adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
அரச ஜாதக யோக விளக்கம்.-D- 50

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

சென்ற வாரம் வெளிவந்த “அடுத்த வாரம் பிறக்கப் போகும் அரசன்” கட்டுரைக்கு உங்களிடையே ஏராளமான வரவேற்பு இருந்ததை உங்களின்  பின்னூட்டங்களிலிருந்து உணர முடிகிறது. இதுவரை வெளிவந்த “ஜோதிடம் எனும் மகா அற்புதம்” கட்டுரைகளிலேயே சென்ற கட்டுரைதான் அதிகமான வரவேற்பைப் பெற்றிருக்கும் என நினைக்கிறேன். அதேநேரத்தில் உங்களின் சந்தேகங்களுக்கும் குறைவில்லை.

ஜோதிடத்தில் நடந்தவைகளை மட்டும்தான் தெளிவாகச் சொல்ல முடியும், நடக்கப் போவதை துல்லியமாகச் சொல்ல முடியாது என்றொரு குற்றச்சாட்டு உண்டு.

இதுவரை, ஒரு துறையில் முதன்மையாக இருப்பவனையோ அல்லது ஒரு அரசனின் ஜாதகத்தையோ விளக்கி எழுதப்பட்டதை மட்டுமே படித்திருந்த நமக்கு, இந்தநேரத்தில் பிறக்கும் ஒருவர் எதிர்காலத்தில் அரசனாவான் என்று விளக்கியது  புதுமையாகத் தெரிந்ததால் இந்தக் கட்டுரை அதிகமாக விரும்பப்பட்டு இருக்கிறது.

கடந்த காலத்தை அறிவதற்கும், எதிர்காலத்தைச் சொல்வதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இல்லை. கடந்த காலம், நிகழ், எதிர்காலங்களுக்கு இடையே ஒரு மெல்லிய கோடு மட்டுமே இருக்கிறது. ஒரு சின்ன இடைவெளிதான் இவற்றைப் பிரிக்கிறது. எல்லாக் காலங்களுக்குமான விதிகள் பொதுவானவைதான். கடந்ததை அறியும் ஒருவரால் வரப் போவதையும் சொல்ல முடியும்.

வந்திருக்கும் பின்னூட்டங்களில் மிக முக்கியமான ஒன்று, இந்த ஜாதக அமைப்பில் உள்ள குழந்தை எந்த இடத்தில் பிறந்தால் அரசனாகும் என்பதுதான்.

ஜோதிடத்தில் இன்றுள்ள விதிகள் மற்றும் ஜோதிடம் அறிந்த ஒருவரின் அதிகபட்ச உயர்நிலை ஞானத்தைக் கொண்டு, பிறக்கும் குழந்தை எதிர்காலத்தில் இப்படிப்பட்ட உயர்வில் இருக்கும் என்று கணிக்க முடியுமே தவிர, இந்தக் குழந்தை எந்த இடத்தில் பிறந்தால் இத்தனை உயரத்திற்கு வரும் என்று சொல்லவே முடியாது.

அதாவது எங்கே பிறக்கும் குழந்தை கோடீசுவரனாகும், எங்கே பிறக்கும் குழந்தை அரசனாகும் என்பதை இன்றைய ஜோதிட விதிகளை வைத்துச் சொல்ல முடியாது.

உலகில் ஒரே நாளில், ஒரே நேரத்தில், பிறக்கும் குழந்தைகள் அனைவரும் வாழ்க்கை முறையில் ஒன்று போலவே இல்லையே ஏன் என்ற கேள்விக்கு, சென்ற காலங்களில், பிறக்கும் குழந்தையின் பூர்வ ஜென்ம கர்ம வினைகளின்படி அதன் வாழ்க்கைத்தரம்  அமைகிறது என்று ஜோதிடத்தில் பதில் தரப்பட்டது.

ஒளியை மூலமாகக் கொண்ட ஜோதிடத்தில் நான், விஞ்ஞான ரீதியில் இன்னும் சற்று உள்ளே சென்று, அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய இந்த ஒளி மையப் புள்ளியை விளக்குகிறேன். 

