குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (24.12.18 முதல் 30.12.18 வரை)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி :8681 99 8888

மேஷம்:

ராசிநாதனும் குருவும் பரிவர்த்தனை அடைந்திருப்பதோடு, ராசியின் எதிர்நிலைக் கிரகங்கள் வலுவற்ற நிலையில் இருப்பதால் மேஷத்திற்கு பிக்கல் பிடுங்கல் எதுவும் இல்லாத வாரம் இது. சுக்கிரன் ராசியைப் பார்ப்பதால் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். எதையும் தன்னம்பிக்கையுடன் அணுகி வெற்றி கொள்வீர்கள். உங்களுக்குப் பிடிக்காத சிலருடன் இதுவரை இருந்து வந்த மனஸ்தாபங்கள், விரோதங்கள் மறைகின்ற வாரம் இது. வீண்பழி சுமத்தி வேலை மாற்றும் செய்யப்பட்டவர்கள் பழைய இடத்திற்கு திரும்பி வருவீர்கள்.

வியாபாரிகளுக்கு எதிர்ப்புகளும், போட்டியாளர்களும் விலகுவார்கள். சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்களும், வேலை தொழில் வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புக்களில் முன்னேற்றமான போக்கும் இருக்கும். கலைத்துறையினருக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். உங்களில் சிலர் புகழ் அடையும்படியான சம்பவங்கள் நடக்கும். சுக்கிர பலத்தால் பெண்கள் உதவுவார்கள். அவர்களால் நன்மைகள் உண்டு. மேஷத்தினருக்கு வளர்பிறை காலம் இது.

ரிஷபம்:

ராசிநாதன் சுக்கிரன் ஆறில் அமர்ந்து, யோகாதிபதி சனி எட்டில் மறைவது சாதகமற்ற ஒரு அம்சம்தான் என்றாலும் ராசிக்கு குருபார்வை இருப்பதால் நீங்கள் எதையும் சமாளிக்கும் வாரம் இது. உங்களில் சிலருக்கு தம்பி, தங்கைகளின் எதிர்கால வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதற்கான செலவுகள் இந்த வாரம் உண்டு. மூத்த பிறப்பு என்பது தந்தைக்கு சமம் என்பதை நிரூபிக்கும்படி இப்போது நடந்து கொள்வீர்கள். கணவன், மனைவி உறவில் கருத்துவேற்றுமைகள் இருக்கலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது.

அறிமுகம் இல்லாத நபர்களிடம் கவனமாக இருங்கள். வங்கியிலிருந்து பணம் எடுத்து வரும்போது எச்சரிக்கை தேவை. எல்லா விஷயங்களும் கொஞ்சம் இழுபறியாக இருந்தாலும் இறுதியில் உங்களுக்கு நன்மைகள் நடந்தே தீரும். சுயதொழில் புரிவோருக்கு நல்ல வருமானம் இருக்கும். வார இறுதியில் அரசு ஊழியர்கள், காண்ட்ராக்டர்கள் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு  நன்மைகள் நடக்கும். வேலை, தொழில் விஷயங்களில் அவசரப்பட வேண்டாம். எந்த ஒரு முடிவு எடுக்கும் முன்னரும் நம்பிக்கைக்கு உரியவரிடம் ஆலோசியுங்கள்.

மிதுனம்:

ராசிநாதன் ஆறாமிடத்தில் இருந்தாலும் குருவுடன் இணைந்து சுபத்துவமாக இருப்பதால் உங்களுடைய எண்ணங்கள் யாவும் பலிதமாகும் வாரம் இது. வாரம் முழுவதும் பணவரவிற்கு ஏற்ற நாட்கள்தான். புதனின் வலுவால் சிலருக்கு தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் இனி நல்லபடியாக கிடைக்கும். பணியில் இருப்போருக்கு சிக்கல்கள் தீரும். சிலருக்கு எதிர்கால வாழ்க்கைக்கு திருப்பு முனையாக அமையக் கூடிய நிகழ்ச்சிகள் இருக்கும். மற்றவர்களால் மதிக்கப் படுவீர்கள். சுயதொழிலர், கலைஞர்கள், இளைஞர்களுக்கு நல்ல வாரம் இது.

வெளிநாட்டில் இருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்ல மாற்றங்கள் நடக்கும். எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடிய சில விஷயங்களை இப்போது சிலர் செய்வீர்கள். ஒரு சிலருக்கு வீடு அல்லது வாகனம் புதியதாகவோ ஏற்கனவே உள்ளதை மாற்றியோ அமையும் வாய்ப்புகள் உள்ளது. மிதுன ராசி அரசியல்வாதிகளில் சிலருக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கும். விவசாயிகள், வியாபாரிகள் போன்றோருக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு. மனைவி, குழந்தைகள் மூலம் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும்.

கடகம்:

ராசிநாதன் சந்திரன் ராசியில் ஆட்சி பெறும் நல்ல வாரம் இது. கடகத்திற்கு எண்ணியது எண்ணம் போலவே நடக்கும். சுக்கிர இருப்பால் நான்காமிடம் வலுப்பெறுவதால்  பெண்கள் சம்பந்தப்பட்ட அமைப்புகளில் இருப்பவர்கள், நிறைய பெண்கள் வேலை செய்யும் அலுவலங்களில் இருப்பவர்கள் மற்றும் பெண்களுக்கு தேவையான பொருள் விற்பவர்களுக்கு இந்த வாரம் நன்மைகளும், மேன்மைகளும் இருக்கும். முயற்சி ஸ்தானம் வலுப் பெறுவதால் எதிலும் விடாமுயற்சியுடன் இறங்கி சாதித்து காட்டுவீர்கள்.

போட்டி, பந்தயங்கள் வெற்றியை தரும். வாழ்க்கைத் துணைவர் மூலம் இந்த வாரம் சந்தோஷமான நிகழ்ச்சிகள் இருக்கும். சிலரின் கணவருக்கோ மனைவிக்கோ எதிர்பாராத நன்மைகள் இருக்கும். நீண்ட நாள் சந்திக்காத ஒரு உறவினரையோ, நண்பரையோ இந்த வாரம் சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள். தந்தை வழி உறவினர்கள் உதவுவார்கள். அப்பாவின் அன்பு கிடைக்கும். ஒரு சிலருக்கு ஆலய திருப்பணிகளில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். கோட்சார கிரக நிலைகளால் உங்களுக்கு முன்னேற்றம் மட்டும்தான்.

சிம்மம்:

ராசிநாதன் சூரியன்  ஆறுக்குடைய சனியுடன் இணைந்திருப்பதால் சிம்மத்தினரின் நம்பிக்கைகள் தடுமாறும் வாரம் இது. முக்கியமான ஒரு விஷயத்தில் ஏமாற்றம் அடைவீர்கள். யாரையும் அளவுக்கு அதிகமாக நம்ப வேண்டாம். உங்களில் சிலருக்கு கீழ்நிலைப் பணியாளர்களால் மனவேதனை இருக்கும். தகுதிக்கு கீழானவர்களுடன் வைத்துக் கொள்ளாதீர்கள். ஆனால் இதைக் கேட்க மாட்டீர்கள். அன்னிய இன, மத, மொழிக்காரர்கள் சரியான நேரத்தில் உதவிகளை செய்வார்கள். இஸ்லாமிய நண்பர்களால் நன்மைகள் இருக்கும்.

ராசிநாதன் சூரியன் சனியுடன் இருப்பதால் எரிச்சலும் சிடுசிடுப்பும் இருக்கும். உங்களின் பிடிவாதம் அதிகரிக்கும். பேச்சுக்களில் நிதானம் தேவை. கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பெண்கள் விஷயத்தில் செலவுகள் இருக்கும். அவர்களால் வம்புகள் வரலாம் என்பதால் கவனமுடன் இருங்கள். மீடியா துறையினருக்கு அலைச்சல்கள் அதிகம் உண்டு. வீட்டில் பொன், பொருள் சேர்க்கை ஏதேனும் இருக்கும். அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை உண்டு. அரசு ஊழியர்களுக்கு இதர வருமானங்கள் சிறப்பாக இருக்கும்.

கன்னி:

குரு, புதன் இணைவு கன்னிக்கு நன்மைகளைத் தருகின்ற கிரகநிலை என்பதால் இந்த வாரம் கெடுபலன்கள் எதுவுமின்றி நன்மைகள் மட்டுமே நடக்கின்ற வாரமாக இருக்கும். அதேநேரம் ஏழில் இருக்கும் செவ்வாயின் பார்வையால் உங்களில் சிலருக்கு எரிச்சலான சம்பவங்கள் நடந்து கோபத்தில் நீங்கள் யாரையாவது நிதானமிழந்து பேசி விடுவது நடக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். இதனால் வீண் விரயங்களும் மனக்கஷ்டங்களும் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் பேச்சுக்களில் நிதானம் தேவை.

வேலையில் இருப்பவருக்கு பதவிஉயர்வு, ஊதியஉயர்வு, போன்ற பலன்கள் இருக்கும். திருமணம் ஆகாதவருக்கு இப்போது நல்ல செய்தி உண்டு. கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் சந்தோஷத்தை தருவார்கள். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டு. குல தெய்வ தரிசனம் கிடைக்கும். ஏதேனும் ஒரு வகையில் திடீர் பண வரவு இருக்கும். விவாகரத்து வழக்குகளில் அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு சமரச தீர்வாகவோ, அல்லது சாதகமான தீர்ப்பாகவோ அமைந்து நிம்மதி கிடைக்கும் வாரம் இது.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு வேலை தொழில் விஷயத்தில் மன நிறைவும், மகிழ்ச்சியும் கிடைக்கின்ற வாரம் இது. உங்களின் வளர்ச்சியை தடுத்துக் கொண்டிருந்த தடைகள் அனைத்தும் கண் முன்னே நீங்குவதை இப்போது பார்க்க முடியும். குறிப்பிட்ட ஒரு பலனாக எதிர்முகாமில் இருந்து உங்களுக்கு உதவிகள் கிடைக்கும் வாரம் இது. உங்களின் எதிரி ஒருவர் மனம் மாறி நண்பனாவார். பத்தில் இருக்கும் குருபார்வை பெற்ற சுப ராகுவால் உங்களால் எதையும் சாதித்துக் காட்ட முடியும்.

இப்போது கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை நழுவ விடாமல் முழுமையாக உபயோகப்படுத்திக் கொள்வதன் மூலம் உங்களில் சிலர் எதிர்காலத்தில் நன்றாக இருக்கக் கூடிய அமைப்பினை பெறுவீர்கள். சிலருக்கு தொழில்துறைகளில் சாதிக்கக் கூடிய அமைப்பும், வேலையிடங்களில் முன்னேற்ற மாறுதல்களும் இருக்கும். துலாத்தினர் இனிமேல் எதிலும் ரிஸ்க் எடுக்கலாம். புதிய முதலீடுகளை செய்யலாம். தொழிலை விரிவாக்கம் செய்யலாம். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் லாபங்களை பெறுவார்கள்.

விருச்சிகம்:

வார ஆரம்பத்திலேயே சந்திரன் எட்டில் அமர்ந்து சந்திராஷ்டம அமைப்பில் இருப்பதால் இந்த வாரம் விருச்சிக ராசிக்காரர்கள் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என இரட்டை மனநிலையில் இருப்பீர்கள். தெளிவான முடிவெடுக்க முடியாத மனத் தடுமாற்றம் உங்களுக்கு இருக்கும். எனவே திங்கள்கிழமை முக்கிய முடிவுகள் எடுப்பதை ஒத்தி வைக்கலாம். அனைத்திலும் தடைகள் இருக்கும் வாரம் இது. அதேநேரம் வருமானத்திற்கு குறைவு இருக்காது. உங்களில் வங்கித் துறையினர் அலுவலகங்களில் மதிப்பு, மரியாதைகளை பெறுவார்கள்.

மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பதைப் போல நான் என்னதான் சொன்னாலும் எதிர்காலத்தை பற்றிய கலக்கங்களும், குழப்பங்களும் உங்கள் மனதை ஆக்கிரமித்திருக்கும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் முன்னேற வேண்டிய வாரம் இது. தெய்வ அருள் உங்களுக்கு உண்டு. இனி நன்றாக இருப்பீர்கள். 25,28,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 22-ம் தேதி மதியம் 12.21 மணி முதல் 24-ம் தேதி மதியம் 12.59 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம்.

தனுசு:

ராசியில் சூரியன், சனி இணைந்திருப்பதால் உங்களுடைய குணங்களில் மாறுதல் ஏற்படும் வாரம் இது. சிலருக்கு காரணமின்றி எரிச்சலும், கோபமும் வரும். உங்களில் இளைய பருவத்தினர் முக்கியமான விஷயங்களில் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செயல்பட வேண்டிய வாரம் இது. மூலம், பூராட நட்சத்திர இளைஞர்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். மன அழுத்தம் தரக்கூடிய நிகழ்ச்சிகள் இப்போது நடக்கும். செவ்வாய், குரு பரிவர்த்தனை பெறுவதால் பிரச்னைகள் எதுவும் எல்லை மீறாது. கவலை வேண்டாம்.

இளையவர்களுக்கு காதல் தோல்வி ஏற்படும் வாரம் இது. முக்கியமான ஏதாவது ஒன்றில் ஏமாற்றம் இருக்கும். சிலர் வெளிமாநிலம் அல்லது வெளிநாட்டுக்கு செல்வீர்கள். பெண்கள் விஷயத்தில் தள்ளியே இருங்கள். மனம் சற்றுப் பதட்டத்துடனும் எரிச்சலுடனும் இருந்தாலும் அனைத்தும் கட்டுபாட்டுக்குள் இருக்கும். 26,27,28 ஆகிய நாட்களில் பணம் வரும். 24-ம் தேதி மதியம் 12.59 மணி முதல் 26-ம் தேதி மதியம் 1.39 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் ஆரம்பிக்க வேண்டாம்.

மகரம்:

மகரத்திற்கு பின்னடைவுகள் தீர ஆரம்பிக்கும் வாரம் இது. குறிப்பாக உங்களில் சிலருக்கு எதிர்பாராத வகையில் வருமானம் வரவும், அது கையில் தங்கவும் செய்யும் வாரம் இது. திறமையை மட்டும் வைத்துத் தொழில் செய்பவர்கள், புத்திசாலித்தனத்தை முதலீடாக வைத்திருப்பவர்கள் முன்னேற்றம் அடைவீர்கள். அரசு ஊழியருக்கும், எதிர்ப்புகளும் எதிரிகளும் பலம் இழப்பார்கள். கடன் தொல்லைகளில் சிக்கி நிம்மதியை இழந்தவர்களுக்கு இந்த வாரம் அதில் இருந்து விடுபடுவதற்கான வழிகள் தோன்றவும், செயல்படவும் ஆரம்பிக்கும்.

இளைய பருவத்தினருக்கும் இந்த வாரம் முக்கியமான திருப்பு முனைகள் இருக்கும். பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் எச்சரிகையுடன் இருக்கவும். விரயங்கள் வரும். சூதாட்டம், லாட்டரி சீட்டு போன்றவைகளை இப்போது நம்ப வேண்டாம். அஷ்டமாதிபதி சூரியன், சனியுடன் இணைவதால் கெட்ட வழியில் செலவு இருக்கும். 24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 26-ம் தேதி மதியம் 1.39 முதல் 28-ம் தேதி மாலை 3.47 வரை சந்திராஷ்டமம் என்பதால் மேற்கண்ட நாட்களில் முக்கியமான எதையும் எடுக்காமல் இருப்பது நல்லது.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களின் ஆன்மிக உணர்வு மேலோங்கி இருக்கும் வாரம் இது. தெய்வத்தின் அருளால் அனைத்தையும் சமாளிப்பீர்கள். பிறக்க இருக்கும் புது வருடத்தில் நீங்கள் நன்றாக இருப்பதற்கான முன்னேற்பாடுகளை உங்களை அறியாமலேயே செய்து கொள்வீர்கள். பரம்பொருளின் அருளினால் கும்ப ராசிக்கு இந்த வாரம் அனைத்து விதமான நன்மைகளும் தாராளமாக உண்டு. பணவரவு இருக்கும் என்பதால் உங்களின் பொருளாதார நிலை மேன்மையாகவே இருக்கும். இழுபறியில் இருந்து வந்த விஷயங்கள் செட்டிலாகி லாபம் கிடைக்கும்.

யோகாதிபதிகள் வலுப் பெற்று இருப்பதால் சிலருக்கு இரும்பு மற்றும் பிளாஸ்டிக், பெட்ரோல் போன்ற விஷயங்கள் குறிப்பாக அரபு நாடுகள் தொடர்பான விஷயங்களில் வெற்றிகளும் லாபங்களும் இருக்கும். 28-ம் தேதி மாலை 3.47 முதல் 30-ம் தேதி இரவு 8.17 வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் துவங்க வேண்டாம். மேற்கண்ட தினங்களில் அறிமுகமாகும் நபர்கள் பின் நாட்களில் தொந்தரவுகளை கொடுப்பவர்களாக மாறுவார்கள் என்பதால் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்.

மீனம்:

தர்ம கர்மாதிபதிகளான குருவும், செவ்வாயும் பரிவர்த்தனை வலுப்பெறும் நல்ல வாரம் இது. ராசிநாதன் குரு, ஏழுக்குடைய புதனுடன் இணைந்திருப்பதால் மீன ராசிக்கு நண்பர்கள், கூட்டாளிகள், பங்குதாரர்கள் மூலமான சந்தோஷ நிகழ்ச்சிகள் இப்போது இருக்கும். வாரத்தின் இறுதி இரண்டு நாட்களில் வீண் செலவுகள் இருக்கும் என்பதால் செலவுகளில் கவனமாக இருங்கள். நான்காமிடத்தை சூரியன், சனி இருவரும் இணைந்து பார்ப்பதால் உங்களில் சிலருக்கு வீடு, வாகனம், அம்மா விஷயத்தில் வீண் செலவுகள் இருக்கும்.

யோகர்கள் வலுப் பெற்று இருப்பதால் மனதிற்கு சந்தோஷமான விஷயங்கள் உண்டு. அரசு, தனியார்துறை ஊழியருக்கும் காவல் துறையினருக்கும் நன்மைகள் இருக்கும். உங்களின் திடமான மன ஆற்றலும், தைரியமும் வெளிப்படும் வாரம் இது. உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். காரிய வெற்றி நிச்சயம் உண்டு. தொழில் மேம்படும். வேலை செய்யும் இடத்தில் சந்தோசம் இருக்கும். பிள்ளைகளால் பெருமை வரும். உடல்நலம் மனநலம் சிறப்பாக இருக்கும். திங்கள் செவ்வாய் இரண்டு நாட்களும் எதிர்பார்த்த இடத்தில் இருந்து  பணம் கிடைக்கும்.

1 Comment on குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (24.12.18 முதல் 30.12.18 வரை)

  1. பெயருக்கு ஏற்றபடி மக்கள் நலம் கருதும் சுயநலம் இல்லா மா மனிதர் வாழ்க நின் தொண்டு

Leave a Reply