adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 230 (26.03.19)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

ஆர். பாண்டித்துரை, மதுரை- 6

கேள்வி.  

கன்னி லக்னத்திற்கு சனி நன்மை செய்வார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எழுபது வயதாகும் எனக்கு 2000மாவது வருடத்தில் சனிதசை ஆரம்பமானது. சனி புத்தியில் 2002இல் 54 வயதில் விஆர்எஸ் கொடுத்துவிட்டு வேலையிலிருந்து நின்று விட்டேன். வருமானம் போய் விட்டது. 2006ல் மூத்தமகளின் கணவர் இறந்தார். 2008ல் எனது ஐந்து சென்ட் இடத்திற்கு பக்கத்து இடத்துக்காரர் அவர் பெயரில் பட்டா வாங்கி விட்டதால், இடத்தைக் காப்பாற்ற கோர்ட்கேஸ், போலீஸ் ஸ்டேஷன் என்று அலைந்து பணம் செலவழித்துக் கொண்டிருக்கிறேன். தற்போது அதிகமான மூட்டுவலி இருக்கிறது. நடக்க முடியவில்லை. டாக்டரைப் பார்த்தால் ஆபரேஷன் செய்யச் சொல்லுகிறார். இன்னும் சில மாதத்தில் சனி தசை முடிய இருக்கிறது. அடுத்து வரும் புதன் தசை நன்மைகளை செய்யுமா? வழக்கு சாதகமாக முடியுமா? ஆபரேஷன் செய்யலாமா?

பதில்.

(கன்னி லக்னம், ரிஷப ராசி. 2ல் கேது, 4ல் குரு, 8ல் ராகு, 9ல் சூரி, சந், 10ல் புத, சுக், 11ல் சனி, 12ல் செவ், 6-6-1948 பகல் 2-36 மதுரை)

லக்னாதிபதி புதன் ஆட்சியாகி, தர்மகர்மாதிபதி யோகத்துடன், குருவின் பார்வையில் அமர்ந்த யோக ஜாதகம். ஒருவருக்கு சனி நன்மைகளைச் செய்ய வேண்டுமெனில், அவர் சுபத்துவமோ, சூட்சுமவலுவோ பெற்றிருக்க வேண்டும் என்பதை அடிக்கடி எழுதி வருகிறேன். குரு, சுக்கிரன், தனித்த புதன், வளர்பிறை சந்திரன் போன்றவர்களின் தொடர்புகளோ, சூட்சுமவலுவோ அடையாத சனி தன்னுடைய இயல்பான குணமான கடன், நோய், எதிரி, நடக்க இயலாத நிலை, வருமானக் குறைவு போன்றவற்றை மட்டுமே தருவார். சனி யோகாதிபதியாக இருந்தாலும், ஆட்சி, உச்சம் போன்ற நிலைமைகளில் இருந்தாலும் சூட்சும வலு இல்லாத நிலையில், மேலே நான் சொன்ன பலன்களை மட்டுமே செய்வார்.

உங்கள் ஜாதகத்தில் சனிக்கு எவ்விதமான சுபத் தொடர்புகளும் இல்லை. சனிக்கு வீடு கொடுத்தவர் மட்டுமே உச்சமாக இருக்கிறார். சனிதசை ஆரம்பித்த உடனேயே வருமானம் போகவேண்டும் என்ற விதிப்படி வேலையை விட்டு விட்டீர்கள். பிற்பகுதியில் ஆறாமிடத்துப் பலனைச் செய்ய வேண்டும் என்ற அமைப்பின்படி கடந்த சில வருடங்களாக கோர்ட்கேஸ், மூட்டுவலி போன்ற சனியின் பலன்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

இப்போது இருக்கும் பிரச்னைகள் அடுத்த வருடம் ஏப்ரலுக்கு பிறகு புதன் தசை சுயபுத்தியில் தீர ஆரம்பிக்கும். அடுத்து வரும் தசாநாதன் புதன் லக்னாதிபதியாகி குருவின் பார்வையில் இருப்பதால் நன்மைகளை மட்டுமே செய்வார். புதன் தசையில் சுயபுத்தி முடிந்த பிறகு வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியும். செப்டம்பர் மாதத்திற்கு பிறகு ஆப்ரேஷன் செய்து கொள்ளுங்கள். மூட்டுவலி தீரும். அந்திம காலத்தில் யோக தசை வருவதால் பரம்பொருளின் ஆசீர்வாதம் பெற்றவர் நீங்கள். வாழ்த்துக்கள்.

பெ. சிதம்பரம். கிருஷ்ணகிரி.

கேள்வி.

சுபதத்துவ மற்றும் சூட்சுமவலு கோட்பாட்டின் மூலம் ஜோதிடத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை கொடுத்த ஜோதிடச் சக்கரவர்த்திக்கு வணக்கம். சுமார் எட்டு வருடங்களாக ஒற்றைத் தலைவலியால் மிகவும் சிரமப்படுகிறேன். சிகிச்சை மூலம் தற்பொழுது கட்டுக்குள் இருக்கும் தலைவலி, எதிர்வரும் குரு தசையில் தீர வாய்ப்புள்ளதா? ஆதிபத்திய விசேஷம் இல்லாத குரு தசை நன்மை செய்யுமா? அரசுப் பள்ளி ஆசிரியராக இருக்கும் நான், கல்லூரி விரிவுரையாளராக வர குரு தசை கை கொடுக்குமா? லக்னாதிபதி சனி சுபத்துவம் அடைந்திருக்கிறாரா?

பதில்.

(மகர லக்னம், ரிஷப ராசி, 2ல் குரு, 4ல் ராகு, 5ல் சூரி, சந், 6-ல் புத, சுக், 10ல் கேது, 11ல் சனி, 12ல் செவ், 6-6-1986 இரவு 10-15 கிருஷ்ணகிரி)

கடன், நோய், எதிரியைத் தரும் ஆறாமிடம், அதிகமான சுபத்துவத்தை அடையக் கூடாது. அடையும் பட்சத்தில் இவை மூன்றில் ஒன்று, ஏதாவது ஒரு ரூபத்தில் இருந்து கொண்டே இருக்கும். ஜாதகப்படி ஆறுக்குடைய புதன் ஆட்சி பெற்று, சுக்கிரனுடன் இணைந்து, குருவின் பார்வையில் இருப்பதால், கடன், எதிரி இல்லாத சூழலில், ஏதேனும் ஒரு சிறு ஆரோக்கியக் குறைவு இருந்து கொண்டுதான் இருக்கும். உங்களுடைய ஒற்றைத் தலைவலியும் அப்படிப்பட்டதுதான். லக்னத்திற்கு 6-ஆம் இடத்தையும், ராசிக்கு 6-ஆம் இடத்தையும் குரு பார்ப்பது இதனை உறுதி செய்கிறது.

ஆதிபத்திய விசேஷம் இல்லாத குரு தன்னுடைய சொந்த நட்சத்திரத்தில் இருப்பதால், தொழில் ரீதியான நன்மைகளை உங்களுக்குச் செய்யத்தான் செய்வார். ராசிக்கு பத்தில் குரு இருந்து, லக்னத்த்திற்குப் பத்தைப் பார்ப்பதால், சொல்லிக் கொடுக்கும் துறையில் இருக்கிறீர்கள். குரு தசையில் கல்லூரி விரிவுரையாளராக ஆக முடியும்.

ராகுவை விட குரு தசை நன்மையைச் செய்யும். லக்னாதிபதி சனி, பதினொன்றாம் இடத்தில் அமர்ந்து அம்சத்தில் உச்சம் பெற்றிருப்பது ஒரு நல்ல நிலை. ஆனால் அவருக்கு சுபத்துவ அமைப்பு இல்லை. அமாவாசையை நெருங்கும் சந்திரனின் பார்வை அவரை ஓரளவே சுபத்துவப்படுத்தும். இங்கு சந்திரனின் பார்வைக்கு அதிக வலிமை கிடையாது.

மாலினி, அமெரிக்கா.

கேள்வி.

தம்பிக்கு 2010 அக்டோபர் மாதம் திருமணம் நடந்து, அடுத்த வருடமே மனைவியை பிரிந்து விட்டான். மனைவி அவனை மிகவும் சித்தரவதை செய்து, காவல்நிலையம், நீதிமன்றம் என்று வாட்டி வதக்கி விட்டாள். அவள் தந்தை அரசியல்வாதி என்பதால்  ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போது தம்பி வெளிநாட்டில் இருக்கிறான். விவாகரத்து வழக்கு நடக்கிறது. வாழ்க்கையை வெறுத்து குடி, பெண்கள், போதைப் பழக்கம் என்று குறிக்கோள் இல்லாமல் அலைகிறான். அறிவுரை சொன்னாலும் கேட்பதில்லை. ஒரு குழந்தை இருக்கிறது. ஆனால் அந்தக் குழந்தையை அவன் பார்த்து ஏழு வருடம் ஆகிறது. அவனுக்கு எப்போது மறுமணம்? அடுத்து வரும் பெண் எப்படி இருப்பாள்?

பதில்.

(கன்னி லக்னம், கன்னி ராசி, 1ல் சந், குரு, சனி, 2ல் சுக், 3ல் சூரி, புத, 4ல் செவ், 5ல் கேது, 11ல் ராகு, 2-12- 1980 அதிகாலை 2-30 சென்னை)

ராகு தசை முற்பகுதியில் யோகத்தைச் செய்தால், தனது கடைசி சூரிய, சந்திர, செவ்வாய் புக்திகளில் கடுமையான அவயோக பலன்களைச் செய்யும் என்பதை சாயாக் கிரகங்களின் சூட்சும நிலைகள் எனும் கட்டுரைகளில் எழுதி இருக்கிறேன்.

கன்னி லக்கினத்திற்கு, செவ்வாயின் தொடர்பு கொண்ட அல்லது செவ்வாயின் வீடுகளில் இருக்கும் கிரகங்கள் ஏதேனும் நன்மையை தரப் போகிறது என்றால் பின்னால் வில்லங்கத்தை செய்யப்போகிறது என்று அர்த்தம். அதன்படி செவ்வாயின் பார்வை பெற்ற ராகு தசையில், செவ்வாயின் வீட்டில் அமர்ந்த சூரியனின் புக்தியில் நடந்த உங்களது தம்பியின் திருமணம் அவருக்கு கடுமையான பிரச்சினைகளைத் தரும்.

பாபத்துவ அமைப்பில் இருக்கும் எந்த ஒரு கிரகமும் அதனுடைய ஆதிபத்திய, காரகத்துவங்களை நல்ல முறையில் தரவே தராது என்பதே நான் சொல்லும் சுபத்துவ, பாபத்துவ, சூட்சுமவலு விதி.

அதன்படி தற்போது நடந்து கொண்டிருக்கும் தசாநாதன் குரு, அமாவாசையை நெருங்கிக் கொண்டிருக்கும் தேய்பிறைச் சந்திரனோடும், பாபரான சனியோடும்  இரண்டு டிகிரிக்குள் நெருங்கி முழுமையான பாபத்துவ அமைப்பில் இருக்கிறார்.  குருவின் சுப வலிமையை சனியும், சந்திரனும் முழுக்க இழக்கச் செய்திருப்பதால், குரு தசை அவருக்கு நான்கு ஏழாமிட ஆதிபத்தியங்களை கெடுத்து, அவரது காரகத்துவங்களான தனம், புத்திர பாக்கியங்களையும் தராது.

பாபத்துவ குரு லக்னத்தில் அமர்ந்து தசை நடத்துவதால் உங்கள் தம்பி  மனக் கட்டுப்பாடு இன்றி கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகி இருக்கிறார். அதோடு பெற்ற குழந்தையையும் பார்க்க முடியவில்லை. இங்கே குரு திக்பலமாக இருப்பது மட்டுமே நல்ல நிலை. அதனால் தொல்லைகள் எல்லை மீறாது. இன்னும் சில காலத்திற்கு உங்கள் தம்பிக்கு நல்ல பலன்கள் சொல்வதற்கு இல்லை.

நடப்பு புக்தி நாதனான புதனும், செவ்வாயின் வீட்டில் இருப்பதால் தம்பிக்கு 2020 ஜூன் மாதம் வரை வழக்கு, அசிங்கம், கேவலம் தொடரும். 2020 பிற்பகுதியில் கேது புக்தியில் மாற்றங்கள் வரும். குரு தசை, சுக்கிர புக்தியில் அவருக்கு இன்னொரு திருமணம் நடந்து வாழ்க்கை ஓரளவு சீராகும். குருவை வலிமை இழக்கச் செய்த சனி குருவால் சுபத்துவம் அடைந்திருப்பதால் சனி தசை முதல் நன்றாக இருப்பார். வாழ்க்கையில் 40 வயதிற்கு பிறகு, குரு தசை ராகு புக்தி முதல் அவரது பழக்கவழக்கங்கள் மாற்றங்களுக்கு உண்டாகி, பிற்பகுதி வாழ்க்கையில்  நன்றாக இருப்பார். வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *