சுவாதி: 2017-ம் ஆண்டு நட்சத்திர பலன்கள்

சுவாதி:

உங்கள் நட்சத்திரநாதன் ராகுபகவான் வருடத்தின் பிற்பகுதியில் தனக்கு பிடித்தமான கடகத்துக்கு மாறி சுபத்துவம் அடையப் போவதால் உங்களுக்கு இந்த வருடம் யோகமான வருடமாக இருக்கும். இந்த வருடம் நீங்கள் செய்யும் ஒரு நல்ல முயற்சியால் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும்.

ஏழரைச் சனி முடியப் போவதால் திடீர் அதிர்ஷ்டம், மற்றும் புதையல், லாட்டரி போல முற்றிலும் எதிர்பார்க்காத இடத்திலிருந்து பணம் கிடைப்பது நடக்கும். நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இழுபறியாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சட்டென்று முடிவுக்கு வந்து பெரும்தொகை கைக்கு கிடைக்கலாம். கடந்த காலங்களில் சனியால் மிகப் பெரிய மனக்கஷ்டங்களையும் வாழ்வில் தடைகளையும் சந்தித்தீர்கள். அப்படிப்பட்ட நிலை எதுவும் இப்போது இருக்காது.

ராகு பலம் பெறுவதால் வேறு இன மொழி மதக்காரர்கள் உங்களிடம் நேசமாக இருப்பார்கள். வெளிமாநிலத்தவர்கள் இந்த வருடம் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும். தூரத்தில் பணியிடம் அமையும். பிரயாணங்களால் உற்சாகமாக இருப்பீர்கள். பிற்பகுதியில் மிகவும் நல்ல பலன்கள் உங்களுக்கு நடக்கும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு நல்ல திருப்பங்கள் உண்டு. உங்களின் புத்திசாலித்தனத்திற்கும், யூகத்திறமைக்கும் சவால்கள் இருக்கும். மனதிற்குள் நீங்கள் போட்டு வைத்திருக்கும் திட்டங்களை இப்போது செயல்படுத்தி சோதனை செய்வீர்கள். இடமாற்றமும், வேலைமாற்றமும் உண்டு. நெருங்கிய நண்பர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*