adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
ஜோதிடம் எனும் மகா அற்புதம் – D.001 – Jothidam Enum Maha Arputham…
கடந்த வருடங்களில் மாலைமலரில் எழுதப்பட்ட “ஜோதிடம் எனும் தேவரகசியம்” கட்டுரைகள் இத்தனை பெரிய வரவேற்பை பெறும் என்பதை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை.

அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியான இந்த மகா சமுத்திரத்தில் எனக்கு பருகக் கிடைத்தது என்னவோ சில துளிகள் மட்டும்தான்.

இத்தகைய சிற்றறிவை வைத்துத்தான் ஜோதிடம் என்பது எதிர்காலத்தைக் காட்டும் ஒரு மாபெரும் அறிவியல் என்றும், இது ஒருவகையான காலவியல் விஞ்ஞானம் என்பதையும் முந்தைய கட்டுரைகளில் ஓரளவிற்கு தெளிவாக்க முயற்சித்திருக்கிறேன்.

தற்போதய “ஜோதிடம் எனும் மகா அற்புதம்” தொடர் கட்டுரைகள் இந்தக்கலை எப்படி ஒரு மாபெரும் விஞ்ஞானத்தின் அஸ்திவாரத்தில் அமர்ந்திருக்கிறது என்பதை விளக்குவதாக இருக்கும்.

காலம்காலமாக விளக்கிச் சொல்லாமல் எளிய ஜனங்களுக்கு எட்டாக் கனியாகவே போய்விட்ட இந்த மாபெரும் கலையை எல்லோருக்கும் புரியும்படி எளிமைப் படுத்தினால் இன்னும் மிகுதியான மக்களிடம் வரவேற்பைப் பெறும் என்பது உறுதியான ஒன்று.

ஏன்? எதற்கு? எப்படி? என்று தெரிந்து கொள்ளாமல், அறிந்து கொள்ள தேவையும் இல்லாமல் அல்லது தெளிவாக சொல்வதற்கு யாரும் இல்லாத நிலையில்தான் ஜோதிடர்களும், ஜோதிட ஆர்வலர்களும் இருக்கின்றார்கள். அதேநேரத்தில் ஜோதிடத்தின் அத்தனை சூட்சும அமைப்புகளையும், விதிகளையும் பாமரனுக்கும் புரியும்படி விளக்கவே முடியாது.

ஜோதிடமே கடுமையான முரண்பாடுகளைக் கொண்டதுதான். பல நேரங்களில் இங்கே விதியைவிட விதிவிலக்கே அதிகமாக கவனிக்கப்பட வேண்டும். உண்மையில் ஜோதிடத்தை புரிந்து கொள்பவரிடம்தான் குறை இருக்கிறதே தவிர இம்மியளவு குறை கூட இந்த மகா அற்புதக் கலையில் இல்லை.

ஜோதிடரைப் பற்றியும், ஜோதிடத்தையும் விளக்குவதற்கு இங்கே ஏராளமான சம்பவங்கள் கதைகளாகச் சொல்லப்பட்டுள்ளன. பதினெட்டாம் பிறந்த நாளன்று இளவரசன் பன்றியால் (வராஹம்) இறந்து போவான் என்று மிகிரர் என்ற ஜோதிடஞானி அரசனிடம் சொல்ல, விதியை வெல்ல நினைத்த அரசன் காட்டுக்குப் போனால்தானே மகன் இறப்பான் என்று அரண்மனைக்குள்ளேயே மகனை வைத்து அடைகாத்த நிலையில் மாடத்தில் பொருத்தப்பட்டிருந்த பன்றித்தலை விழுந்து இளவல் இறந்து போக, அங்கே ஜோதிடமும், ஜோதிடரும் ஜெயித்து வெறும் மிகிரர் “வராஹமிகிரர்” ஆனதும் ஜோதிடத்தால்தான்.

அதே பதினெட்டாம் பிறந்த நாளில் தன் மகன் இறந்து போவான் என்று வேறொரு ஜோதிடர் கணிக்கிறார். ஆனால் இந்த அமைப்பிற்கு குருவின் பார்வை இருப்பதால் மகனின் மரணம் இருக்காது என்று உறுதி செய்கிறார். கணிப்புத் தவறி மகன் பதினெட்டாம் பிறந்த நாளில் மரித்துப் போகிறான். அதிர்ந்து போன ஜோதிடர் இந்த அற்புதக் கலையே பொய் என்று மகனின் சிதையிலேயே அனைத்து ஓலைச்சுவடிகளையும் எரிக்கப் போகும் நிலையில் முக்காலமும் அறிந்த ஞானி நாரதர் வந்து தடுக்கிறார்.

மகன் ஜாதகத்தில் குருபார்வை இருக்கிறது என்று கணித்தாயே, கிரகங்களுக்கும் மனிதர்களைப் போலவே விழிப்பது, காலைக்கடன் கழிப்பது, போஜனம், தாம்பூலம், தூக்கம் போன்ற நித்யகர்மாக்கள் ஜோதிடத்தில் சொல்லப்பட்டிருக்கிறதே அறிவாயா எனக் கேட்டு, மகன் ஜாதகத்தில் குருபார்வை உள்ளது என்று நீ கணித்த போது குருவின் நித்யகர்மா என்ன என்பதை பார்த்தாயா என்று கேட்கிறார்.

மீண்டும் கணித்துப் பார்க்கையில் குருவின் அப்போதைய நித்ய கர்மா தூங்குவது என வருகிறது. தூங்கும் குருவிற்கு ஏது பார்வை? தவறை உன்பேரில் வைத்துக் கொண்டு ஓலைச்சுவடிகளை ஏன் எரிக்கிறாய் என்று நாரத மகரிஷி கேட்பதாக இன்னொரு கதை சொல்கிறது.

உண்மையில் குருடர்கள் யானையை பார்ப்பதுதான் ஜோதிட சாஸ்திரமும். யானையின் முன்னங்காலை மட்டும் தடவிப் பார்க்கும் ஜோதிடர் யானை தூண் போல இருக்கும் என்கிறார். துதிக்கையைப் பார்ப்பவர் உருளையைப் போன்றது என்கிறார். கடைநிலையில் இருக்கும் ஜோதிடர் வாலின் நுனி முடியை மட்டும் தடவிப் பார்த்துவிட்டு யானை சிறு குச்சியைப் போல இருக்கும் என்கிறார். உண்மையில் இந்த யானையை முழுதாகப் பார்த்தவர்கள் யாரும் இல்லை.

பலன் சொல்வதைத் தவிர்த்து விட்டால் ஜோதிடம் என்பது முழுக்க முழுக்க வானவியலை சார்ந்த ஒன்றுதான் என்பதை பகுத்தறிவாளர்கள் கூட ஒத்துக் கொள்கிறார்கள். தமிழகத்தின் மிகப்பெரிய பகுத்தறிவாளராக அறியப்பட்ட ஒருவர் தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசும்போது “ஜோதிடத்தில் எதிர்காலம் பற்றிய ஏதோ ஒன்று ஒளிந்து கிடக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அதை வைத்து பயமுறுத்தி பரிகாரம் என்ற பெயரில் பணம் கறக்கும் கலையாகி விட்டதால்தான் என் போன்றவர்கள் எதிர்க்கிறோம். உண்மையில் உங்களைப் போன்றவர்கள் இக் கலையை ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கையூட்ட, நல்வழிகாட்ட பயன்படுத்துவதை வரவேற்கவே செய்கிறேன்” என்று சொன்னார்.

ஜோதிடத்தில் கொடுக்கப்படும் கிரகநிலைகள் விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொண்ட வானியல் உண்மைகள்தான். இன்னும் ஒருபடி மேலாக சொல்லப் போனால் 1500 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிடம் கண்டுபிடித்த பஞ்சாங்கத்தின் மேல்தான் இன்றைய நவீன வானவியல் அமர்ந்திருக்கிறது. நாசா உள்ளிட்ட நவீன விஞ்ஞானிகள் இன்றைய கிரக நிலைகளை துல்லியமாக கணிக்க உதவியவை. அன்றைக்கு நமது தெய்வாம்சம் பொருந்திய ஜோதிட ஞானிகள் வெறும் கண்ணால் பார்த்துச் சொன்ன அடிப்படை கிரக நிலைகள்தான்.

