adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
உச்சம், நீசம், ஆட்சி நிலை சூட்சுமங்கள்..! D-045

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

சென்ற வார கட்டுரையில் மாரக, பாதக, அஷ்டமாதிபதி கிரகங்கள் தங்களுக்குள்  தொடர்பு கொண்டு, ஒருவரின் கணவனின் ஆயுளையும், ஜாதகரின் ஆயுளையும் எவ்வாறு இழக்க வைக்கின்றன என்பதற்கு உதாரணமாக இரண்டு பெண்களின் ஜாதகத்தை காட்டியிருந்தேன். இது பற்றிய இன்னும் சில விளக்கங்களைப் பார்க்கலாம்.

கீழே இன்னொரு பெண்ணின் ஜாதகத்தை கொடுத்திருக்கிறேன். இவர் 18-8-1982 அன்று காலை 8-20 மணிக்கு திண்டிவனத்தில் பிறந்திருக்கிறார். இவரும் தனது மாரகாதிபதி சம்பந்தம் பெற்ற இரண்டாம் வீட்டோன் தசை, பாதகாதிபதி புக்தியில் கணவரை இழந்தவர்தான். வாழ்விழக்கும் போது இவருக்கு 35 வயதுதான்.

இவரது கணவர் 11-8-2017 அன்று மரணம் அடைந்தார். கன்னி லக்னம், கடக ராசியில் பிறந்த இவருக்கு, கணவரின் மரணத்தின் போது, உபய லக்னங்களுக்கு மாரகாதிபதியான பதினொன்றுக்குடைய சந்திரனுடன் இணைந்த இரண்டாம் அதிபதியான சுக்கிர தசையில், பாதகாதிபதியான குருவின் புக்தி நடந்து கொண்டிருந்தது.

பொதுவான கருத்துப்படி எந்த ஒரு லக்னத்திற்கும் 2, 7க்குடையவர்கள் மரணம் அல்லது மரணத்திற்கு நிகரான துன்பம் தரும் கிரகங்களாகவே கருதப்படுகிறார்கள். இரண்டு, ஏழுக்குடையவர்கள்  பெறும் பாபத்துவ, சுபத்துவ அமைப்பை ஒட்டி, ஒருவரது மரணமோ அல்லது அதற்கு நிகரான கெடுதலோ நிகழ்கிறது.

இந்தப் பெண்ணின் ஜாதகத்தில் மாரகர், இரண்டிற்குடையவர், பாதகர் மூவரும் கடுமையான பாபத்துவ அமைப்பில் இருக்கிறார்கள். பாதகாதிபதி அந்தப் பாவகத்திற்கு 6, 8, 12ல் மறைந்தால் பாதகம் செய்யமாட்டார் என்பது பொது விதி. ஆனால் இந்தப் பெண்ணின் கன்னி லக்னத்திற்கு பாதகரான குரு, தன் வீட்டிற்கு எட்டில் மறைந்திருந்தாலும், அங்கே இந்த லக்னத்தின் கொடிய பாவியும், அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் இணைவைப் பெறுவதால் கெடுபலனைத் தரக்கூடிய தகுதி பெறுகிறார்.

அதேபோல செவ்வாய், குரு இருவருக்கும் வீடு கொடுத்த தசாநாதன் சுக்கிரனும், யோகராக இருந்தாலும், மறுநாள் அமாவாசை நிலையை அடையப் போகும் தொண்ணூறு சதவிகித ஒளித்திறனை இழந்த தேய்பிறை சந்திரனுடன் இணைந்து பாபத்துவம் பெற்ற நிலையில் மாரக ஸ்தானமான பதினொன்றில் இருக்கிறார்.

இன்னொரு சூட்சும நிலையாக, இந்தப் பெண்ணின் சுக்கிர தசை, குரு புக்தியில் கணவரின் மரணம் நிகழ்ந்திருக்கிறது. “ஜோதிடம் எனும் தேவரகசியம்” கட்டுரைகளில் சுக்கிர தசை, குரு புக்தியும், குரு தசை, சுக்கிர புக்தியும் கணவன், மனைவியை பிரிக்கும் என்று எழுதியிருக்கிறேன். அதே தசா,புக்தி அமைப்பில்தான் இவரது கணவரின் மரணம் நிகழ்ந்திருக்கிறது.

பொதுவாக சுக்கிர தசையில், குரு புக்தியும், குரு தசையில் சுக்கிர புக்தியும், இருவரில் யார் அந்த ஜாதருக்கு யோகர் என்பதைப் பொருத்து நல்ல பலன்களைத் தருவதில்லை. குரு, சுக்கிரன் இருவருமே மாபெரும் இயற்கைச் சுபர்கள் என்றாலும், ஒரு ஜாதகத்திற்கு இருவரில் ஒருவர் மட்டுமே யோகராக அமைவார்கள். இருவரில் ஒருவர் அதிர்ஷ்டம் தரும் நிலையில் இருக்கும் போது மற்றொருவர் கடுமையான கெடுபலன்களைத் தரக்கூடிய அமைப்பில் இருப்பார்.

ஒருவருக்கு சுக்கிர திசையில் குருபுக்தி கெடுதல் செய்யுமா அல்லது குரு தசையில் சுக்கிர புக்தி கெடுதல் செய்யுமா என்பது அவர்களது பிறப்பு லக்னத்தைப் பொருத்தது.

அதேநேரத்தில் பெரும்பாலான நிலைகளில், ஒருவருக்குச் சுக்கிர புக்தி நடக்கும் போதுதான் திருமணம் நடக்கும். திருமண பருவத்தில் ஒருவருக்கு யோகரான குருவின் தசை நடக்கும் போது, அதனுள் அடங்கிய சுக்கிர புக்தி கணவனையோ மனைவியையோ கொண்டு வந்து சேர்க்கும்.

சுக்கிர தசையில் குரு புக்தி, அல்லது குரு தசையில் சுக்கிர புக்தி நடக்கும் எல்லா கணவன், மனைவியும் பிரிந்து விடுவதில்லையே ஏன், என்ற கேள்விக்கு இங்கே குருவும், சுக்கிரனும் இருக்கின்ற சுபத்துவ, பாபத்துவ அமைப்புகளே பதில் சொல்லும். ஒருவருக்கு குருவும், சுக்கிரனும் பாபத்துவ அமைப்பில் இருக்கும் நிலையில், அவரது லக்னத்தைப் பொருத்து, இருவரில் ஒருவர் கடுமையான பாதகத்தைச் செய்வார்கள்.

இங்கே இரண்டாம் வீட்டோன் தசையில், ஏழாமதிபதி புத்தியில் குடும்ப அமைப்பின் தலைவனான கணவனை இழந்த பெண்மணிக்கு, சுக்கிரனும் குருவும் கடுமையான பாபத்துவ நிலையில் இருக்கிறார்கள். கணவனைக் குறிக்கும் ஏழாம் வீட்டோனான குருவுக்கு செவ்வாய் நண்பர்தான் என்றாலும் கன்னி லக்னத்திற்கு, செவ்வாய் அஷ்டமாதிபதி ஆவதால், அவரது இணைவு குருவை அதிகமான பாபத்துவ அமைப்பில் தள்ளும்.

அதேபோல இன்னொரு இயற்கைச் சுபரும், புக்திநாதனுமான குடும்பத்தைக் குறிக்கும் இரண்டாமதிபதி சுக்கிரனும், இங்கே முழுக்க பாபியான, அமாவாசைக்கு அருகில் உள்ள சந்திரனுடன் இணைந்து பாபத்துவம் அடைந்திருக்கிறார்.   ஒரு சுப கிரகம் பாபருடன் இணைகையில், பாபருடைய ஒளித்திறனைப் பொருத்து கெடுபலன்களைச் செய்யும்.

