மகத்தில் உதித்த மகத்துவ அரசி…!

கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழக அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத, ஆளுமைத் திறன் மேலோங்கிய சக்தியாக விளங்கி, தனது மரணத்தின் மூலம் அனைவரின் மனதிலும் ஒரு இனம் புரியா பரிவினை ஏற்படுத்திச் சென்று விட்ட மகாசக்தியின் ராஜயோக விளக்கங்களின் தொடர்ச்சியினை தற்போது பார்க்கலாம்.

ஒரு ராஜயோக ஜாதகத்தில் லக்னத்தையோ, லக்னாதிபதியையோ, ராசியையோ வலுப்பெற்ற குருபகவான் பார்ப்பார் என்ற அமைப்பின்படி தனது கட்சியை சுட்டு விரலின் ஆதிக்கத்தில் வைத்திருந்த இந்த மகாராணிக்கு மிதுன லக்னமாகி லக்னத்தையும், ராசியையும் எவ்வித பங்கமும் அடையாத பூரண சுபத்துவம் பெற்ற குருபகவான் பார்ப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பவுர்ணமிச் சந்திரனும் குருவுக்கு நிகரான சுபராவார் என்று நமது மூலநூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனது நீண்டகால அனுபவத்தில் சில நிலைகளில் குருவை விட மேலான சுபத்துவ அமைப்பை பூரணச் சந்திரன் தருவார்.

அத்தகைய முழுமையான வலுப்பெற்ற பவுர்ணமி சந்திரன், ஆட்சி பெற்ற குருவின் பார்வையும் பெற்று இன்னும் அதிக சுபத்துவம் அடைந்து லக்னாதிபதி புதனைப் பார்த்ததால் இந்த அரசியின் ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதி, ராசி மூன்றும் வலுவடைந்து இவரைக் கோடியில் ஒருவராக்கியது.

பாரம்பரிய ஜோதிட விதிகளின்படி ஒருவரின் லக்ன சுபக் கிரகங்கள் வலுவாக இருக்கும் நிலையில் ராசிப்படியும் சுபர்கள் வலுப்பெற்று இருப்பின் அது சிறந்த ராஜயோக ஜாதகமாகும். ஒரு ஜாதகத்தில் லக்ன அமைப்பும், ராசி அமைப்பும் வலுப் பெறுவது ராஜயோகத்தைக் குறிக்கும். எல்லோருடைய ஜாதகங்களிலும் இந்த நிலை அமையாது.

மறைந்த முதல்வரின் ஜாதகத்தில் அவரது மிதுன லக்னப்படி கிரகங்களின் இருப்பைக் கணக்கிட்டாலும், லக்னத்தை ஒதுக்கிவிட்டு அதாவது லக்னம் மிதுனம் என்பதை மறந்துவிட்டு சிம்ம லக்னமாக கணக்கிட்டுப் பார்த்தாலும் இவரது ஜாதகம் அபூர்வமான ஜாதகங்களில் ஒன்றாகவே இருக்கும்.

இவரது ஜாதகத்தில் மிதுன லக்னப்படி ஐந்துக்குடைய சுக்கிரன் உச்சமானதைப் போல், சிம்மத்தின்படி ஐந்துக்குடைய குரு ஆட்சியாக அமர்ந்து சிம்மாதிபதி சூரியன் அதாவது ராசிநாதன் ராசியைப் பார்த்திருப்பார். இதுபோல லக்னப்படியும், ராசிப்படியும் ஒருசேர கிரகங்கள் வலுப்பெற்று இருப்பதும் தனித்துவமான ஒன்றுதான்.

ஒரு ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதி, ராசி, ராசியாதிபதி, சந்திரன் அமர்ந்த நட்சத்திர நாதன், லக்னம் அமர்ந்த நட்சத்திர நாதன் ஆகிய அனைவரின் வலுக்களும் மிக முக்கியமானது. இவர்கள் அனைவரின் சுபவலுக்களுக்கு ஏற்றபடி அந்த ஜாதகத்தின் வலிமை அமைகிறது.

தொண்டர்கள் “அம்மா” வென மனதார அழைத்து, பதவியெனும் அமுதினை தனக்கு ஊட்ட மாட்டாளா என ஏங்கி அடிபணிந்த இந்த மாதரசியின் உன்னத ஜாதகத்தில் லக்னத்தை சிறிதும் குறைபடாத வலுப்பெற்ற குரு பார்க்க, லக்னாதிபதியையும் ராசிநாதனையும் பூரணச் சந்திரன் பார்த்து, ராசியை ராசிநாதன் பார்க்க, நட்சத்திர நாதன் கேது அமர்ந்த வீட்டின் அதிபதி சுக்கிரன் உச்சமாகி, லக்ன நட்சத்திர அதிபதி ராகுவும் குருவின் பார்வையில் உள்ளது குறிப்பிடத் தக்கது.

வேத ஜோதிடத்தை விமர்சிப்பவர்களுக்கும், நம்பாதவர்களுக்கும் இது போன்ற உன்னதமான பரிபூரண ராஜயோக ஜாதகங்களே பதில் சொல்லும்.

ஆயிரமாயிரம் விதிகளையும், நுணுக்கமான கிரகச் சேர்க்கைகளையும், அபூர்வ கிரகநிலை அமைப்புகளையும் சொல்லும் இந்த தெய்வீக சாஸ்திரத்தில், இந்தக் கலை சொல்லும் அனைத்து விதிகளும் முழுமையாகப் பொருந்தும் நிலையில் பிறக்கும் ஒரு ஜீவன் உயர் தனித்தன்மை கொண்டதாகிறது என்பதற்கு இதுபோன்ற ராஜயோக ஜாதகங்களே அத்தாட்சியாகும்.

கேதுதசையில் பிறந்த இவருக்கு நான்கு வயது முதல் உச்சம் பெற்ற சுக்கிர தசை நடப்பில் இருந்ததால் இளம் வயதிலேயே கலைத்துறையில் சாதனை புரிந்தார். சுக்கிரனின் தயவால் இவரால் கலைத்துறையில் முதலிடத்தில் இருக்கவும், அதன்பிறகும் தனது வசீகரத்தை தக்க வைத்துக் கொள்ளவும் முடிந்தது.

ஒளிக்கிரகங்களான சூரியனும், சந்திரனும் முழுபலத்துடன் பவுர்ணமி யோகத்துடன் அமைந்த நிலையில், அதிகாரத்தைத் தரும் கிரகமான செவ்வாய் இவர்கள் இருவருக்கும் கேந்திர நிலையில் அமர்ந்து, சந்திரனுடன் இணைந்து பூரண சுபத்துவ, சூட்சும வலுவுடன் லக்னாதிபதி புதனைப் பார்த்ததால் சந்திர தசை, புதன் புக்தியில் 1983-ல் இவரது ஆசானால் இந்த நாயகி நேரடி அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு ஏழு வருட காலம் கொண்ட செவ்வாய் தசை நடக்கும் போது முதல் மூன்றரை வருடங்கள் தனது ஆறாமிடத்துப் பலனை மட்டுமே தந்து கடன், நோய், எதிர்ப்புகள் போன்றவைகளை செவ்வாயின் நிலைக்கேற்றபடித் தந்து வாட்டி வதக்கும் என்பதை முன்பே எழுதியிருக்கிறேன்.

அதன்படி இந்த பேரரசிக்கு செவ்வாய் தசை ஆகஸ்ட் 1987-ல் ஆரம்பித்த ஓரிரு மாதங்களில் செவ்வாயின் சுய புக்தியிலேயே இவரை அரசியலுக்கு கொண்டு வந்து அறிமுகப்படுத்தியவரும், இவரது குருநாதருமான மன்னாதி மன்னன் 1987 டிசம்பரில் அமரரானார்.

அது முதற்கொண்டு சுமார் மூன்றரை வருடங்கள் இவர் எதிர் கொண்ட எதிர்ப்புகள் எண்ணிலடங்காதவை மற்றும் தமிழகம் அறிந்தவை. இவரது ஆசானின் உடல் வைக்கப்பட்டிருந்த பீரங்கி வண்டியில் இருந்து இறக்கி விடப்பட்டு அவமானப் படுத்தப்பட்டது முதல் அரசியலில் இருந்து இவரை அப்புறப்படுத்த நடந்த பலவிதமான தாக்குதல்கள் வரை ஏழு வருட செவ்வாய் தசையின் முதல் மூன்றரை வருடங்கள் அவர் அனுபவித்த துன்பங்களும், வேதனைகளும் ஏராளம்.

ஒரு ஜாதகத்தில் இரு ஆதிபத்தியங்களைக் கொண்ட கிரகம் ஏதேனும் ஒரு வீட்டோடு தொடர்பு கொண்டிருந்தால், அந்த வீட்டின் பலனை எழுபத்தி ஐந்து சதவீதமும், தொடர்பில்லாத வீட்டின் பலனை 25 சதவீதமும் செய்யும் என்பது விதி. இரண்டு வீட்டோடும் சம அளவில் தொடர்பு கொண்டிருந்தால் இரு வீட்டு பலன்களையும் சரிசமமாக செய்யும்.

அதன்படி இவரது ஆறாம் வீட்டிற்கு கேந்திரத்திலும், பதினொன்றாம் வீட்டிற்கு திரிகோணத்திலும் அமர்ந்த செவ்வாய் தன் ஆறாம் வீட்டைத் தானே பார்த்து வலுப்படுத்தியதால் முதல் மூன்றரை வருடங்கள் கடுமையான எதிர்ப்புகளை கொடுத்து, பிற்பகுதி மூன்றரை வருடங்களில் லாபாதிபதியாகவும், ராசியின் ராஜயோகாதிபதியாகவும் செயல்பட்டு லக்னாதிபதி புதனின் புக்தியில் இவரை முதன் முதலாக அரசியாக்கியது. அதிகாரத்தில் அமர வைத்தது.

மிதுன லக்னத்தின் ஒரே யோகரான ராகு இவருக்கு நன்மை தரும் இடமான மேஷத்தில் அமர்ந்து அந்த இடம் பதினொன்றாம் பாவமானதால் ராகுவும், யோக நிலையை தொடரும்படியாயிற்று. அதேநேரத்தில் ராகு – கேதுக்கள் செவ்வாய், சனியின் தொடர்பைப் பெறுவது முழுக்க நன்மைகளை தராது.

சுக் ரா
 சூ
பு

24-2-1948
2.34 பகல்
மைசூர்

சனி
 செவ்
சந்
 குரு  கே

இங்கே பதினொன்றாமிடத்து மேஷ ராகுவை வலுப்பெற்ற குருபகவான் தனது சுப பார்வையால் பார்த்ததால் ராகு தசையும் இவருக்கு யோக தசையாகியது. அதேநேரத்தில் ராகு சனியின் பார்வையையும் பெற்றதால் சிறைவாசம் மற்றும் வழக்குகளையும் தந்தது. இந்த மேஷ ராகு யோகாதிபதியான உச்ச சுக்கிரனின் நட்சத்திரத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு ஜாதகத்தில் யோகாதிபதி குரு, சுக்கிரன் போன்ற அதி சுபராகி அவர் உச்ச வலுப் பெற்று ஜாதகத்தின் மற்ற கிரகங்களோடு சம்பந்தப்படும் போது தொடர்புள்ள அனைத்துக் கிரகங்களும் யோகர்களாகவே பலன் தருவார்கள்.

அதன்படி இங்கே பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான சுக்கிரன் பத்தாமிடத்தில் மாளவ்ய யோக அமைப்பில் உச்சம் பெற்று, அவரது வீட்டில் கேது அமர்ந்ததால், கேது சுக்கிரனைப் போல பலன் தர வேண்டியவராகி, கேதுவின் சாரம் பெற்ற சந்திரன், செவ்வாய், குரு ஆகிய மூவரும் சுக்கிரனைப் போல நன்மைகளைத் தர வேண்டியவர்கள் ஆனார்கள்.

ஆனால் எந்த ஒரு மகாதசையும் சுயபுக்தி நன்மைகளைச் செய்யுமானால் பிற்பகுதி கெடுதல்களையும் தரும் எனும் விதிப்படி சுய புக்தி முழுக்க அவர் முதல்வராக இருந்த காரணத்தினால் அடுத்த நிலையில் இவர் சரிவுகளைச் சந்தித்தார்.

மேலும் எத்தனை பெரிய யோக ஜாதகமாக இருந்தாலும் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி நேரங்களில் ஜாதகம் செயலற்றுப் போய் நற்பலன்களைத் தராது என்பதால் இவரது சிம்ம ராசிக்கு அஷ்டமச்சனி நடந்து கொண்டிருந்த 1996-ம் வருடம் கிரகங்களின் சாதகமற்ற அமைப்பினால் இவர் மிகப் பெரிய சரிவுக்குள்ளானார்.

ராகுதசை முழுக்கவே இவருக்கு ஏற்றமும், இறக்கமுமாகவே இருந்தது. அதற்கு ராகு செவ்வாயின் வீட்டில் இருந்ததும் ஒரு காரணம். அடுத்து இவரது ராசிக்கு ஏழரைச்சனி நடப்பில் இருந்த 2006-ம் வருடமும் இவரால் சாதிக்க இயலாமல் போனது. ஏழரைச்சனி ஜென்மத்தில் இருந்து விலகும் தருவாயில் 2011-ம் ஆண்டு மீண்டும் அரசியாகி தன் அந்திம காலம் வரை ஆட்சியில் இருந்தார்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய “பாதகாதிபதி பற்றிய ரகசியங்கள்” கட்டுரையில் பாதகாதிபதி தசையில் அஷ்டமாதிபதி புக்தியில் மரணம் நிகழும் என்பதை வெகு தெளிவாக, துல்லியமாகச் சொல்லியிருக்கிறேன். ஜோதிடத்தில் இது ஒன்றும் ரகசியமில்லை. அனுபவமுள்ள அனைத்து ஜோதிடர்களும் கணிக்கக் கூடியதுதான்.

பாதகாதிபதி கொடுத்துக் கெடுப்பார் என்பதும் ஒரு சூட்சுமம். அதன்படி இந்த மகத்தின் ராணிக்கு இறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் உலகமே வியக்கும் வண்ணம் தனித்து நின்று மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தார். அதற்கு முன்பு நடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் இவர் அடைந்த வெற்றியினை அகில இந்தியாவும் மூக்கின் மேல் விரலை வைத்துப் பார்த்தது.

பாதகாதிபதியாக ஆதிபத்தியத்தைக் கெடுத்தாலும் தனது காரகத்தைக் கொடுத்தாக வேண்டும் என்பதன்படி குருபகவான் எவ்வித பங்கமும் இன்றி பூரண சுபத்துவத்துடன் தனது ஒளி பொருந்திய பார்வையை, லக்னத்தின் மேலும் ராசியின் மேலும் பதித்ததால் இந்த தேவதையே ஒளி பொருந்தியவராக, தன்னைச் சுற்றிய ஒரு முழு தேஜஸுடன்தான் இருந்தார்.

இந்த அமைப்பால்தான் இவரைச் சுற்றிலும் ஒரு மகத்தான ஒளி வட்டம் இருந்தது. எத்தகைய ஒரு செல்வாக்கானவராக இருந்தாலும் இவர் முன்னே நிற்கும் போது அவர்கள் வலுவிழந்தார்கள். இவரைக் குனிந்து பணிந்தார்கள். எதிரிகளும் இவரை நேரில் சந்திக்கத் தயங்கினார்கள். இது பங்கமற்ற குரு தரும் ஹம்ச யோகத்தின் பலன்.

பாதகாதிபதியின் இன்னொரு பலனாக மரணத்திற்கு நிகரான ஒரு வலியாக இதே அஷ்டமாதிபதி புக்தியில் 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவர் அரசியாக இருந்த போதே சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது கோட்சார அமைப்பில் இவரது ராசிநாதனான சூரியனும், லக்னாதிபதியான புதனும் ராகுவுடன் மிக நெருங்கி கிரகணமாகி இருந்தார்கள்.

குரு தனது காரகத்துவத்தின்படி இவரை வாழ்க்கையின் உச்சத்திற்கு கொண்டு சென்றாலும் ஆதிபத்தியத்தின்படி அமர்ந்த வீட்டிற்கு பாதகத்தை செய்ய வேண்டும் என்பதால் ஏழாம் வீட்டின் காரகத்துவங்களை முழுக்கக் கெடுத்து இவருக்கு மண வாழ்வு என்பதே இல்லை என்ற நிலைக்கு ஆளாக்கி விட்டார்.

பாதகாதிபதி கொடுத்துக் கெடுப்பார் என்ற விதிப்படி குரு தசை ஆரம்பித்ததில் இருந்தே இவர் வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்து வந்தார். ஜோதிடப்படி கடந்த சட்டமன்றத் தேர்தலில் இவர் ஜெயித்தால் இவருக்கு ஆயுள் பங்கம், தோற்றால் ஆயுள் நீட்டிப்பு என்ற நிலையே இருந்து வந்தது. குரு தசையில் சனி புக்தி சஷ்டாஷ்டகமாக அமைந்ததும் இதைத் தெளிவாக்கியது.

எனக்கு நெருக்கமானவர்கள் தேர்தல் நேரத்தில் இவரைப் பற்றி என்னிடம் கேட்ட போது நானும் இந்த பலனையே கூறினேன். இன்னும் தெளிவாக இவரே வெற்றி பெறுவார். ஆனால் ஜெயித்தவுடன் மருத்துவமனையில் இருப்பார் என்று சொல்லியிருந்தேன்.

பரம்பொருளின் சில கணக்கீடுகள் சாதாரண மனிதர்களுக்குத் தெரிவதில்லை. தெரியவும் அனுமதிக்கப் பட மாட்டாது.

தேவதைகளுக்கு என்றும் மரணமில்லை.


(டிசம்பர் 23 – 2016 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

5 Comments on மகத்தில் உதித்த மகத்துவ அரசி…!

  1. அருமை…
    பரம்பொருளின் அருளை பெற்றவர்கள் நீங்கள்
    வணங்குகிறேன் ஐயா…

  2. Excellent sir. Jaya madam is my role model. This article is not just a astrology article alone, something very emotionally described about her… Thanks for this

Leave a Reply