குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (29.04.19 முதல் 05.05.19 வரை)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

மேஷம்:

தனாதிபதி சுக்கிரன்  உச்சமாகி அவரது வீட்டில் ராசிநாதன் செவ்வாய் இருப்பது உன்னதமான அமைப்பு என்பதால் மேஷத்திற்கு இது மேன்மையான வாரம்தான். ராசியில் ஐந்துக்குடைய சூரியனும் உச்சமாக இருப்பது உங்களின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் ஒரு நிலை. மேஷத்திற்கு இது தொட்டது துலங்கும் வாரம். ராசிநாதன் குருவின் பார்வையிலும் இருப்பதால் இந்த வாரம் நீங்கள் எதையும் துணிந்து செய்தால் வெற்றியைத் தரும் நிலையில் கிரகங்கள் இருக்கின்றன. துணிந்தவனுக்கு துக்கமில்லை என்று மேஷத்தினர் நிரூபிக்கும் வாரம் இது.

தாயார் வழியில் நன்மைகள் நடக்கும். வீடு வாங்குவதற்கோ, வீடு கட்டுவதற்கோ ஆரம்பங்கள் இருக்கும். சிலர் வீடு கட்ட ஆரம்பிப்பீர்கள். அருமையான நினைத்த வாகனம் அமையும். அரசுத் துறையினருக்கு வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும்.  அந்தஸ்து, கௌரவம் நிலையாக இருக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். தெய்வ ஆசிர்வாதம் உண்டு. பெண்களுக்கு அலுவலகங்களில் இருக்கும் தொந்தரவுகள் குறையும். சமீப காலமாக வேலையில் பிரச்சனை ஏற்பட்டு, வேலைமாற்றம் ஏற்பட்டவருக்கு நல்ல வேலை அமையும்.

ரிஷபம்:

ரிஷபராசிக்கு இந்த வாரம் கெடுபலன் எதுவும் இல்லை. ராசிநாதன் சுக்கிரன் உச்ச நிலையில் இருப்பது கெட்டவைகளில் இருந்து உங்களை பாதுகாக்கும் அமைப்பு. சில வாரங்களாக எட்டில் இருந்த குரு, சனி சேர்க்கை மாறி குரு ஏழாமிடத்திற்கு வந்து ராசியைப் பார்ப்பதால் இனி உங்களுக்கு நல்ல மாற்றங்கள் நடைபெறும். தொல்லைகள் எதுவும் இருக்காது. அஷ்டமச்சனி நடப்பதால் எதிலும் நிதானமாக இருங்கள். அவசரப்பட்டு எந்தக் காரியத்திலும் இறங்க வேண்டாம். பதறாத காரியம் சிதறாது என்பது இப்போது உங்களுக்குப் பொருந்தும்.

எதிர்காலத்தில் நீங்கள் எப்படி போகிறீர்கள் என்பதை தீர்மானிப்பதாக இந்த வாரம் இருக்கும். அதற்கு ஏற்றார்போல சில சம்பவங்கள் இப்போது நடக்கும். சிலருக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து எதிர்பார்த்தது கிடைக்கும். வேலை, தொழில் செய்யும் இடங்களில்  சங்கடங்களோ விரயங்களோ இருக்கும் என்பதால் சிக்கனமாக இருங்கள். பொது இடங்களில் வீண் விவாதத்தை தவிர்க்க வேண்டும். முப்பது வயதுகளில் இருப்பவர்கள் வேலை, தொழில் விஷயங்களில் சில முக்கியமான மாற்றங்களை சந்திப்பீர்கள். பொதுவில் இது நல்ல வாரம்தான்.

மிதுனம்:

சுக்கிரன் வலுவான அமைப்பில் இருப்பதால் மிதுன ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான செயல்கள் நடக்க கூடிய வாரமாகவும், பணவரவு உள்ள வாரமாகவும் இது இருக்கும். உங்களில் திருவாதிரை நட்சத்தினருக்கு  வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் வரும் என்பதால் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. பேச்சின் மூலம் வாழ்க்கை நடத்தும் புனர்பூசம்  நட்சத்திரக்காரர்கள் நன்மைகளை அடைவீர்கள். வியாபாரிகளுக்கு இது நல்ல வாரம்.. இளைய வயதினருக்கு வாழ்க்கை செட்டில் ஆகும் சம்பவங்கள் உண்டு.

ராசியை சனி பார்ப்பதால் தேவையற்ற விஷயங்களில் பிடிவாதத்தைக் காட்டுவீர்கள். குடும்பத்தில் ஈகோ பார்க்காமல் விட்டுக் கொடுத்துப் போவதன் மூலம் அனைத்து பிரச்னைகளையும் வெற்றிகரமாக தீர்க்கலாம் என்பதை புரிந்து கொண்டீர்கள் என்றால் இது உங்கள் வாரம்தான். கடன் வாங்கக் கூடிய சூழல்கள் உருவாகலாம். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். புதிய முயற்சிகளை செய்வதற்கு தடை இருக்கும். மனம் சற்று அலைபாய்ந்து, முடிவெடுக்கும் திறன் குறைவாக இருக்கும். எதிலும் நிதானமாக செயல்படுங்கள்.

கடகம்

கடகராசிக்கு இந்த வாரம் எந்தவிதமான எதிர்மறை பலன்களும் நடக்க வாய்ப்பில்லை. உங்கள் அனைவருக்கும், அனைத்தும் நன்மையாக திரும்பும் நிலை ஆரம்பிக்கிறது. யோகக்கிரகங்கள் வலுவாக இருப்பதால் நினைக்கும் காரியத்தை வெற்றிகரமாக சாதித்துக் காட்ட முடியும். உங்களில் புனர்பூச நட்சத்திரக் காரர்களுக்கு கூடுதல் நன்மைகள் கிடைக்கும் வாரம் இது. உங்களில் இளைய பருவத்தினருக்கு “பருத்தி புடவையாய்க் காய்த்தது” என்பது போல அதிகம் முயற்சியின்றியே நல்ல பலன்கள் நடக்கும் வாரம் இது.

ஒரு வேலை தடைப்பட்ட நிலையில் இருப்பவர்கள் மறுபடியும் ஆரம்பிப்பீர்கள்.. தாயார் வழியில் நன்மைகள் நடக்கும். அம்மாவின் ஆதரவு கிடைக்கும். உயர்கல்வி கற்க முடியும். தடைபட்ட படிப்பு மறுபடி தொடரும். சிலருக்கு வடமாநில புண்ணியத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பும். ஞானிகளின் தரிசனமும் கிடைக்கும். 28ம் தேதி மாலை 3.45 முதல் 1ம் தேதி அதிகாலை 4.15 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூரப் பிரயாணங்கள் வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

சிம்மம்:

ராசிநாதன் சூரியனும் உச்சம், பத்தாம் அதிபதி சுக்கிரனும் எட்டில் மறைந்து உச்சம் என்பதால் இதுவரை உங்கள் வேலை, தொழில், வியாபாரம் போன்றவற்றில் இருந்து வந்த மந்த நிலைகள் விலகும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகி காரியங்கள் தடையின்றி நடக்கும். உங்களில் முப்பது வயதுகளில் இருப்பவர்கள் நல்லவேலை, திருமணம் என்று செட்டிலாவீர்கள். தனியார் துறையினருக்கு கூடுதல் வருமானம் உண்டு. கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள். பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேலை, தொழில் இடங்களில் இருக்கும் எதிரிகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.

செவ்வாய் பத்தில் இருப்பதால் ரியல்எஸ்டேட் தொழிலர்கள் பணவரவு ஒன்றினை இப்பொழுது அடைவீர்கள். பெண்களுக்கு இது உற்சாகமான வாரமாக இருக்கும். ஆண்களை விட மேலாக சாதிப்பீர்கள். உங்களில் மகம் நட்சத்திரக்காரருக்கு தொழில் மற்றும் பணவரவுகளில் அதிக நற்பலன்கள் இருக்கும். 1ம் தேதி அதிகாலை 4.15 மணி முதல் 3 ம் தேதி மதியம் 2.40 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூரப் பிரயாணங்கள் வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

கன்னி:

சுக்கிரன் உச்ச நிலையில் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் கன்னிக்கு கவலைகள் இல்லாத வாரம் இது. ராசிநாதன் புதன் எட்டில் இருப்பது மனதைக் குழப்பினாலும் சுக்கிர வலுவால் எதையும் சமாளிப்பீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு திருப்பு முனையான நல்ல சம்பவங்கள் நடக்க இருக்கிறது. தொழிலை விரிவு படுத்தும் எண்ணங்கள் ஈடேறும். உங்களில் உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு தொல்லையாக இருந்தவைகள் இனி இருக்காது. வீடு வாங்குவதற்கு, வீடு கட்டுவதற்கு இருந்த சிக்கல்கள் மாறும். நல்ல வீட்டில் குடி போவீர்கள்.

சனி பத்தாம் வீட்டை பார்ப்பதால் சிலருக்கு வேலைக்காரர்களால் விரையங்களும், பண இழப்பு நிகழ்ச்சிகளும் நடக்கும் என்பதால் பணத்தைக் கொடுத்து விடுவதில் கவனம் தேவை. ரியல் எஸ்டேட், மருத்துவர்கள், காவல்பணியினர், விளையாட்டு, ஜிம், பில்டர்களுக்கு தொழில் மேன்மையாக இருக்கும். 3ம் தேதி மதியம் 2.40 மணி முதல் 5 ம் தேதி இரவு 10.29 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்டதூரப் பிரயாணங்களோ இந்த நாட்களில் வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன் உச்சநிலையில் குருபார்வையில் இருப்பதால் துலாத்தினரின் குடும்பத்திலும், தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகளிலும் கெடுதல்கள் எதுவும் நடக்காத வாரம் இது. ராசிநாதன் வலுப் பெற்றால் ராசிக்கு கெடுதல்கள் இருக்காது என்ற விதிப்படி உங்களுக்கு இந்த வாரம் கெடுபலன்கள் சொல்வதற்கு இல்லை. குறிப்பிட்ட ஒரு பலனாக தொழில் தொடங்குவதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கும் என்பதால் இனிமேல் தொழில் தொடங்கலாம். தொழில் சரியின்றி இருந்தவர்களுக்கு இனி நல்ல முன்னேற்றம் இருக்கும்.

உங்களில் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இது யோக வாரமாக அமையும். இதுவரை தந்தையிடம் ஏதேனும் ஒரு காரியத்தை சாதிக்க நேரம் எதிர்பார்த்து இருந்தவர்கள் இந்த வாரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஆசைப்பட்டுக் கேட்கும் விஷயத்திற்கு அப்பா சம்மதிப்பார். பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு தூரப் பயணம் அமையும். தெய்வத்தின் அருள் பூரணமாக கிடைக்கும் வாரம் இது. திருமணமாகாத இளம் வயதினருக்கு திருமண ஆரம்ப நிகழ்வுகள் நடைபெறும். துலாமின் யோக வாரம் இது. 

விருச்சிகம்:

விருச்சிக நாதன் செவ்வாய் குருவின் பார்வை பெற்று ராசியைப் பார்க்கும் அற்புத வாரம் இது. விருச்சிக ராசிக்காரர்களின் வேதனைகள் விலகி விட்டன. ஏழரைச் சனியினால் கிடைத்த அனுபவங்கள் அனைத்துமே சனி முடிந்ததும் நன்றாக வாழ்வதற்காகத்தான் என்பதால் இனிமேல் விருச்சிகத்தினர் ஆனந்த வாழ்வை அடையப் போகிறீர்கள். மனதைத் தளர விடாமல் இறைபக்தியுடன் அனைத்தையும் அணுகினால் பரம்பொருள் உங்களை கைவிட மாட்டார் என்பது உறுதி. எதையும் சமாளிக்க முடியும் என்கிற தைரியம் பிறக்கும் வாரம் இது.

மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலைபாய்ந்து கொண்டிருந்தவர்களுக்கு நிம்மதி தரும் சம்பவங்களும் நல்ல செய்திகளைக் கேள்விப்படுதலும் இருக்கும். தோல்வி மனப்பான்மையில் இருக்கும் சிலர் அது விலகப் பெறுவீர்கள். மங்கள காரியங்கள் வீட்டில் நடக்கும். முதல் திருமணம் கோணலாகி காவல் நிலையம், வழக்கு, நீதிமன்றம் என்று அலைந்து திரிந்தவர்களுக்கு அனைத்தும் நல்லபடியாக முடிவிற்கு வந்து தெளிவு பிறக்கும். இரண்டாவது வாழ்க்கைக்கான அமைப்புகள் இந்த வாரம் உருவாகும். இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாகவும் இருக்கும்.

தனுசு:

இளைய பருவ தனுசுவினர் சிலர் உங்களுக்குப் பிடிக்காத நபர்களை இந்த வாரம் சந்திப்பீர்கள். உங்களை கோபமூட்டக்கூடிய சம்பவங்கள் இப்போது நடக்கும். இளைஞர்கள், மாணவர்கள் எதிர்கால நல்வாழ்வில் அக்கறையுடன் இருக்க வேண்டியது அவசியம். காதல் போன்ற தேவையற்ற விஷயங்களில் கவனத்தை திருப்பாதீர்கள். இன்றைய காதல் நாளைய அழுகையில் முடியும். சிலர் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். இப்போதிருந்தே தேவையற்ற அனாவசியக் கடன் எதுவும் வாங்காமல் சிக்கனமாக இருப்பது நல்லது.

ராசிநாதன் குரு வலுவாக இருப்பதாலும், ஒன்பது, பதினொன்றுக்குடையவர்கள்  உச்சத்தில் இருப்பதாலும் எதிர்ப்புகள் அனைத்தையும் வெற்றி கொள்வீர்கள். தனுசு ராசியினருக்கு இந்த வார முக்கிய பலனாக சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட்டு டென்ஷன் ஆவீர்கள். வேலை செய்யும் இடங்களில் முதலாளி மற்றும் மேலதிகாரி சொல்வதை கேட்டு நடந்து கொள்வது நல்லது. எல்லா நிலைகளிலும் விழிப்புடன் இருங்கள். தொழில் செய்பவர்கள் யாரையும் நம்ப வேண்டாம். எதிலும் தேவையின்றி அனாவசிய ரிஸ்க் எடுக்காதீர்கள்.

மகரம்:

உங்களில் அவிட்டம் நட்சத்திரத்தினர் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். பேச்சுக்களில் நிதானம் தேவை. கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. ஏழரைச்சனி நடப்பதால் பொருளாதார நிலைமைகள் சொல்லிக் கொள்ளும்படி இருக்காது. எதிலும் சிக்கனமாக இருங்கள். தேவையற்ற வீண் செலவுகளை தவிருங்கள். உங்களை புரிந்து கொள்ளாமல் எதிர்த்தவர்கள் இனிமேல் மனம் மாறி உங்களுக்கு சாதகமாக திரும்புவார்கள். சிலருக்கு கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும். தெய்வ வழிபாடு செய்வீர்கள்

வார இறுதியில் நல்ல கிரக நிலை அமைவதால் தொழில் சிக்கல்கள் எதுவும் ஏற்படப் போவதில்லை. வியாபாரிகளுக்கு வேலைக்காரர்களால் பிரச்னை வரும். பணம் கொடுத்து விடும் போதோ வங்கியில் இருந்து எடுத்து வரும் போதோ கவனம் தேவை. சிக்கல்கள் எதிலாவது சனி மாட்டி வைப்பார் என்பதால் எதிலும் அவசரப்படாதீர்கள். முக்கியமான வழக்கு இருப்பவர்கள், பேச்சுவார்த்தை நிலுவையில் இருப்பவர்கள், இப்போது பிரச்சனையை தள்ளி வைப்பதும், வாய்தா வாங்குவதும் சாதகமான பலனை தரும். பொதுவில் இது நல்ல வாரம்தான்.

கும்பம்:

கும்பத்தினரின் விருப்பம் நிறைவேறும் வாரம் இது. யோகாதிபதி சுக்கிரன் உச்சம் பெறுவதால் பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம், கலைகள் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கு விசேஷமான நல்ல பலன்கள் நடக்கும். காரியத்தடைகள் நீங்கும். கேட்கும் இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டு. வேலை மாற்றம், தொழில்மாற்றம், இடமாற்றம் ஆகியவை சாதகமாக ஏற்படும். சிலருக்கு பிரயாணங்களும், அலைச்சல்களும் இருக்கும்.

வாரம் முழுவதும் பணவரவு நல்லபடியாக உண்டு. வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். திருமணம் தாமதமாகி கொண்டிருந்தவர்களுக்கு அக்டோபருக்கு மேல் சிறப்பாகத் திருமணம் நடைபெறும். காதலித்துக் கொண்டிருப்பவர்கள் தைரியம் வரப்பெற்று பெற்றோர்களிடம் விஷயத்தை சொல்லி சம்மதம் வாங்குவீர்கள். அப்பாவிடம் காரியத்தை சாதித்துக் கொள்ள நல்ல வாரம் இது. இளைஞர்கள் தந்தையிடம் ஏதேனும் கேட்டுப் பெறவேண்டியது இருந்தால் இந்த சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.

மீனம்:

ராசியில் எட்டுக்குடைய சுக்கிரன் உச்சம் பெறுவதால் இனம் தெரியாத மனக் கலக்கங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு அடங்கிக் கிடந்த கடன் தொல்லைகள் லேசாக எட்டிப்பார்த்து மனவருத்தத்தைத் தரும். அதே நேரத்தில் எதுவும் கையை மீறி போகாமால் கட்டுக்குள் இருக்கும். வேற்று மதத்தினர் உதவுவார்கள் தொழில், வேலை விஷயங்களில் மாற்றங்கள் இருக்கும். நீதித்துறை, வங்கி, சொல்லிக் கொடுப்பவர்கள் மருத்துவம், ஆன்மிகம், ஜுவல்லரி, வட்டி, சிட்பண்ட் போன்ற துறைகளில் இருப்பவர்கள் லாபம் அடைவீர்கள்.

இந்த வாரம் ஒரு சிறப்பு பலனாக பயணங்களால் லாபங்கள் இருக்காது. கூடுமானவரை தூரப் பிரயாணங்களை ஒத்தி வைப்பது நல்லது. தொழில், வியாபாரம் போன்றவைகளில் நல்ல பலன்களும் பண வரவுகளும் இருக்கும். இரண்டில் சூரியன் உச்ச வலுவுடன் இருப்பதால் எந்த ஒரு வார்த்தையையும் பேசும் முன் யோசித்து பேசுவது நன்மை தரும். அரசியலில் இருப்போருக்கு நல்ல விஷயங்கள் நடக்கும். தொழிலில் போட்டிகள் மறைந்து இன்னும் கொஞ்ச காலத்திற்கு நீங்களே தனிக்காட்டு ராஜாவாக உலா வருவீர்கள்.

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

1 Comment on குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (29.04.19 முதல் 05.05.19 வரை)

Leave a Reply