சுபத்துவ, பாபத்துவ, சூட்சுமவலு நிலைகளை சரியாகக் கணிப்பதற்கு, ஒரு கிரகம் எத்தனை அளவுக்கு சுப, பாப ஒளியை நெருங்கியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

ஒரு சுப கிரகம் பாபரோடு எத்தனை டிகிரி நெருக்கமாக இணைகிறது மற்றும் சேர்ந்திருக்கும் அல்லது தொடர்பு கொள்ளும் பாபரின் ஸ்தான பலத்தின் நிலை என்ன என்பதைப் பொருத்து, அந்த சுப கிரகம் தனது சுபத்தன்மையை இழக்கும். அதாவது பாபக் கிரகம் ஆட்சி, உச்சம் போன்ற வலிமையான ஸ்தானபல நிலையில் இருக்கும் போது அதனுடன் நெருங்கி இணையும் சுப கிரகம் கடுமையான பாபத்துவம் அடையும்.

இதையே திருப்பிப் பார்க்கும் போது ஸ்தான பலமான ஆட்சி, உச்சம் போன்ற வலிமையான அமைப்பில் இருக்கும் சுபருடன் நெருங்கி இணையும், அல்லது தொடர்பு கொள்ளும் பாபக் கிரகம் சுபத்துவம் பெறும். அந்த நிலையில் அந்த பாபக் கிரகம் பகை, நீசம் போன்ற ஸ்தான பலத்தை இழந்திருந்தாலும் சுபத்துவ அமைப்பால் நன்மைகளை மட்டுமே செய்யும்.

மேலே காட்டப்பட்டுள்ள ஜாதகத்தில், புக்தி நாதனான பாதகாதிபதி குரு ஐந்து டிகிரிக்குள் அஷ்டமாதிபதி செவ்வாயுடன் இணைந்திருக்கிறார். தசாநாதனான சுக்கிரன், எட்டு டிகிரிக்குள் ஒளியற்ற தேய்பிறை சந்திரனுடன் இணைந்திருக்கிறார். எட்டு டிகிரிக்குள் பாபியருடன் நெருங்கும் சுபர்கள் நற்பலன்களைச் செய்ய தகுதியற்றவர்களாக இருப்பார்கள்.

இந்த ஜாதகப்படி கடுமையான பாப்த்துவத்தைப் பெற்ற சுக்கிரனும், குருவும் தங்களது இரண்டு, ஏழாம் பாவகங்களை கெடுக்க வேண்டிய நிலைமைக்கு உள்ளாகி, இரண்டாம் வீட்டோன் தசையில், ஏழாம் அதிபதி புக்தியில் குடும்பம் எனும் அமைப்பைச் சிதைக்கும் விதமாக, இந்தப் பெண்மணியின் கணவரை சுக்கிர தசை, குரு புக்தியில் மரணமடையச் செய்து விட்டார்கள்.

வேதஜோதிடத்தில் உள்ள பெரும் சூட்சுமங்களின் உச்ச நிலையாக இப்போது நான் சொல்லும் சுபத்துவ, பாபத்துவ, சூட்சுமவலு நிலை அமைப்புகளைச் சொல்லலாம்.

பல நிலைகளில் ஏன் இந்த சம்பவம் நடந்தது எனும் புரியாத புதிர்களுக்கு, நான் சொல்லும், ஒரு கிரகத்தின் அல்லது ஒரு அமைப்பின் சுபத்துவ, பாபத்துவ. சூட்சும வலு அமைப்புகள் துல்லியமான, தெளிவான, பதில்களை நிச்சயமாகச் சொல்லும்.

சுப, பாப, சூட்சுமவலு நிலைகளைப் புரிந்து கொள்ள முடியும் ஒருவருக்கு பலன் அறிவதில் தடுமாற்றம் இருக்காது. இந்தக் கிரகம் கேந்திரத்தில்தான் இருக்கிறது, திரிகோணத்தில்தான் இருக்கிறது, ஆட்சியாக இருக்கிறது, உச்சமாக இருக்கிறது பிறகு ஏன் இந்தக் கெடுபலனைச் செய்தது அல்லது ஏன் இந்தக் கிரகம் நல்ல பலனைத் தரவில்லை எனும் குழப்பத்திற்கு, எனது சுபத்துவ, பாபத்துவ, சூட்சும வலு நிலை விளக்கங்கள் துல்லியமான குழப்பமற்ற பதிலைத் தரும்.

ஜோதிடத்தை நாம் புரிந்து கொள்ளும் விதத்தில்தான் தவறு இருக்கிறதே தவிர, ஜோதிடத்தில் ஒரு போதும் குறை இல்லவே இல்லை.

ஜோதிடம் என்பதே மனிதனை வாழ வைக்கும் மற்றும் மனித வாழ்க்கைச் சம்பவங்களை நடத்தும் சூரியன், நட்சத்திரங்கள், மற்றும் கிரகங்களின் ஒளியைப் பற்றி சொல்வதுதான்.

ஜோதிடத்தை சுப, பாப ஒளியாகப் புரிந்து கொள்ளும் ஒருவருக்கு பலன் அறிவதில் நிச்சயமாக குழப்பங்கள் வராது. அதேநேரத்தில் வேத ஜோதிடத்தில் மிக முக்கிய இன்னொரு நிலையாக இந்த ஒளி அமைப்பையும் தாண்டி கிரகங்களின் ஈர்ப்பு விசை நிலைகளும் மறைமுகமாக உணர்த்தப்படுகிறது.

ஜோதிடத்தில் ஒரு கிரகம் பூமிக்கு அருகில் இருக்கும் போது உச்சம் எனவும், தூரத்தில் இருக்கும் போது நீசம் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் நீசம்  என்பதை தூரத்தில் அந்தக் கிரகம் இருக்கும் போது அதனுடைய ஒளி நமக்குக் கிடைக்காமல், அல்லது குறைவாகக் கிடைத்து அதனால் நாம் பாதிப்படைகிறோம் என்று புரிந்து கொள்ளலாம். அதேபோல அருகில் இருக்கும் போது அந்தக் கிரகத்தின் ஒளி கூடுதலாகக் கிடைக்கிறது என்றும் பொருள் கொள்ளலாம்.

ஒளியைப் போலவே, அந்தக் கிரகம் பூமிக்கு மிக அதிகமான தூரத்தில் இருக்கும்போது, அதன் கவர்ந்திழுக்கும் ஆற்றல் என்று சொல்லப்படக் கூடிய ஈர்ப்பு விசையும் நம்மிடமிருந்து விலகியே இருக்கும்.

உச்சம், நீசம் என்று சொல்லப்படுபவை ஒரு கிரகத்தின் ஒளியும், ஈர்ப்பு விசையும் கலந்ததுதான். இதனை நாம் ஒரு கிரகம் சூரியனைச் சுற்றும் சூரியப் பாதையையும், அது சூரியனைச் சுற்றிக் கொண்டே பூமிக்கு அருகில் அல்லது தூரத்தில் இருக்கும் நிலையை வைத்தும் புரிந்து கொள்ளலாம்.

இது போன்ற நிலையில்தான் மனிதனுக்குத் தேவையான சுப ஒளியைக் கொண்ட கிரகங்களான குரு, சுக்கிரன், தனித்த புதன், வளர்பிறைச் சந்திரன் ஆகிய கிரகங்கள் தங்களின் சூரியப் பாதைக்கும், அப்போது பூமியுடன் இருக்கும் தூரத்தையும் பொருத்து சொகுசு வாழ்வை அடையும் மனிதர்கள் பிறக்கிறார்கள்.

வானில் இதுபோன்று எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும் கிரக அமைப்பில் பாபக் கிரகங்கள் எனப்படும் சனி, செவ்வாய், ராகு, கேதுக்கள் அவ்வப்போது மற்ற சுப கிரகங்களின் ஒளிவீச்சினை பார்வை எனும் பேரிலோ, சுப கிரகங்களுடன் நேர்கோட்டில் இணைவு என்ற பெயரிலோ அடையும் போது சுபத்துவ நிலை பெற்று மனிதர்களுக்கு நன்மைகளைச் செய்யும் தகுதியினைப் பெறுகிறார்கள்.

இதற்கு ஒரு பாபக் கிரகம் பூமியிலிருந்து இருக்கும் தூரம் மிகவும் அவசியமாகிறது. ஏனெனில் இந்த தூரத்திற்கும் ஈர்ப்பு விசைக்கும் சம்பந்தம் இருக்கிறது. ஒரு கிரகத்தின் ஈர்ப்பு விசையும், ஒளி நிலையும் கலந்தே அந்த கிரகத்தின் உச்ச, நீச நிலைகள் சொல்லப்படுகிறது.

அதேநேரத்தில் ஒரு கிரகத்தின் ஆட்சி நிலை என்பது அந்தக் கிரகம் சூரியனைச் சுற்றும் வான் பாதையைக் குறிக்கிறது. ஒரு கோள் சூரியனைச் சுற்றி வரும் வான் பகுதி முழுவதும் அதற்கே சொந்தம் என்பதால் அதாவது வேறு எந்தக் கிரகமும் அதனுடைய பாதையில் குறுக்கிட முடியாது என்பதால், வானில் அந்த இடம் முழுக்க அதன் ஆளுகைக்குள் இருப்பதாக சொல்லப்பட்டு, அந்த வான் பாதையில் அக் கிரகம் பூமியைப் பாதிக்கும், இரு முனைகள் அக் கிரகத்தின் ஆட்சி வீடுகளாயின. இதுவே ஜோதிடத்தில் உச்சம், நீசம், ஆட்சி வீட்டுத் தத்துவங்கள்.

இதில் ஒரு கிரகம் சூரியனைச் சுற்றும் வான் பாதையில், பூமியிலிருந்து அது  உள்ள தூரத்தை வைத்தே நட்பு, சம, பகை வீடுகள் அறியப்பட்டன. அதாவது பூமிக்கும், மற்ற கிரகங்களுக்கும், அந்த கிரகத்திற்கும் இடையே உள்ள ஈர்ப்பு நிலைகளைப் பொறுத்தே ஒரு கிரகத்தின் நட்பு, சம பகை வீடுகள் அமைந்தன.  

இன்னும் சில விளக்கங்களையும், அற்பாயுள், தீர்க்காயுள் ஜாதக அமைப்புகளையும் அடுத்த வெள்ளி பார்ப்போம்.

3 thoughts on “உச்சம், நீசம், ஆட்சி நிலை சூட்சுமங்கள்..! D-045

  1. பெருமதிப்பிற்குரிய ஜோதிடப் பேரொளி…அவர்களுக்கு.வணக்கம்…

    அற்புதம்… அற்புதம்….

    கிரகங்களின் உச்சம்.. நீசம்… ஆட்சி சுபத்துவம்.. மற்றும் சூட்சும வலு…போன்ற விஷயங்களை எவ்வளவு அழகாக.. தெளிவாக விளக்கியுள்ளீர்கள்….

    அற்புதம் ஐயா… மிக்க நன்றி…மிக்க நன்றி….

  2. குருஜி அவர்களுக்கு வணக்கம்.

    பொதுவாக ஒரு பெண்ணுக்கு எட்டாமிடம் மாங்கல்ய ஸ்தானம். அதனை சுபர் பார்த்தாலோ
    அல்லது எட்டாம் வீடு அதிபதி சுபருடன் இருந்தாலோ சுமங்கலியாக இருப்பாள் என்ற கூற்று இங்கே அடி
    பட்டு போகிறதே. தசை நாதன் மாரகாதிபதி ஆனாலும் பெரும் கோணமான 9ம் பாவத்திற்கும் அவரே அதிபதி ஆயிற்றே. அப்படி இருக்க இந்த அவல நிலைக்கு இந்த பெண்ணின் ஜாதகம் தவிர குழந்தை மற்றும் இறந்தவர் அவர் இறந்த காரணம் ஆகியவற்றை விளக்கி கூறினால் பொருத்தமாக இருக்கும்.
    நான்கு ராசிகள் திதி சூன்யம் பெற்றுள்ளது. புதனும் குருவும் திதி சூன்யம் பெற்ற கிரகங்கள் . இங்கே அதனால் குரு கெடு பலன்களை செய்தார் என்று எடுத்து கொள்ளலாமா? தயவு கூர்ந்து விளக்கவும்.

    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *