குருஜியின் 2019 – சித்திரை மாத பலன்கள் -GURUJIYIN CHITHIRAI MADHA PALANGAL

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களின் உற்சாகமும், திறந்த மனதும், நேர்மையான போக்கும், எதையும் அலட்சியமாக சமாளிக்கும் உறுதியும் வெளிப்படும் மாதம் இது. ராசியில் உச்ச சூரியன் இருப்பதால் உங்களில் சிலர் பலதரப்பட்ட சிந்தனைகளுடன் இருப்பீர்கள். யோகக் கிரகங்கள் நல்லநிலையில் இருப்பதால் சிலருக்கு பொருள்  சேர்க்கை இருக்கும். எதிலும் லாபம் வரும். சித்திரை முழுவதும் சுப நிகழ்ச்சிகளும், தூர இடங்களில் இருந்து நல்ல செய்திகளும், பணவரவும் இருக்கும். சிலர் தொழில்துறையில் சாதனை படைப்பீர்கள். நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம் நினைத்தது போலவே நடக்கும்.

செவ்வாய் இரண்டில் இருப்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடியுங்கள். யாரிடமும் கோபப்பட வேண்டாம். அலுவலகத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிருங்கள். நண்பர்களே உங்களின் கோபம் பிடிக்காமல் விலகிப் போக வாய்ப்பு  இருக்கிறது. யூனிபார்ம் அணிந்து வேலை செய்யும் காவல்துறை, இராணுவம், செக்யூரிட்டி போன்றவர்களுக்கு நல்ல செய்திகள் உண்டு. தடங்கலாகி வந்த விஷயங்கள் எண்ணம் போல் இப்போது நிறைவேறும். இளைய சகோதர சகோதரிகள் உதவுவார்கள். தாயார் வழியில் நன்மைகளும், சிலருக்கு வாகன மாற்றங்களும் உண்டு. வருமானம் குறையாது. சித்திரை யோக மாதம்தான்.

ரிஷபம்:

யோகாதிபதி சனி அஷ்டமச் சனியாக எட்டில் இருக்கிறார். ஜோதிட விதிப்படி அஷ்டமச் சனி முடிந்த பிறகு வாழ்க்கை நல்லபடியாக செட்டில் ஆகும் என்பதால் இன்னும் ஒரு வருடத்திற்கு ரிஷபத்தினர் எதிலும் பொறுமை காத்துத்தான் ஆக வேண்டும். எதிர்கால முன்னேற்றத்திற்கு வழி அமைக்கும் மாதம் இது. வியாபாரிகளுக்கும், சுயதொழில் செய்பவர்களுக்கும் வருமானம் வரும், ஆனால் சேமிக்கத்தான் முடியாது. மாத பிற்பகுதி அதிக நன்மைகளைச் செய்யும். குறிப்பாக  திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண உறுதி உண்டு. வேலை விஷயமாக வெளிநாடு, வெளிமாநில புனித யாத்திரை செல்வீர்கள்.

வேலை இடங்களில் வாக்குவாதங்களை தவிருங்கள். அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்களுக்கு மாத ஆரம்பத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். மேலிடத்தில் நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் அபாயம் இருப்பதால் எதிலும் ரகசியம் காப்பது நல்லது. ராசிநாதன் சுக்கிரன் உச்ச  வலுப் பெறுவதால் உங்களை சிக்கலுக்கு உள்ளாக்கி  வந்த விஷயங்களும் இந்த மாதம் முடிவுக்கு வந்து கொஞ்சம் நிம்மதிக்கு வழிவகுக்கும். சுக்கிர வலுவால் எதையும் சமாளிப்பீர்கள். மனதில் தைரியம் வரும். இளையோர்களுக்கு சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். வெளிநாடு செல்ல இருந்து வந்த தடை நீங்கும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு சித்திரை மாதம் மாற்றங்கள் இருக்கும். சிலருக்கு டிரான்ஸ்பர் ஆகுதல், வெளிமாநிலம், வெளிநாடு போன்றவைகளில் வேலை கிடைத்தல், வீடு மாற்றுதல் போன்ற பலன்கள் நடக்கும். ஏழில் பாபக் கிரகங்கள் இருப்பதால் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். சிலருக்கு  குடும்பத்தில் சண்டை சச்சரவு என்ற நிலைக்கு போனாலும் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து போவதன் மூலம் குடும்பத்தில் மிகப் பெரிய கஷ்டங்களோ, பிரிவினைகளோ வரப்போவது இல்லை. மாதம் முழுவதும் சூரியன் லாப வீட்டில் உச்ச நிலையில் இருப்பதால் எதிலும் தைரியமாக இருப்பீர்கள்.

ஆறாம் அதிபதி அந்த வீட்டை பார்ப்பதால் சிறுசிறு உடல்நலப் பிரச்னைகள் வரலாம். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டி இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழல்கள் உருவாகலாம். குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். சிலருக்கு கைப்பொருள் திருட்டுப் போகுதல், நம்மைப் பிடிக்காதவரின் கை ஓங்குதல் போன்ற பலன்கள் நடக்க்கும். பிள்ளைகள் விஷயத்தில் சங்கடங்கள் வரும் என்பதால் அவர்களை கண்காணிப்பது அவசியம். முக்கியமான துறைகளில், இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள், பதவிஉயர்வு போன்றவைகள் இருக்கும். பெண் குழந்தைகளை சற்று அக்கறையுடன் பார்த்து கொள்வது நல்லது.

கடகம்:

ராசிக்கு ஆறு, பனிரெண்டில் அன்னிய மத, இன, மொழியை குறிக்கும் ராகு,கேதுக்கள் இருப்பதால் கடக ராசிக்காரர்கள் சம்பந்தம் இல்லாத இடத்தில் இருந்து எதிர்பாராத அதிர்ஷ்ட நிகழ்வுகளையும், பண வரவுகளையும் சந்திக்கும் மாதம் இது. செவ்வாய் வலுப்பெறுவதால் இதுவரை நல்ல வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு பொருத்தமான வேலை அமையும். சிலருக்கு எதிர்பாராத வகையில் வருமானங்கள் இருக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். சுக்கிரன் ஒன்பதில் உச்சமாக இருப்பதால் தாய்வழி உறவில் நன்மைகள் இருக்கும். வெளிநாட்டு விசா எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு கிடைக்கும்.

ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் நன்மை பெறுவார்கள். தொழிலில் முட்டுக்கட்டைகள் விலகும். வேலையில் நிம்மதி கிடைக்கும். மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில் லாபங்களும் அனுசரணையான போக்கும் இருக்கும். சிலருக்கு பெண்கள் விஷயத்தில் கருத்து வேறுபாடுகளும், சச்சரவுகளும் வீண் விரயங்களும் உள்ள மாதம் இது. அவரவரின் ஜாதகப்படி மனைவி, தாய், சகோதரி, மகள், காதலி, தோழி  போன்ற பெண்உறவுகளில் சில மனக்கஷ்டங்கள் இருக்கும். அலுவலகங்களில் யாரையும் நம்ப வேண்டாம். எதைப் பற்றி பேசும் பொழுதும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள். குறுக்குவழி சிந்தனைகள்  வேண்டாம்.

சிம்மம்:

சித்திரை முழுவதும் ராசிநாதன் சூரியன் உச்சவலுவில் அமர்ந்து அவருடன் சுப கிரகமான சுக்கிரன் சேர்ந்திருந்திருப்பதால் சிம்மத்தினருக்கு பெண்களால் நன்மைகளும், பெண்களுக்கான சுப நிகழ்ச்சிகளும் நடந்து மகிழ்ச்சியும் சந்தோஷமும் உள்ள மாதமாக இருக்கும். உங்களில் சிலருக்கு தொழில் இடங்களில் சிறுசிறு பிரச்னைகள் வந்தாலும் உச்சம் பெற்ற சூரியனால் சிக்கல்கள் அனைத்தும்  பனிபோல உருகி ஓடி விடும். மாத ஆரம்பத்தில் ராசிக்கும், ராசினாதனுக்கும் குருபார்வை இருப்பதால் எதையும் சமாளிக்க முடியும். தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் நன்றாக இருக்கும்.

எதிலும் லாபம் வரும். வெற்றி கிடைக்கும். நீண்டநாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம் விரும்பியபடி நடக்கும். சமீபத்தில் தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தொழில் முன்னேற்றமாக நடக்கும். கடன் பிரச்னைகள் தலை தூக்காது. புதிய கடன்கள் வாங்கும்படி நேரிட்டாலும் பழைய கடன்களை அடைத்துவிட்டு நிம்மதியாக இருக்க முடியும். இதுவரை உங்களை விரோதியாக நினைத்தவர்கள் மனம் மாறி நட்பு பாராட்டுவார்கள். உங்களின் கடந்தகால தவறுகள் அனைத்தும் இப்போது உங்களாலேயே திருத்தப்பட்டு வாழ்க்கை சீரமைக்கப்படும்.

கன்னி:

சித்திரை மாதம் கன்னி ராசிக்கு மேன்மையான மாதம்தான். மாத ஆரம்பத்தில் ராசிநாதன் புதன் சுக்கிரனுடன் இருப்பது யோக அமைப்பு என்பதால் இது உங்களுக்கு நல்ல மாதம். தடங்கலாகி வந்த சில விஷயங்கள் இப்போது நிறைவேறும். சகோதர சகோதரிகள் உதவுவார்கள். வீட்டில் சுபகாரியம் உண்டு. தாயார் வழியில் நன்மைகளும், சிலருக்கு வாகன மாற்றங்களும் உண்டு. பணவரவிற்குத் தடையில்லை. இஷ்டமில்லாத வேலையில் இருந்தவர்களுக்கு மாற்றங்கள் உருவாகி நல்லவேலை கிடைக்கும். வீடு கட்ட வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு கனவு நனவாகும்.

உங்களில் சிலர் தூரப் பிரயாணங்களால் உற்சாகமாக இருப்பீர்கள். குழந்தைகளின் மேல் அக்கறை வையுங்கள். அவர்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருக்கிறதா என்பதை கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். தடைப்பட்டுக் கொண்டிருந்த பதவிஉயர்வு, சம்பளஉயர்வு இனிமேல் உண்டு. சுயதொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் நல்ல வருமானம் இருக்கும். சிலருக்கு டிரான்ஸ்பர் ஆகுதல், வெளிமாநிலம், வெளிநாடு போன்றவைகளில் வேலை கிடைத்தல், வீடு மாற்றுதல் போன்ற பலன்கள் இப்போது நடக்கும். பொருளாதாரம் நன்றாகவே இருக்கும். திடீர் பணவரவு உண்டு. உயர்கல்வி படிக்க இதுவரை இருந்து வந்த தடை நீங்கும்.

துலாம்:

சனி, கேது மூன்றில் குருவுடன் இருப்பதால் இருவருமே பலம் பெற்ற நிலையை பெறுகிறார்கள். இந்த அமைப்பால் சித்திரை மாதம் உங்களுக்கு பண வரவுகளும், நன்மைகளும் கிடைக்கும். செவ்வாய் எட்டில் இருப்பதால் மாத பிற்பகுதியில் மனைவி, நண்பர்கள், பங்குதாரர்கள் போன்றவர்களிடம் கருத்து வேறுபாடுகளும், மனஸ்தாபமும் உண்டு. வெளிநாடு, வெளிமாநிலம் சம்மந்தப்பட்ட விஷயங்கள் யோகம் தரும். தூர இடங்களில் இருந்து நல்ல தகவல்கள் வரும். ராசிநாதன் சுக்கிரன் உச்சமாக இருப்பதால் தொழில்ரீதியான நன்மைகளும், பணவரவும் இருக்கும். சொந்தவீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டுவதற்கான ஆரம்பம் உண்டு.

சிலருக்கு தாயார் வழியில் நல்லநிகழ்ச்சிகளும் அம்மாவின் அன்பும், அவரிடம் கேட்பது கிடைப்பதும் நடக்கும். தடங்கலாகி வந்த சகோதர, சகோதரிகளின் திருமணம் இப்பொழுது கூடி வரும். வேலை, தொழில், வியாபாரம் போன்ற விஷயங்களில் சிக்கல்கள் எதுவும் இருக்காது.  குறிப்பிட்ட சிலருக்கு மறைமுகமான வழியில் வெளியில் சொல்ல முடியாத வகையில்  தனவரவுகளும் வருமானமும் இருக்கும். ரியல்எஸ்டேட், சிகப்புநிற பொருட்கள் சம்மந்தப்பட்டவர்கள், பில்டர்கள், பெருவணிகர்கள் போன்றோருக்கு நல்ல தொகை கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

விருச்சிகம்:

ராசிநாதன் செவ்வாய் ராசியைப் பார்ப்பதால் எல்லாப் பிரச்னைகளையும் விருச்சிகத்தினர் சுலபமாக எதிர்கொள்ளும் மாதம் இது. குறிப்பாக கோர்ட், வழக்கு போன்றவற்றில் பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் அவை நீங்கப் பெற்று நிம்மதி அடைவீர்கள். யோகாதிபதியான சூரியனும் உச்சநிலையில் இருப்பது உங்களைப் பாதுகாக்கும் அமைப்பு என்பதால் இந்தமாதம் உங்களுக்கு மன தைரியத்தைத் தரும் நிகழ்வுகள் மட்டுமே நடக்கும். சினிமாவில்தான் கதாநாயகன் ஒரே பாட்டில் கோடீஸ்வரனாகி விடுவார். நிஜத்தில் அப்படி முடியாது. நிதானமாகத்தான் எதுவும் நடக்கும். விருச்சிகம் இனிமேல் சாதிக்கும்.

சிக்கலுக்கு உள்ளாக்கி வந்த அனைத்து விஷயங்களும் முடிவுக்கு வரும். சூரியனுக்கு குரு பார்வை இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். மனதில் தைரியம் வரும். விருச்சிக ராசிக்காரர்கள் எதற்காகவும் இனி கலங்கத் தேவையில்லை. இனி உங்களுக்கு நல்ல காலம்தான். செவ்வாய் சுபர் வீட்டில் இருப்பதால் பின்னடைவுகள்  இல்லாத மாதம் இது. ராகு எட்டில் இருந்தாலும் சுப நிலை பெறுவதால் லாபங்களும், பண வரவுகளும் அந்நிய, இன, மத, மொழிக்காரர்களால் நன்மைகளும் இருக்கும். இதுவரை பயமுறுத்தி கொண்டிருந்த விஷயங்கள் நல்லவிதமாக மாறும். விருச்சிகத்திற்கு கெடுபலன்கள் எதுவும் இனி இல்லை.

தனுசு:

தனுசு ராசிக்கு ஏழில் ராகு, ராசியில் சனி, கேது என்ற கிரக நிலை இருப்பது  சாதகமற்ற ஒரு அமைப்புத்தான் என்றாலும் இவைகளெல்லாம் இன்னும் கொஞ்ச நாள்களுக்குத்தான். சாதகமற்ற கிரக நிலைகளால் உங்களில் சிலருக்கு எதிலும் ஒரு மந்தநிலை இருக்கும். செயல்திறன் குறைவுபடும். மனக் கலக்கங்கள் வரும். சிக்கனமாக இருக்க வேண்டிய மாதமிது. கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது. ஏழில் இருக்கும் ராகு பணவரவுகளையும், வருமானங்களையும் கட்டுப்படுத்துவார் அல்லது தடுப்பார் என்பதால் அனாவசிய செலவுகள் செய்யும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள்.

தனுசு ராசிப் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் வரும் குழப்பங்களுக்கு நீங்கள்தான் காரணம் என்று பழி சுமத்தப்படுவீர்கள். சிலருக்கு நண்பர்களே எதிரியாவார்கள். பழகியவர்களே உங்களை புரிந்து கொள்ள மாட்டார்கள். காதல் செய்யாதீர்கள். திருமணத்திற்கு முன் இழக்கக் கூடாததை இழந்து ஏமாற்றப்படுவீர்கள். மாத பிற்பகுதியில் சுற்றியுள்ளவர்கள் உங்களை வெறுப்பேற்றும்படி நடந்து கொள்வார்கள். காரணமின்றி கோபம் வரும். கோபத்தைக்  கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. புதிய முயற்சிகள், முதலீடுகள் வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

மகரம்:

தொழில் ஸ்தானம் வலுப்பெறுவதால் மகரத்திற்கு இந்தமாதம் பணிபுரியும் இடங்களில் நல்ல சம்பவங்களும், பாராட்டுக்களும் வருமானம் உள்ள நிகழ்ச்சிகளும் இருக்கும். இதுவரை உங்களை எதிரியாக நினைத்தவர்கள் உண்மைநிலை புரிந்து இப்பொழுது நண்பராக மாறுவார்கள். பணவரவு நன்றாகவே இருக்கும். அலுவலகங்களில் உங்களுடைய யோசனைகள் ஏற்கப்படும். மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். பொருளாதார சிக்கல்கள் எதுவும் வரப்போவது இல்லை. இளையோர்களுக்கு சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். வேலை, தொழில், அமைப்புகளில் விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் இருக்கும்.

பழைய வாகனத்தை மாற்றி நல்ல வாகனம் வாங்குவீர்கள். தாயார் வழியில் நன்மைகளும், ஆதரவான விஷயங்களும் நடக்கும். முக்கியமான துறைகளில், அதிகார அமைப்புகளில் இருப்பவர்களுக்கு மாற்றங்கள் இருக்கும். சனியும், கேதுவும் இணைந்திருப்பது தனலாபத்தையும், மேன்மையான பாக்யங்களையும் அளிக்கும். லாபத்தில் இருக்கும் குருவினால் இதுவரை நடைபெறாமல் முயற்சி அளவிலேயே இருந்து வந்த காரியங்கள் நிறைவேறும். பெண் குழந்தைகளை அக்கறையுடன் பார்த்து கொள்வது நல்லது. கடன் தொல்லைகளோ, மறைமுக எதிர்ப்புகளோ வராது. சிலருக்கு வேலைப்பளு இருக்கும்.

கும்பம்:

கேது, சனி இணைந்துள்ள மாதம் இது. குருவும் சில நாட்களுக்கு அவர்களுடன் இருக்கிறார். சித்திரை மாதம் கும்பத்திற்கு சில தடைகள் தாமதங்களைக் கொடுத்தாலும் சுக்கிரன் உச்சமாக இருப்பதால் எல்லாவற்றையும் நீங்கள் சமாளிக்கும் மாதமாக இருக்கும். வேலை, தொழில், வியாபார அமைப்புகளில் நன்மைகள் உண்டு. சிலருக்கு மனைவியால் தேவைகள் நிறைவேறுதல் இருக்கும். சஸ்பெண்டு ஆனவர்கள் வேலையில் சேருவீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பாக்கெட்டில் பணம் வைக்க முடியும். அது காலியாகாமல் பாக்கெட்டிலேயே இருக்கும். பொருளாதாரம் மேன்மை பெறும்.

ஒரு சுபக்கிரகம் எட்டாமிடத்தை பார்த்து வலுப்படுத்தினால் அந்த பாவகத்தின் பலன்கள் நடக்கும் என்பதால் சுக்கிரனின்  எட்டாமிட பார்வையால் உங்களைக் குழப்பத்தில் ஆழ்த்தக்கூடிய விஷயங்கள் இந்தமாதம் நடக்கும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. அதேநேரத்தில் எட்டாமிடம் புதையல் லாட்டரி போன்ற திடீர் பணலாபத்தைக் குறிக்கும் இடம் என்பதால் இரண்டில் இருக்கும் சுக்கிரனால் பணவரவு ஒன்று உங்களுக்கு இந்த மாதம் உண்டு..  வெளிநாட்டு விசா எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் நன்மை பெறுவார்கள்.

மீனம்:

ராசியைக் குரு பார்த்து, ராசியில் சுக்கிரன் வலுப்பெறுவதால்  வாழ்க்கைத்துணை மற்றும் பங்குதாரர்கள் நண்பர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும் மாதமாக சித்திரை இருக்கும். சிலருக்கு கணவர் மூலம் சந்தோஷமான விஷயங்களும், இன்னும் சிலருக்கு மனைவியினால் ஆதாயங்களும் உள்ள மாதம் இது. “எடுத்த காரியம் யாவிலும் வெற்றி” என்ற வார்த்தைகள் இப்பொழுது உங்களுக்கு பொருந்தும். முயற்சி செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். புத்துணர்ச்சி உங்களைத் தேடி வரும் மாதமிது. அதிக முயற்சி இல்லாமலே அதிர்ஷ்டத்தால் எல்லா வேலைகளையும் சுலபமாக முடிப்பீர்கள். சிலர் எதையும் சாதிப்பீர்கள். 

ஆன்மிகத்துறையில் இருப்பவர்கள், கோவிலுக்கு அருகில் வசிப்பவர்கள், புனிதத் தலங்களில் இருப்பவர்கள் லாபங்களை அடைவீர்கள். கடும் முயற்சி செய்தும் நடக்காத விஷயங்கள் இனி வெற்றி பெறும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். உங்களைப் பிடிக்காதவர்களும் தேடிவந்து நட்பு பாராட்டுவர். அதிர்ஷ்டம் இல்லாதவராக கருதப்பட்டவர்கள் இனிமேல் அதிர்ஷ்டசாலியாக புகழப்படுவீர்கள். எதிர்கால நல்வாழ்விற்கு நன்மைகளையும் செய்யும் மாதமிது. வழக்கு, எதிரிகள் தொந்தரவு அனைத்தையும் தூள்தூளாக்கும் நிலையில் குருபகவான் இருப்பது உங்களுக்கு சாதகமான நிலை. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும்.

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

Be the first to comment

Leave a Reply