Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 222 (29.01.19)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

பி. ஜெயபிரகாஷ், சேலம்.

கேள்வி.

எனக்கு எப்போது வேலை கிடைக்கும்?

பதில்.

நாற்பது வயதிற்குட்பட்ட தனுசுராசி இளைஞர்கள் அனைவருக்குமே வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் சிக்கல்களும், நிம்மதியற்ற சூழல்களும் இருக்கிறது என்பதை மாலைமலர் ராசிபலன்களிலும், கேள்வி-பதில் பகுதியிலும்  சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன்.

விருச்சிக ராசியினரின் வேதனைகள் விலகிக் கொண்டிருக்கும் நிலையில், தனுசு ராசி இளைஞர்கள் தற்போது பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதிலும் உன்னைப் போன்ற மூல நட்சத்திர இளைஞர்கள், 2017, 2018ம் ஆண்டுகளில் படிப்பு, வேலை மற்றும் வயதிற்கேற்ற விஷயங்களில் நன்றாக இல்லை.

2019ம் ஆண்டு முடியும் வரை உனக்கு பிடித்தமான வேலை கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. கிடைக்கும் வேலை எதுவாக இருந்தாலும், அதை ஏற்றுக்கொண்டு அதிலேயே உன்னுடைய திறமையை காட்டுவது புத்திசாலித்தனம். அடுத்த ஆண்டு ஏப்ரலுக்கு பிறகே நல்ல நிரந்தர வேலை கிடைக்கும்.  வாழ்த்துக்கள்.

வெற்றிவேல், வேலூர்.

கேள்வி.

ஒரு பிரைவேட் கம்பெனியில் பிடிக்காத வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறேன். சிறுவயது முதல் மாபெரும் நடிகனாக வேண்டும் என்பது என் லட்சியம். எட்டு ஆண்டுகளாக முயற்சி செய்கிறேன். நடிகனாக யோகம் இருக்கிறதா? பெரும் நடிகராக வலம் வருவேனா? சினிமாவில் ஜெயிப்பேனா? எப்போது எனக்கான நல்ல நேரம் வரும்? வெற்றிக்கு வெற்றி கிடைக்குமா?

பதில்.

(கும்ப லக்னம், ரிஷப ராசி. 2ல் சுக், 3ல் புத, ராகு. 4ல் சூரி, சந், செவ், 9ல் கேது, 10ல் சனி, 12ல் குரு. 22-5-1985 அதிகாலை 1-35 வேலூர்)

சுக்கிரன் உச்சமாக இருப்பவர்கள் அனைவரும் சூப்பர் ஸ்டார் ஆகிவிடுவதில்லை. ஒரு ஜாதகத்தில் அனைத்து சுப அமைப்புகளும் ஒருங்கே அமையப் பெற்ற கோடியில் ஒருவர்தான் பிரபலமானவராகவும், தன் துறையில் சாதிப்பவராகவும் இருக்கிறார். மற்றவர்கள் அனைவரும் முதல்பரிசை எண்ணி லாட்டரி டிக்கட் வாங்கி விட்டு பரிசு பெற்றவரைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுபவர்கள்தான்.

எந்தத் துறையிலும் சாதிக்க நினைக்கும் ஒரு மனிதனின் அடிமனதில் இருக்கும் நோக்கம் பெரும் பணக்காரராகி கார், பங்களா என்று சொகுசு வாழ்க்கை வாழ்வதுதான். இதற்கு ஜாதகத்தில் 2, 9, 11-ஆம் இடங்களும், தொழில் ஸ்தானம் என்று சொல்லப்படக்கூடிய பத்தாமிடமும் வலுவாக இருக்க வேண்டும். அது இல்லையெனில் நம்முடைய லட்சியங்கள் ஆசைகளாகவே இருந்து, ஏட்டளவில்  முயற்சிகள் செய்து லட்சியம் கனவாகி விடும்.

சினிமாவில் ஜெயிப்பதற்கு சுக்கிரனும் ராகுவும் வலுவாக இருக்க வேண்டும். உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் உச்சமாக இருக்கிறார். ஆனால் சுக்கிர தசை உங்களுக்கு 80 வயதுக்கு மேல்தான் வரும். ராகு 3-மிடத்தில் இருந்தாலும் ராசியிலும், அம்சத்திலும் செவ்வாயின் வீட்டில் அமர்ந்து சுப தொடர்புகள் எதுவும் கிட்டாமல் பாபத்துவ அமைப்பில் இருக்கிறார். அதோடு பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் கேது அமர்ந்து 2, 11-க்குடைய குரு பனிரெண்டில் மறைந்து நீசமாக இருக்கிறார்.

ஜாதகப்படி உங்களுக்கு அஷ்டமச் சனியும், ஆறாமதிபதி புக்தியும் நடந்து கொண்டிருக்கிறது. தற்போதைய கிரக நிலைகளின்படி சினிமாவில் மாபெரும் நடிகனாக வருவீர்கள் என்று சாதகமாகச் சொல்ல ஏதுமில்லை. ஆயினும் உங்கள் கலைத்தாகம் கலைந்து விடாது. அவ்வப்போது சினிமா சம்பந்தப்பட்ட ஏதேனும் முயற்சிகளில் ஈடுபட்டபடியே இருப்பீர்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள் வெற்றி….

எம். மகேஸ்வரன், ஈரோடு.

கேள்வி.

2018ல் இருந்து வாழ்க்கை மிகவும் கடுமையாக இருக்கிறது. அலுவலகமாக இருந்தாலும் வீடாக இருந்தாலும் வேலைப்பளு அதிகமாக இருக்கிறது. வங்கியில் வேலை செய்கிறேன். ஐந்து ஆண்டுகள் மீதமிருக்கும் நிலையில் அதிக வேலை காரணமாக விஆர்எஸ் வாங்கி விடலாமா என்று தோன்றுகிறது. சின்சியராக வேலை பார்ப்பதால் நிறைய வேலையை என் மீது திணிக்கிறார்கள். தாங்க முடியவில்லை. கோபத்தில் உயரதிகாரிகளை எதிர்த்துப் பேசி விடுவோமோ என்று தோன்றுகிறது. விஆர்எஸ் வாங்கலாமா? வேண்டாமா? பொறுமை காக்க வா? வீட்டிலும் எல்லோருக்கும் உடல்நிலை சரியில்லை. எப்போதும் டாக்டரிடம் சென்று கொண்டிருக்கிறோம். மூன்றுமுறை வாகன விபத்து ஏற்பட்டு வண்டிக்கு சேதமாகி மயிரிழையில் உயிர் தப்பினோம். சிறுவயதிலிருந்து பூஜை செய்யாமல் சாப்பிட மாட்டேன். ஸ்லோகம் சொல்லித்தான் பூஜை முடிப்பேன். காலையில் வண்டி எடுக்கும் போது கோளறு திருப்பதிகத்தை மனதில் எண்ணிக் கொண்டுதான் வண்டி ஓட்டுவேன். ஆனால் தற்சமயம் கடவுள் நம்பிக்கையே அற்று விடும் போலிருக்கிறது. எனது பிரச்சினைகள் எப்போது தீரும்? பரிகாரம் உண்டா?

பதில்.

(கன்னி லக்னம், ரிஷப ராசி. 4ல் சூரி, செவ், புத, கேது. 5ல் சுக், சனி, 7ல் குரு, 9ல் சந், 10ல் ராகு 28-12-1963, அதிகாலை 12-30 ஈரோடு)

உங்களது ரிஷப ராசிக்கு தற்போது அஷ்டமச்சனி நடந்து கொண்டிருக்கிறது. அஷ்டம, ஜென்மச்சனி நேரங்களில் மனம் இதுபோன்ற அலைபாயும் விஷயங்களில் இருப்பதும், ஏறுக்குமாறான சம்பவங்கள் நடப்பதும் உண்டு. கூடுதலாக கடந்த 2017 முதல் உங்களுக்கு ஆறாமதிபதி சனியின் தசையும்  ஆரம்பித்திருக்கிறது. அஷ்டமச்சனியும், சனிதசையும் சேர்ந்து நடப்பதால் இன்னும் ஒரு வருடத்திற்கு உங்களுக்கு நல்ல பலன்கள் சொல்வதற்கு இல்லை.

2019ஆம் ஆண்டு நீங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளும் தவறாக போகும். எனவே எக்காரணம் கொண்டும் வேலையை விட வேண்டாம். பொறுமை காக்கவும். எனது கணிப்பின்படி உங்கள் குடும்பத்தில் வேறு யாருக்காவது தனுசு அல்லது ரிஷபராசியாக இருக்கலாம். இதனால் கஷ்டங்கள் அதிகமாகி குடும்பத் தலைவரான உங்களுக்கு மன உளைச்சல் அதிகமாக இருக்கும். இதுவும் கடந்து போகும். பொறுமையாக இருங்கள். பத்துக்குடையவன் பத்தாமிடத்தைப் பார்த்து, 5-க்குடைய சனி சுபத்துவமாகி, 5, 9 க்குடையவர்கள் இணைந்து, வலுத்த குரு லக்னத்தைப் பார்த்த யோக ஜாதகம் உங்களுடையது. 2020ஆம் ஆண்டு ஏப்ரலுக்கு பிறகு துன்பங்கள் எதுவும் இருக்க வாய்ப்பு இல்லை.

சனிக்கிழமைதோறும் அருகில் இருக்கும் பழமையான ஈஸ்வரன் கோவிலில் அருள்பாலிக்கும் காலபைரவருக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றுங்கள். இதுவே சனிக்கான  எளிய பரிகாரம். சமூகத்தில் கீழ்நிலையில் இருக்கும் ஏழை, எளியவர்களுக்கும், மாற்றுத்திறனாளி, அனாதைகள், முதியோர்கள் போன்றவர்களுக்கும் சனிக்கிழமை அன்று சனி ஹோரையில் உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். கஷ்டங்கள் நிச்சயம் குறையும். நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்.

தி. ராமகிருஷ்ணன், ஆவல்சூரம்பட்டி

கேள்வி.

ஜோதிட ஆசானுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தங்களது செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மாலைமலர் ரசிகன் நான். கடந்த 2009ஆம் ஆண்டு முதல் இந்த கடிதம் எழுதும் நிமிடம் வரை ஆயிரம் வரன்கள் பார்த்தும் இதுவரை பெண் அமையவில்லை. 2019 ஆம் ஆண்டிலாவது கடவுளின் அருள் பார்வை என் மீது பட்டு திருமண பாக்கியம் அமையுமா? தங்களின் மேலான பதிலை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.

பதில்

(கன்னி லக்னம், துலாம் ராசி. 1ல் ராகு, 2ல் சூரி, சந், சுக். 3ல் புத, செவ், 7ல் கேது, 11ல் குரு, 12ல் சனி. 2-11-1978 அதிகாலை 3-22 மதுரை)

ஒரு ஜாதகத்தில் கடுமையான லக்ன பாபியின் வீட்டில் அமர்ந்த கிரகங்கள், அவரோடு இணைந்த அல்லது வேறு வகையில் சம்பந்தம் பெற்ற கிரகங்கள் தங்களுடைய பாபத்துவ அமைப்பிற்கு ஏற்றபடி நன்மைகளைச் செய்வது இல்லை. உங்களின் கன்னி லக்னத்திற்கு அஷ்டமாதிபதியான செவ்வாயின் வீடுகளில் அமர்ந்த கிரகங்களும், செவ்வாயின் தொடர்பு பெற்ற கிரகங்களும் நன்மைகளைச் செய்யும் தகுதியை இழக்கும்.

கடந்த 17 வருடங்களாக செவ்வாயின் விருச்சிக வீட்டில், ஆட்சி பெற்ற செவ்வாயுடன் 2 டிகிரிக்குள் இணைந்து பலவீனமான புதன் தசை உங்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது. சிம்மத்தில் பகை பெற்று அமர்ந்து தனது ஆறாமிடத்தைப் பார்த்து வலுப்படுத்தும் சனியின் சாரத்தில் புதன் இருக்கிறார். சரியான திருமண பருவமான 23 வயது முதல் உங்களுக்கு புதன் தசை நடப்பதால் திருமண விஷயத்தில் நன்மைகள் இல்லை.

சுக்கிரன் வக்ரம் அடைந்தாலே திருமண அமைப்பில் தாமதங்களும் சோதனைகளும் இருக்கும். உங்களுக்கு தாம்பத்திய சுகத்தை கொடுக்க கூடிய சுக்கிரனும் வக்ரம் பெற்று சனியின் பார்வையில் இருக்கிறார். புதன் தசை வரும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைகிறது. அதன்பிறகு ஏழாமிடத்தில் களத்திர ஸ்தானாதிபதியான உச்ச குருவின் பார்வையில் இருக்கும் கேது தசை ஆரம்பிக்க உள்ளது. இருக்கும் வீட்டின் அதிபதியை போலவும், தன்னைப் பார்க்கும் கிரகத்தின் பலனையும் தரக்கூடிய கேதுவின் தசையில் சுக்கிர புத்தியில் உங்களுக்கு திருமணம் நடக்கும். அதுவரை பொறுமையாக இருங்கள் வாழ்த்துக்கள்.

1 Comment on Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 222 (29.01.19)

  1. தி. ராமகிருஷ்ணன், ஆவல்சூரம்பட்டி கேள்விக்கான பதிலில் தவறான இராசிக்கட்டம் பிரசுரிக்கபட்டுள்ளது. அதில் உள்ள இராசிக்கட்டம் அதற்கு முந்தைய கேள்விக்குடையது.

Leave a Reply