கும்பம்: 2016 டிசம்பர் மாத பலன்கள்

கும்பம்:

மாத ஆரம்பத்திலேயே ராசியின் யோகாதிபதிகள் சுக்கிரனும், புதனும் லாப ஸ்தானமான பதினொன்றாமிடத்தில் ஒன்றுகூடி இருப்பது, கடந்த சில வாரங்களாக உங்களுக்கு நடக்கும் அதிர்ஷ்டமற்ற நிலைமைகளை தடுத்து நிறுத்தும் என்பதால் டிசம்பர் மாதம் தொல்லைகள் எதுவும் இல்லாத மாதமாக இருக்கும் என்பது உறுதி. சமீபத்திய விரயங்களை கொடுத்த செவ்வாய் பகவான் மாத பிற்பகுதியில் ராசிக்கு மாறுவதால் இதுவரை இருந்து வந்த வீண் செலவுகளும் இப்போது மட்டுப்பட்டு வருகின்ற வருமானத்தை இனிமேல் ஓரளவிற்கு சேமிக்கவும் முடியும்.

இதுவரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள் யாவும் இனிமேல் உங்களுக்கு நடக்க ஆரம்பிக்கும். வேலை இல்லாதவர்கள் மனதிற்கு பிடித்த நல்லவேலை கிடைக்கப் பெறுவீர்கள். இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல செய்திகள் உண்டு. இதுவரை செட்டில் ஆகாத நடுத்தர வயது கும்ப ராசிக்காரர்கள் இந்த மாதம் முதல் நன்மைகள் நடக்க ஆரம்பித்து வாழ்க்கையில் நிலை கொள்வீர்கள். வாழ்க்கைத் துணைவரால் லாபங்கள் இருக்கும். நீங்கள் கேட்கும் பொருட்களை கணவரோ, மனைவியோ வாங்கி தருவார்கள். சிலருக்கு மனைவி வழி சீதனமாக ஏதேனும் ஒரு நன்மை நடக்க வாய்ப்பு இருக்கிறது.

அலுவலகங்களில் இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உங்களை புரிந்து கொள்ளாமல் வாட்டி எடுத்துக் கொண்டிருந்த மேலதிகாரி டிரான்ஸ்பர் ஆகி உங்களுக்கு அனுசரணையானவர் அந்த இடத்திற்கு வருவார். வீடு மாற்றம், வாகன மாற்றம் போன்றவைகள் இருக்கும். பெண்களுக்கு குறைகள் ஏதும் இல்லை. அம்மா வழி ஆதரவும் ஆசிகளும் உண்டு. பிள்ளைகளால் நல்ல விஷயங்களும், தொலைதூரங்களில் இருக்கும் பிள்ளைகளிடம் இருந்து நல்ல செய்திகளும் கிடைக்கும்.

1,2,3,4,8,9,10,13,14,15 ஆகிய நாட்களில் பணம் வரும். 20-ம் தேதி இரவு 9 மணி முதல் 23-ம்தேதி காலை 8 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது. புதிய முடிவுகள் எதையும் செய்ய வேண்டாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது, புதியவர்களை அறிமுகப்படுத்தி கொள்வது ஆகியவையும் தவிர்ப்பது நல்லது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*