ஜோதிடம் எனும் தேவரகசியம்..! C – 001 – Jothidam Enum Deva Ragasiyam

ஜோதிடம் என்பது ஒரு தேவ ரகசியம்தான் என்பதில் ஜோதிடத்தை அறிந்த எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

“நடப்பவை அனைத்தும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டவையே” எனக் கூறும் நமது வேத ஜோதிடம் இந்த நாளில், இந்த மணி நிமிடத்தில், இந்த இடத்தில் நீங்கள் பூமியினுள் நுழைய அனுமதிக்கப்படும் போதே, எப்போது இங்கிருந்து வெளியேறப் போகிறீர்களோ அதுவரை உங்களுக்கு நடக்கும் அனைத்துச் சம்பவங்களும் முன்பே உறுதி செய்யப்பட்டவைதான் எனத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

ஆதித்ய குருஜி எனும் பெயர் கொண்ட இந்த எளியவன் எழுதியதை இப்போது நீங்கள் படித்துக் கொண்டிருப்பது கூட ஜோதிடத்தின்படி முன்பே நிச்சயிக்கப் பட்டதுதான்…!

மனித குல வரலாற்றிலேயே மிகப் பெரிய விஞ்ஞானி என போற்றப்படும் ஐசக் நியூட்டன் ஒரு முறை சொன்னார்…..

“இதோ ஒரு கூழாங்கல்… அதோ ஒரு கூழாங்கல்… என கடற்கரையில் பொறுக்கி விளையாடும் சிறுவன் நான். என் முன்னால் உண்மை எனும் மகா சமுத்திரம் பரந்து விரிந்து கிடக்கிறது” என்று.
ஜோதிடர்களும் அப்படித்தான்….!

ஒரு வகுப்பில் படிக்கும் அனைத்து மாணவர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுப்பதில்லை. அதேநேரத்தில் நூறு மார்க் எடுப்பவனுக்கும் பத்து மார்க் எடுத்து தேர்வில் தவறியவனுக்கும் மாணவன் என்றுதான் பெயர்.

அதுபோலத்தான் ஜோதிடத் துறையிலும் எல்லா ஜோதிடர்களும் முழுமை பெற்றவர்கள் அல்ல. ஒரு ஜாதகத்தை தவறாகப் பலன் சொல்பவருக்கும், சரியாகச் சொல்பவருக்கும் ஜோதிடர் என்றுதான் பெயர்.

இது ஜோதிடரின் குற்றம். ஜோதிடக் கலையின் தவறு அல்ல.

கணிப்புத் திறமையே ஜோதிடர்களின் பலம். அதுவே ஒருவரைத் தலைசிறந்த ஜோதிடர் ஆக்குகிறது. இன்னொருவரைத் தடுமாற வைக்கிறது.

பனிரெண்டு ராசிக் கட்டங்களில் அடங்கிய ஒன்பது கிரகங்கள், இருபத்தேழு நட்சத்திரங்களின் இருப்பைச் சரியாகக் கணிப்பதில்தான் ஜோதிடத்தின் அடிநாதமே அடங்கி உள்ளது.

ஜோதிடம் எனும் எதிர்காலத்தை அறிவிக்கும் இந்த மாபெரும் இயல் உங்கள் முன் நடக்கப் போவதை, அதாவது எதிர்கால சம்பவத்தை ஒரு இடத்தில் நிலையாக வைத்து விட்டு, அந்த இடத்தை அடைவதற்கு நான்கு அல்லது ஐந்து வழிகளையும் அமைத்து உரிய வழியை உங்கள் கணிப்புக்கே விட்டு விடும்.

அந்த வழியைச் சரியாகக் கண்டு பிடிப்பதே ஜோதிடரின் முன்னுள்ள சவால்.

எல்லா ஜாதகங்களிலும் எதிர்காலம் என்ற உண்மை சர்வ நிச்சயமாக ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது. பரம்பொருள் அதை மிகவும் நேர்மையாக மறைத்து வைத்து ஜோதிடம் தெரிந்தவரிடம் “முடிந்தால் கண்டு பிடித்துக் கொள்.” என்று விட்டு விடுகிறது.

“என்னைக் கண்டுபிடி” என்று மார்தட்டி, குறிப்பிட்ட ஜாதகத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் தேவ ரகசியத்தை ஓரளவுக்கேனும் உணர்வதில்தான் ஒரு ஜோதிடரின் ஆன்ம பலம் வெளிப்படுகிறது.

ஜோதிடத்தில் கணிப்பும் கணக்கும் இன்றியமையாதவை. ஒரு ஜோதிடருக்கு கணிப்பு தவறலாம். ஆனால் கணக்கு தவறவே கூடாது.

ஒன்பதின் அடுக்குகளாய் சூட்சுமத்தின் உள்ளே… மறுபடியும் உள்ளே… மீண்டும் உள்ளே… என முடிவில்லாமல் சென்று கொண்டிருப்பதுதான் ஜோதிடம்.

பல ஜாதகங்களில் என்ன நடக்கும் என முன்னரே சொல்ல முடியாவிட்டாலும் அந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த பின் ஏன் நடந்தது? எப்படி நடந்தது? என்பதை ஜோதிடரீதியாக ஒரு முழுமையான ஜோதிடரால் நூறு சதவிகிதம் உணர முடியும். விளக்க முடியும்.

இதுவே ஜோதிடத்தின் மகத்தான சிறப்பு.

இந்த தெய்வீக சாஸ்திரத்தின் இன்னொரு சிறப்பு என்னவெனில் ஜோதிடத்தை பொய் என்று நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தவர்கள் அனைவரும் இதன் உண்மையை உணர்ந்து, இதில் ஐக்கியமாகி ஜோதிடம் என்பது தேவ ரகசியம்தான், இது எதிர்காலத்தைக் காட்டும் ஒரு மாபெரும் இயல்தான் என்பதை பிறருக்கும் எடுத்துச் சொன்னதுதான்.

மறைந்த முதுபெரும் எழுத்தாளர் பன்முகமேதை திரு. தமிழ்வாணன் அவர்கள் ஜோதிடம் பற்றிய தனது முதல் நூலான “ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள்” எனும் புத்தகத்தின் முன்னுரையில் இக்கலையில் நம்பிக்கையே இல்லாத தான், எப்படி இந்த நூலை எழுத நேர்ந்தது என்பதை மிக அழகாக விளக்கி இருப்பார்.

புனிதத்தோடும், கணிதத்தோடும் தொடர்புடைய இந்த மாபெரும் கலையில் மூட நம்பிக்கைகளுக்கு அறவே இடம் இல்லை.

நமது கிரந்தங்களில் எந்த ஒரு இடத்திலும், ஜோதிடத்தை நமக்கு அருளிய ஞானிகள் மூட நம்பிக்கையான வார்த்தைகளையோ, நம்பவே முடியாத கண்மூடித்தனமான செயல்களையோ சொல்லவே இல்லை.

வானில் ஒரு ஒழுங்கான நியதிக்கு கட்டுப்பட்டு சூரியனைச் சுற்றி வரும் கிரகங்களையும், அதன் தலைவனான சூரியனையும், மனித ரூபமான தெய்வங்களாக ஞானிகள் உருவகப்படுத்தியதற்கு காரணம் கூட, அடுத்த தலைமுறைக்கு, அதாவது இளம் வயது சிறுவர்களான சீடர்களுக்கு சொல்லிக் கொடுப்பது எளிதாக இருக்கட்டும் என்ற காரணத்தினால்தான்.

அறிய முடியாத மற்றும் எளிதில் அணுக முடியாத தூரத்தில் இருக்கும் ஒரு பொருளை இளம் வயது மாணவன் விளங்கிக் கொள்வதற்காக, அவன் நன்கு அறிந்த, அவனுக்கு எதிரில் இருக்கும் ஒரு மனிதனைப் போன்ற ஒரு உருவமாக கிரகங்களை உருவகப்படுத்தி, அவற்றின் செயல்களை சீடர்களுக்கு ஞானிகள் புரிய வைத்தார்கள்.

இதே காரணத்திற்காகத்தான் ஒவ்வொரு கிரகங்களும் மனித ரூபமாக்கப்பட்டு, அதற்கு மனைவியர்களும், அவற்றின் துணைக் கோள்கள் மகன்களாகவும் ஆக்கப்பட்டன.

“சனியின் உப கோளான மாந்தி (TITAN) சனியின் ஒரு துணைக்கோள், அது சனியைச் சுற்றிவரும், எப்போதும் சனியுடன்தான் இருக்கும்” என்று சுற்றி வளைத்துச் சொல்லிக் கொடுப்பதை விட “சனியின் மகன் மாந்தி” என்று ஒரே வார்த்தையில் புத்தகங்களும், பேனாக்களும் இல்லாத மாணவனிடம் ஞானிகளால் எளிதாக விளக்க முடிந்திருக்கும்.

சூரிய மண்டலத்தில் வெகு தொலைவில் இருப்பதால் சூரியனை சனி மெதுவாகச் சுற்றி வருகிறது என்பதை விளக்க “சனியை எமன் அடித்ததால், சனி நொண்டியாகி விட்டான்” என்ற ஒருவரிக் கதை புரிய வைத்து விடுமே..!

நமது கிரந்தங்களில் ஞானிகளால் கூறப்படும் ஒவ்வொரு கதைகளுக்கும், கிரகங்களின் கணவன், மனைவி, புத்திரர்கள் போன்ற உறவுமுறைகளுக்கும் பின்னால் ஒரு அற்புதமான விஞ்ஞான விளக்கம் ஒளிந்து கிடப்பதை என்னால் தெளிவாக விளக்க முடியும்.

“சந்திரனுக்கு 27 மனைவிகள். அவர்களில் ரோகிணியை அவருக்கு மிகவும் பிடிக்கும்” என்ற கதைக்குப் பின்னால் பூமியின் துணைக் கோள் சந்திரன் ஒன்று. மொத்தமுள்ள நட்சத்திரக் கூட்டங்கள் 27. அவற்றில் ரிஷப ராசியின் முழு நட்சத்திரமான ரோகிணியில் சந்திரன் இருக்கும்போது அவர் பலம் அடைவார் என்ற ஜோதிட உண்மை இருக்கிறது.

வேதங்களில் உள்ள இது போன்ற ஏராளமான கதைகளின் மறைவில் அற்புதமான வேதாந்த உண்மைகளோ அல்லது சாதாரணமாக உணர முடியாத பிரபஞ்ச ரகசியங்களோ ஒளிந்து கிடப்பதை அறிவதற்கும் ஒரு தனித்தன்மை வேண்டும் என்பதும் நமது இந்திய ஜோதிடத்தின் சிறப்புத்தான்.

அதேபோல அனைத்தும் முன்பே உறுதி செய்யப்பட்டு விட்டது என்றால், இதுதான் எனக்கு நடக்கப் போகிறது என்றால் பரிகாரங்கள் என்பது எதற்கு? அவை எப்படி எனது தலை எழுத்தை மாற்ற முடியும்? முரண்பாடாக உள்ளதே?

அடுத்து வரும் அத்தியாயங்களில் இது போன்ற நுணுக்கமான ஜோதிட விளக்கங்களைச் சற்று விரிவாகச் சொல்லுகிறேன்.

(டிசம்பர் 26 – 2014 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

9 Comments on ஜோதிடம் எனும் தேவரகசியம்..! C – 001 – Jothidam Enum Deva Ragasiyam

  1. நான் பிறந்தது தஞ்சை மாவட்டத்தில். தஞ்சைக்கு தெற்கே 13 கிமமீ தொலைவில் உள்ள காசவளநாடு புதூர்

  2. பரம்பொருள் ப்ரம்மம் தாம் அசைந்ததின் மூலம் ப்ரபஞ்சத்தை தோற்றுவித்த கணத்திருந்து தாம் ஒடுங்கிக்கொள்ளும் காலம் வரை ப்ரபஞ்சத்தின் அனைத்து செயல்களும்,தனி ஜீவனின் மனிதனின் பூமிய ப்ரபஞ்ச நடவடிக்கைகள் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டவைகளாக ஒரு நேரலை நிகழ்வாக நடந்துவருவதை….அதில் ஜோதிடம் எனும் காலக்கணக்கு துல்லியம் மாறாத ப்ரபஞ்ச உண்மையாய்! கணிதமும் புனிதமும் இணைந்த ஏன்?முழுமையான ஆன்மீகமாக தாங்களின் உணர்வும் ஞானமும் வெளிப்படுத்தும் ஜோதிடம் எனும் ‘தேவ இரகஸ்யம்’அஃதை முழுமையாக படிக்க பரம்பொருள் என்னை தூண்டியுள்ளது!தங்களுக்கு நன்றி சொல்வதென்பது!ஜோதிட ஆன்மீகத்தில் முழுமையை நோக்கி பயணிப்பதே ஆகும்…ஐயா!

  3. உண்மையிலேயே இப்பிறப்பின் நிகழ்வுகளை முன்கூட்டியறிபவன் பரம்பொருளின் துல்லியமுள்ளவன்,
    நன்றிகள் சார்..

  4. ஐயா, தாங்கள் ஜோதிடம் பார்க்க,கத்துக்கொடுக்க எவ்வளவு பணம் வாங்குகிறீர்கள்.

  5. பரம்பொருளின் அதிர்வலை மற்றும் ஒலி இவற்றை நம் எண்ணம்,உடல் மற்றும் உயிர் ஜீவன் இன் அதிர்வலை ஒன்றாய் இணைவாவதே சரியான பரிகாரமாய் இருக்குமா ஐயா (கோடான கோடி நன்றி)

Leave a Reply