Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 227 (05.03.19)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

கிருஷ்ணன், திருச்சி.

கேள்வி.

48 வயதில் கோடிக்கணக்கில் சம்பாதித்து அதனை இழந்தும் விட்டேன். ஐடி தொழிலில் சம்பாதித்த பணத்தை வேறு தொழிலில் முதலீடு செய்து அனைத்தும் போய் விட்டது. அந்தத் தொழில் 2011ல் தொடங்கப்பட்டது. 2018ல் மூடி விட்டேன். 2014 க்குப் பிறகு வேலையும் இல்லை. ஏன் என் சம்பாத்தியம் 2014க்குப் பிறகு தடைபட்டது? மீண்டும் வேலை அல்லது தொழில் மூலம் வருமானம் வர வாய்ப்புள்ளதா? நான் தொழில் செய்தே இருக்கக்கூடாது என ஒரு ஜோதிடர் சொன்னார். மீண்டும் தொழில் செய்யலாமா? நல்ல வருமானம் வந்த காலத்தில் பெரும் தொகையை உறவினர்களுக்கு கொடுத்து உதவியிருக்கிறேன். அவர்கள் அதைத் தருகிறேன் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அந்தப் பணம் கிடைக்குமா?

பதில்

(சிம்ம லக்னம், கும்ப ராசி, 1ல் கேது, 3ல் சுக், செவ், குரு, 4ல் சூரி, 5ல் புத, 7ல் சந், ராகு, 9ல் சனி, 4-12-1970 இரவு 11-9 திருச்சி)

சிம்ம லக்னத்திற்கு சனி தசை நன்மைகளைச் செய்யாது என்பதை அடிக்கடி மாலைமலர் பதில்களில் சொல்லி வருகிறேன். அப்படி நன்மைகளைச் செய்ய வேண்டுமெனில் சனி ஒரு இக்கட்டான நிலைகளில் நல்ல சார அமைப்புடன் சுபத்துவமாக இருக்க வேண்டும்.

சிம்மத்திற்கு யோகாதிபதியான குருவின் தசையில் பெரும் பணம் சம்பாதித்து இருக்கிறீர்கள். இது சனி தசை சுயபுக்தி வரை நீடித்திருக்கிறது. சனி தசை, புதன் புக்தியில் தெரியாத தொழிலில் முதலீடு செய்து அத்தனை பணத்தையும் இழந்து விட்டீர்கள். சனி தசை சுக்கிர புக்தியில் தற்போது வருமானம் இன்றி இருக்கிறீர்கள். சிம்ம லக்ன அதிபதியான சூரியனுக்கு, சனியும், சுக்கிரனும் கடுமையான எதிரிகள். எனவே சனி தசை, சுக்கிர புக்தி முழுவதும் உங்களுக்கு வேலை தொழில் எதுவும் இல்லாத ஒரு நிலைதான் இருக்கும்.

இன்னும் இரண்டு வருடங்களுக்கு உங்களுக்கு நல்ல பலன் சொல்வதற்கில்லை. வரும் டிசம்பர் மாதம் ராகு புத்தி ஆரம்பித்ததும் மாற்றங்கள் ஏற்படும். ஏற்கனவே வேலை செய்த ஐடித் துறையில் வேலை கிடைக்கும். 2022ல் குரு புக்தி ஆரம்பித்ததும் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். அதுவரை பண விவகாரத்தில் நல்ல பலன்கள் நடக்காது. கொடுத்த பணம் திரும்பி வருவதற்கும் உத்தரவாதம் இல்லை. வந்ததாலும் சிறுகச்சிறுக வந்து பிரயோஜனம் இல்லாமல் போகும். 2022 முதல் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டு நன்றாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.

ஆர். சுகில், தக்கலை.

கேள்வி.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து 23 வயதான நான் ஒரு கல்லூரியில் படித்து பிஇ பட்டம் பெற்றேன். கல்லூரிக்கு கட்ட வேண்டிய பணத்தில் 80 ஆயிரம் கடன் இருக்கிறது. பாக்கிப் பணம் கொடுக்காமல் எனது சான்றிதழை இரண்டு வருடமாக தர மறுக்கிறார்கள். பணத்தைக் கட்ட எனக்கு வழி இல்லை. இப்போது சாதார கம்பெனியில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்து வருகிறேன். என் கடன் எப்போது தீரும்? சர்டிபிகேட் எப்போது கிடைக்கும்? என் எதிர்காலம் எப்படி இருக்கும்?

பதில்.

(மீன லக்னம், தனுசு ராசி, 1ல் சுக், 2ல் சூரி, புத, கேது, 5ல் செவ், 8ல் ராகு, 9ல் குரு, 10ல் சந், 12ல் சனி, 20-4-1995. அதிகாலை 4-10 குமரி) 

மீன லக்னத்தில் பிறந்த உனக்கு, மூன்று வயதில் இருந்து எட்டுக்குடைய சுக்கிர தசையும், 29 வயது வரை 6-க்குடைய சூரிய தசையும் நடக்கிறது. இவர்கள் இருவரும் உச்சம் பெற்று இருக்கிறார்கள். பாபர்கள் உச்சம் பெற்று தசை நடத்துவது நன்மைகளைத் தராது. அதேநேரத்தில் லக்னாதிபதி குரு லக்னத்தைப் பார்ப்பதால் 29 வயதிற்கு பிறகு வரும் பத்தில் அமர்ந்த சந்திர தசை உனக்கு யோகத்தைச் செய்யும்.

29 வயதிற்கு பிறகு அடுத்தடுத்து யோக தசைகள் வருவதால் மிகவும் நன்றாக இருப்பாய். சொந்த ஊரை விட்டு தூர இடங்களுக்குச் சென்று பொருள் சம்பாதிக்கும் ஜாதகம் உன்னுடையது. தற்போது உன்னுடைய தனுசு ராசிக்கு கடுமையான ஜென்மச்சனி நடந்து கொண்டிருப்பதால் வேலை விஷயத்திலும், கடன் விஷயத்திலும் நல்லவைகள் நடக்காது. 2019ல் உன்னுடைய கடனை அடைத்து சர்டிபிகேட் பெறுவதற்கு வாய்ப்பு இல்லை.

40 வயதிற்குட்பட்ட தனுசு ராசிக்காரர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் சிரமத்தில்தான் இருக்கிறீர்கள். பொறுமையாக இரு. அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும். 29 வயதிற்குப் பிறகு உன்னுடைய எதிர்காலம் கவலைப்படும்படியாக இருக்காது. லக்னம் வலுப்பெற்றதால் வருங்காலத்தில் மிகவும் நன்றாக இருப்பாய். வாழ்த்துக்கள்.

எஸ். வின்சென்ட். கும்பகோணம்.

கேள்வி.

கட்டிட வேலை பார்த்து வருகிறேன். இதைத் தவிர வேறு வேலை எதுவும் கிடைக்கவில்லை. கடன் தொல்லை அதிகமாக இருக்கிறது. 500 ரூபாய் சம்பாதித்தாலும் மிச்சப்படுத்த முடியவில்லை. எங்கு சென்று கேட்டாலும் வேறு வேலை கிடைக்கவில்லை. மூன்று குழந்தைகள் இருக்கின்றன. எங்களில் யாருக்கும் ஜாதகம் கிடையாது. ஆனால் ராசி தெரியும். மூத்தவனுக்கு மேஷம், அடுத்த பெண்ணிற்கு விருச்சிகம், இளையவனுக்கு கன்னி, எனக்கு ரிஷபம், மனைவிக்கு மீனம். எங்களது கஷ்டம் எப்போது தீரும்?

பதில்.

ஐந்து பேர் கொண்ட குடும்பத்தில் நான்கு பேருக்கு சனி நடந்து கொண்டிருப்பது குடும்பத் தலைவரின் வருமானத்தைப் பாதிக்கவே செய்யும். அதிலும் குறிப்பாக ஒரு குடும்பத்தில் விருச்சிகம், மேஷ ராசியைக் கொண்டவர்கள் கடந்த சில வருடங்களாக கடுமையான பணப் பிரச்சினைகளையும், உடல், மனப் பிரச்சினைகளையும் சந்தித்திருக்கிறீர்கள் என்பதை அடிக்கடி எழுதுகிறேன்.

வரும் ஏப்ரல் முதல் உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றம் ஏற்படும். இரண்டாவதாக செப்டம்பர்  முதல் இன்னொரு நல்ல மாற்றம் ஏற்பட்டு, அடுத்த வருடம் முதல் நிரந்தர நல்ல வேலையும் கிடைத்து, சேமிக்கும் அளவிற்கு பணம் சம்பாதிப்பீர்கள். இனிமேல் குடும்பத்தில் கஷ்டங்கள் இருக்காது. வாழ்த்துக்கள்.

சுகந்தி, கரந்தை-2

கேள்வி.

15 வயதான மகன் பத்தாம் வகுப்பு படிக்கிறான். மார்க் கம்மியாக வாங்குகிறான். பாஸ் ஆவானா என்று தெரியவில்லை. இந்த வயதிலேயே மது, சிகரெட், பாக்கு பழக்கங்கள் இருக்கிறது. இந்தப் பழக்கத்தில் இருந்து எப்போது விடுபடுவான்? அதிகமாக கோபப்படுகிறான். அடுத்து அவனுக்கு எந்த வேலை அமைத்துத் தரலாம்? எந்த வேலை அவனுக்கு செட் ஆகும்? கணவரின் தொழில் நிலைமைகளும் சரியாக இல்லை. எங்கள் குடும்பத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா?

பதில்.

(மீன லக்னம், கன்னி ராசி, 1ல் சுக், 2ல் செவ், ராகு, 4ல் சனி, 6ல் குரு, 7ல் சந், 8ல் கேது, 11ல் சூரி, புத, 9-2-2004 காலை 9-55 தஞ்சாவூர்) 

மகனது ஜாதகப்படி கல்விக்கு அதிபதியான புதன், பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் ஆறாம் அதிபதியான சூரியனின் சாரம் பெற்று, அம்சத்தில் நீசமாகி உள்ளதால், படிப்பு வருவதற்கு வாய்ப்பு இல்லை. பாபத்துவ அமைப்புள்ள தசா புக்தி நடக்கும் போது ஒருவரின் நடவடிக்கைகள் வயதுக்கேற்ற வகையில் சரியாகவும் இருக்காது.

மகனுக்கு எட்டில் இருக்கும் கேதுவின் சாரம் பெற்று, ராகுவுடன் இணைந்து பாபத்துவமான செவ்வாய் தசை நடைபெறுகிறது. அதனால் மகன் தகாத சேர்க்கையினால் கெட்ட பழக்க வழக்கங்களை கற்றுக் கொண்டிருக்கிறார். செவ்வாய்க்கு குரு பார்வை இருப்பதால் எதுவும் எல்லை மீறாது. கவலை வேண்டாம். வீட்டில் தாய், தகப்பனுக்கு ஏழரை, அஷ்டமச்சனி நடக்கும் போது குழந்தைகள் மூலம் நல்ல விஷயங்கள் இருக்காது. குழந்தைகள் மூலம் மன அழுத்தமும் இருக்கும். உங்களுக்கு சென்ற வருடம் வரை அஷ்டமச் சனி நடந்ததால் கணவர், குழந்தைகள் மூலம் நிம்மதி கிடைத்திருக்க வாய்ப்பில்லை.

மகனுடைய லக்னத்தை சனி பார்ப்பதால் இவன் நீண்டகாலத்திற்கு குடிப்பழக்கம் உள்ளவனாக இருப்பான். பத்தாம் வகுப்பு முடித்ததும், நிதானமாக செய்யக்கூடிய மெக்கானிசம் போன்ற தொழிற்கல்வி வகுப்புகளில் சேர்த்து விடவும். தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தை குரு பார்ப்பதால், படிப்பு வரவில்லை என்றாலும் ஏதாவது ஒரு தொழிலில் நல்ல விதமாக நிலைகொண்டு 30 வயதிற்கு மேல் வாழ்க்கையில் நன்றாகவே இருப்பான். பரிகாரம் எதுவும் தற்போது பலனளிக்காது.

ஹேமமாலினி, சென்னை.

கேள்வி.

தங்களுடைய ஜோதிட அறிவுக்கு நான் பக்தை, அடிமை என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சொன்னபடியே என்னுடைய தங்கை பெண்ணிற்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. ஆனால் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் ஒரு வாரத்தில் நிச்சயம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவசரப்படுத்தியதாலும், தங்களின் அப்பாயின்மென்ட் உடனடியாக கிடைக்காது என்பதாலும் மாப்பிள்ளை வீட்டார் பொருத்தம் பார்த்ததே போதும் என்று நிச்சயம் செய்து விட்டோம் .ஆனாலும் எனக்கு உங்களிடம் பொருத்தம் பார்க்கவில்லையே என்று உறுத்தலாக இருக்கிறது. இத்துடன் மாப்பிள்ளை, பெண்ணின் ஜாதகத்தை அனுப்பியிருக்கிறேன். பொருத்தம் சரியாக இருக்கிறதா? இருவரும் சந்தோஷமாக இருப்பார்களா? குறிப்பாக பையனின் ஆயுள் ஸ்தானம் நன்றாக இருக்கிறதா? எப்போது குழந்தை பிறக்கும்? நீங்கள் சொன்ன பிறகுதான் கல்யாண தேதியை முடிவு செய்ய வேண்டும்.

பதில்.

உலகில் உள்ள அத்தனை பேருக்கும் நான் பொருத்தம் பார்த்து சொல்ல முடியுமா? இது சாத்தியமா? உங்களின் கடிதம் என் பார்வைக்கு வருவதற்கு முன்னர் திருமணமே நடந்து முடிந்து விடலாம். பொருத்தம் பார்ப்பது போன்ற விஷயங்களுக்கு எனக்கு கடிதம் எழுதாதீர்கள்.

எல்லா இடங்களிலும் என்னை விட ஞானம் உள்ளவர்களும், அனுபவசாலியான ஜோதிடர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பிரபலமாகி விட்டவர்கள் அனைவரும் முழுமையான ஜோதிடர்கள் இல்லை. பிரபலம் இல்லாமல் ஏதோ ஒரு மூலையில் அமைதியாக தொழில் செய்து கொண்டிருப்பதனால் ஒருவர் சிறிய ஜோதிடரும் இல்லை. மாப்பிள்ளை வீட்டார் அனுபவமுள்ள ஜோதிடரிடமே பொருத்தம் பார்த்திருப்பார்கள்.

பையனுக்கு மேஷ லக்னம், பெண்ணிற்கு துலாம் லக்னம் என்பதாலும், பையனுக்கும் பெண்ணுக்கும் ஒரே ராசிநாதன் என்பதாலும், பெண்ணிற்கு ஆறாம் அதிபதி தசை முடிந்து யோகாதிபதி சனியின் தசை நடப்பதாலும், இருவருக்கும் திருமணம் செய்யலாம். பையனின் ஜாதகப்படி எட்டுக்குடைய செவ்வாய் திக்பலத்துடன் உச்சம், ஆயுள்காரகன் சனி ஆட்சியாகி, பௌர்ணமி யோகத்தில் பிறந்து, தனித்த புதன் லக்னத்தில் திக்பலத்துடன் இருப்பதால் ஆயுள் குற்றமில்லை. இருவருக்கும் புத்திர ஸ்தானம் பாதிக்கப்பட்டிருப்பதால், தாமத புத்திர பாக்கியம் உண்டு. வாழ்த்துக்கள்.

Be the first to comment

Leave a Reply