எந்த இடத்தில் பிறக்கும் குழந்தை அரசனாகும் என்ற கேள்விக்கு, சென்ற வாரம் நான் விளக்கிய கிருத்திகை அல்லது ரோகிணி நட்சத்திரக் குழந்தைகளின் நிலவு, மற்றும் நட்சத்திரங்களின் ஒளி மையப்புள்ளி, பூமியில் எந்த இடமாக இருக்கிறதோ, அந்தத் துல்லிய இடத்தில் பிறக்கும் குழந்தை முதன்நிலை அரசனாகவும், மையப்புள்ளியிலிருந்து விலகிப் பிறக்கும் குழந்தைகள் மையத்திற்கும், குழந்தை பிறக்கும் தூரத்திற்கும் இடையே இருக்கும் இடைவெளியைப் பொருத்து அரசனுக்கு அடுத்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்டதாகவோ இருக்கும்.

இதனையே நான் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஜாதகத்தை விவரிக்கும் போதும் சொல்லியிருந்தேன். “மகம் ஜெகத்தை ஆளும்” என்றால் ஜெயலலிதா பிறந்த அந்த நேரத்தில் மகம் நட்சத்திரத்தில் உலகில் ஆயிரமாயிரம் குழந்தைகள் பிறந்திருப்பார்களே, அவர்கள் அனைவரும் ஏன் அரசியாகவில்லை என்ற கேள்வி எழுந்தது.

இதற்கு நிலவு, மகம் நட்சத்திரம், சூரியன் ஆகியவற்றின் கூட்டு ஒளியின்  மையப்புள்ளி அன்று, ஜெயலலிதா பிறந்த மைசூராக இருந்திருக்கும், அதிலும் துல்லியமாக ஜெயலலிதா பிறந்த இடத்தில் அதனுடைய ஆழ் நுணுக்க மையம் இருந்திருக்கும். ஆகவே அந்த இடத்தில் பிறந்த ஜெயா அரசியானார் என்று எழுதியிருந்தேன்

இவையெல்லாம் ஜோதிடத்தை இன்னும் ஆழமாகக் கொண்டு செல்லக் கூடிய விஷயங்கள். விஞ்ஞானம் வளர்ந்து வரும் இந்தக் காலகட்டத்தில் என்றேனும் ஒரு நாள், அல்லது இன்னும் சில நூற்றாண்டுகள் ஆயினும், இப்போது நான் ஆரம்பித்து வைக்கும் அல்லது இப்போது நான் சொல்லும் இந்த ஒளி மையப் புள்ளி கண்டிப்பாக கண்டுபிடிக்கப்படும். அதற்கான சமன்பாடுகள் உணரப்படும். அப்போது உண்மை விளங்கும்.

ஒரு உயிரின் பிறந்த இடத்தில் விழும் ஒளியைப் பற்றி இப்போது நான் சொல்லுவது எதிர்காலத்தில் வரும் ஒரு ஜோதிடன் இந்த ஆய்வை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு தூண்டுகோலாக இருக்கும் அவ்வளவுதான். ஆனால் என்றேனும் ஒரு நாள் இப்போது எழுப்பப்பட்டிருக்கும் “எந்த இடத்தில் பிறக்கும் குழந்தை அரசனாவான்” என்ற கேள்விக்கு ஜோதிடத்தில் நிச்சயமாக விடை கண்டுபிடிக்கப்பட்டே தீரும்.

அடுத்து மேலே நான் சொன்ன உயர்வான ஜாதகத்தில், ஏழில் தனித்து சுக்கிரன் அமர்ந்து களத்திர தோஷம் உள்ளது என்ற சந்தேகம் எழுப்பப்பட்டிருக்கிறது. களத்திர தோஷம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளையும், நிம்மதியற்ற திருமண வாழ்க்கையையும், மனைவியில்லா நிலையையும் குறிக்கிறது.

இங்கே எந்த அரசனுக்கு ஒரு மனைவி இருக்கிறது?

உற்று நோக்கினால், ஒன்று... அரசனுக்கு திருமணமே ஆகியிருக்காது, அதாவது அவருக்கு பெண்களின் மேல் நாட்டமே இருக்காது, அல்லது அதிகமான துணைகளைக் கொண்டவராக இருப்பார்.  

நடைமுறையில் ஒரே பெண்ணுடன் வாழும் ஒழுக்கமுறைதான் நமக்கு போதிக்கப்படுகிறதே தவிர, இங்கே சொகுசான வாழ்க்கை நடத்த தகுதி படைத்த எவரும் பெண்கள் விஷயத்தில் ஒழுக்கமானவர்கள் இல்லை. சொல்லப் போனால் ஆணாகட்டும், பெண்ணாகட்டும் இங்கே சந்தர்ப்பம் கிடைக்காததால் மட்டுமே தவறு செய்யாதவர்கள்தான். சந்தர்ப்பம் கிடைப்பின் எவரும் இங்கே ஒழுக்கமானவர்கள் அல்ல. அந்த சந்தர்ப்பம் என்பதைத்தான் கிரகங்கள் உருவாக்குகின்றன அல்லது ஒருவருக்கு தர மறுக்கின்றன.

நமது மேலான இந்து மதத்தை, தானே விமரிசிக்கும் வெளிப்படையான கருத்துக்களைக் கொண்ட ப்ருத்ஹரி மகரிஷி, நாரத முனிவரிடம் நடத்தும் ஒரு உரையாடலின் போது சொல்லியிருக்கும் ஒரு ஸ்லோகம் இந்த இடத்தில் எனக்கு நினைவுக்கு வருகிறது.

“இடம், தக்க சமயம், தன்னை விரும்பும் ஆடவன்... இவை மூன்றும் சரியாக அமையாத காரணத்தினால்தான், ஓய்... நாரத முனிவரே.. பெண்கள் பத்தினிகளாக இருக்கிறார்கள்.” மகாஞானியான ப்ருத்ஹரி சொன்னது ஒரு ஆணுக்கும் பொருந்தும்.

மனிதனின் படைப்பே இன விருத்திக்காகத்தான் எனும் போது, வயது வந்த ஒரு ஆணையும், பெண்ணையும் அவர்கள் அறியாமலேயே, வம்ச விருத்திக்கான வேலைகளை இயற்கை ஆரம்பித்து வைக்கும்போது, இங்கேயுள்ள அனைவருமே வெளியே ஒழுக்கமானவர்களே தவிர மனதிற்குள் அதற்கு நேர்மாறானவர்கள்தான்.

எங்கே ஒரு மனிதனுக்கு பணமும், அதிகாரமும் வந்து விடுகிறதோ, அங்கே ஏக தாரம் என்பதும் இயலாத ஒன்றாகி விடுகிறது. அதைவிட மேலாக இந்த களத்திர தோஷம் என்ற வார்த்தையே இன்னும் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு இருக்குமா என்பதும் சந்தேகமே.

திருமணம் என்ற ஒன்று இருந்தால்தானே திருமண தோஷம் என்பதும் இருக்கும்?

ஒருவனுக்கு ஒருத்தி என்ற உன்னதமான கலாசாரத்தைக் கொண்ட நமது தேசத்தில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்துக்கள் இத்தனை பெரிய அளவில் இருக்கும் என்பதை யாராவது ஒத்துக் கொண்டிருப்போமா? உண்மையைச் சொல்லப் போனால் இன்றைய சூழல் இரண்டாவது திருமணத்தையும் தாண்டி மெதுவாக மூன்றாவதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மூன்றாவது திருமணமும் நடக்கிறது.

நேற்று பிறந்திருக்கும் அரசக் குழந்தை திருமண பருவத்திற்கு வரும் போது கல்யாண பந்தம் முழுமையாக இருக்குமா என்பதே சந்தேகம்தான். கேட்பதற்கு வியப்பாக இருந்தாலும் இதுவே உண்மை.

சமூகம் இப்போது மெதுமெதுவாக திருமணத்தை மறுக்கும் நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஒரு புதுமுறையாக நமது இளைஞர்களிடம் கலாச்சாரத்திற்கு மாறாக, ஒரு வருடம் வாழ்ந்து பார்ப்போம், பிடித்திருந்தால் திருமணம் செய்து கொள்வோம், இல்லையென்றால்  பிரிந்து விடுவாம் என்ற உறவுநிலை பரவி வருவதை ஜோதிடனாகிய நான் வரும் வாடிக்கையாளர் மூலம் உணருகிறேன்.

பெற்றோர் மட்டுமே வாழ்க்கைத்துணையை பார்த்து நிச்சயித்த காலம் போய், தானே தேடும் வாழ்க்கைத் துணையை பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய காலம் வந்துவிட்டது. அப்படித் தேடிய வாழ்க்கைத்துணையும் ஒத்து வரவில்லை என்றால், சில மாதங்களிலேயே விவாகரத்து செய்தாலும் பரவாயில்லை, இன்னொரு ஆள் பார்த்துக் கொள் என்று சொல்லி விடுகிறோம். எனவே இனிப் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு களத்திர தோஷம் இருக்கிறதா என்பதைப் பற்றி ஜோதிடர்கள் பெரிதாக கவலைப்பட வேண்டாம்.

இன்னும் சிலர் இந்த ஜாதகத்தில் ஆயுள் குற்றம் இருக்கிறதே என்று கேட்டிருக்கிறீர்கள். எட்டுக்குடைய சனி, ஆறில் மறைந்து, கேதுவுடன் இணைந்து சேர்ந்து எட்டாமிடத்தையே பார்ப்பதால் வந்திருக்கும் கேள்வி இது என்று எண்ணுகிறேன்.

ஆயுள் என்பது லக்னம், லக்னாதிபதி, எட்டாமிடம், எட்டுக்குடையவன், சனி ஆகிய ஐந்து விஷயங்கள் சம்பந்தப்பட்டது. இதில் முதன்மையானது எட்டாமிடம் அல்ல. லக்னமும், லக்னாதிபதியும்தான். லக்னம், லக்னாதிபதி எப்போது அதிக சுபத்துவம் அடைகிறதோ அங்கே ஜாதகருக்கு நிச்சயமாக அதிக ஆயுள் உண்டு.

லக்னம், எட்டாமிடம், சனி மூவரும் ஒரே நிலையில் சுப வலுப்பெறும் அமைப்பில் ஒருவர் தொண்ணூறு வயது கடந்தும் வாழ்கிறார். இதில் ஒன்று குறைந்தாலும் இருபது வருட ஆயுள் குறையலாம். அவ்வளவுதான். மூலநூல்களை மிக ஆழமாகப் படித்துப் பார்த்தால் திரும்பத் திரும்ப லக்னம், லக்னாதிபதிதான் ஆயுள் விஷயத்தில் வலியுறுத்தப்படுகிறதே தவிர அஷ்டமாதிபதியின் பங்கு இங்கே இரண்டாவதாகத்தான் வரும்.

சென்ற வாரம் நான் சொன்ன நாளைய அரசனின் ஜாதகத்தில், லக்னாதிபதி சந்திரன் வளர்பிறையாகி, உச்சநிலை பெற்று, வலுப் பெற்ற குருவின் பார்வையில் இருக்கும் நிலையில், லக்னம் தனிச் சுக்கிரனின் பார்வையில் இருப்பது ஆயுளுக்கு மிகப்பெரிய அமைப்பு யோக அமைப்பு.

அதேபோல ஆயுள்காரகன் சனி ஆறில் அமர்ந்தாலும், அவர் அங்கே குருவின் வீட்டில் இருக்கிறார். ராகுவுடன் சனி சேர்ந்திருந்தால் மட்டுமே ஆயுள் தோஷம் இருக்கும். சனி கேதுவுடன் இணைந்து சூட்சும வலுப்பெற்று, தன்னுடைய பாபத்துவமும் நீங்கப் பெற்று, மூன்றாம் பார்வையால் எட்டாமிடத்தை பார்க்கையில் ஆயுள் பங்கம் வருவதற்கு வாய்ப்பு இல்லை.

மிக முக்கியமான பாதக ஸ்தான விளக்கத்தை அடுத்த வெள்ளி பார்க்கலாம்.

One thought on “அரச ஜாதக யோக விளக்கம்.-D- 50

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *