adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
ஆயுள் பற்றிய சுபத்துவ நிலைகள்..- D-047
ஆயுள் பற்றிய சுபத்துவ நிலைகள்..- D-047

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

 வாழ்வின் ஒவ்வொரு நிலையை விளக்குவதற்கும் ஏராளமான விதிகள் வேத ஜோதிடத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. 

பத்திரிக்கைகளிலோ, சமூக ஊடகங்களிலோ ஒரு ஜாதகத்தை விவரித்து, அந்த ஜாதகருக்கு ஏன், எதற்கு, எப்படி இது நடந்தது என்று தற்கால ஜோதிடர்கள் எழுதுவதைப் போல, முன்னர் வாழ்ந்த ஜோதிடப் பெரியவர்கள் அவர்களது காலத்தில் கண்ட, கேட்ட ஜாதகங்களின் படி நடந்த சம்பவங்களை, சுருக்கமாக, ஸ்லோகங்களாக, பனைஓலைகளிலும் மற்றவடிவங்களிலும் பதிந்து வைத்தார்கள். இவைகளே ஜோதிட விதிகளாயின. 

இந்த விதியினை உருவாக்கிய அல்லது உணர்ந்த ஜோதிடரின் அனுபவத்தையும் ஞானத்தையும் பொருத்து அந்த விதியின் உண்மைத்தன்மை இருக்கும். விதி சரியாக இருக்கும் பட்சத்தில் அந்த ஜோதிடரின் காலத்திற்குப் பிறகும் அது நீடித்திருக்கும். இப்படித்தான் பாரம்பரிய ஜோதிடம் காலம்காலமாக தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு வளர்ந்து வருகிறது.

பாரம்பரிய ஜோதிடத்தைப் பற்றி சம்ஸ்க்ருதத்தில் மட்டும் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட சுலோகங்கள் உள்ளதாக ஒரு கணக்கீடு கூறுகிறது. இவைகளில் பெரும்பாலானவை விதிகளைச் சொல்வது போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், அவற்றை உற்று நோக்கினால் அக்காலத்தில் வாழ்ந்து மறைந்த யாரோ ஒருவரின் ஜாதக அமைப்பை அந்த சுலோகம் விளக்குவதை கவனிக்க முடியும்.

அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு ஜோதிடர், தனது சம காலத்தில் வாழ்ந்த இன்னொருவரின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தின் போது இருந்த கிரகநிலை, ஜாதக அமைப்பினை  பாடலாக எழுதி வைத்தார். இதுபோன்றவைகள் அவருக்குப் பின்னால் வந்தவர்களால் தொகுக்கப்பட்டு புத்தக வடிவில் ஆயின. அவைகளே பாரம்பரிய ஜோதிட விதிகள் எனப்பட்டன.

உண்மையைச் சொல்லப் போனால் பாடலை அல்லது சுலோகத்தை எழுதிய மூல ஜோதிடர், பார்த்த, அந்த ஒரே ஒரு ஜாதகத்திற்கு மட்டுமேயான கிரக நிலை அது. வேறு எந்த ஒரு நிலையிலும் இன்னொரு ஜாதகத்திற்கு அது அப்படியே பொருந்தாது.

ஆனால் கால நிலைகளையும், நிகழ் சம்பவங்களையும் தாண்டி, ஒரு கிரகத்தின் காரகத்துவத்தையும், ஒரு ராசியின் ஆதிபத்தியத்தையும் இணைத்து ஜோதிட மூல கர்த்தாக்களால் நிறைய விதிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இவைகள் எந்த நிலையிலும், எல்லாக் காலகட்டங்களிலும், மனிதராய் பிறந்த அனைவருக்கும் கச்சிதமாகப் பொருந்தும். இவைகளே மூல விதிகள் எனப்படுகின்றன.   

அனைத்து நேரங்களிலும், எல்லா ஜோதிடர்களும் வேதஜோதிடத்தை முழுக்கப் புரிந்து வைத்திருந்தார்கள் என்று சொல்ல முடியாது. அதேநேரத்தில் எந்த ஒரு ஜோதிடரும் ஜோதிடம் பற்றிய தன்னுடைய புரிந்துணரும் அறிவு குறைவானது என்று வெளிப்படையாக ஒத்துக் கொள்ள மாட்டார். அல்லது உணர மாட்டார். தன் வகையில் தான் எல்லோரையும் விட உயர்வானவர்களே.

