adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
ராகுல் காந்தி பிரதமர் ஆவாரா..?-D-034 Rahul Gandhi Prime Minister Avara..?

எதிர்காலத்தில் பாரதப் பிரதமர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படும் திரு ராகுல் காந்தி அவர்களின் ஜாதக விளக்கத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ராகுல்காந்தி மிக இளம் வயதான 21 வயதிலேயே தனது தந்தையை இழக்க நேரிட்டது. அப்போது ஜாதகப்படி இவருக்கு சுக்கிர தசையில், சனி புக்தி நடந்து கொண்டிருந்தது. தசாநாதனான சுக்கிரன், தந்தையைக் குறிக்கும் ஒன்பதாமிடத்தின் அதிபதியாவார். புக்திநாதனான சனி எட்டாமிடத்தில் நீசம் பெற்று பிதுர்க் காரகனாகிய சூரியனைப் பார்க்கிறார்.

எட்டாமிடம் கொடிய விபத்துகளையும், ஆயுள் குற்றங்களையும் தரும் இடம் என்பதால் இவரது இளம் வயதிலேயே நடந்த சுக்கிர தசை, சனி புக்தியில் அதாவது மாரகாதிபதி என்று சொல்லப்படக்கூடிய இரண்டாம் அதிபதியான சுக்கிர தசையில், எட்டாம் வீட்டில் இருந்து நீசமாகி சூரியனைப் பார்த்த சனியின் புக்தியில் ராகுல் தந்தையை இழந்தார்.

பிதுர்க்காரகனாகிய சூரியன் இங்கே சுபத்துவம் அடைந்திருந்தாலும், அந்தச் சூரியன் செவ்வாயுடன் இணைந்து, நீச சனியின் பார்வையைப் பெற்றிருப்பது தந்தைக்கு நன்மைகளைத் தராது. இங்கே வேத ஜோதிடம் சொல்லும் உயிர்க்காரக, ஜடக்காரக விதிகள் ராகுலுக்கு பொருந்தும்.

கீழே ராகுலின் தந்தையான திரு. ராஜீவ்காந்தி அவர்களின் ஜாதகத்தைக் கொடுத்திருக்கிறேன். இவரது பிறந்த நாள் 20-8-1944 நேரம் காலை 8-11,  பிறந்த இடம் மும்பை.

ராஜீவ்காந்தியும் சிலகாலம் நம்முடைய பிரதமராக இருந்தவர் என்பதால் அரசியலில் அதி உச்சப் பதவியை அடைவதற்கு வேத ஜோதிடம் சொல்லும் விதிகள் இவரது ஜாதகத்திலும் பொருந்தி வர வேண்டும்.

ராஜீவின் ஜாதகத்திலும் நான் கூறும் சூரியன் மற்றும் சிம்மத்தின் சுபத்துவம் பூரணமாக இருப்பதை பார்க்கலாம். ராஜீவின் ஜாதகப்படி சிம்ம லக்னமாகி, லக்னாதிபதியான சூரியன் சிம்மத்தில் அமர்ந்து, வேதஜோதிடம் தனித்துச் சொல்லும் நான்கு சுபர்களான குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன், புதன் ஆகிய நால்வரும் சிம்மத்தில் அமர்ந்து, ராஜராசியான சிம்மம் அதிகமான சுபத்துவம் அடைந்திருக்கிறது.

இதில் சூரியனும், சந்திரனும் இணைந்து தங்களுக்குள் கேந்திர நிலை பெற்றிருக்கிறார்கள். மிக மிக முக்கியமாக லக்னாதிபதியான சூரியன், குருவினை அஸ்தமனம் செய்திருக்கிறார். அஸ்தமனம் செய்த கிரகங்களின் பலனை சூரியனே தருவார் என்ற விதியின்படி, சுபக்கிரகங்களை அஸ்தமனம் செய்த சூரியன் அவர்களது சுப பலனை தானே எடுத்துக் கொண்டு, தானே மிகப்பெரிய சுபராக மாறுவார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான அரசு ஊழியர்களின் ஜாதகங்களில் சூரியனும், குருவும் இணைந்து அங்கே குரு அஸ்தமனமாகி சூரியன் சுபத்துவமாக உள்ள நிலையினைப் பார்க்கலாம்.

சூரியனும். சிம்மமும் அதிகமான சுபத்துவம் அடைந்த காரணத்தினால், ராஜீவ் காந்தி ஒரு பாரம்பரியமான அரச குடும்பத்தில் பிறந்து, சில காலம் அரசனாகவும் இருந்தார். அவர் இறக்கும்போது அவருக்கு 47 வயது மட்டும்தான். அப்போது அவருக்கு ராகு தசை நடந்து கொண்டிருந்தது.

அவரது ஜாதகத்தில் ஒன்றுமில்லாதவனை உயரத்தில் வைக்கக் கூடிய ராகு 12-மிடத்தில், ராகுவிற்கு சுப வீடு என்று சொல்லப்படும் கடகத்தில் அமர்ந்து, நவாம்சத்தில் உச்சகுருவுடன் இணைந்து மிகுந்த சுபத்துவ வலிமை பெற்றிருக்கிறார். 3, 11-மிடத்தைப் போலவே 12-மிட ராகுவும் யோகங்களைச் செய்வார் என்பதை என்னுடைய ராகுவின் சூட்சும விளக்க கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறேன்.

உத்தர காலாம்ருதத்தில் மகாகவி காளிதாசர் 12-மிட ராகு ராஜயோகத்தைத் தந்து மாரகத்தையும் தருவார் என்று ஒரு சுலோகத்தில் சொல்லியிருக்கிறார். அதன்படி ராஜீவிற்கு ராகுதசை ஆரம்பித்ததுமே அரசியல் தொடர்புகள் உருவாக ஆரம்பித்தன.

அவரது தாயாரான திருமதி இந்திரா காந்தியால், அரசியல் வாரிசாக உருவாக்கப்பட்ட, ராஜீவின் தம்பி சஞ்சய்காந்தி 1980-ல் விமான விபத்தில் மரணமடைந்த பிறகே, தனக்கு ஆர்வமில்லாத அரசியலில், தாயாருக்காக ராஜீவ் நுழைய நேரிட்டது. அப்போது அவருக்கு ராகுதசை ஆரம்பித்திருந்தது.

அதிக சுபத்துவமான ராகு, தனது தசையில் ஒருவரை பிரபலமாக்குவார் என்பதன்படி, அதுவரை யார் என்றே பெரும்பாலான இந்திய மக்களால் அறியப்படாமல் இருந்த ராஜீவ் திடீரென இளவரசனாக பிரபலமானார். 1984-ல் ராகுதசையில் குருபுக்தி நடக்கும்பொழுது, அவரது தாயாரின் மரணத்தினால், ராஜீவ், காலத்தின் கட்டாயமாக பிரதமரானார்.

1991-ல் ராஜீவ் மரணமடையும் போது அவருக்கு ராகு தசையில், புதன் புக்தி நடைபெற்றுக் கொண்டிருந்தது. விரையத்தில் இருக்கும் ராகுவின் தசையில், மாரகாதிபதியான புதனின் புக்தியில் ராஜீவின் மரணம் நிகழ்ந்தது.

வேத ஜோதிட விதிகளின்படி ராஜீவின் ஜாதகம் இயல்பாகவே ஒரு அற்பாயுள் ஜாதகம்தான். அவரது ஆயுள் ஸ்தானாதிபதியான குரு, ஆயுள் பாவகமான  எட்டாம் வீட்டிற்கு ஆறில் மறைந்து அஸ்தமனம் அடைந்திருக்கிறார். இங்கே சூரியனை பிரதமர் பதவி தரும் நிலைக்கு சுபத்துவப்படுத்திய குரு அஸ்தமனம் பெற்றதால் தனது ஆதிபத்தியமான ஆயுளைத் தரும் வலுவை இழந்தார். ஒன்று கிடைத்தால் இன்னொன்று கிட்டாது என்பது உலக நியதி.

ஆயுள் பாவகமான எட்டாமிடத்தை பாபக் கிரகங்களான செவ்வாய் ஏழாம் பார்வையாகவும், சனி பத்தாம் பார்வையாகவும் பார்க்கிறார்கள். மற்ற விதிகளை விட “பாபக் கிரகங்கள் பார்க்கும் பாவகம் வலுவிழக்கும்” என்ற இந்த ஒரு விதியே ராஜீவ்காந்தி அற்பாயுளில் மரணமடைவார் என்பதை சுட்டிக் காட்டும்.

அடுத்தடுத்து நான் உதாரணமாகக் காட்டும் அனைத்து ஜாதகங்களிலும் சிம்மும், சூரியனும் சந்தேகத்திற்கிடமின்றி சுபத்துவம் அடைந்திருப்பதைக் காணலாம். சிம்மம், சூரியன், சந்திரன் ஆகிய மூன்றின் கூடுதல், குறைவான சுபத்துவ அமைப்புகளுக்கேற்ப ஒருவர் எம்.எல்,ஏ, எம்.பி, மந்திரி, முதல்வர், பிரதமர் போன்ற பதவிகளை வகிக்கிறார்.

எத்தனை சொன்னாலும் ராகுல்காந்தி இன்னும் பிரதமர் ஆகவில்லையே, தற்போது இருக்கும் சூழ்நிலைகளும் அவர் பிரதமர் ஆவதற்குரிய நிலையில் இல்லையே என்ற கேள்வி என்னிடம் எழுப்பப்படுகிறது.

என்னதான் ஜாதகம் யோக அமைப்பில் இருந்தாலும், நடப்பு தசாபுக்தி அமைப்புகள் வலுவாக இருந்தால்தான் ஒருவர் முழுமையான யோகத்தை அனுபவிக்க முடியும். அதன்படி, எதையும் செய்யக் கூடிய சரியான பருவமான 25 வயதிற்குப் பிறகு, இன்றுவரை ராகுலுக்கு யோகதசைகள் நடைபெறவில்லை.

6 வயது முதல் 26 வயதுவரை, அவரது லக்னத்தின் ராஜயோகாதிபதியான சுக்கிரனின் தசை அவருக்கு நடந்தது. அதன்பிறகு இன்றுவரை இந்த லக்னத்தின் அவயோகர்களான சூரியன், சந்திரன், செவ்வாய் தசைகள்தான் நடந்து கொண்டிருக்கின்றன. அதிலும் கன்னிக்கு வரக்கூடாது என்று நான் அடிக்கடி சொல்லும் செவ்வாய் தசை கடந்த ஆறு வருடங்களாக ராகுலுக்கு நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த மே மாதம் வரை இது நீடிக்கும். 2019 மே மாதத்திற்கு பிறகு ராகுலுக்கு ராகுதசை ஆரம்பமாகும்.

கன்னி லக்னத்திற்கு சூரிய, சந்திர, செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் யோகம் தருபவை அல்ல. ராகுலின் 48 வயது வாழ்வில் மிக முக்கியமான 22 வருடங்களை அவர் அவயோக தசை அமைப்பிலேயே சந்தித்து வருவதால் இதுவரை  ராகுல்காந்தியால் பிரதமர் பதவி என்பதை சாதிக்க இயலவில்லை.

அடுத்து வர இருக்கும் ராகுதசை, அவரது தந்தையான ராஜீவ் காந்தியை உச்சத்தில் கொண்டு போய் வைத்த தசை. வரும் மே மாதம் ராகுலுக்கு ராகுதசை ஆரம்பிக்க உள்ளது. சுவாரஸ்யமான ஒரு நிகழ்வாக அச்சமயம் அடுத்த இந்தியப் பிரதமரை தேர்ந்தெடுக்கும் பாராளுமன்ற தேர்தலும் வர இருக்கிறது.

ராகுலின் ஜாதகப்படி எதிர்பாராத பெருத்த யோகங்களைக் தரக்கூடிய ராகு ஆறாமிடத்தில், தன்னுடைய சொந்த நட்சத்திரமான சதய நட்சத்திரத்தில் இருக்கிறார். நவாம்சத்தில் அவருக்கு நல்ல வீடு என்று சொல்லப்படக்கூடிய மகரத்தில் ராகு இருப்பது ஒரு நல்ல நிலைதான்.

நான் அடிக்கடி சொல்லும் குருவின் பார்வையும் ராகுவிற்கு இருக்கிறது. ஆனால் இந்தக் குரு மிக அதிக வலிமை பெற்றவர் அல்ல. வர்கோத்தம நிலை என்பது ஆட்சி நிலைக்கு சமம் என்றுதான் நமது கிரந்தங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய வலுவான உச்ச நிலைக்கு வர்கோத்தம அமைப்பு ஈடாகாது.

மேலும் நட்பு வீட்டில் அமர்ந்து வர்கோத்தமம் பெற்ற ஒரு கிரகம் மேன்மையான ஆட்சி பலத்தை தரும். ஆனால் இங்கே குருவோ அவருக்கு எதிர்த்தன்மை கொண்ட கிரகமான சுக்கிரனின் பகை வீட்டில் அமர்ந்து வர்கோத்தமம் பெற்று ராகுவையும், ராகுவிற்கு வீடு கொடுத்தவனையும் பார்க்கிறார். இங்கே ராகுவிற்கு குரு பார்வை என்பது ஒரு நல்ல நிலைதான். ஆனால் அதுவே உன்னதமான ஒரு பார்வை இல்லை. இந்த வித்தியாசங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு மிகப்பெரிய பலவீனமாக ராகுவிற்கு வீடு கொடுத்த சனி இங்கே நீச நிலையில் இருக்கிறார். பாபக்கிரகமான சனி, குருவின் பார்வையில் நீசமடைவது யோகம் என்றுதான் நான் குறிப்பிடுகிறேன் ஆனால் அது ராகுதசைக்குப் பொருந்தாது.

“பாபக் கிரகங்களின் சூட்சும வலு தியரி” யிலேயே சனி, செவ்வாய் போன்ற பாபக் கிரகங்கள் உச்சம் அடைவது, அந்த கிரகங்களின் வீடுகளில் இருக்கும் ராகு போன்ற கிரகங்கள் நன்மைகளைச் செய்வதற்காகத்தான் என்பதை நான் தெளிவாகச் சொல்லி இருக்கிறேன். ஆகவே ராகுவிற்கு வீடு கொடுத்த சனி இங்கே சுபத்துவம் அடைந்திருந்தாலும் நீசமடைந்தது ராகுதசைக்கு சரியான நிலை அல்ல.

அதிலும் ராஜயோக தசைகளைத் தவிர்த்து வேறு எவ்வித தசைகளும், தனது சுய புக்தியில் ஒருவருக்கு மிகப்பெரிய யோகத்தை தருவதில்லை. சிறிதும் பங்கமற்ற ராஜயோக தசை மட்டுமே ஒருவருக்கு சுயபுக்தியில் பலன்களைத் தரும். இங்கே ராகு அந்த அமைப்பில் இல்லை. இன்னும் துல்லியமாகச் சொல்லப்போனால் ராகு, ராஜயோகத்தை தரக்கூடிய இடம் என்று மூலநூல்கள் குறிப்பிடும் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து இடங்களில் ராகு இல்லாமல் கும்பத்தில்தான் இருக்கிறார்.

அதைவிட மேலாக தற்போது ராகுலின் ராசியான தனுசுவிற்கு கோட்சார ரீதியில்  ஜென்மச்சனி நடந்து கொண்டிருக்கிறது. 40 வயதுகளில் இருக்கும் தனுசு ராசிக்காரர்கள் யாருக்கும் நல்ல பலன்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கவில்லை. அதேநேரத்தில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும்போது, ராகுலின் ஜென்ம நட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் இருந்து விலகி பூராட நட்சத்திரத்தில்தான் சனி சென்று கொண்டிருப்பார். இது சிறிது ஆறுதல் தரும் ஒரு நிலைதான்.

என்ன இருந்தாலும் வேத ஜோதிட விதிகளின்படி நடப்பு கோட்சாரம் மற்றும் தசாபுக்தி அமைப்புகள் சாதகமாக இல்லாததால் இம்முறை அதி உச்ச பதவியை அடைவதற்கு ராகுலுக்கு தடை இருக்கும். அவர் பிரதமராவாரா என்பதைக் துல்லியமாக கணிக்க இன்னும் சில ஜோதிடத் தகவல்கள் தேவைப்படும். அதை பாராளுமன்ற தேர்தலின்போது பார்க்கலாம்.

அடுத்த வெள்ளி தொடருவோம்.

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

One thought on “ராகுல் காந்தி பிரதமர் ஆவாரா..?-D-034 Rahul Gandhi Prime Minister Avara..?

  1. கட்டுரையில் அளிக்கப்பட்டிருக்கும் ராஜிவ் காந்தியின் ஜாதகத்தில் கேதுவிற்கு ஏழில் இல்லாமல் ஆறில் ராகு இருக்கிறது.
    கணிப்பு சரிதானா?

    மேலும் ராகுலின் ஜாதகத்தில் பிறந்த நாள் குறிப்பு இருக்கிறது, ஆனால் பிறந்த நேரம் குறிப்பிடப்படவில்லை..

    பலமுறை இணையத்தில் தேடியதில் 19/06/1970 2:28 p.m. என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதன்படி லக்னமும் துலாம் என்று அறியப்படுகிறது.

    இது முற்றிலும் மாறுபட்ட கணிப்பு அமைய காரணம் ஆகிறது.

    மீண்டும் இந்த பதிவு பலரின் ஆவலான தேடுதலுக்கு ஏப்ரல் 2019க்கு பிறகு உட்படக்கூடும்.

    நானும் ஆவலுடன் உள்ளேன்.

    குருஜி ஐயா மறுபரிசீலனை செய்வீர்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *