adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
கணவருக்கு விபத்து ஏற்படுமா?

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பசி : 8681 99 8888

வேலனின் மனைவி, காரைக்கால்.

கேள்வி.

நீண்ட நாள் மாலைமலர் வாசகியாகிய நான் மனதிலுள்ள பயத்தின் காரணமாகவே இந்த கேள்வியைக் கேட்கிறேன். எனது கணவருக்கு 31-12-2007 அன்று ஒரு விபத்து நடந்து சில மாதங்கள் நடக்க முடியாமல் சிரமப் பட்டார். 2-6-2011 ஊருக்கு சென்றபோது எங்கள் கார் மீது எதிரே வந்த மணல் லாரி நிலை தடுமாறி மோதியதில் ஆண்டவனின் கருணையினால் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தோம். இந்த விபத்திற்கு பிறகு மனதில் ஒரு இனம் புரியா பயம் வந்து விட்டது. விபத்திற்குப் பிறகு இன்றுவரை செல்லாத கோவில் இல்லை. ஆனாலும் ஒரு பயம் உள்ளுக்குள் இருக்கிறது. இந்த வருடம் அவருக்கு ராகு தசை வேறு ஆரம்பிக்க இருக்கிறது. இரண்டில் உள்ள ராகு என் கணவருக்கு ஏதேனும் கண்டத்தை ஏற்படுத்துமா? எனக்கு இரு மகள்கள் இருக்கின்றனர். தந்தையே உலகம் என்று நினைத்து வளர்கின்றனர். என் பயம் தெளிய விளக்கம் தாருங்கள் ஐயா...

பதில்.

(கன்னி லக்னம், தனுசு ராசி, 2ல் சுக், ராகு, 3ல் சூரி, புத, 4ல் சந், 7ல் குரு, 8ல் கேது, 10ல் சந், 11ல் சனி, 5-12-1975 அதிகாலை 2-10 காரைக்கால்)

கன்னி லக்னத்திற்கு அஷ்டமாதிபதி செவ்வாயின் தசைதான் நல்ல பலன்களை தருவதில்லை. சொந்த வாழ்விலும், தொழில் வாழ்விலும் கெடுதல்களையும்  விபத்துகளையும் தந்த செவ்வாய் தசையே உன் கணவனுக்கு முடியப் போகிறது. பிறகு ஏனம்மா கவலைப் படுகிறாய்? அந்த செவ்வாயும் திக்பலம் பெற்று சந்திர பார்வையில் சுபத்துவமாக இருப்பதால் ஒரு பெரிய விபத்தை உண்டாக்கி மயிரிழையில் தப்பிக்க வைத்து விட்டாரே? இனிமேல் உன் கணவரைப் பற்றி என்ன கவலை? ஒரு குறையும் இனி உன் குடுமப்த்திற்கு இல்லை. நிம்மதியாக இரு.

ராகு சுபர் வீட்டில் இருக்கும் நிலைகளில் கெடுதல்களை செய்ய மாட்டார். மாறாக நன்மைகளையும் சொகுசான வாழ்க்கையையும் தருவார். கணவரின் ஜாதகத்தில் ராகு சுக்கிரனின் சுபவீடான துலாத்தில் அமர்ந்து, சுக்கிரனோடு இணைந்து, குருவின் சாரத்தில், ராசிக்கு 11-ஆம் வீட்டில் பாபத்துவ தொடர்புகள் இன்றி இருப்பதால் யோகங்களை மட்டுமே செய்வார். கண்டத்தை தர மாட்டார்.

ஒருவருக்கு கொடிய விபத்தினால் இறக்கக் கூடிய அற்பாயுள் அமைப்பு இருக்க வேண்டுமெனில், லக்னம், எட்டு போன்ற இடங்கள் வலுவிழந்து, விபத்தைத் தரக் கூடிய ஆறாமிடமும், அதன் அதிபதியும் பாபத்துவ வலுவுடன் இருக்க வேண்டும்.

கணவரின் ஜாதகப்படி லக்னாதிபதி புதன் பரிவர்த்தனையாகி ஆட்சி வலுவுடன்  இருக்கிறார். லக்னத்தை வலுப்பெற்ற குரு பார்க்கிறார். எட்டாம் அதிபதி செவ்வாய் திக்பல மற்றும் பரிவர்த்தனை நிலையில், வளர்பிறை சந்திரன் பார்வையில் இருப்பது சிறப்பு. இதை விட மேலாக ஆயுள்காரகன் சனியை ஆட்சி பெற்ற குருவும், ஆயுள் ஸ்தானத்தை சுக்கிரனும் பார்ப்பது உன் கணவருக்கு தீர்க்காயுள் அமைப்பு இருப்பதைக் காட்டுகிறது.

விபத்தை தரக்கூடிய சனி அந்த ஆறாம் வீட்டிற்கு ஆறில் மறைந்து குருவின் பார்வையில் இருப்பதால் உன் கணவருக்கு விபத்தினால் கண்டம் கிடையாது. நீ குறிப்பிட்டிருந்த 2007 ம் வருட விபத்து அன்று உன் கணவருக்கு சந்திர தசையில் சனி புக்தி நடந்து கொண்டிருந்தது. அன்றைய கோட்சார நிலைகளும் சரியில்லை. சந்திரனுக்கு சஷ்டாஷ்டக நிலையில் அமர்ந்த சனி தனது காரகத்துவமான நொண்டும் நிலையை அப்போது தர வேண்டும் என்பதால் அன்றைய விபத்தில் காலில் அடிபட்டு உன் கணவர் நொண்டிக் கொண்டிருந்தார். தசாநாதனும், புக்திநாதனும் கடும் எதிரிகள் எனும் நிலையில் இருவரும் சஷ்டாஷ்டகமாக அமர்வதும், பகை, நீச வீடுகளில் அமர்வதும் துன்பம் தரும்.

கணவரின் ஜாதகத்தில் இரண்டு கிரகங்கள் திக்பல நிலையில் இருப்பது யோகம். உன் கணவருக்கு கடுமையான ஜென்மச் சனி நடந்து கொண்டிருப்பதால் உனக்கு இதுபோன்ற மரண பயங்கள் வருகின்றன. கவலைப்படாதே அம்மா... 80 வயது வரை கல்லை தூக்கி தலையில் போட்டாலும் ஒன்றும் ஆகாத ஜாதகம் உன் கணவருடையது. பரம்பொருளின் கருணையினால் நீடித்த ஆயுளுடன் உன்னையும் உன் மகள்களையும் நன்றாக வைத்திருப்பார். வாழ்த்துக்கள்.

One thought on “கணவருக்கு விபத்து ஏற்படுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *