ராகுவின் உச்ச நீச வீடுகள் எது? – 53 சி

ஜோதிடம் எனும் தேவரகசியம் கட்டுரைகள் மாலைமலரில் வெளிவரும் தினமன்று எனது அலுவலக அலைபேசி எண்ணுக்கு நூற்றுக்கணக்கான அழைப்புக்கள் வரும். ஆனால் சென்ற வாரம் அது இருமடங்காகக் கூடியிருக்கிறது.

பேசிய அனைவருமே என்னிடம் ஒரு விளக்கம் கேட்டுப் பதிவு செய்திருக்கிறீர்கள்.

ஓரிரு வாரங்களுக்கு முன் எழுதிய ராகுவின் சூட்சும விளக்கக் கட்டுரையில் மூன்று பதினொன்றாமிடங்களில் இருக்கும் ராகு அபார நன்மையைச் செய்வார் என்று எழுதிய நீங்கள் இந்த வாரம் மூன்று பதினொன்றாமிடங்களில் இருந்தாலும் ராகு நன்மைகளைச் செய்வதில்லை என்று எழுதியிருக்கிறீர்களே… இது என்ன முரண்பாடு..? என்பதே உங்கள் கேள்வி.

என்னுடைய அனுபவ ஆய்வுக் கட்டுரைகளைப் படிக்கும் எனது மாணவர்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்…

ஜோதிடத்தில் விதி என்ற ஒன்று இருந்தால் ஏதேனும் ஒரு நிலையில் அதற்கு விலக்கு என்ற ஒன்று இருந்தே தீரும்.

முன்பு எழுதிய கட்டுரையில் 3, 11 மிடங்களில் இருக்கும் ராகு நன்மையைச் செய்வார் என்று எழுதியது ஒரு பொதுவிதி. ஆனால் குடும்பத்தில் மற்றவர்களுக்கும் ராகுதசை நடக்கும்போது மாறுதலான பலனைத் தரும் என்பது அதன் விதிவிலக்கு.

ஜோதிடமே முரண்பாடுகளின் மேல் அமைந்ததுதான். எந்த விதியை அல்லது விதிவிலக்கை எங்கே பொருத்திப் பார்த்து பலன் சொல்ல வேண்டும் என்பதில்தான் உங்களின் மேதமை அடங்கியிருக்கிறது.

ராகு கேதுக்களைப் பற்றிய மேலும் சில நிலைகளை இந்த வாரமும் தொடர்ந்து பார்க்கலாம்…

பொதுவாக ராகு சனியைப் போலவும் கேது செவ்வாயைப் போலவும் பலன் அளிப்பார்கள் என்று நமது மூல நூல்களில் ஞானிகளால் சொல்லப் பட்டிருக்கிறது.

இதில் மறைந்திருக்கும் சூட்சுமம் என்னவெனில்….

சனியின் நண்பர்களான சுக்கிரன் புதன் ஆகியோரின் லக்னங்களான ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மற்றும் மகரம், கும்பம் ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு ராகு நன்மைகளைச் செய்வார்.

செவ்வாயின் நட்புக் கிரகங்களான சூரியன் சந்திரன் குரு ஆகியோரின் லக்னங்களான கடகம் சிம்மம் தனுசு மீனம் மற்றும் மேஷம் விருச்சிகம் ஆகிய ஆறு லக்னங்களில் பிறந்தவர்களுக்கு கேது நன்மைகளைச் செய்வார் என்பதுதான்.

மேற்படி இரு பிரிவு லக்னங்களில் பிறந்தவர்களுக்கும் அவரவர் லக்னங்களுக்கு ஏற்றபடி நல்ல அமைப்புகளில் ராகு கேதுக்கள் அமைந்து விட்டால் மிகப் பெரிய நன்மைகளைச் செய்கின்றன.

அதோடு இன்னும் ஒரு சூட்சுமமாக மிதுன லக்னத்திற்கு மட்டும் ராகுபகவான் கெடுதல்களைச் செய்யாத யோகர் எனும் நிலை பெறுவார்.

பொதுவாக மிதுனத்திற்கு சுக்கிரன் மட்டுமே சுபர் ஆகிறார். பாக்யாதிபதியான சனி பகவான் அஷ்டமாதிபத்தியமும் அடைவதாலும் லக்னாதிபதியான புதன் நான்காமிட கேந்திரத்திற்கு அதிபதியாகி கேந்திராதிபத்திய தோஷம் அடைவதாலும் இருவருமே சுபர் எனும் நிலை பெற மாட்டார்கள்.

அதோடு இயற்கைப் பாபக்கிரகமான சனிபகவான் மிதுனத்திற்கு ஒன்பதாம் பாவமான திரிகோணத்திற்கு அதிபதியாவதால் ராகு மட்டுமே மிதுனத்திற்கு யோகம் செய்வார். (சுபர் வேறு யோகர் வேறு என்பதை புரிந்து கொண்டு படியுங்கள்.)

என்னுடைய முப்பதாண்டுகளுக்கும் மேலான ஆராய்ச்சியில் மிதுன லக்னத்தவர்களுக்கு ராகு கெட்ட இடத்தில் இருந்தாலும் அல்லது பாபர்களுடன் கூடி தசை நடத்தினாலும் முற்றிலும் கெடுதல்கள் செய்வது இல்லை.

பெரும்பாலான வடமொழிக் கிரந்தங்கள் ராகுவிற்கு மிதுனம் உச்சவீடு என்று சொல்கின்றன. இதுகூட மிதுனத்திற்கு ராகு யோகம் செய்வதன் காரணமாக இருக்கலாம்.

மேலும் ராகு கேதுக்களின் ஆட்சி உச்ச நீச நிலைகளைப் பற்றி பல விதமான கருத்துக்கள் உள்ளன.

ராகு சனியைப் போல செயல்படுபவர் என்பதால் சனியின் ஸ்திர வீடான கும்பம் ராகுவின் ஆட்சி வீடு எனவும், கேது செவ்வாயைப் போல பலன்களைத் தருவார் என்பதால் செவ்வாயின் ஸ்திர வீடான விருச்சிகம் கேதுவிற்கு ஆட்சி வீடு எனவும் சில வடமொழி நூல்கள் குறிப்பிடுகின்றன.

ஆனால் ஏற்கனவே பருப்பொருளுடைய முழுமையான கிரகங்கள் ராசிமண்டலத்தில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தும் இடங்கள் நம் ஞானிகளால் அறிந்து பகுக்கப்பட்டு ஏழு கிரகங்களுக்குமான ஆட்சி வீடுகளாக பிரித்து ஒதுக்கப்பட்டு விட்ட நிலையில் பருப்பொருளே இல்லாத வெறும் நிழல்களான ராகு கேதுக்களுக்கு அவைகளில் இரண்டை ஒதுக்குவது அர்த்தமற்றதாகவும் நமது ஒப்பற்ற ஞானிகளன்றி வேறு எவரோ செய்த இடைச்சொருகலாகவும் எனக்குத் தோன்றுகிறது.

எனவே ராகு கேதுக்களுக்கு ஆட்சி வீடுகள் என்ற ஆராய்ச்சியே தவறு என்றும் சொல்லத் தோன்றுகிறது.

ஆனால், பராசர ஹோரையில் மகரிஷி பராசரர் ராகுவிற்கு ரிஷபம் உச்சவீடு, கடகம் மூலத்திரிகோணம், கன்னி ஆட்சி வீடு என்று கூறுகிறார். மகரிஷி காளிதாசரும் தனது உத்தர காலாம்ருதத்தில் ராகுவிற்கு ரிஷபம் உச்ச வீடு என்கிறார்.

பெரும்பாலான தென்னிந்திய மூல நூல்களில் ராகுவிற்கு விருச்சிகம் உச்சம் ரிஷபம் நீசம் என்றே சொல்லப்பட்டிருக்கிறது.

என்னுடைய நீண்ட கால அனுபவத்தின்படியும் பாபக் கிரகங்கள் நேர்வலுவடையக் கூடாது, அப்படி வலுவடைந்து ஸ்தான பலம் பெற்றால் கெடுப்பார்கள் என்ற எனது “பாபக் கிரகங்களின் சூட்சும வலு” தியரிப்படியும் ரிஷப ராகு எவரையும் கெடுத்தது இல்லை. நன்மைகள்தான் செய்கிறது.

அதே நேரத்தில் விருச்சிக ராகு தசையில் கெட்ட பலன்கள்தான் நடக்கின்றன என்பதால் விருச்சிகம் ராகுவிற்கு உச்சம்… ரிஷபம் ராகுவிற்கு நீசம் என்றே நான் கணிக்கிறேன்.

மேலும் காலபுருஷ தத்துவத்தின்படி நமக்கு ஒளி வழங்கும் மூல ஒளிக் கிரகங்களான சூரியனுக்கும் சந்திரனுக்கும் கால புருஷனின் முதல் இரண்டு வீடுகளான மேஷமும் ரிஷபமும் உச்ச வீடுகளாயின.

இந்நிலையில் சந்திரனால் உருவாகும் நிழல் கிரகமான ராகுவிற்கும் சந்திரனின் உச்ச வீடான ரிஷபத்தை பங்கிட்டு அளிப்பது இருட்டுக்கும் வெளிச்சத்திற்கும் ஒரே இடம் என்ற நிலையில் பொருத்தமற்றது என்பது என் கருத்து.

அதே நேரத்தில் இருளும் ஒளியும் எதிர் எதிர் நிலை கொண்டவை என்பதாலும் விருச்சிகத்தில் வேறு எந்த கிரகமும் உச்சநிலை அடைவதில்லை என்பதாலும் ரிஷபத்தின் நேர் எதிர் வீடான விருச்சிகத்தை ராகுவிற்கு உச்ச வீடாகக் கொள்வதே பொருத்தமாகவும் இருக்கும்.

(இது பற்றிய இன்னும் சில சூட்சும விளக்கங்கள் இருக்கின்றன. அவற்றை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்.)

நமது ஜோதிடத்தின் மூலநாயகனும், தன் நேர் எதிரில் வருபவர்களை அஸ்தமனமாக்கி வலுவிழக்க வைப்பவனும், நாம் அனைவரும் தோன்றக் காரணமான முழுமுதல் ஜோதியான சூரியனின் ஒளியையே மறைப்பவரான ராகு பகவானின் இன்னும் சில சூட்சுமங்களை அடுத்த வெள்ளிக்கிழமையும் பார்க்கலாம்…..

ராகு கேதுக்களுக்கு பார்வை உண்டா?

ராகுகேதுக்களுக்கு 3 7 11 மிட பார்வை உண்டு என்று சிலர் கூறுகின்றனர். இதைப் பற்றியும் நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.

கிரகங்களின் பார்வை என்பதே அவற்றின் ஒளி வீச்சுத்தான் என்பதை ஏற்கனவே நான் விளக்கியிருக்கிறேன்.

அதன்படி சுயஒளியும் இல்லாத, ஒளியைப் பிரதிபலிக்கவும் முடியாத வெறும் இருட்டுக்களான ராகு கேதுக்களுக்கு பார்வை பலம் உண்டு என்பது இயல்புக்கு மாறானது. எனவே ராகு கேதுக்களுக்கு பார்வை பலம் இல்லை என்பதே எனது கருத்து.

ஆயினும் ராகு கேதுக்கள் ஒருவருக்கு ஒருவர் நேர் எதிராக 180 டிகிரியில் சுற்றி வருபவை என்பதால் ஒன்று அடுத்ததை… அதாவது அது நிற்கும் ஏழாம் பாவத்தை நிச்சயம் பாதிக்கும். அதனை ஏழாம் பார்வை என்பது பொருத்தமற்றது.

ராகு கேதுவை ஏழாம் பார்வையாக பார்க்கிறது கேது ஏழாம் பார்வையாக ராகுவை பார்க்கிறது என்று சொல்லக் கூடாது. அது தவறு.

எனது இந்தக் கருத்தை மறுப்பவர்கள் ராகுவின் மூன்றாம் பார்வையில் இந்த பலன் நடந்தது, பதினோராம் பார்வையால் இந்த பாவம் பாதிக்கப்பட்டது என்று ஒரு ஜாதகத்தை உதாரணமாகச் சொல்வீர்களேயானால் நான் உங்களுக்கு சொல்வது…

அந்த ஜாதகத்தை இன்னும் நன்றாக கவனமுடன் பாருங்கள். அந்தச் செயலோ அந்த பாவமோ வேறு ஏதேனும் ஒரு வகையில் தான் பாதிக்கப் பட்டிருக்கும் என்பதை நீங்களே உணருவீர்கள். இது உறுதி.

( ஏப்ரல் 29 – 2016 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

2 Comments on ராகுவின் உச்ச நீச வீடுகள் எது? – 53 சி

  1. Guruji namaste

    Ur articles are excellent, while reading ur articles and ur personal experiences give up a good foundation and strong intuition to me.
    Ohm jyothisha eeshwaraya namaha

Leave a Reply

Your email address will not be published.


*


Retype the CAPTCHA code from the image
Change the CAPTCHA codeSpeak the CAPTCHA code