குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (21.01.19 முதல் 27.01.19 வரை)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

மேஷம்:

ராசிநாதன் செவ்வாய் இன்னும் சில வாரங்களுக்கு பரிவர்த்தனை மற்றும் ஆட்சி பெற்ற அமைப்பில் இருப்பதால் மேஷராசிக்காரர்களுக்கு தடைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி கிடைக்கும் வாரம் இது. இதுவரை முயற்சி அளவிலேயே இருந்து வந்த சில காரியங்கள் இப்போது நீங்கள் நினைக்கும் விதத்தில் நிறைவேறும். குறிப்பிட்ட சிலர் ஏதேனும் ஒரு சாதனைச்செயல் புரிந்து புகழடைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்களை விரோதியாக நினைத்தவர்கள் மனம் மாறி இப்போது நட்பு பாராட்டுவார்கள்.

தடைபட்டுக் கொண்டிருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு இனிமேல் உண்டு. பொருத்தமில்லாத வேலையில் இருந்தவர்களுக்கு மாற்றங்கள் உருவாகி நல்ல வேலை கிடைக்கும். கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். தொழில் துறையினருக்கு அனைத்துப் பிரச்னைகளும் விலகி நிம்மதி இருக்கும். சகோதர சகோதரிகளின் விஷயங்களில் நல்ல சம்பவங்களும் ஒருவருக்கொருவர் ஆதரவான நிகழ்வுகளும் உண்டு. இதுவரை அடுத்தவர்களை எதிர்பார்த்திருந்தவர்கள் இனி மற்றவர்களுக்கு உதவுவீர்கள்.

ரிஷபம்:

ஏழுக்குடைய செவ்வாய் பரிவர்த்தனை வலுப் பெற்று, யோகாதிபதி சனி எட்டில் மறைவதால் இந்த வாரம் ரிஷப ராசிக்கு தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் சிக்கல்களும், குறைகளும் இருக்கும். பணவரவில் சுணக்கம் இருக்கலாம். எதிர்பார்ப்புகள் இழுபறியாக இருக்கும் என்பதால் எதிலும் ஒரு முன்னேற்பாட்டுடன் இருப்பது நல்லது. தேவையின்றி ஒருவரை பகைத்து கொள்ள வேண்டாம். நடுத்தர வயதை கடந்தவர்கள் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள்.

குரு, சுக்கிர இணைவால் உங்களில் சிலருக்கு ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். சித்தர்களின் ஆசிகள் எப்போதுமே உங்களுக்கு உண்டு. தரிசிக்க விரும்பும் புனிதத்தலங்கள் அனைத்திற்கும் செல்லும் பாக்கியம் இப்போது கிடைக்கும். எதிரிகள் கை ஓங்கியிருக்கும் வாரம் இது. எனவே எதிர்ப்புகளின் மேல் ஒரு கண் வையுங்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் வர்த்தக அமைப்புகளை வைத்திருப்பவர்கள், மாநிலங்களுக்கு இடையே தொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் யோகத்தை தரும்.

மிதுனம்:

எந்த ஒரு செயலைச் செய்தாலும் மிதுன ராசிக்காரார்கள் முன்யோசனையுடன் சிறப்பாக செய்பவர்கள் என்பதால் அதிர்ஷ்டம் கை கொடுத்து உங்கள் செயல்திறனை மேம்படுத்தும் வாரம் இது. கலைத்துறையிலும் பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம் சொகுசு வாகனம் அலங்காரம் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும். அதிகாரம் செய்யும் துறைகளில் இருப்போருக்கும் நல்லபலன்கள் உண்டு. வேற்று மதத்தினர் உதவுவார்கள். உங்களில் திருவாதிரை நட்சத்தினருக்கு நல்ல வாரம் இது.

கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு நிரந்தரமாக கடன்கள் அடைந்து நிம்மதி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். இதுவரை மருத்துவத்திற்கு கட்டுப்படாமல் இருந்து வந்த நோய்கள் தீரும். சுக்கிரன் குருவுடன் இணைந்திருப்பதால் கையில் பண நடமாட்டம் இருக்கும். தந்தைவழியில் ஆதரவான விஷயங்களும் ஆதாயங்களும் உண்டு. நீங்கள் விரும்பிக் கேட்ட பொருளை அப்பா வாங்கி தருவார். மனம் உற்சாகமாக இருக்கும். இது உங்கள் வாரம்தான்.

கடகம்:

இதுவரை ஆறாம் வீட்டில் இருந்து உங்களின் பணவரவுகளை தடுத்துக் கொண்டிருந்த புதன் விலகும் வாரம் இது. செய்த வேலைக்கேற்ற கூலியும், வருமானமும் இல்லையே என்று புலம்பிக்கொண்டிருந்த கடக ராசிக்காரர்கள் இனிமேல் நிரந்தரமான நல்ல வருமானம் என்ற அமைப்பை அனுபவிப்பீர்கள். குறிப்பிட்ட சில கடக ராசிக்காரர்களுக்கு இது மறக்க முடியாத வாரமாகவும், நீண்ட காலமாக நடக்காமல் இருந்த விஷயங்கள் நடக்கின்ற வாரமாகவும் இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை வரும்.

யோகாதிபதி செவ்வாய் இன்னும் சில வாரங்களுக்கு பரிவர்த்தனை மற்றும் ஆட்சி நிலையில் இருக்கப் போவதால் கவலைகள் அனைத்தும் விலகி ஆனந்தம் வரப் போகிறது. வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். சில இளையவர்கள் தங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணையை இன்னாரென்று தெரியாமலேயே இப்போது சந்திப்பீர்கள். சீருடை அணிந்து வேலை செய்யும் துறையினருக்கு நன்மைகள் நடக்கும். அதிகாரம் செய்யும் துறைகளில் இருப்போருக்கு நல்ல பலன்கள் உண்டு

சிம்மம்:

ராசிநாதன் சூரியன் ஆறில் மறைவதால் ஒன்றுமில்லாத விஷயத்திற்கு மனதை போட்டு குழப்பிக் கொண்டும் தவறாக ஏதேனும் நடந்து விடுமோ என்று அச்சப் பட்டுக் கொண்டும் இருப்பீர்கள். கடவுளின் துணை எப்போதும் உங்களுக்கு உண்டு. எதுவும் எல்லை மீறாது. சனியிடம் இருந்து ராசிநாதன் விலகி வந்து விட்டபடியால் இனி உங்களால் எதிலும் சாதிக்க முடியும். பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும் என்பதால் கவனத்துடன் இருங்கள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் இது லாபம் தரும் வாரம்தான்.

தொழில் அதிபர்களுக்கு அரசு உதவி கிடைக்கும். ஆன்மிகம் சம்பந்தப்பட்ட துறையினர் சிறப்படைவார்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். மகம் நட்சத்திரக்காரர்களுக்கு ஒரு லாபம் உண்டு. மலைப்பாங்கான இடங்களில் தொழில் வைத்திருப்பவர்கள் மேன்மைகளை அடைவீர்கள். வாரத்தின் பிற்பகுதி பணவரவைத் தரும். அதேநேரத்தில் செலவுகள் அதிகமாகத்தான் இருக்கும்.  உங்களின் விடாமுயற்சி மற்றும் தைரியத்தால் அனைத்து பிரச்னைகளையும் நீங்கள் தனியொருவராகவே சமாளித்து தீர்க்கப் போகிறீர்கள்.

கன்னி:

ராசிநாதனின் ஐந்தாமிட இருப்பும், செவ்வாயின் சுபத்துவ பார்வையும் கன்னிக்கு யோகங்களை அளிக்கும் அமைப்பு என்பதால் இந்த வாரம் நீங்கள் சகோதர, சகோதரிகளின் மூலமும், வாழ்க்கைத் துணை வழியிலும்  லாபங்களை அடையும் வாரமாக  இருக்கும். கிரகநிலைகள் சாதகமாக இருப்பதால் இன்னும் சில வாரங்களுக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்கும். செய்யும் முயற்சிகள் வெற்றியடையும் என்பதால் தயக்கமின்றி செயல்பட வேண்டிய வாரம் இது. கூட்டுத் தொழில் சிறப்பாக நடைபெறும். பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள்.

சிகப்பு நிற பொருட்கள் சம்மந்தப்பட வியாபாரிகள் இலாபம் அடைவார்கள். அலுவலகங்களிலும், தொழில் அமைப்புகளிலும் எதிர்ப்புகள் அகலும். போட்டியாளர்கள் விலகுவார்கள். அதிகாரிகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீரும். உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் குணமடைவார்கள். கடன் பிரச்னைகளிலும் வழக்கு விவகாரங்களிலும் சிக்கித் தவித்து தூக்கத்தை இழந்திருந்தவர்களுக்கு நல்லபடியான முடிவு வந்து நிம்மதி வரும். வீட்டுத் தேவைக்கான பொருள் வாங்குவீர்கள்.

துலாம்:

குடும்பாதிபதி செவ்வாய் ஆறில் இருந்தாலும் குருவுடன் பரிவர்த்தனை யோகம் பெறுவதால் உங்களில் கருத்து வேற்றுமையாலும் வேலை விஷயங்களாலும் பிரிந்து கிடந்த குடும்பத்தினர் ஒன்று சேரும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் வாரம் இது. வேலை, தொழில், வியாபரம் போன்ற ஜீவன அமைப்புகளில் ஒன்றுக்கு இரண்டாக லாபங்களைச் சம்பாதிப்பீர்கள். முட்டுக்கட்டைகள் விலகும் பொருளாதார விஷயங்களில் சிக்கல்களை சந்தித்தவர்கள் அவை நீங்கி நல்ல வருமானம் கிடைக்கப் பெறுவீர்கள்.

வேலை, தொழில் இடங்களில் உங்களுடைய திறமைகள் வெளிப்படும். சிலருக்கு அலுவலகங்களில் பாராட்டுக்களும் உயர்நிலையில் இருப்பவரின் அறிமுகமும் அவரால் கவனிக்கப்படுதலும் நடக்கும். இளைஞர்கள் சிலருக்கு பெங்களூர் அல்லது வடக்கே உள்ள நகரங்களில் வேலை கிடைத்துச் செல்ல வேண்டியிருக்கும். எவரிடமும் வாக்குவாதங்களை தவிருங்கள். பெண்கள் விஷயத்தில் கடன் வாங்க நேரிடலாம். குறிப்பாக சிலர் அக்கா தங்கைகளின் சுபகாரியத்திற்கு கடன் வாங்குவீர்கள்.

விருச்சிகம்:

ராசியில் குரு அமர்ந்து ராசிநாதன் செவ்வாய் பரிவர்த்தனை வலுவுடன் இருப்பதால் உங்களுடைய தைரியமும், செயல்திறனும், சாமர்த்தியமான நடவடிக்கைகளும் சிறப்பாக வெளிப்படும் வாரம் இது. குறிப்பிட்ட சில விருச்சிகத்தினர் ஏதேனும் ஒரு செயலால் நற்பெயரும், புகழும் அடைவீர்கள். இரண்டில் சனி இருப்பதால் திடீரென சுடுசொல் சொல்வீர்கள். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சட்டென்று முடிவுக்கு வந்து ஒரு தொகை கைக்கு கிடைக்கும்.

இதுவரை சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும். எதற்கெடுத்தாலும் உங்களை எதிர்த்து வந்தவர்கள் இப்போது திடீரென மனம் மாறி உங்களையும், உங்கள் கருத்துகளையும் ஆதரிப்பார்கள். நடப்பது கனவா நனவா என்று உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். எந்த ஒரு விஷயமும் வெற்றி தரும். ஆரம்பிக்கும் காரியத்தை சுபமாக முடிக்க முடியும். 

தனுசு:

தனுசுக்கு இந்த வார ஆரம்பத்தில் சிறிது சுணக்கமான பலன்கள் இருந்தாலும் நடுப்பகுதியில் இருந்து நல்லபலன்கள் நடக்கத் துவங்கி தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புக்கள் முன்னேற்றமாக இருக்கும். புதிதாக தொழில் ஆரம்பித்த இளைஞர்கள் தொழிலை அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் புதிய கிளைகள் ஆரம்பிக்கவோ, தொழிலை விரிவாக்கம் செய்யவோ, அதிகமான முதலீடு செய்யவோ வேண்டாம். ஏற்கனவே காலூன்றிவிட்ட நடுத்தர வயதினருக்கு இந்த பலன் பொருந்தாது.

ஜென்மச்சனி நடப்பதால் நேர்வழியிலேயே செல்லுங்கள். குறுக்குவழி வேண்டாம். சனி எப்போதும் ஆசை காட்டி மோசம் செய்வார். பேராசை பெருநஷ்டம் என்பது எப்போதும் நினைவில் இருக்கட்டும்.  24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 21-ம் தேதி அதிகாலை 12.05 முதல் 22-ம் தேதி இரவு 11.31 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம். மனம் ஒரு நிலையில் இல்லாமல் சற்று எரிச்சலான ஒரு நிலையில் இருப்பீர்கள் என்பதால் எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

மகரம்:

ஏழில் ராகு இருந்து உங்களுடைய செயல்திறமையை முடக்கிப் போட்டு உங்களை சோம்பலாக்க பார்த்தாலும், பதினொன்றில் இருக்கும் குரு, சுக்கிரன் இருவரும் உங்களுக்கு நன்மைகளையே செய்வார்கள் என்பது நிச்சயம். பரம்பொருளின் கருணையினால் அனைத்தையும் சமாளிப்பீர்கள். மேல்வருமானத்திற்கு ஆசைப்பட்டு விதிகளை மீறி யாருக்கும் சலுகை காட்ட வேண்டாம். சில மகர ராசிக்காரர்களுக்கு கோவில் திருப்பணி செய்யும் வாய்ப்பு தேடி வரும். வாரம் முழுவதும் நல்ல பலன்கள் நடக்கும்.

மகர ராசிக்காரர்களுக்கு தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நல்ல பலன்கள் நடந்தாலும் போட்டி, பொறாமைக்காரர்கள் கவிழ்க்கப் பார்ப்பார்கள் என்பதால் நீங்கள் நிதானமாகவும், கவனமாகவும் இருக்க வேண்டிய வாரம் இது. 24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 22-ம் தேதி இரவு 11.31 முதல் 24-ம் தேதி இரவு 11.49 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்க்கவும். வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம்.

கும்பம்:

கும்பத்திற்கு இந்த வாரம் கெடுதல்கள் எதுவும் இல்லை. எல்லா விஷயத்திலும் நன்மைதான். இதுவரை முயற்சி செய்தும் நடைபெறாத பல விஷயங்கள் இனிமேல் தெய்வத்தின் அருளால் முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். உங்களில் அவிட்டத்திற்கு பிரச்னைகளில் இருந்து விடுதலை உண்டு. சதயத்திற்கு பிரச்னைகள் இழுத்தடிக்கும். பனிரண்டில் சூரியன் இருப்பதால் தொழில் நன்றாக நடந்தாலும் லாபம் குறைவாக இருக்கும். பணப்பற்றாக்குறையால் திணறுவீர்கள். அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது.

கிணற்றில் போட்ட கல்லாக நகர முடியாமல் இருந்த அனைத்து விஷயங்கள் தீர்வினை நோக்கிச் செல்லும். எதுவும் எல்லை மீறி போகாமல் பரம்பொருள் காப்பாற்றுவார். 26,27 ஆகிய நாட்களில் பணம் வரும். 24-ம்தேதி இரவு 11.49 முதல் 27-ம் தேதி அதிகாலை 2.39 வரை சந்திராஷ்டம தினம் என்பதால் புதிய முயற்சிகள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம். மனம் ஒரு நிலையில் இல்லாது அலைபாய்ந்து கொண்டிருக்கும் என்பதால் இந்த நாட்களில் யாருடனும் வாக்கு வாதம் செய்யாதீர்கள்.

மீனம்:

ராசிநாதன் வலுப் பெறுவதால் உங்களின் மனிதநேயம் அருகில் உள்ளவர்களுக்கு தெரியும் விதமாக ஒரு நற்செயல் செய்வீர்கள். நண்பர்களில் ஒருவர் விலகிப் போவார். எந்த ஒரு விஷயத்தையும் அசட்டையாக எடுத்துக் கொள்ளாமல் கவனத்துடன் செய்வதன் மூலம் எதையும் சமாளிப்பீர்கள். கோட்சார நிலையில் மீனத்திற்கு குறைகள் சொல்ல முடியாத, சொல்லக்கூடாத வாரம் இது. என்ன இருந்தாலும் கோட்சாரம் என்பது பொதுப்பலன்தான் என்பதால் பிறந்த ஜாதகப்படி தசாபுக்தி அமைப்புகள் சரியில்லை என்றால் கஷ்டப்படுவீர்கள்.

இதுவரை பணப் பிரச்சினையில் இருந்தவர்களுக்கு மாற்றங்கள் ஆரம்பிக்கும். லட்சியங்களை நிறைவேற்ற முடியாதவர்கள் அதற்கான ஆரம்ப வேலைகளில் இறங்குவீர்கள். முப்பது வயதைக் கடந்தும் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் உறுதியாகும். உங்களைப் பிடிக்காமல் எதிர்த்துக் கொண்டிருந்தவர்கள் உங்களைப் பார்த்து பயப்படும்படி நிலைமை மாறும். எந்தக் காரியமும் அதிக முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். வெளியிடங்களில் மதிப்பு, மரியாதை கௌரவம் நல்லபடியாக இருக்கும்.

2 Comments on குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (21.01.19 முதல் 27.01.19 வரை)

  1. தாங்கல் கூறிய கடகராசிப் பலன் நடந்தது ஐயா! மகிழ்ச்சி✍

  2. குருஜி அவர்களுக்கு வணக்கம்
    ✍தாங்கள் கூறிய கடக ராசிப் பலன் நடந்தது ஐயா வாழ்த்துக்கள்

Leave a Reply