ஞானம் குறைவானவர்களுக்கு ஜோதிடம் முழுக்க புரியாத காரணத்தினால்தான், தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் ஏராளமான விதிகள் பாரம்பரிய ஜோதிடத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த விதிகளில் எண்பது சதவிகிதத்திற்கும் மேலானவை வெறும் குப்பைகள். பலன் சொல்வதற்கு பிரயோஜனமற்றவை. இன்னும் சொல்லப்போனால் தவறான பலனை சொல்ல வைப்பவை.

இது போன்ற விதிகளை என்றோ ஒரு நாள் ஒருவர் எழுதி வைத்து விட்டார் என்பதற்காக, கண்மூடித்தனமாக புதிதாக வரும் ஒருவர் கற்பதால் ஜோதிடத்தின் பேரில் அவருக்கு சலிப்பும், நம்பிக்கையின்மையும் ஏற்பட்டு ஜோதிடத்தின் வளர்ச்சி தடுக்கப் படுகிறது.  

ஜோதிடத்தின் உண்மையான பரிமாணம் சில சிக்கலான அடுக்குகளுக்கு நடுவே பத்திரமாக ஒளிந்து கொண்டிருப்பதால்தான், இந்த அடுக்குகளை தாண்டி வரும் ஞானத்தைக் கொண்ட சிலருக்கு மட்டுமே, உண்மை ஜோதிடம் தன்னைக் காட்டத் தலைப்படுகிறது. ஞானத்துடன் புரிந்து கொண்டால் பாரம்பரிய ஜோதிடம் மிகவும் எளிமையானது.

இந்திய ஜோதிட முறைகள் அனைத்திற்கும் தாயான இந்தப் பாரம்பரிய ஜோதிட விதிகளுள் பெரும்பாலானவற்றை எனது சுபத்துவம், பாபத்துவம், சூட்சும வலுவினைக் கொண்டு ஓரிரு வரிகளில் அடக்கி விடலாம். அவை அனைத்து ஜாதகங்களிலும் முழுக்கப் பொருந்தி வரும்.    

உதாரணமாக, ஒருவரின் ஆயுளை விளக்குவதற்கு கூட சரம், ஸ்திரம், உபய லக்னங்களுக்கு என தனித்தனி விதிகள்,  மேஷம் முதல் பனிரெண்டு வீடுகளுக்கான தனி ஆயுள் விதிகள், மிதுனத்தில் பிறந்தவன் எப்போது இறப்பான், சிம்மத்தில் பிறந்தவன் எப்படி இறப்பான் என ஏகப்பட்ட விதிகள் சுலோகங்களாக பாரம்பரிய ஜோதிடத்தில் உண்டு.

அவை அனைத்தையும், லக்னம், லக்னாதிபதி, எட்டாமிடம், அஷ்டமாதிபதி, ஆயுள்காரகன் சனி ஆகியோர் சுபத்துவ, சூட்சும வலுவடைந்து இருந்தால், தீர்காயுள். இல்லையெனில் அவர்களின் சுபத்துவ, பாபத்துவ, சூட்சும வலுவின் படிநிலை அளவிற்கேற்ப, அற்ப, மத்திம ஆயுள் என்ற ஒரேவரியில் அடக்கி விடலாம்.

இந்த சுபத்துவ, சூட்சுமவலு நிலைகளை சரியாகப் புரிந்து கொண்டு இன்னும் ஆழமாக உள்ளே செல்லும் நிலையில், தசா புக்தி கணக்குகளின் துணை கொண்டு ஒருவரின் சரியான ஆயுள் வயதினை மாதக்கணக்கிலும் கணித்து விட முடியும். எதிர்காலத்தில் என்னை விட மேம்பட்ட ஜோதிட அறிவு கொண்ட ஒருவரால் இறப்பு நாளையும் கூட சுபத்துவ, சூட்சும வலு நிலைகளைக் கொண்டு சொல்ல முடியும்.

பலருக்கு இங்கே பல குழப்பங்கள் இருக்கின்றன. ஒருவருக்கு ஆயுள் ஸ்தானாதிபதி தன் வீட்டைத் தானே பார்ப்பது நலம்தானே என்ற சந்தேகம் வருகிறது. இதற்கு மூல காரணம், பாரம்பரிய ஜோதிடத்தின் ஒரு விதிப்படி தனது வீட்டை தானே பார்க்கும் கிரகம் அந்த வீட்டைப் பலப்படுத்தும் என்பதுதான்.

அதேவிதியின் இன்னொரு பகுதியில் பாபக் கிரகங்கள் எந்த வீட்டைப் பார்த்தாலும் அந்த வீட்டின் பலனைக் கெடுக்கும் என்றும், குறிப்பாக சனி பார்க்கும் எந்த வீடும் அதன் பலனைத் தராது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. சனிக்கு அடுத்த நிலையில் செவ்வாய் பார்க்கும் வீடும் வலு இழக்கும் என்றும் குறிப்பாகக் காட்டப்படுகிறது. இதில் எந்த விதியை எங்கே, எப்படி எடுத்துக் கொள்வது என்பது ஒருவரின் புரிந்து கொள்ளும் திறனைப் பொருத்தது.

ஒரு மனிதனின் எதிர்காலத்தை கணிக்கக்கூடிய இந்த மாபெரும் கலை எல்லோருக்கும், எல்லா நிலையிலும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் நான்கும், நான்கும் எட்டு என்கிற மிகச் சுலபமான கணக்குகளாக இருந்துவிட முடியாது.

குறைந்தபட்சம் ஆறே முக்காலே, கால் அரைக்காலையும், அதன்பின் ஒரு மூன்றரையுடன், முக்காலையும், பின்னர் ஒரு அரைக்காலையும் கூட்டி, அதனோடு ஐந்தே கால், மற்றும் ஒரு முழு முக்கால், பாதி முக்கால், ஒரே ஒரு காலினைக் கழித்து, வருவதை ஏழே காலின் பாதியால் வகுத்தால் கிடைப்பதே சரியான விடை என்பது போன்ற நுணுக்கமான கணக்குகளாகத்தான் இருக்கும்.

ஆனால் உலகம் அவசரமாய்ப் போய்க் கொண்டிருக்கும் இந்த ராக்கெட் யுகத்தில் நான்கும், நான்கும் எட்டு என்பதான கணக்கை மட்டும் எனக்குக் கொடு, நான் விடை தருகிறேன் என்பதுதான் பெரும்பாலானோரின் விருப்பமாய் இருக்கிறதே தவிர அதற்குமேல் காலும், அரைக்காலும், முக்காலும் இருக்கின்றனவே அவை என்னவாக இருக்கும் என்று ஆராயும் உற்சாகம் வெகு சிலருக்கே இருக்கிறது.

சென்ற கட்டுரையில் அற்பாயுள் ஜாதகத்தில், எட்டாமிடத்தை செவ்வாய் பார்ப்பதற்கும், தீர்க்காயுள் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் பார்வைக்குமான  வித்தியாசத்தினை, அதே கட்டுரையில் நான் கொடுத்த பிறகும், அநேகருக்கு அற்பாயுள் ஜாதகத்தின் செவ்வாய், தங்களது சுபத்துவ தியரிப்படி குரு, சுக்கிரனுடன் தொடர்புகொண்டு சுபமாகத்தானே இருக்கிறார் என்ற சந்தேகம் வரும் பொழுது, இதைவிட எளிமையாக ஜோதிடத்தை விளக்குவதற்கு இன்னும் எவ்வளவு தூரம் செல்வது என்பது எனக்கே மலைப்பாகத்தான் இருக்கிறது.

கீழே சொல்லப்பட்டிருக்கும் தொண்ணூறு வயது கடந்த பெரியவரின் ஜாதகத்திலும் எனது சுபத்துவ, சூட்சும வலு நிலைகள் நிரூபிக்கப் படுகின்றன.

இவரது ஜாதகத்தில் லக்னாதிபதி குரு பரிவர்த்தனையாகி லக்னத்திலேயே இருக்கும் நிலை பெறுகிறார். லக்னாதிபதியே குருவாக இருக்கும் நிலையில் லக்னம் சுபத்துவம் அடைகிறது. குரு பார்ப்பதன் மூலம் எட்டாமிடம் மிகுந்த சுபத்துவம் பெறுகிறது.

எட்டுக்குடைய சுக்கிரன் சூரிய, ராகு இணைவு சனிபார்வை ஆகியவற்றால் நேரிடையாக வலு இழப்பது போலத் தோன்றினாலும், வலுப்பெற்ற அதியோகம் மற்றும் சுப வீட்டில் வர்க்கோத்தம நிலை மூலம் சுபத்துவத்தை திரும்ப  அடைந்திருக்கிறார். இந்த மூன்று கிரகங்களும் பூரணத்திற்கு அருகில் இருக்கும் வலுப்பெற்ற ஐந்தாம் அதிபதி சந்திரனின் ரோகினி நட்சத்திரத்தில் இருப்பதும் ஒரு சுபத்துவம்தான்.

ஆயுள்காரகன் சனி, கேதுவுடன் இணைவதன் மூலம் சூட்சும வலுப் பெற்றிருக்கிறார். சனி தனித்து சூரிய பார்வையில் இருந்திருந்தால் இங்கே இத்தனை நீடித்த ஆயுளுக்கு சாத்தியமில்லை. ஆயுள்காரகனான சனி கேதுவுடன் இணைந்து சூட்சும வலுப் பெற்றிருப்பதால் மட்டுமே தொண்ணூறு வயது தாண்டும் நிலை அமைந்திருக்கிறது.

