மிதுனம் – 2019 ஜனவரி மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி:8681 99 8888

மிதுனம்: 

மாத ஆரம்பத்தில் குருவும், சுக்கிரனும் ஆறாம் வீட்டில் அமர்ந்து விரய ஸ்தானத்தை பார்ப்பது ஜனவரி மாதம் முழுவதும் மிதுன ராசிக்காரர்களுக்கு தேவையற்ற செலவுகளும், வீண் விரயங்களும் இருக்கும் என்பதை காட்டுகிறது. அதேநேரத்தில் ராசிநாதன் புதன் ஏழாம் வீட்டில் அமர்ந்து ராசியை பார்ப்பதால் செலவுகளுக்கு ஏற்ற பணவரவும் கண்டிப்பாக இருக்கும். எனவே எதைப் பற்றியும் கவலைப்படாமல் மிதுனத்தினர் அனைத்தையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் மாதமாக இது இருக்கும். 

ராசிநாதன் ராசியை பார்ப்பதால் ஜனவரி மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டமுள்ள மாதம்தான். குறிப்பாக இந்த மாதத்தை உங்களின் கடன்களும், நோய்களும் தீரும் மாதம் என்று சொல்லுவேன். ஆறுக்குடையவன் பரிவர்த்தனையாகி பத்தில் குருவின் பார்வையில் இருப்பது கடனையும், நோயையும் விலக்கி வைக்கும் அமைப்பு என்பதால் கடன்களை நினைத்து கலக்கத்தில் இருப்பவர்களுக்கு சந்தோஷம் தரும் மாதம் இது. சிலருக்கு வெகுநாள் இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள் முடிவடைந்து பணவரவு உண்டு. குலதெய்வ வழிபாட்டை தள்ளிப் போட்டு வந்தவர்கள் உடனடியாக அதைச் செய்வது நல்லது. எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தும் குலதெய்வமே நம்மைக் காப்பாற்றும். 

சகோதர உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழிலில் கருத்து வேறுபாடுகள் நீங்கி பங்குதாரர்களிடையே இணக்கமான சூழல்கள் இருக்கும். தொழில் விரிவாக்கங்கள் பலன் தரும். சுயதொழில் செய்வோருக்கு எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்கும். சிலருக்கு வெளிமாநில அல்லது வெளிநாட்டு பயணங்களும், இட மாறுதல்களும் இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு அப்பாவால் செலவுகள் இருக்கும். வயது முதிர்ந்த ஆரோக்கியக் குறைவுள்ள தகப்பனாரைக் கொண்டவர்கள் அவரின் மேல் அக்கறையுடன் இருக்கவும். வேலை செய்யுமிடத்திலும் நல்ல பெயர் வாங்குவீர்கள். தாயார் வழி நன்மைகள் உண்டு பெண்கள் சம்பந்தப்பட்ட இனங்கள், சிற்றுண்டி விடுதி, லாட்ஜிங், வாகனங்கள், வாடகை, கலைத்துறை, டெக்ஸ்டைல்ஸ் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு வருமானம் வரும். 

2,4,5,8,9,10,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 7-ம்தேதி அதிகாலை 12.24 முதல் 9-ம்தேதி மதியம் 1.15 வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் அனைத்தையும் தவிர்ப்பது நல்லது. சந்திரன் எட்டில் இருக்கும் நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் இந்த நாட்களில் எவரிடமும் வாக்குவாதம் தவிர்ப்பது நல்லது.

Be the first to comment

Leave a Reply