ரிஷபம்: 2016 – மார்கழி மாத பலன்கள்

ரிஷபம்

மாதம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் நட்பு நிலையிலும் மேலான வலு அமைப்பிலும் இருப்பது சிறந்த அமைப்பு என்பதால் இந்த மாதம் ரிஷபராசிக்கு ஏற்றங்களும் மாற்றங்களும் உள்ள மாதமாக இருக்கும். அதே நேரத்தில் முற்பகுதியில் அவர் செவ்வாயுடன் இணைவதால் எங்கே உங்களை கவிழ்க்கலாம் என உங்கள் எதிரிகள் திரிவார்கள். எனவே எதிலும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டியது அவசியம்.

கேது வலுப்பெறுவதால் ஆன்மிகம் சம்பந்தமான பிரயாணங்கள் செய்வீர்கள். புனிதத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு ஞானிகள் தரிசனம் கிடைக்கலாம். இதுவரை குலதெய்வ வழிபாடு செய்யாதவர்கள் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தாதவர்கள் இந்தமாதம் அவற்றை முடிப்பீர்கள். ராஜ கிரகங்கள் வலுவாக இருப்பதால் வீட்டில் சுபகாரியங்கள் உண்டு. நீண்ட நாட்களாக திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு திருமணம் உறுதியாகும்.

தாயார் வழியில் நன்மைகள் நடக்கும் மாதம் இது. வீடு வாங்குவதற்கோ, வீடு கட்டுவதற்கோ ஆரம்பங்கள் இந்தமாதம் இருக்கும். ஒருசிலர் வீடு கட்ட ஆரம்பிப்பீர்கள். அருமையான நீங்கள் நினைத்த வாகனம் அமையும். தாயாரிடம் ஏதேனும் ஒரு விஷயத்திற்கு சம்மதம் கேட்க இப்பொழுது சரியானநேரம் என்பதால் இந்தநேரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். நீண்டகாலமாக முடியாமல் இருக்கும் விஷயங்களை இந்தமாதம் முடித்துக் காட்டுவீர்கள்.