மிதுனம்: 2016 டிசம்பர் மாத பலன்கள்

மிதுனம்:

மாதம் முழுவதும் ராசிநாதன் புதன் ஏழாமிடத்தில் அமர்ந்து ராசியை பார்க்கும் நிலையில் இருப்பதால் ராசி வலுவடைகிறது. புதனும், சுக்கிரனும் இணைந்திருப்பதும், எட்டுக்குடைய சனி பகவான் ஆறாமிடத்தில் பரிவர்த்தனை பெற்றிருப்பதும் யோக அமைப்புகள் என்பதால் மிதுனராசிக்கு டிசம்பர் மாதம் குறைகள் எதுவும் சொல்ல முடியாத மாதமாக இருக்கும். குறிப்பாக இந்த மாதத்தை உங்களின் கடன்களும், நோய்களும் தீரும் மாதம் என்று நான் சொல்லுவேன். ஆறுக்குடையவன் எட்டில் அமர்ந்து உச்சமடைவது கடனையும், நோயையும் விலக்கி வைக்கும் அமைப்பு என்பதால் கடன்களை நினைத்து கலக்கத்தில் இருப்பவர்களுக்கு சந்தோஷம் தரும் மாதம் இது.

இதுவரை மந்தமாக இருந்து வந்த தொழில், வியாபாரம் போன்றவைகள் விறுவிறுப்புடன் நடக்க ஆரம்பிக்கும். நீண்டநாட்களாக புத்திரபாக்கியம் இல்லாதவருக்கு கருவுறுதல் இருக்கும். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். சிலர் குலதெய்வ வழிபாட்டிற்கு குடும்பத்துடன் செல்வீர்கள். மற்றவர்கள் பொறாமையாக பார்க்கும் அளவிற்கு ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். தாயார்வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வரும்.

சிலருக்கு இதுவரை தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் நல்லபடியாக கிடைக்கும். பணியில் இருப்போருக்கு இருந்து வரும் சிக்கல்கள் தீரத் தொடங்கும். கலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். பாக்கித் தொகைகள் வசூலாகும். உடல்நலம் சரி இல்லாதவர்கள் ஆரோக்கியம் மேம்படுவார்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். விரும்பிய இடங்களுக்கு குடும்பத்துடன் போய் வருவீர்கள். மாணவர்கள் நன்கு படிப்பீர்கள். அரசுத் துறையினருக்கு இந்த மாதம் பதவி உயர்வு உண்டு. அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவார்கள்.

1,2,3,8,9,10,13,14,15,26 ஆகிய நாட்களில் பணம் வரும். 3-ம் தேதி மதியம் 2 மணி முதல் 5-ம் தேதி இரவு 11 மணி வரை சந்திராஷ்ட நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். குறிப்பாக வடக்கு நோக்கி நீண்ட பிரயாணம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*