கும்பம் – 2019 ஜனவரி மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி:8681 99 8888

கும்பம்:

இரண்டில் இருக்கும் செவ்வாயுடன் ஜீவன ஸ்தானமான பத்தாமிடத்தில் குருபகவான், பரிவர்த்தனை நிலையில் அமர்ந்திருப்பதால் கும்ப ராசிக்கு இந்த மாதம் பரபரப்பாக வேலைகளை செய்து கொண்டிருக்கும் மாதமாக இருக்கும். அதேநேரத்தில் குருவும், செவ்வாயும் ராசிக்கு அவயோகிகள் என்பதால் செய்யும் வேலையில் லாபங்கள் குறைவாக இருக்கும். சிலருக்கு வரவு எட்டணா, செலவு பத்தணா என்ற அமைப்பும் உண்டு. இன்னும் சிலருக்கோ அலைச்சல்கள்தான் மிச்சம். காரியம் கை கூடவில்லை என்ற மனத்தாங்கல்களில் இருப்பீர்கள்.

சமீபத்தில் விரயங்களை கொடுத்த சூரிய, சனி சேர்க்கை மாத பிற்பகுதியில் மாறுவதால் இதுவரை இருந்த வீண் செலவுகள் இனி மட்டுப்பட்டு வருகின்ற வருமானத்தை இனி ஓரளவிற்கு சேமிக்கவும் முடியும். நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள் யாவும் இனிமேல் நடக்க ஆரம்பிக்கும். வேலை இல்லாதவர்கள் மனதிற்கு பிடித்த நல்லவேலை கிடைக்கப் பெறுவீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல செய்திகள் உண்டு. செட்டில் ஆகாத நடுத்தர வயது கும்ப ராசிக்காரர்கள் இந்த மாதம் முதல் நன்மைகள் நடக்க ஆரம்பித்து வாழ்க்கையில் நிலை கொள்வீர்கள். வாழ்க்கைத் துணைவரால் லாபங்கள் இருக்கும். நீங்கள் கேட்கும் பொருட்களை கணவரோ, மனைவியோ வாங்கி தருவார்கள். சிலருக்கு மனைவி வழி சீதனமாக ஏதேனும் ஒரு நன்மை நடக்க வாய்ப்பு இருக்கிறது.

வழக்கு, கடன்தொல்லைகள், கடுமையான மனஅழுத்தம், குடும்பப் பிரச்சினைகள், குழந்தைகளால் வருத்தங்கள் போன்றவைகளில் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கும் கும்பத்தினருக்கு ஆறுதல் தரும் மாதம் இது. பெண்களுக்கு குறைகள் ஏதும் இல்லை. அம்மா வழி ஆதரவும் ஆசிகளும் உண்டு. பிள்ளைகளால் நல்ல விஷயங்களும், தொலைதூரங்களில் இருக்கும் பிள்ளைகளிடம் இருந்து நல்ல செய்திகளும் கிடைக்கும். கடந்த சிலமாதங்களாக கேது பனிரெண்டாமிடத்தில் அமர்ந்து உங்களுக்கு தைரியத்தையும், தெம்பையும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். மாத பிற்பகுதியில் கேதுவுடன் புதன் இணைவது உங்களுக்கு பொருளாதார உயர்வுகளை தரும் அமைப்பு என்பதால் சிக்கல்கள் எதுவும் ஜனவரி மாதம் இல்லை. பிறக்க இருக்கும் புத்தாண்டு உங்களுக்கு நல்லவைகளை மட்டுமே தருவதற்கு ஆதார மாதம் இது.

3,5,7,10,11,12,19,20 ஆகிய நாட்களில் பணம் வரும். 24-ம்தேதி இரவு 11.49 முதல் 27-ம் தேதி அதிகாலை 2.39 வரை சந்திராஷ்டம தினம் என்பதால் புதிய முயற்சிகள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம். மனம் ஒரு நிலையில் இல்லாது அலைபாய்ந்து கொண்டிருக்கும் என்பதால் இந்த நாட்களில் யாருடனும் வாக்கு வாதம் செய்யாதீர்கள்.

Be the first to comment

Leave a Reply