adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 21 (20.1.2015)

எஸ். புவனேஸ்வரி, சென்னை.

கேள்வி:
சுக் கே சூ,பு சனி
 குரு ராசி  செவ்
 சந் ரா
5-7-1974-11.00 am, சென்னை.
மாலைமலர் கேள்வி பதில் என்னைப் போன்ற பலருக்கு ஆதரவாக அமைகிறது. தாயில்லாத எனக்கு உங்களின் பதிலாவது பலன் அளிக்கட்டும். 39வயது கடந்தும் திருமணம் ஆகவில்லை. வயதான தந்தையின் வருத்தங்களைச் சொல்ல வார்த்தையில்லை. என்னால் தம்பிக்கும் தடங்கல். எம்.ஏ. பி.லிட். பி.எட் படித்த எனக்கு அரசுவேலை கிடைக்குமா? திருமணம் பற்றி குருஜியின் நல்வாக்குத் தேவை...
பதில்:
கன்னி லக்னம் தனுசு ராசி மூன்றில் ராகு ஆறில் குரு ஒன்பதில் சுக்கிரன் பத்தில் சூரியன் புதன் சனி பதினொன்றில் செவ்வாய்.
கணவன் ஸ்தானாதிபதியான ஏழுக்குடைய குரு ஆறில் மறைந்து ஏழாம்வீட்டை சனியும் இரண்டாமிடமான குடும்ப வீட்டை நீச செவ்வாயும் பார்த்து ராசிக்கு ஏழில் சனி, எட்டில் நீசசெவ்வாய் என தாரதோஷமும் புத்திரதோஷமும் உள்ள ஜாதகம். களத்திரகாரகன் சுக்கிரனும் ராகு கேதுக்களுடன் சம்பந்தப்பட்டார்.
ராசிக்கு ஏழு எட்டில் செவ்வாய் சனி இருந்தாலே தாமததிருமணம் கலப்புத் திருமணம் போன்ற அமைப்புக்கள் உண்டு. நடப்பு ராகு தசையில் ராகுவும் புதனும் சாரபரிவர்த்தனை பெற்றதும் பலவீனம். விருச்சிக ராகு யோகம் தர மாட்டார். வரும் மேமாதம் முதல் ஏழுக்குடைய குருதசை ஆரம்பிப்பதாலும் குருபகவான் ராசிக்கு ஏழாமிடத்தைப் பார்ப்பதாலும் வரும் ஜூலை மாதத்திற்குமேல் வருட இறுதிக்குள் கண்டிப்பாக திருமணம் நடக்கும். பத்தில் சூரியன் திக்பலம் பெற்று குருபார்வை பெற்றதால் அரசுவேலை நிச்சயம் உண்டு. ஆனால் அரசுவேலை நீடிக்கும் வாய்ப்பு குறைவு.
ஜோதிடர். காசிவிசுவநாதன், சென்னை - 108.
கேள்வி:
ஜோதிடப் பேரரசுவின் பாதம் பணிகிறேன். பேஸ்புக்கில் நீங்கள் எழுதும் ராகுகேதுக்களைப் பற்றிய சூட்சுமங்களை என் பேத்தியின் உதவியுடன் படித்துப் பிரமித்தேன். கம்ப்யூட்டர் பற்றித் தெரியாத என்போன்ற மூத்த தலைமுறைக்கு இதுபோன்ற விஷயங்களை மாலைமலரில் எழுதினால் உபயோகமாக இருக்குமே என்ற என் கோரிக்கையை பணிவுடன் சமர்ப்பிக்கிறேன்.
பதில்:
மாலைமலரில் கடந்த மூன்று வாரங்களாக வெள்ளிக்கிழமைதோறும் வெளிவரும் “ஜோதிடம் எனும் தேவரகசியம்” தொடரில் இதுபோன்ற விஷயங்களையும் எழுத இருக்கிறேன்.
சு.குமரேஷ், திருநெல்வேலி.
கேள்வி:
சந் கே
ராசி  சூ குரு
சனி  பு,சுக் செவ்
ரா
1-8-1991. 1.15 am, நெல்லை.
பொறியியல் கல்லூரியில் சேர்ந்தும் கல்லூரிக்குச் செல்ல முடியவில்லை. நான் சிவில் என்ஜினீயர் படிக்கவா? அல்லது வழக்கறிஞர் படிக்கலாமா? அல்லது படிக்கவே முடியாதா? எதிர்காலத்தைப் பற்றிய பயத்தில் இருக்கிறேன். உங்களின் தீவிர ரசிகனுக்கு பதில் தர வேண்டுகிறேன்..
பதில்:
ரிஷப லக்னம், மீன ராசி. இரண்டில் கேது, மூன்றில் சூரியன், குரு. நான்கில் புதன், சுக்கிரன், செவ்வாய். ஒன்பதில் சனி.
சுக்கிரனும், செவ்வாயும் சேர்ந்தால் வீடுகட்டும் என்ஜினீயர் ஆகமுடியும். தொழில் ஸ்தானமான பத்தாம்பாவம் சனியின் வீடாகி இவர்கள் இருவரும் பத்தாம் வீட்டைப் பார்ப்பதால் சிவில் என்ஜினீயர் படிப்பு உங்களுக்கு பொருத்தமானது. கடந்த மூன்று வருடங்களாக அஷ்டமச்சனி நடந்ததால் படிக்க முடியவில்லை. இனிமேல் கல்லூரிக்குச் செல்ல முடியும். எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.
எஸ்.ராஜேஸ்வரி சேதுபதி, சேலம்.
கேள்வி:
சந்
ராசி  சுக் ரா
கே
 செவ் பு சூ,குரு சனி
28-9-1980, 6.05 pm, சேலம்.
எங்கள் மருமகன் திருமணத்தின்போது பெங்களூர் இன்போசிஸ்சில் வேலை செய்தார். இப்போது இரண்டரை வருடங்களாக வேலை இல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார். ஒரு பெண் குழந்தை உள்ளது. வேலையைப் பற்றிக் கேட்டால் சரியான வேலை அமையவில்லை என்று சொல்கிறார். அவருக்கு எப்போது வேலை கிடைக்கும்? சுயதொழில் செய்ய போகிறேன் என்கிறார். சரியாக வருமா?
பதில்:
மீனலக்னம், ரிஷபராசி. ஐந்தில் சுக்கிரன், ராகு. ஏழில் சூரியன், குரு, சனி. எட்டில் செவ்வாய் புதன்.
மருமகன் அரங்கநாதனுக்கு தற்போது ராகு தசையில் சந்திர புக்தி நடக்கிறது. நான் அடிக்கடி எழுதுவது போல ராகு தசை சுக்கிர புக்திக்குப் பிறகு ஒரு திருப்பம் இருக்கும் என்பதன்படி சூரிய புக்தியில் அவருக்கு வேலை போய்விட்டது. ராகு தசை முடியும் வரை இப்படித்தான் இருப்பார்.
2016 ஜூன் மாதம் ஆரம்பிக்கும் குருதசையில்தான் அவருக்கு நிரந்தர வேலை, தொழில் அமைப்புகள் உருவாகும். இடைப்பட்ட காலத்தில் சோம்பலாய் இருக்காமல் கிடைக்கும் வேலைக்கு போகச் சொல்லவும். டெக்ஸ்டைல்ஸ் சம்பந்தபட்ட தொழில் அவருக்கு ஒத்துவராது.
முதலிரவுக்குத் தடை நீங்குமா?

க.ராஜூ, சேலம் - 6.
கேள்வி:
சந்  கே
ராசி சுக்
சனி  குரு
 ரா ல சூ,பு செவ்
25-09-1991, 1.35 pm, சேலம்.
என் பேரனுக்கு 29-8-2014 அன்று திருமணம் நடந்தது. சாந்திமுகூர்த்த இரவில் பேரனின் மனைவி நீ நல்லவனா? கெட்டவனா? யோக்கியனா? அயோக்கியனா? பெண்களை ஏமாற்றியவனா? பெண்களை சுற்றி அலைபவனா? என்று கேள்வி கேட்டு கருத்துவேறுபாடு ஏற்பட்டு முதலிரவு நடக்காமல் தற்போது பிரிந்து வாழ்கிறார்கள். பொருத்தம் பார்த்து, சடங்கு, சம்பிரதாயம் செய்து, ஜோதிடர் சொன்னபடி, அய்யர் வைத்து, ஈஸ்வரன் சன்னதியில் நடந்த திருமணத்திற்கு ஏன் இந்த நிலைமை? இருவரும் ஒன்று சேர்வார்களா?
பதில்:
நீங்கள் செய்த தவறுகளுக்கு பரம்பொருளை ஏன் குறை சொல்கிறீர்கள்? உங்கள் பேரனுக்கும் மீன ராசி, பெண்ணிற்கும் மீன ராசி. அஷ்டமச்சனி நடக்கும் இருவருக்கு திருமணம் செய்ததே தவறு. மணமக்கள் இருவரில் ஒருவருக்கு சனி இருந்தாலும் பரவாயில்லை. இருவருக்குமே சனி என்கிற பொழுது அஷ்டமச்சனி முடிந்தபிறகுதான் திருமணம் செய்திருக்க வேண்டும்.
உங்கள் பேரனின் ஜாதகம் தவறாக கணிக்கப்பட்டு லக்னம் மாறுவதாக தோன்றுகிறது. பிறந்தநேரம் குறிப்பிட்ட பக்கத்தை நீங்கள் அனுப்பாததால் மணபெண்ணின் பிறந்த விவரங்களை மட்டும் வைத்துப் பார்க்கையில் பெண்ணின் லக்னம் தனுசு, மீனராசி. லக்னத்தில் ராகு. இரண்டில் சனி. ஏழில் கேது. எட்டில் சுக்கிரன். ஒன்பதில் குரு. பத்தில் சூரியன், புதன், செவ்வாய்.
பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திற்கு இரண்டில் சனி. ராசிக்கு ஏழில் செவ்வாய். சுக்கிரன் எட்டில் மறைவு. கணவன் ஸ்தானத்தில் கேது இருக்கும் அமைப்புள்ள பெண்ணிற்கு 23வயதில் திருமணம் செய்தது பெரிய தவறு. பெண்ணிற்கு தற்போது நடக்கும் சுக்கிர தசையில் ராகு புக்தி மார்ச் 16 தேதி 2015 வரை பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும்.
பொதுவாக சுக்கிரதசையில் குருபுக்தி கணவன்-மனைவியிடையே பிரிவை ஏற்படுத்தும். ஆனால் இந்தப் பெண்ணிற்கு குருபகவான் லக்னாதிபதி என்பதால் நடக்கும் பிரச்சினையில் தீர்வை ஏற்படுத்துவார். அஷ்டமச்சனி முடிந்து விட்டதால் பிரிவினை என்பது இல்லை. தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். அடுத்தவருடம் கொள்ளுப்பேரனைக் கொஞ்சுவீர்கள். கவலை வேண்டாம்.
எம். அஸ்மத், வாலாஜாபேட்டை.
கேள்வி:
ரா
ராசி  சந்
குரு
பு சனி  சூ,சுக் கே செவ்
ஏழ்மையான வீட்டில் பிறந்து இதுவரை வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை. ஒரு ஜோதிடர் சுக்கிரன் ஆட்சி பெற்றதால் வெளிநாடு செல்ல வாய்ப்பு இருக்கிறது என்று சொல்கிறார். நடக்குமா?
பதில்:
ஜோதிடர் சொன்னது சரிதான். மீன லக்னமாகி, அஷ்டமாதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்றதால் வெளிநாடு சென்று பிழைப்பீர்கள். பிறந்த நேரம், தசா புக்தி விவரங்கள் அனுப்பாததால் எப்போது செல்வீர்கள் என்று என்னால் சொல்ல முடியவில்லை.
எஸ்.கிருஷ்ணன், திருநள்ளாறு.
கேள்வி:
செவ் கே சுக் சூ
 சந் ராசி  பு
சனி  ரா குரு
5-7-1958, 6.30pm, காரைக்கால்.
நான்கு பெண்கள் பெற்று மூன்று பேரை நல்ல முறையில் திருமணம் செய்து வைத்துவிட்டேன். அரசு ஊழியரான எனக்கு அளவுக்கு அதிகமான கடன் சுமை. வட்டி கட்ட முடியவில்லை. இதுநாள் வரையிலும் பணக்கஷ்டம்தான். கடனில் இருந்து எப்போது விடுதலை கிடைக்கும்?
பதில்:
தனுசு லக்னம், கும்ப ராசி. நான்கில் செவ்வாய். ஐந்தில் கேது. ஆறில் சுக்கிரன். ஏழில் சூரியன். எட்டில் புதன். பத்தில் குரு. பனிரெண்டில் சனி.
ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதியை விட ஆறுக்குடையவன் வலுப்பெற்றால் தீராத கடன் தொல்லை, அல்லது ஆரோக்கியக் குறைவு இருக்கும். உங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி குருவின் ஜென்ம விரோதியான சுக்கிரன் ஆறாம் இடத்தில் ஆட்சி பெற்ற நிலையில் குருபகவான் பகை பெற்று வலுவிழந்தது பலவீனம்.
28வயதிற்கு மேல் உங்களுக்கு நடந்த ஆறாம் வீட்டோனின் பார்வையைப் பெற்ற சனி தசையும் தற்போது நடக்கும் எட்டில் மறைந்து சனிசாரம் பெற்ற புதன் தசையும் கடன் தொல்லைகளைத்தான் தரும். அறுபத்தி நான்கு வயதிற்கு மேல் நடக்க இருக்கும் கேது தசையில் கொஞ்சம் நிம்மதி இருக்கும்.
தேவி, குரோம்பேட்டை.
கேள்வி:
ரா
ராசி
சூ,பு குரு சுக் கே  சனி சந் செவ்
27-12-1983, 11.55am, சென்னை.
மகளுக்கு 2008-ல் திருமணம் முடிந்து தற்போது விவாகரத்து வரை வந்து விட்டது. மார்ச் மாதம் தீர்ப்பு. பல ஜோதிடர்கள் அவளுக்கு இருவாழ்க்கை என்று சொல்கின்றனர். மகளின் எதிர்காலம் பற்றி தயவு செய்து கூறவும்.
பதில்:
மீன லக்னம், கன்னி ராசி. மூன்றில் ராகு. ஏழில் செவ்வாய். எட்டில் சனி. ஒன்பதில் சுக்கிரன், கேது. பத்தில் சூரியன், புதன், குரு.
லக்னத்திற்கு ஏழில் செவ்வாய். எட்டில் உச்சசனி. ராசிக்கு இரண்டில் சனி. லக்ன ஏழாம் இடத்திற்கோ, ராசியின் ஏழாம் இடத்திற்கோ சுபர் பார்வை இல்லாத இந்த ஜாதகத்திற்கு 25வயதில் திருமணம் ஆனது கர்மவினை. ராகுவின் சூட்சுமங்களில் நான் எழுதியுள்ளதைப் போல ராகு தசை சுக்கிர புக்தியில் தாம்பத்திய சுகத்திற்காக திருமணம் நடந்து விதி விளையாடி விட்டது. உங்கள் மகளுக்கு இரண்டு வாழ்க்கைதான்.

ஆனால் தற்போது ஏழரைச்சனி முடிந்துவிட்டதாலும் லக்னாதிபதி குருவின் தசையில் சுயபுக்தி வரும் ஜூன் மாதத்துடன் முடியப்போவதாலும் கடந்தகால அனுபவங்களில் பாடம் கற்று இனிமேல் உங்கள் பெண் நன்றாக இருப்பார். அடுத்த வாழ்க்கை நிம்மதியாகவும், நன்றாகவும் அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Site is undergoing maintenance

adityaguruji

Maintenance mode is on

Site will be available soon. Thank you for your patience!

Lost Password