அதற்காக சனி, கேது இணைந்தவர்கள் அனைவருமே தொண்ணூறினைத் தாண்டுவார்களா என்று கேட்கக் கூடாது. சனியின் சூட்சும வலு ஆயுளுக்கு முக்கியம் என்றாலும் லக்னம், லக்னாதிபதி, எட்டு, எட்டாம் அதிபதி ஆகியோரின் நிலை சனிக்கு நிகராக அவசியமானது. இதற்காகத்தான் நான்கும் நான்கு எட்டு, காலே அரைக்கால், முக்கால் கணக்குகளைச் சொன்னேன்.

சுபத்துவ, சூட்சும வலு விதிக்கு முன்னால், பாரம்பரிய ஜோதிடத்தில் சொல்லப்பட்டிருக்கும் சர லக்னத்திற்கு என தனி ஆயுள் விதிகள், ஸ்திரத்திற்கான தனி விதிகள், உபயத்திற்கான விதிகளைக் கூட பார்க்கத் தேவையில்லை. அந்த விதிகள் எல்லா நிலைகளிலும் பொருந்தாது. ஆனால் சுபத்துவ, சூட்சும விதிகள் அனைத்து ஜாதகங்களுக்கும் நூறு சதவிகிதம் பொருந்தும்.

ஒருவரின் நீடித்த நல்வாழ்வுக்கும், சொகுசுத் தன்மைக்கும், இரண்டையும் அனுபவிப்பதற்குத் தேவையான நீண்ட ஆயுளுக்கும் ஜாதகம் ஒளித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதை அடிக்கடி சொல்லி இருக்கிறேன். அதன்படியான நல்ல நிலையில் மேலே கண்ட ஜாதகம் அமைந்திருப்பதைக் காணலாம்.

பரிவர்த்தனை நிலையில் லக்னம் வலுவுடன் இருக்கிறது. ராசியான சந்திரன் வர்கோத்தம நிலையில் இருக்கிறார். குரு லக்னத்தோடு தொடர்பு கொண்டு ராசியையும் பார்க்கிறார். சுக வாழ்விற்குத் தேவையான ஒன்பது, பத்தாம் அதிபதிகள் பங்கமின்றி நல்ல இடங்களில் பரிவர்த்தனை அடைந்திருக்கிறார்கள்.

நவாம்சத்தில் செவ்வாய் உச்சம் அடைந்திருக்கிறார். சனி ஆட்சி நிலையில் இருக்கிறார். பெரும்பாலான கிரகங்கள் அம்சத்தில் வலுவாகவே இருக்கின்றன. அதைவிட மேலாக மீன லக்னத்திற்கு வரவே கூடாது என்று நான் சொல்லும் சுக்கிரனின் தசை இந்தப் பெரியவருக்கு நூறு வயதிற்கு அருகில்தான் வர இருக்கிறது.

இதுபோன்ற கிரக நிலைகளே இந்தப் பெரியவர் பரம்பொருளின் ஆசீர்வாதத்தை பெரிதும் அடைந்திருக்கிறார் என்பதை விளக்கிக் காட்டும். எப்போதோ ஒரு சில நிலைகளில்தான் கிரகங்கள் இதுபோன்ற நல்ல நிலையில் அமைகின்றன. அதில் பிறக்கும் ஒருவர்தான் மாவட்டத்திலோ, மாநிலத்திலோ, நாட்டிலோ ஜாதகத்தின் சுப வலுவிற்கேற்ப முதன்மையான பாக்கியவான் என்ற பெயரை எடுக்கிறார். அதைத் தக்க வைத்துக் கொண்டும் இருக்கிறார்.

அனைவருக்கும் இது போன்ற ஒளித்தன்மையுடன் கூடிய ஜாதகங்கள் அமைந்து விடுவதில்லை. அத்திபூத்தார் போன்று லட்சத்தில் ஒன்று, பத்து லட்சத்தில் ஒன்று எனும் நிலையில்தான் இதுபோன்ற ஜாதகங்கள் அமைகின்றன.

சுப ஒளி அமைப்புடன் பிறக்கும் ஒருவர், பிறந்ததில் இருந்து மறையும் வரை  உயர்நிலையிலேயே இருக்கிறார் என்று நான் சொல்வதை நிரூபிக்கும் இன்னொரு ஜாதகம் இது.

அடுத்த வெள்ளி பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *