கேன்சர் வர வாய்ப்புள்ளதா?

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

எஸ். காவேரி, ஈரோடு-2

கேள்வி.

என் மகளுக்கு நவம்பர் மாதம் வேலை கிடைக்கும் என்று மாலைமலரில் கூறினீர்கள். அதேபோல வேலை கிடைத்து விட்டது. அதேமாதம் முதல் எனது வலது கண் இயற்கைக்கு மாறாக பெரியதாகி விழிகளை அசைக்க முடியவில்லை. பிரபல மருத்துவமனையில் காண்பித்தபோது, இது லட்சத்தில் ஒருவருக்கு வரக்கூடிய நோய் என்றும், நமது உடலில் உள்ள நல்ல செல், யாரோ ஒருவருக்கு தீமை செய்யும் செல்லாக மாறி, உடலில் ஏதேனும் ஒரு பகுதியை தாக்கும் என்றும், அது எனக்கு வலது கண்ணை தாக்கியுள்ளதாகவும் கூறி கதிர்வீச்சு சிகிச்சை பத்து நாட்கள் கொடுத்தார்கள். இந்தக் கண் நோய் எந்தக் கிரக பாதிப்பால் ஏற்படுகிறது? கதிர்வீச்சு சிகிச்சை கொடுத்ததால் பின்னால் கேன்சர் வர வாய்ப்பு உள்ளதா? நோய் குணமாகுமா? தொடர்ந்து பாதிக்குமா? ஆயுளுக்கு பாதிப்பு உண்டா? இதற்கு பரிகாரம் என்ன?

பதில்

(தனுசு லக்னம், கும்ப ராசி. 1ல் குரு, சனி, 2ல் சூரி, புத. 3ல் சந், சுக், கேது. 7ல் செவ், 9ல் ராகு. 19-1-1961 அதிகாலை 4.20 ஈரோடு)

தனுசு லக்னத்திற்கு சுக்கிரன் ஆறுக்குடையவர் என்பதால் அவரது தசா, புக்திகள் வரும்போது கடன், நோய், எதிரி போன்ற சிக்கல்கள் சுக்கிரனின் சுப, பாபத்துவ அளவிற்கேற்பவும், ஒருவரின் வயதுக்கேற்பவும்  ஏற்படும்.

உங்களுக்கு தனுசு லக்னமாகி, கடந்த ஆகஸ்ட் முதல் புதன் தசையில் சுக்கிர புக்தி ஆரம்பித்திருக்கிறது. சுக்கிரன் ராகு, கேதுக்களுடன் தொடர்பு கொண்டும், அஷ்டமாதிபதி சந்திரனுடன் இணைந்தும் பாபத்துவம் பெற்றிருக்கிறார். நல்ல வேளையாக இங்கே சுக்கிரன் ராகுவுடன் இணையாமல், கேதுவுடன் சேர்ந்து, சந்திரனும் வளர்பிறையாக  இருக்கிறார்.

ஒரு கிரகம் அதனுடைய பாபத்துவ மற்றும் சுபத்துவ, கூடுதல் குறைவு அளவுகளுக்கேற்ப அதன் காரகத்துவங்களை தரும். இங்கே உங்களுக்கு சுக்கிரன் ராகுவுடன் இணைந்திருந்தால், தீராத வியாதி அல்லது கண்டம் போன்றவைகளை தந்திருப்பார். கேதுவுடன் இணைந்திருப்பதால் குணப்படுத்தக்கூடிய ஆனால் தொந்தரவு தரும் வியாதிகளைத் தருவார்.

ஒரு ஜாதகத்தில் ஆறாம் அதிபதியை விட லக்னாதிபதி வலுத்திருந்தால் நோயை வெல்ல முடியும். உங்கள் லக்னாதிபதி குரு, லக்னத்தில் சனியுடன் இணைந்து செவ்வாயின் பார்வையை பெற்றிருப்பது வலுக் குறைவுதான் என்றாலும், அவர் லக்னத்திலேயே மூலத்திரிகோண மற்றும் திக்பல அமைப்பில் இருப்பதால் உங்களுக்கு இந்த நோயால் பெரிய அளவில் பாதிப்பு உறுதியாக இருக்காது.

சுக்கிர புத்தி முடியும் வரை இன்னும் இரண்டு வருடங்களுக்கு நோய்த் தொந்தரவு இருந்துதான் தீரும். கண் நோய்களுக்கு காரகனான சூரியன், கண்ணைக் குறிக்கும் இரண்டாம் பாவகத்தில் அமர்ந்து, தசாநாதன் புதனுடன் இணைந்திருப்பதால், உங்களுக்கு சுக்கிர புக்தியில் கண் நோய் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் கேன்சர் போன்ற உயிர்க்கொல்லி நோய் உங்களுக்கு வர வாய்ப்பு இல்லை. லக்னாதிபதி லக்னத்தில் அமர்ந்து, ஆயுள்காரகன் சனியை சுபத்துவப்படுத்தி, ஆயுள் ஸ்தானாதிபதி சந்திரன், சுக்கிரனுடன் இணைந்து வளர்பிறை அமைப்பில் இருப்பதால் 80 வயது தாண்டி தீர்க்காயுளுடன் இருப்பீர்கள். பரிகாரங்கள் தேவையில்லை.

1 Comment on கேன்சர் வர வாய்ப்புள்ளதா?

Leave a Reply