குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (04.02.19 முதல் 10.02.19 வரை)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

மேஷம்:

ராசிநாதன் செவ்வாய் இந்த வாரம் முதல் ஆட்சியாக இருப்பதால் யாருடைய தயவுமின்றி நீங்கள் செயலாற்றும் வாரம் இது. பின்னடைவுகள் எதுவும் இல்லாமல் நினைத்த காரியம் நிறைவேறும். அதேநேரத்தில் சுக்கிரன் வலிமை பெறுவதால் உங்களுடைய செயல்களில் “இரண்டும் கெட்டான்தனம்”  இருக்கும். சில விஷயங்களில் சட்டென ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவிப்பீர்கள். சமூகத்தில் பெரிய நிலையில் இருப்பவர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கும். சிலருக்கு ஞானிகளின் நேரடி ஆசிகள் கிடைக்கும்.   

குடும்பத்தில் மங்கள காரியங்கள் இருக்கும் என்பதால் வருமானம் வந்தாலும் அதற்கு ஏற்ப சுபச் செலவுகளும் இருக்கும். சொத்து வாங்குவீர்கள். போட்டி பந்தயங்கள் கை கொடுக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். இளைய பருவத்தினரை பெற்றோர்கள் அக்கறை எடுத்து கண்காணிக்க வேண்டியது அவசியம். கலைஞர்களுக்கு இது நல்ல வாரமாக அமையும். முதல் திருமணம் முறிந்த சிலருக்கு இரண்டாவது திருமணத்திற்கான அமைப்புகள் உருவாகும். மேஷத்திற்கு மிக நல்ல வாரம் இது.

ரிஷபம்:

ரிஷபத்திற்கு இந்த வாரம் தொழில் விஷயத்தில் சிறு சங்கடங்கள் இருந்தாலும் அனைத்தும் முடிவில் சாதகமாகவே முடியும். பணியாளர்களுக்கு வேலையிடங்களில்,  உடன் வேலை செய்பவர்களுடன் கருத்து வேறுபாடு வரும். யாரையும் நம்பி எதுவும் செய்ய வேண்டாம். முக்கியமாக அந்த இடத்தில் இல்லாத ஒருவரைப் பற்றிய பேச்சு வந்தால் அதில் கலந்து கொள்ளாமல் இருப்பது உத்தமம். சிலருக்கு பெண் உறவினர்கள் வகையில் விரயங்கள் இருக்கும். எதையும் நீங்கள் சமாளிக்கும் வாரம் இது. 

அஷ்டமச் சனி நடப்பதால் உங்களில் சிலருக்கு எதிலும் ஒரு சோம்பல் இருக்கும். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எதிலும் அலட்சியமாக இருப்பீர்கள். இன்னும் சிலருக்கு எதிர்காலம் பற்றிய இனம் புரியாத கலக்கம் இருக்கும். சனி உங்களுக்கு யோகாதிபதி என்பதால் மிகப் பெரிய கெடுதல்கள் எதையும் செய்ய மாட்டார். சிலருக்கு கைப்பொருள் திருட்டுப் போகும் அமைப்பு இருப்பதால் எதிலும் அவசரப்படாமல் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். செல்போனை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

மிதுனம்:

வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளுக்கு குரு பார்வை இருப்பதால் மிதுனத்திற்கு இந்த வாரம் கவலைகள் எதுவும் இல்லை. செவ்வாயின் பதினோன்றாமிட மாற்றத்தால் அவற்றில் ஏதேனும் ஒரு மாற்றம் இருக்கும். யோகக் கிரகங்கள் வலுவான நிலையில் இருப்பதால் சந்தோஷமான மனநிலையில் உற்சாகமாக இருப்பீர்கள். எதிரிகள் உங்களை கவிழ்க்கப் பார்த்தாலும் அவர்கள்தான் தோற்றுப் போவார்கள். மிதுனத்திற்கு இபோது தோல்விகள் எதுவும் இல்லை. சிறப்புக்கள் சேரும் வாரம் இது.

பணவரவு நன்றாகவே இருக்கும். தொழில் விஷயமாக பிரயாணம் செல்வீர்கள். மகன் மகளுக்கு திருமண உறுதி நிகழ்ச்சிகள் நடக்கும். தாயார் வழியில் நன்மைகள் நடக்கும்.  8,9,10 ஆகிய நாட்களில் பணம் வரும். 3-ம் தேதி காலை 6.38 முதல் 5-ம் தேதி இரவு 7.34 வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் அனைத்தையும் தவிர்ப்பது நல்லது. சந்திரன் எட்டில் இருக்கும் நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் இந்த நாட்களில் எவரிடமும் வாக்குவாதம் தவிர்ப்பது நல்லது.

கடகம்:

ஏழில் இருக்கும் கேதுவினால் அன்னிய, இன, மத மொழிக்காரர்களை நண்பர்களாக, பங்குதாரர்களாக கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு லாபங்கள் கிடைக்கும் வாரம் இது. சிலருக்கு வாழ்க்கைத்துணை மூலம் நல்ல செய்திகள் உண்டு. தொழில் சிறப்பாக இருக்கும்.  வேலை செய்யும் இடத்தில் பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இல்லை. ராசியை குரு பார்ப்பதால் பணத்துக்கு  கஷ்டங்கள் இருக்காது. வீடு, நிலம் போன்றவைகளை விற்பதற்கான தேவை உள்ளவர்கள் இந்த வாரம் விற்பனையை  தள்ளி வைப்பது நல்லது.

வாரத்தின் இரண்டு நாட்கள் ராசிநாதன் சந்திரன் எட்டில் மறைவதால்  சிறு சிறு உடல்நலப் பிரச்னைகள் வரலாம். வியாபாரிகள் தொழிலிடத்திலேயே இருந்து கவனிக்க வேண்டியது அவசியம். 5-ம் தேதி இரவு 7.34 முதல் 8-ம் தேதி காலை 8.17 வரை சந்திராஷ்டமம் என்பதால் மேற்கண்ட நாட்களில் முக்கியமான முடிவுகள் எதையும் எடுக்காமல் இருப்பது நல்லது. இந்த நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் எவரிடமும் வீண் வாக்குவாதமோ, சண்டை சச்சரவோ செய்ய வேண்டாம்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு நீண்டநாட்கள் போராடிக் கொண்டிருந்த ஒரு விஷயம் நல்லபடியாக முடிந்து லாபங்களும், பண வரவும் கிடைக்கும் வாரமாக இது இருக்கும். இந்தவாரம் முதல் செவ்வாய் ஆட்சி நிலை பெறுவதால் ரியல் எஸ்டேட் போன்ற தொழில் செய்பவர்களுக்கு முதலில் எதுவும் நடக்கவில்லை என்பது போல தோன்றினாலும் முடிவில் அனைத்தும் நன்மையாக அமையும். உங்களில் சிலருக்கு அடிக்கடி பயணம் இருக்கும். சிலருக்கு வேலை மாறுதல், இடம் மாற்றங்கள் ஆகியவை உண்டு.

சிலருக்கு வார இறுதியில் சிறு மனக்கலக்கம் உண்டு. முதலாளிகள் வேலை செய்பவர்களை முழுக்க நம்ப வேண்டாம். சிலருக்கு அடங்கி இருந்த கடன் பிரச்னைகள் மறுபடியும் எட்டிப் பார்க்கும். அதேநேரத்தில் கடன்கள் தொந்தரவு தராது. 8-ம் தேதி காலை 8.17 முதல் 10-ம் தேதி இரவு 7.37 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் ஆரம்பிக்க வேண்டாம். இந்த தினங்களில் அறிமுகமாகும் ஒருவரின் மூலம் பின்நாட்களில் சிக்கல்கள் வரும் என்பதால் அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது.  

கன்னி:

ராசியை சனி வலுப்பெற்று பார்க்கிறார். வார ஆரம்பத்தில் ராசிநாதன் புதன் கேதுவுடன் இணைந்து பலவீனமாகி இருக்கிறார். ராசிக்கு செவ்வாய் பார்வை விலகி விட்டதால் கெடுதல்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல விலகி உங்களுக்கு நன்மைகள் நடக்கும் வாரமிது. வருமானத்திலும் இந்த வாரம் குறை சொல்லமுடியாது. அதிலும் செவ்வாய், புதன் இரண்டு நாட்களும் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக வருமானம் இருக்கும். சிலருக்கு எதிர்பாராத மறைமுக இலாபம் கிடைக்கும்.

எட்டாமிடம் வலுப்பெறுவதால் வெளிநாடு சம்மந்தப்பட்ட விஷயங்கள் இப்போது கைகொடுக்கும். சிலர் வெளிநாடு செல்வீர்கள். சிலருக்கு குழந்தைகளால் செலவுகளும், குழந்தைகளுக்கான எதிர்கால அமைப்பில் முதலீடு போன்ற பலன்களும் இருக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பொருட்கள் சேதமின்றி மீதமுமின்றி லாபத்திற்கு விற்பனையாகும். வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் திரும்பி வரும். நீண்ட நாள் பாக்கி வசூல் ஆகும். சிலருக்கு வேலையோ, பதவியோ  கிடைக்கும்.

துலாம்:

துலாம் ராசிக்கு இந்த வாரம் அறிமுகம் இல்லாத நபர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். உங்களில் சிலர் என்றைக்கோ பிரதிபலன் கருதாமல் செய்த உதவியால் இப்போது சரியான நேரத்தில் ஒரு முக்கிய உதவி கிடைக்கப் பெறுவீர்கள். நீங்களும் அடுத்தவர்களுக்கு உதவி செய்து நற்பெயர் வாங்கும் வாரம் இது. ஏழில் செவ்வாய் இருப்பதால் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். கொடுக்கல் வாங்கல்களில் கவனமாக இருப்பது நல்லது. வங்கியில் இருந்து பணம் எடுத்து வருகையில் கவனம் தேவை.

வயதானவர்கள் உடல்நலத்தில் அக்கறை வைக்க வேண்டும். உங்களில் சிலருக்கு மறதியும், யாருக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்வதாக வாக்குக் கொடுத்தோம் என்பதும் மறந்து போய், வேறு எதையாவது செய்து அதனால் பிரச்னைகள் வரும். வீடு வாங்குவதற்கோ, வீடு கட்டுவதற்கோ ஆரம்பங்கள் இப்போது இருக்கும். ஒரு சிலர் வீடு கட்ட ஆரம்பிப்பீர்கள். அருமையான வாகனம் அமையும். தாயாரிடம் ஏதேனும் ஒரு விஷயத்திற்கு சம்மதம் கேட்க இப்பொழுது சரியான நேரம் என்பதால் இந்தநேரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். 

விருச்சிகம்:

விருச்சிகத்திற்கு அனைத்துக் கஷ்டங்களும் விலகி விட்டன. ஒவ்வொரு நாளும் துன்பங்களில் இருந்து தூர விலகிக் கொண்டே இருக்கிறீர்கள். சோம்பலுக்கு இடம் கொடாமல் சுறுசுறுப்புடன் இருந்தால் வெற்றி நிச்சயம். இரண்டாமிடத்தில் சனி இருப்பதால் எந்த ஒரு வார்த்தையையும் பேசும் முன் யோசித்து பேசுவது நன்மை தரும். கடந்த காலங்களில் இருந்து வந்த பிரச்னைகள் இனி இருக்காது. புதியதாக எந்தப் பிரச்னையும் வராது. இருக்கும் பிரச்னைகளும் தீருவதற்கான வழிகள் தெரிய ஆரம்பிக்கும். சிலருக்கு வழி திறக்கும்.

ராசிநாதன் ஆறில் இருந்தாலும் ஆட்சியாக இருப்பதால் நிலுவையில் இருந்து வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். கலைஞர்கள் வளம் பெறுவார்கள். அரசியல்வாதிகளில் சிலருக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கும். விவசாயிகள், வியாபாரிகள் போன்றோருக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு. மனைவி, குழந்தைகள் மூலம் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். பெண்களுக்கு இது நல்ல வாரம்தான்.

தனுசு:

தனுசு ராசி இளையவர்கள் சிலருக்கு இப்போது எதிர்காலத்தை பற்றிய நிச்சயமற்ற தன்மை மனதை போட்டு அழுத்திக் கொண்டிருக்கும். அதிலும் மூலம் நட்சத்திரக்காரர்கள் சிலர் கடுமையான குழப்பத்தில் இருக்கிறீர்கள். கவலை வேண்டாம். இன்னும் சில வாரங்களில் உங்களுக்கு எதிர்காலம் அடையாளம் காட்டப்படும். யாரையும் நம்ப வேண்டாம். எதிலும் பேராசைப்படதீர்கள். பணம் எடுத்துப் போகும்போது மிகுந்த கவனம் தேவை. குறிப்பிட்ட ஒரு பலனாக தெரியாத ஒரு விஷயத்தை இப்போது செய்யாதீர்கள்.

எந்த விஷயத்தையும் நேர்மையான முறையில் சந்தியுங்கள். குறுக்கு வழி  செயல்கள் இப்போது கை கொடுக்காது. அலுவலகத்திலும் சொந்த வாழ்க்கையிலும் ரகசியம் காப்பது நல்லது. உங்களை நம்பி ஒருவர் சொன்ன விஷயத்தை அடுத்தவரிடம் உளறி விடாதீர்கள். இரண்டாமிடத்தில் கேது இருப்பதால் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். நடுத்தர வயதினருக்கு பொருளாதார நிலைமை நன்றாகவே இருக்கும். நிதிநிலைமையைப் பற்றி கவலைப்பட வேண்டியது இருக்காது. சிக்கனமாக இருப்பது நல்லது.

மகரம்:

அஷ்டமாதிபதி சூரியன் ராசியில் இருப்பதால் வாரம் முழுவதும் நீங்கள் டென்ஷனுடன் இருக்க வேண்டி இருந்தாலும், வாரத்தின் பிற்பகுதியில் அனைத்தும் நீங்கி பணவரவும் பொருளாதார லாபங்களும் கிடைக்கும் வாரம் இது. மற்ற கிரகங்கள் வலுவாக இருப்பதால் பிரச்னைகளை சுலபமாக சமாளிப்பீர்கள்.. சூரிய, கேது இணைவால் உங்களில் சிலர் தர்ம காரியங்கள் மற்றும் அறப்பணிகளில் ஈடுபடுவீர்கள். சிலர் ஆலயத் தொண்டில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். இளைய பருவத்தினருக்கு வேலை இப்போது கிடைக்கும்.

பெண்கள் பற்றிய விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வார இறுதியில் செவ்வாய் நான்காமிடத்திற்கு மாறுவதால் ஏதேனும் கடன் பிரச்னைகள் வருமோ என்று யோசிக்க வைக்கும் சம்பவங்கள் சிலருக்கு நடக்கும். ஆனால் கெடுதல்கள் எதுவும் நடக்காது. எதிலும் இப்போது அகலக்கால் வைக்க வேண்டாம். முக்கிய முடிவு எடுக்குமுன் வீட்டில் இருக்கும் பெரியவர்களிடமோ, உங்கள் நலம் விரும்பும் அனுபவஸ்தர்களிடமோ கலந்து ஆலோசியுங்கள். மகரத்திற்கு மாற்றங்கள் உள்ள வாரம் இது.

கும்பம்:

கும்பத்தினருக்கு லட்சியங்கள் நிறைவேறும் காலகட்டம் இது. இந்த வாரம் செவ்வாய் மூன்றாமிடத்திற்கு மாறுவது உங்களுக்கு எதிலும் வெற்றியைத் தரும். மனதில் உள்ள எண்ணங்களை செயல்படுத்தும் முயற்சிகளை ஆரம்பியுங்கள். சோம்பலாக இருக்காதீர்கள். கும்பம் எப்போதுமே நிதானமான ராசி என்றாலும் நல்லகாலம் வரும்போது சுறுசுறுப்பாக இருங்கள். “கும்ப” கர்ணன் எப்போதும் தூங்குவதாக ராமாயணத்தில் சொல்லப்பட்டது கும்ப ராசியின் ஒரு குணத்தைக் குறிக்கத்தான் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

வயதானவர்கள் உடல்நலத்தின் மீது அக்கறை வைக்கவும். உங்கள் தோளில்  கை போட்டபடி டீ சாப்பிடும் நண்பர் இன்னொரு கையால் உங்களுக்கு ஆகாதவரின் கையை குலுக்குவார். கவனமாக இருங்கள். வேலைக்காரர்களை நம்பி கடையையோ தொழில் ஸ்தாபனத்தையோ ஒப்படைத்தால் வேலை செய்பவர்களின் ஆதிக்கம் மேலோங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. யாரையும் நம்ப வேண்டாம். இழுத்தடித்துக் கொண்டிருந்த அரசாங்க சம்பந்தப்பட்ட விஷயங்கள் தற்பொழுது  முடியும்.

மீனம்:

மீனத்திற்கு இது நல்ல வாரமே. சந்திரன் வலுவாக இருப்பதால் இந்த வாரம் தடைகள் எதுவும் இருக்காது. யோகாதிபதி செவ்வாய் ஆட்சி பெறுவதால் உங்களுடைய தைரியம், ஆக்கத்திறன் மேம்பட்டு உங்களின் எல்லா செயல்களிலும் புத்திசாலித்தனமும், விவேகமும் வெளிப்படும். இன்னும் சில வாரங்களுக்கு எதிரிகளே இல்லாமல் ஜமாய்ப்பீர்கள். இதுபோன்ற நல்ல கிரக நிலைகளையும் மீறி உங்களுக்கு நற்பலன்கள் நடக்கவில்லை என்றால் கடுமையான தசா புக்தி அமைப்பில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

சுக்கிரனின் நிலையால் இளம் பருவத்தினருக்கு  காதல் அனுபவங்கள் உண்டு. மாணவர்கள் படிப்பைத் தவிர அனைத்து உல்லாசங்களிலும் ஈடுபடுவீர்கள். ஆனால் தேர்வு நேரத்தில் ஏதோ ‘மாய மந்திரம்’ செய்து பாசாகி விடுவீர்கள். இரண்டில்  செவ்வாய்  இருப்பதால் உங்களில் சிலர் அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுப்பீர்கள். முன்கோபத்தை கட்டுக்குள் வையுங்கள். கோபம்தான் உங்களுக்கு எதிரியாக இருக்கும். தொழில், வேலை அமைப்பில் மந்தநிலையும் அதிர்ஷ்டக்குறைவும் விலகும்.

Be the first to comment

Leave a Reply