ஜோதிடத்தில் பயன்படுத்தப்படும் கிரகங்கள் அனைத்தும் நவீன விஞ்ஞானத்திற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கண்டு பிடிக்கப்பட்டவை. இன்றைய விஞ்ஞானம் கடந்த ஐநூறு ஆண்டுகளாக செழித்து வளர்ந்திருக்கலாம். ஆனால் வானவியலின் அடிப்படையே ஜோதிட சாஸ்திரம்தான் என்பதை வசதியாக மறந்து விடுகிறோம்.

உலகின் மாபெரும் விஞ்ஞானியான சர். ஐசக் நியூட்டனின் அறையில் ஜோதிடப் புத்தகங்கள் நிரம்பி இருப்பதைப் பார்த்த அவரது மாணவர் ஹாலி “விஞ்ஞானியின் அறையில் ஜோதிட புத்தகங்களா?” என்று கேட்டதற்கு “ஜோதிடத்தைப் பற்றி நான் அறிந்திருப்பதால் வைத்திருக்கிறேன். அறியாததால் நீ கேட்கிறாய்” என்று பதில் சொன்னார். இவரைப் போன்ற விஞ்ஞானிகள் இன்றும் இருக்கிறார்கள்.

ஆனால் அரசாங்கங்களின் ஆதரவினால் கிடைக்கும் முறையான ஆராய்ச்சியின் மூலம் அறிவியல் வளர்ந்து கொண்டே வரும் நிலையில், நவீன விஞ்ஞானத்தின் ஆதாரக் கலையான ஜோதிடம் மட்டும் இன்றுவரை மிகப் பெரிய ஆராய்ச்சிகள் இன்றி சவலைப் பிள்ளையாகவே இருந்து வருகிறது. வானியல் சாஸ்திரத்திற்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் ஜோதிடத்திற்கும் கொடுக்கப்பட்டிருந்தால் விஞ்ஞானம் வேறுவகையில் எப்போதோ பிரபஞ்சம் தோன்றிய ரகசியத்தைக் கண்டு பிடித்திருக்குமோ என்னவோ?

நவீன விஞ்ஞானிகள் இன்று வான சாஸ்திரத்தின் குறியீடுகளாக பயன்படுத்தும் அடிப்படை விஷயங்கள், நட்சத்திரக் கூட்டங்கள் அனைத்தையும் கண்டுபிடித்தது அன்றைய ஜோதிடம்தானே தவிர நவீன விஞ்ஞானம் அல்ல. உண்மையைச் சொல்லப் போனால் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை ஜோதிடம்தான் விஞ்ஞானமாக கருதப்பட்டு வந்தது.

பூமியில் இருந்து வானத்தை பார்க்கும் மனிதன் தன்னைச் சுற்றியுள்ள விண்வெளியை பனிரெண்டு சமமாக பங்குகளாக, மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகளாக பிரித்தது சூரிய, சந்திர, பூமியின் இயக்கங்களை வைத்துத்தான். இந்த மூன்றும்தான் நம்மைச் சுற்றியுள்ள வானின் ஆதாரப் புள்ளிகள். பூமியில் இருந்து பார்ப்பதால் நமக்கு சூரியனும், சந்திரனும் மையப் புள்ளிகள் ஆகின.

சந்திரனின் வழியாக, அதைக் கடந்துதான் நாம் வானத்தைப் பார்க்கிறோம். நம்மை மிக நெருங்கியிருக்கும் ஒரு ஆதாரப் புள்ளியான சந்திரன் பரந்த வானின் பின்புலத்தில் பூமியைச் சுற்றி வரும்போது 12 அமாவாசைகளும், 12 பவுர்ணமிகளும் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாக ஏற்படுவதை கணக்கில் கொண்டுதான் நம்முடைய பனிரெண்டு ராசிகள் உருவாகின. சந்திரனின் இருப்பை வைத்துதான் நட்சத்திரக் கூட்டங்களைக் கணிக்கிறோம் என்பதால், நிலவு பூமியைச் சுற்றி வரும் இருபத்தி ஏழரை நாட்கள் கொண்ட ஒரு முழுச் சுற்று 27 நட்சத்திர கூட்டங்களாகின.

ஜோதிடம் என்பது ஒளியைப் பற்றிச் சொல்வது என்பதை ஏற்கனவே விளக்கி இருக்கிறேன். ஒளியைப் போலவே கவனிக்கக் கூடிய இன்னொன்று, ஈர்ப்பு விசை எனப்படும் மகத்தான ஆற்றல். சூரியனின் ஈர்ப்பு விசையால் கிரகங்கள் அனைத்தும் கதிரவனைச் சுற்றி வருகின்றன. சூரியனைப் போலவே கிரகங்களுக்கும் ஈர்ப்பு விசை இருக்கிறது. அதனால் நிலா போன்ற துணைக் கோள்கள் மூலக்கிரகங்களைச் சுற்றி வருகின்றன.

கதிரவனால் பிறந்த கிரகங்களின் ஈர்ப்பு விசையாகட்டும், அவற்றின் ஒளியாகட்டும் அனைத்திற்கும் மூல காரணம் சூரியன்தான். சூரிய ஒளி, அதனை பிரதிபலிக்கும் சந்திர ஒளி, மற்ற கிரகங்களின் ஒளி மற்றும் இவை அனைத்துக்குமான ஈர்ப்பு விசைகளும் இணைந்தே பூமியில் உயிரினத்தை உருவாக்கி அவற்றின் வாழ்க்கை முறைகளையும் நிர்ணயிக்கின்றன என்பதுதான் ஜோதிடம்.

உயிர் உருவாவதற்கு சூரிய ஒளியும், அதனை வாங்கிப் பிரதிபலிக்கும் சந்திரக் கதிர்களும், குரு கிரகத்திடம் உள்ள மீத்தேன் ஒளியும் அவசியமானது. குருவிடம் அதிகமாக உள்ள மீத்தேனால்தான் பூமியில் உயிரினங்கள் தோன்றின என்பதை நவீன விஞ்ஞானம் நிரூபித்திருக்கிறது. இதைத்தான் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஜோதிடம் சந்திரனை மாதாகாரகன் என்றும், குருவை புத்திரகாரகன் என்று வகைப்படுத்திச் சொன்னது.

தற்போது நாம் பின்பற்றி வரும் பஞ்சாங்கங்களில் உள்ள ராகுகாலம், எமகண்டம் போன்றவைகள் ஒரு முழுமையான விஞ்ஞானம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? பலவிதமான வானியல் உண்மைகளே இன்றைய ஜோதிட சாஸ்திரம் கூறுகின்ற அடிப்படை விதிகள் ஆயின. பூமியின் சுழற்சியாலும், சந்திரனின் சுழற்சியாலும் மனிதனின் மேல் அவ்வப்போது ஏற்படும் எதிர்மறை சக்திகளையே ஜோதிடம் விஷகாலம், ராகு காலம், எமகண்டம் என்று பெயரிட்டுச் சொன்னது.

இந்திய ஜோதிடத்தின் இரண்டரை நாழிகை அளவுள்ள ஹோரை எனப்படும் ஒரு மணி நேரம் கொண்ட ஒரு காலஅளவுதான் இங்கிருந்து ஏற்றுமதியாகி ஆங்கிலத்தில் ஹவர் என்று சொல்லப்பட்டு நமக்கே திரும்பி வந்து இறக்குமதி ஆனது.

எப்படிப் பார்த்தாலும் நவீன விஞ்ஞானத்தின் மூலத்தை தேடினால் அது ஆரம்பமானது பண்டைய ஜோதிடத்தில் இருந்துதான் என்பது தெரிய வரும். அடுத்தடுத்து வர இருக்கும் கட்டுரைகளில் ஜோதிடத்தின் வேறு சில பரிமாணங்களைப் பார்க்கலாம்.

வரும் வெள்ளிகிழமை மீண்டும் தொடருவோம்.

தொடர்பு எண்கள்- செல்: 8681998888,  8870998888,  8428998888,  7092778888,  8754008888,  044-24358888,  044-48678888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp -ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்

One thought on “ஜோதிடம் எனும் மகா அற்புதம் – D.001 – Jothidam Enum Maha Arputham…

  1. Good Evening sir,

    Detail Astro explanation is amazing… more useful and basic people not know, this information.
    thanks,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *