Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 226 (26.02.19)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

எம். சரண்யா மகேஷ், இறச்சகுளம்.

கேள்வி.

எனது கணவரின் ஜாதகப்படி அவருக்கு உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி. ஆனால் திருவண்ணாமலையில் இருக்கும் ஒரு சுவாமி அவரிடம் உனக்கு உத்திரம் நட்சத்திரம் என்றும், பெண் குழந்தை பிறந்தால்தான் ஆயுள் விருத்தி ஆகும் என்றும் கூறியிருக்கிறார். இது எந்த அளவிற்கு உண்மை? பதில் தாருங்கள்.

பதில்

(கன்னி லக்னம், மீனராசி, 1ல் சனி, 2ல் சூரி, புத, குரு, 4ல் சுக், 5ல் கேது, 7ல் சந், 11ல் ராகு, 12ல் செவ், 9-11-1981 அதிகாலை 3-15 நாகர்கோவில்)

திருவண்ணாமலையில் சாமியாராக இருந்து விட்டாலே எல்லோரும் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி ஆகிவிட முடியாது. நமது ஊரில் உள்ள சுவாமிகளில் பாதிக்கு மேற்பட்டவர்கள் வெறும் ஆசாமிகள்தான். வாய்க்கு வந்ததை எதையாவது உளறி அது பலித்துவிட்டால் பெரிய சாமியாராகி விடுபவர்கள்தான். ஜோதிடம் என்பது ஒரு விஞ்ஞானக் கலை. ஒரு சாமியார் சொன்னவுடனேயே உத்திராட்டாதி நட்சத்திரம், உத்திரமாக மாறி விடாது. இவர்களைப் போன்றவர்களை நம்ப வேண்டாம்.

பிறந்த நாள் விபரங்களின்படி உன் கணவருக்கு மீனராசி, உத்திரட்டாதி நட்சத்திரம் தான். லக்னாதிபதி புதன் சுபத்துவமாகி, எட்டாமிடத்தைக் குரு பார்த்து, எட்டுக்குடையவன் அதிநட்பு வீட்டில் அமர்ந்து, ஆயுள்காரகன் சனி பௌர்ணமிக்கு அருகில் இருக்கும் சந்திரனின் பார்வையில் இருப்பதால் உன் கணவருக்கு தீர்க்காயுள் அமைப்பு இருக்கிறது. பெண் குழந்தை இல்லாவிட்டாலும் நீண்ட நாள் வாழ்வார். வாழ்த்துக்கள்.

எஸ். பவித்ரா, வத்திராயிருப்பு.

கேள்வி.

கல்யாணமாகி ஏழு ஆண்டுகளாகியும் குடும்பத்தில் நிலையான பொருளாதாரம் இல்லை. கணவருக்கு எந்தத் தொழில் செய்தாலும் விருத்தி ஏற்பட மாட்டேன்கிறது. அவர் தற்போது கார் வாங்கி விற்கும் தொழிலை கமிஷன் அடிப்படையில் செய்து கொண்டிருக்கிறார். போதிய வருமானம் இல்லை. கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என்கிற விருப்பமும் கணவருக்கு உள்ளது. அப்படி அவர் இறங்கி வேலை செய்தால் கவுன்சிலர் பதவி கிடைக்க வாய்ப்பிருக்கிறதா? இல்லையென்றால் ஜாதகப்படி எந்த தொழிலில் முன்னேற்றமும், மரியாதையும், கௌரவமும் கிடைக்கும்? எங்கள் வாழ்வில் எப்போது ஐஸ்வர்ய கடாட்சம் கிடைக்கப் பெறும்?

பதில்.

(துலா லக்னம், சிம்ம ராசி, 2ல் சனி, 6ல் குரு, ராகு, 7ல் சுக், 8ல் சூரி, 11ல் புத, செவ், 9ல் புத, செவ், 11ல் சந், 12ல் கேது, 4-6-1987 மதியம் 3-52 ஸ்ரீவில்லிபுத்தூர்)

கணவரின் ஜாதகப்படி லக்னத்தை, லக்னாதிபதி சுக்கிரன் பார்த்து, சிம்மத்தில் வளர்பிறை சந்திரன் அமர்ந்து, ராசிக்கு பத்தாமிடத்திற்கு சுபத்துவமான சனி, மற்றும் சூரியனின் தொடர்பு இருக்கிறது. சூரியனையும், சிம்மத்தையும் குருவின் பார்வை பெற்ற சனி பார்ப்பதால் கவுன்சிலர் பதவி கிடைக்கும். ஆனால் தற்போது நடக்கும் செவ்வாய் தசையில் அரசியல் உயர்விற்கு தடை இருக்கிறது. அடுத்து வர இருக்கும் ராகு தசையில் அரசியலில் வெற்றி உண்டு. ராசிக்கு பத்தாமிடத்தில் சனி சுபத்துவமாக இருப்பதால் சனியின் தொழில்களான இரும்பு ஆட்டோமொபைல் போன்றவைகள் கணவருக்கு ஏற்றது வாழ்த்துக்கள்

எஸ். அறிவழகன், பட்டுக்கோட்டை.

கேள்வி.

என் தந்தையின் அரசு வேலை கிடைக்கப் பெற்று, கடந்த ஒன்பது மாதங்களாக அரசுப் பணி புரிந்து வருகிறேன். எந்த விதியின் அடிப்படையில் எனக்கு அரசு வேலை கிடைத்தது? தொடர்ந்து 58 வயதுவரை அரசுத் துறையில் பணிபுரிய முடியுமா? இங்குள்ள ஜோதிடர்கள் அரசு வேலையில் தொடர முடியாது என சில வருடங்கள் முன்பு சொன்னார்கள். இதனால் மனதில் சிறு குழப்பம் உள்ளது. தெளிவுபடுத்துமாறு வேண்டுகிறேன்.

பதில்.

(சிம்ம லக்னம், மகர ராசி, 2ல் செவ், சனி, 3ல் குரு. 5ல் கேது, 6-ல் சந், சுக், 7ல் புத, 8ல் சூரி, 11ல் ராகு, 20-3-82 மாலை 4-07 பட்டுக்கோட்டை)

சிம்மமும் சிம்மாதிபதியும் சூரியனும், பத்தாம் அதிபதியும் வலுவாக இருக்கும் பட்சத்தில் ஒருவருக்கு நிரந்தரமான அரசு வேலை கிடைக்கும் என்பது விதி. உங்கள் ஜாதகப்படி குருவின் பார்வை பெற்று சுபத்துவமான தனிப்புதன் சிம்மத்தை பார்ப்பதால் சிம்மம் வலுவாக இருக்கிறது. சிம்மாதிபதி சூரியன் எட்டில் மறைந்தாலும் குருவின் வீட்டில் சுசுபத்துவமாக அமர்ந்து அம்சத்தில் ஆட்சியாக இருக்கிறார்.

ராசிக்கு பத்தாம் வீடான சுக்கிரனின் வீட்டில் குரு சுபத்துவமாக இருக்கும் நிலையில், லக்னத்திற்கு பத்தாம் அதிபதி சுக்கிரன் ஆறில் அதிநட்பு வீட்டில் இருக்கிறார். சுக்கிரனுக்கு ஆறாம் வீடு மறைவு ஸ்தானமும் இல்லை. எனவே உங்களுக்கு அரசு வேலை கிடைத்திருக்கிறது இது 58 வயதுவரை நீடிக்கவும் செய்யும். கவலை வேண்டாம்.

பி. சண்முகவேலு, ராமநாதபுரம்.

கேள்வி.

நான் முன்னாள் ரயில்வே ஊழியர். 16 ஆண்டுகள் சர்வீஸ் முடியும் தருவாயில் குடிக்கு அடிமையாகி, கடன் தொல்லையால் வேலையை விட்டுவிட்டு வடக்கே யாத்திரை சென்று விட்டேன். மூன்று வருடங்களுக்கு முன் வீடு திரும்பினேன். மனைவிக்கு படிப்பறிவு இல்லாததாலும், விவரம் தெரிந்த ஆட்கள் துணை இல்லாத காரணத்தாலும், நான் ரயில்வேயில் வேலை பார்த்த எந்த பலனையும் வாங்கவில்லை. எனக்கான பலன்களை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, நீதிமன்றமும் எனக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. ஆனால் 10 ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்தாலே அனைத்து பலன்களும் உண்டு என்று பதில் தரும் ரயில்வே நிர்வாகம் எனது சர்வீஸ் ரெக்கார்டை காணவில்லை என்று காலம் கடத்துகிறார்கள். நான் இப்போது கஷ்ட ஜீவனத்தில் உள்ளேன். என் கஷ்டம் தீருமா அல்லது இப்படியே அந்திம காலம் முடிந்து விடுமா? என்னையும் என் மனைவியையும் ஆதரிக்க யாரும் இல்லை. நான் ரயில்வேயில் வேலை பார்த்த நாட்கள் 1361977 முதல் 2571993 வரை. வீடு திரும்பிய நாள் 1512015.

பதில்.

(கடக லக்னம், கன்னி ராசி, 2ல் கேது, 3ல் சந், சனி, 8ல் சூரி, புத, குரு, ராகு, 9ல் செவ், சுக், 25-2-1951 மாலை 4-30 தனுஷ்கோடி)

கடக லக்னத்திற்கு வரக்கூடாது என்று நான் அடிக்கடி சொல்லும் சனிதசை சுய புக்தியில், சந்திரனும் சனியும் இணைந்து செவ்வாயின் பார்வையில் இருப்பதால் முழுவதுமாக குடிக்கு அடிமையாகி சுய புக்தி முடிந்ததும் சன்னியாச வாழ்க்கையைத் தேடி வீட்டை விட்டு வெளியேறி விட்டீர்கள். சனி தசை முழுவதும் பரதேச வாழ்க்கையை சனி கொடுத்து விட்டார்.

தற்போது நடக்கும் புதன் தசையில் ராகு புக்தி முடிந்ததும், ரயில்வேயில் நீங்கள் வேலை செய்ததற்கான பணப்பயன்கள் கிடைக்கும். 2020 ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு உங்களுடைய வேலைக்கான தொகை கையில் கிடைக்கப் பெறும். அதுவரை சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். பொறுத்துக் கொள்ளுங்கள்.

Be the first to comment

Leave a Reply