்கிக் கிடக்கும் பிரச்னைகள் லேசாகத் தலை தூக்கலாம். சிலருக்கு இப்போது இருக்கும் வாகனத்தை விட நல்ல வாகனம் அமையும். வாகனமாற்றம் செய்வீர்கள். 18 ம் தேதி இரவு 8.29  மணி முதல்  21 ம் தேதி அதிகாலை 2.29 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்ட தூரப் பிரயாணங்கள் வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

ரிஷபம்:

எட்டாமிடத்தில் சனி,கேது அமர்ந்து, ராசிக்கு சூரியன் மாறுவதால் எதிர்பார்க்கும் அனைத்தும் வெறும் பேச்சளவிலேயே இருந்து நல்லவை நடக்க முடியாத நிலைமை இந்த வாரம் ரிஷபத்திற்கு ஏற்படும். அதேநேரம் ராசியை குரு பார்ப்பதால் அனைத்தையும் சமாளித்து வலம் வருவீர்கள். உங்களின் ஈகோவை தூண்டி விட்டு அவசர முடிவு எடுக்க வைக்கும் செயல்கள் இப்போது நடக்கும் என்பதால் எதிலும் நிதானம் தேவை. முறைகேடான வருமானத்திற்கு ஆசைப்பட வேண்டாம். சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அஷ்டமச் சனி நடப்பதால் இளைஞர்களுக்கு வேலைமாற்றங்கள், மாணவர்களுக்கு கவனக்குறைவு, தடுமாற்றம், விரக்தி, எதிலும் விட்டேத்தியான மனப்பான்மை போன்றவைகள் இருக்கும் இப்போதிருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் இன்னும் கொஞ்ச காலத்திற்குத்தான் என்பதால் எதையும் சமாளிக்கும் மனோதைரியத்தை ரிஷப ராசியினருக்கு இறைவன் அளிப்பார் என்பது உறுதி. மேல் வருமானம் வருகின்ற துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் இந்த வாரம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். யாரையும் நம்ப வேண்டாம்.

மிதுனம்:

பனிரெண்டாமிடத்திற்கு சூரியன் மாறி, ராசியை சனி பார்ப்பது தடைகளை கொடுக்கும் கிரக அமைப்புத்தான். ஆனாலும் வார ஆரம்பத்தில் ராசிநாதன் புதன் பரிவர்த்தனை அமைப்பில் வலுவாக இருப்பது தடைகள் அனைத்தையும் விலக்கி யோகங்களை அளிக்கும் அமைப்பு என்பதால் இது மிதுனத்திற்கு நல்ல வாரமே. இளைஞர்கள் சந்தோஷமான நிகழ்ச்சிகளை சந்திப்பீர்கள். சிறப்பான வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் வாரம் இது. எதிர்காலத்தில் நீங்கள் எப்படி இருக்கப் போகிறீர்கள் என்பது இப்போது நிர்ணயிக்கப்படும்..

ஆறாம் அதிபதி செவ்வாய் ராசியில் இருப்பதால் சிலருக்கு அடங்கிக் கிடக்கும் கடன் பிரச்னைகள் தலை தூக்கலாம். மருத்துவச் செலவுகளும் இருக்கும். உடல்நலத்தில் கவனமுடன் இருக்கவேண்டிய வாரம் இது. சிலருக்கு வாகனத்தை மாற்றி நல்ல வாகனம் அமையும். உங்களில் புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு  வெகு நாட்களாக முடியாத காரியங்கள் இந்த வாரம் முடியும். மஞ்சள் நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு மேன்மையான பலன்கள் இருக்கும். குறைகள் சொல்ல முடியாத வாரம் இது.

கடகம்:

வாரம் முழுவதும் ராசிநாதன் சந்திரன் வலுப் பெறுவதும், தனாதிபதி சூரியன் பலம் பெற்றிருப்பதும், ராசியை யோகாதிபதி குரு பார்ப்பதும் கடகத்திற்கு பண வரவையும், தொழில் மேன்மையும் அளிக்கும் என்பதால் இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரமாக இருக்கும். சகாய ஸ்தானாதிபதி புதன் வார இறுதியில் குருபகவானின் பார்வையில் வருவதால் எதிர்பாராத விதமாக சிலரிடமிருந்து உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு வேலை செய்யும் இடங்களில் இதுவரை இருந்து வந்த மனக்கசப்புகள் நல்லபடியாகத் தீரும்.

அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு சம்பளம் தவிர்த்த மேல் வருமானங்கள் இருக்கும். தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேருவீர்கள். பேசக் கூடிய மற்றும் சொல்லித்தரக் கூடிய தொழில்களில் மார்க்கட்டிங், ஆசிரியர்பணி, வக்கீல்கள் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு இது நல்ல காலகட்டமாக இருக்கும். வயதான பெற்றோரைக் கொண்டவர்கள் அவர்களுடைய உடல் நலத்தில் கவனம் வைக்கவும். சிறு பிரச்னை இருந்தாலும் அவர்களை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது நல்லது.

சிம்மம்:

சோதனைகளை சாதனைகளாக மாற்றக்கூடியவர் சிம்மத்தினர் என்பதால் இது உங்களுக்கு யோக வாரமே. ராசிக்கு பத்தாமிடத்தில் சூரியன் இருப்பதும், யோகாதிபதி செவ்வாய் வார ஆரம்பத்தில் பரிவர்த்தனை அமைப்பில் உள்ளதும், சிம்மராசிக்கு புத்துணர்ச்சியைத் தரும் அமைப்பு என்பதால் சிம்மத்திற்கு கெடுதல்கள் சொல்ல எதுவும் இல்லை. உங்களில் சிலருக்கு உயர் கல்வி கற்பதற்கு இருந்து வந்த தடைகள் இப்போது விலகும். திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு திருமணம் கூடி வரும். உங்களின் யோக வாரம் இது.

வாழ்க்கைத் துணையிடம் கருத்து வேறுபாடுகளும், சண்டை, சச்சரவு போன்ற பிரிவினை சமாச்சாரங்கள் இருந்தவர்கள் சமாதானமாகச் செல்வீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு பொருத்தமான வேலைகள் அமையும். மன வருத்தத்தை கொடுத்துக் கொண்டு இருந்த உயரதிகாரி மாறுதலாகி, அந்த இடத்திற்கு அனுசரணையானவர் வருவார். சிக்கலில் இருந்த தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் தடைகள் விலகி நல்லபடியாக நடக்க ஆரம்பிக்கும். சுய தொழில் செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.

கன்னி:

வார இறுதியில் இருந்து ராசிநாதன் புதன் குருவின் பார்வையில் இருப்பது உங்களைக் கெடுதல்களில் இருந்து பாதுகாக்கும் ஒரு கவச அமைப்பு என்பதால் கன்னிக்கு இந்த வாரம் நல்ல வாரம்தான். அஷ்டமாதிபதி செவ்வாய் ராசியைப் பார்ப்பதால் உங்களில் அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் சிலருக்கு வெளியூரிலோ, வெளி மாநிலத்திலோ, தூரதேசங்களிலோ தங்கி வேலை செய்ய கூடிய அமைப்புகள் உருவாகும். இருக்கும் இடத்தில் இருந்து தொலைதூரம் செல்லும் படியான மாற்றங்கள்  உருவாகும்.

பருவ வயது பிள்ளைகளை வைத்திருக்கும் கன்னி ராசிக்காரர்கள் மக்களின் மேல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பிள்ளைகளின் கவனம் வயதுக்கே உரிய காதல் போன்ற விஷயங்களில் திரும்பும் ஏதாவது வம்புகளில் சிக்கி கஷ்டத்திற்கு ஆளாக்குவார்கள். தங்கநகை, நவதானியம், ஆன்மிக பொருட்களை விற்பனை செய்பவர்கள், வழிபாட்டுத் தலங்களைச் சுற்றிக் கடை வைத்திருப்பவர்களுக்கு நன்மைகள் உண்டு. சிலருக்கு வீண் விவகாரங்களில் தலையிடுவதும் அடுத்தவர்களுக்காக பரிந்து பேசி வம்பை விலைக்கு வாங்குவதும் நடக்கும்.

துலாம்:

எட்டில் இருக்கும் சூரியனால் இந்தவாரம் உங்களின் நிதிநிலைமை சிறிது பாதிக்கப்படலாம் என்றாலும் பாக்யாதிபதி புதனை குரு பார்ப்பதாலும், ராசிநாதன் சுக்கிரன் ராசியைப் பார்ப்பதாலும் கொஞ்சம் தடுமாறினாலும் சுதாரித்துக் கொண்டு அனைத்தையும் சமாளித்து விடுவீர்கள் என்பது உறுதி. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் நடக்க இருக்கிறது. தொழிலை விரிவுபடுத்தும் எண்ணங்கள் ஈடேறும். துலாத்தினரின் தொழிலில் முன்னேற்றங்கள் உள்ள யோக வாரம் இது.

நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த ஒரு காரியம் முடிந்து இந்த வாரம் பண வரவு உண்டு. குடும்பத்தில் இதுவரை உங்களுடைய ஆலோசனைகளை ஏற்காமல் தவிர்த்து அதனால் பிரச்னைகளில் சிக்கித் தவித்தவர்கள் இனிமேல் உங்களின் சொல்லைக் கேட்பார்கள். இதுவரை இருந்து வந்த வீண் செலவுகளும், விரயங்களும் தவிர்க்கப்பட்டு இனிமேல் சேமிப்பு இருக்கும். இந்த வாரம் குறிப்பிடத்தக்க அளவில் பண வரவும், லாபங்களும் இருக்கும் என்பதால் நினைத்த இடத்தில் நல்ல வகையில் முதலீடு செய்யமுடியும்.

விருச்சிகம்:

விருச்சிகநாதன் செவ்வாய் பரிவர்த்தனையாக இருப்பது நல்ல அமைப்பு என்பதால் விருச்சிக ராசிக்கு மனமகிழ்ச்சியும் நிறைவான பாக்கியங்களும் இப்போது கிடைக்கும். உங்களுக்கு உற்சாகம் உள்ள நல்ல வாரம் இது. சொந்தத்தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் நல்லபலன்கள் நடக்கும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். உங்களில் அனுஷத்தினருக்கு அலைச்சல்கள் ஒருபுறம் இருந்தாலும் தொழில் முன்னேற்றமும் வருமானமும் இருக்கும்.

விருச்சிக ராசிக்காரர்கள் கோபக்காரர்களாக இருந்தாலும் நீதிமான்களாக இருப்பீர்கள். யார் தவறு செய்தாலும் பொறுத்துக் கொள்ள மாட்டீர்கள். விலை போகவும் மாட்டீர்கள். உண்மையான அன்புக்கும் நட்புக்கும் மதிப்பு கொடுப்பீர்கள். பணம் வேண்டுமா புகழ் வேண்டுமா எனக் கேட்டால் நீங்கள் புகழைத் தேர்ந்தெடுக்கக் கூடியவர்கள். இந்த வாரம் ஒரு சிறப்பு பலனாக சகோதர சகோதரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். உங்களிடம் காரியம் சாதித்து கொள்வார்கள். அவர்களுக்கு நீங்கள் உதவ முடியும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு தூரப்பயணங்களும், மாறுதல்களும் உள்ள வாரமாக இது இருக்கும். உங்களில் பூராடம் நட்சத்திரக்காரர்களில் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் சிறிது காலம் அதைக் கை விடுவது நல்லது. இயலாவிடில் அந்த நேரத்தில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். மூலம் நட்சத்திரக் காரர்களில் சிலர் நாடுவிட்டு நாடு அல்லது கண்டம் விட்டு கண்டம் செல்லும் யோகமும் இருக்கிறது. தொழில் செய்பவர்கள் அகலக்கால் வைக்காமல் இருக்கும் தொழிலை அப்படியே நடத்திக் கொண்டு வருவது நல்லது.

ரேஸ் லாட்டரி பங்குச்சந்தை சூதாட்டம் போன்றவைகள் இப்போது கை கொடுக்காது. சிறிது லாபம் வருவது போல் ஆசைகாட்டி பிறகு மொத்தமாக இருப்பதையும் இழக்க வைக்கும் என்பதால் மேற்கண்ட இனங்களில் கவனமுடன் இருக்கவும். வீடு வாகன விஷயங்களில் மாற்றங்கள் இருக்கும். புதிய வாகனம் அமையும். மனைவியால் நன்மைகள் இருக்கும். வேலை மாற்றம் ஊர் மாற்றம் வீடுமாற்றம் தொழில் இடமாற்றம் போன்றவைகள் நடக்கும். அதே நேரத்தில் அனைத்தும் உங்களின் எதிர்காலத்திற்கு நல்லதாகவே அமையும்.

மகரம்:

பனிரெண்டில் சனி, கேது. ஐந்தில் சூரியன் என்ற கிரக அமைப்பு விரயங்களையும், செலவுகளையும் கொடுக்கும் அமைப்புத்தான் என்றாலும் யோகாதிபதி புதன் குருவின் பார்வையில் இருப்பதால் இந்த வாரம் கெடுபலன்களைக் கூட சாதகமாக மாற்றிக் கொள்வீர்கள். பிரச்னைகள் அனைத்தையும் நீங்கள் சமாளிக்கும் வாரம் இது. மகரத்திற்கு ஒரு சிறப்புபலனாக இப்போது வாழ்க்கைத் துணைவரால் சந்தோஷங்களும் இன்பமான நிகழ்வுகளும் இருக்கும். உங்களில் அவிட்டம்  நட்சத்திரக்காரர்களுக்கு இந்த வாரம் நல்ல பணவரவு கிடைக்கும்.

விரயச் சனி நடப்பதால் அரசு ஊழியர்களுக்கு துறைரீதியான இடமாறுதல்களோ அல்லது ஊர்மாற்றமோ இருக்கும். வசதியான ஊரை விட்டு வேறு எங்கோ மாற்றம் இருக்கும் என்பதால் அரைகுறை மனதுடன்தான் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கும். 15,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 12 ம் தேதி காலை 11.54  மணி முதல் 14 ம் தேதி மதியம் 2.28 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

கும்பம்:

பதினொன்றில் இருக்கும் ராசிநாதனும் கேதுவும் உங்களுடைய செயல்திறமை, விடாமுயற்சி,  உழைப்பு இவற்றை ஒருபோதும் தோல்வியடைய விட மாட்டார்கள் என்பதால் கும்பராசிக்கு இது யோகமான வாரமாக இருக்கும். ஐந்தில் ராகு  ஜீவனாதிபதி செவ்வாயோடு தொடர்பு கொண்டிருப்பதால் உங்களில் சிலருக்கு தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகளில் இப்போது மாற்றத்தை ஏற்படுத்தித் தருவார். தனம், வாக்கு, குடும்பம் ஆகிய மூன்று அமைப்புகளிலும் நன்மைகள் நடக்கும் வாரம் இது. நீங்கள் சொல்வது பலிக்கும்.

இந்த வாரம் பண சிக்கல்கள் இருக்காது. சகோதர சகோதரிகள் வழியில் செலவு இருக்கும். அவர்களிடம் இருந்து உதவியை எதிர்பார்க்க வேண்டாம். வீட்டுக்கடன் பெற்று வீடு வாங்க முடியும். எதை வாங்கினாலும் வில்லங்கம் இருக்கிறதா என்று தீர விசாரியுங்கள். 16,20 ஆகிய நாட்களில் பணம் வரும். 14 ம் தேதி மதியம் 2.28 மணி முதல் 16 ம் தேதி மாலை 4.57 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகளோ, முதலீடுகளோ எதுவும் வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

மீனம்:

பரிவர்த்தனை வலுப்பெற்று இருக்கும் யோகாதிபதி செவ்வாய் உங்களுக்கு தைரியத்தையும் அதன் மூலமாக புகழையும் பெற்றுத் தருவார். எடுக்கும் காரியம் வெற்றியடைந்து உங்களை சந்தோஷத்தில் இருக்க வைக்கும் வாரம் இது. இளைய பருவத்தினருக்கு தடைகள் நீங்கி வரன்கள் கூடி வரும். சூரியன் மூன்றில் வலுப் பெற்றுள்ளதால் என்றைக்கோ ஒருநாள் பிரதிபலன் பாராமல் நீங்கள் ஒருவருக்கு செய்த உதவியால் அவர் மூலமாக இப்போது உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். மீனத்திற்கு நல்ல வாரம் இது.

அரசு வேலை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. மத்திய மாநில அரசுகளின் தேர்வுகளான ஐ.ஏ.எஸ், குரூப்ஒன், நீட் போன்ற தேர்வுகளை எழுதி முடிவுகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். 19,20 ஆகிய நாட்களில் பணம் வரும். 16 ம் தேதி மாலை  4.57  மணி முதல்  18 ம் தேதி இரவு 8.30 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

(13.05.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

Be the first to comment

Leave a Reply