சனிபகவான் ஆன்மீகம் தரும் நிலைகள்…- 42

சனிபகவான் அவயோகம் தரும் மேஷம் முதலான லக்னங்களுக்கு அவர் என்ன நிலையில் இருந்தால் என்ன பலன் என்பதை இப்போது பார்க்கலாம்…

மேஷலக்னத்திற்கு சனிபகவான் பத்து மற்றும் பதினொன்றாம் இடங்களுக்கு அதிபதியாகி ஒரு மனிதனின் தொழிலுக்கு அதிபதி எனும் ஜீவனாதிபதி நிலையையும் அவனுக்கு கெடுதல் செய்யும் பாதகாதிபதி எனும் நிலையையும் அடைவார்.


இந்த லக்னத்திற்கு அவர் லக்னத்தில் நீசமடைவார் என்பதால் ஒரு நீசக்கிரகம் லக்னத்தில் இருக்கக் கூடாது எனும் அடிப்படையில் அவர் லக்னவீட்டில் இருப்பது சரியான நிலை அல்ல.

லக்னத்தில் சனி இருப்பதால் ஜாதகர் முரண்பாடான சிந்தனைகள் கொண்ட பிடிவாதக்காரராக இருப்பார். எதிர்மறையான எண்ணங்களையும் குறுகிய மனப்பான்மை, குதர்க்கம், விதண்டாவாதம் போன்றவைகளையும் லக்னத்தில் இருக்கும் சனி ஜாதகருக்குத் தருவார். லக்னத்தில் சனி இருக்கும் நிலையில் அவர் சுபர்களின் தொடர்போ சூட்சுமவலுவோ பெற்றிருந்தால் நல்லது.

இரண்டாம் வீட்டில் நட்பு நிலை பெற்றிருந்தால் திருமணத்தை தாமதப்படுத்துவார். முறையற்ற திருமணம் அல்லது திருப்தியற்ற மணவாழ்க்கை ஆகியவற்றை அளிப்பார். தனது தசை புக்திகளில் குடும்பத்தில் குழப்பத்தையும், பிரிவினையையும் தந்து பொருளாதாரச் சிக்கல்களையும் உண்டு பண்ணுவார்.

இரண்டில் இருக்கும் சனி ஒருவரைத் திக்குவாயாகவோ அல்லது சிறிய விஷயத்திற்குக் கூட பொய் சொல்பவராகவோ மாற்றக்கூடும். சுபத்துவம் பெறும் நிலைகளில் ஜீவனாதிபதி வாக்குஸ்தானத்தில் இருக்கிறார் எனும் அமைப்புப்படி பொய் சொல்ல வைப்பது சனியின் காரகத்துவம் என்பதால் வக்கீல் மார்க்கெட்டிங் போன்ற தொழில்களின் மூலம் பொருள் தருவார்.

மேஷத்திற்கு சனிபகவான் உபசய ஸ்தானங்கள் என்று சொல்லப்படும் மூன்று மற்றும் ஆறாமிடங்களில் இருப்பது மிகச்சிறந்த பலன்களை அளிக்கும். ஆறாமிடத்தில் அவர் இருக்கும் நிலையில் அவருடன் புதன் இணையக் கூடாது. இதர சுபர்களான . சந்திர, சுக்கிர, குருபகவானின் தொடர்புகள் இந்த மூன்று, ஆறு இடங்களில் சனி இருக்கும் நிலையில் நன்மைகளைத் தரும்.

கேந்திர கோணங்களான நான்கு, ஐந்தாமிடங்களில் அவர் இருப்பது நன்மைகளைத் தராது. இந்த வீடுகள் சூரிய, சந்திரர்களின் வீடுகள் என்பதால் அங்கே சனிபகவான் பகைநிலை பெற்று இந்த இடத்தின் காரகத்துவங்களான வீடு, வாகனம், தாயார், குழந்தைகள், அதிர்ஷ்டம் ஆகியவற்றைக் கெடுப்பார்.

உதாரணமாக நான்காமிடத்தில் அவர் இருக்கும் நிலையில் இந்த வீட்டின் அதிபதியும் காரகனுமாகிய சந்திரனும் கெட்டிருந்தால் ஜாதகருக்கு வீடு வாகனம் கல்வி தாயாரின்ஆதரவு போன்றவைகள் இருக்காது. சூரியன் பலவீனமாகி சனி ஐந்தில் இருந்து காரகனாகிய குருவும் வலுவிழந்திருந்தால் ஜாதகருக்கு குழந்தைகள் இருக்காது. அல்லது ஆண் வாரிசு தோஷம் இருக்கும்.

ஏழில் உச்சம் பெற்று சுபத்துவமும் சூட்சும வலுவும் அடைந்திருந்தால் ஜாதகரை ஊராட்சித்தலைவர் கிராம ஊழியர் போன்ற மக்கள் தொடர்புப் பணிகளில் ஈடுபடுத்துவார். பொதுப்பணத்தை மோசடி செய்தல் போன்ற அவரது காரகத்துவங்களில் முறையற்ற வழிகளில் வருமானம் இருக்கும்.

இங்கு உச்சம் மட்டும் பெற்று பாபத்துவ வலுவோடு இருந்தால் ஜாதகருக்கு தன்னை விட வயதில் மூத்தவர்களோடு ஈர்ப்பு இருக்கும். சில நிலைகளில் முறையற்ற காமம் கிடைக்கும். தாமத திருமணம் மணவாழ்வில் திருப்தியின்மை போன்ற பலன்கள் உண்டு.

இன்னும் ஒரு முக்கிய பலனாக சனிபகவான் சுபத்துவமும் சூட்சும வலுவும் பெற்று லக்னத்தோடு தொடர்பு கொள்ளும் நிலையில் ஒருவரை உண்மையான மேன்மையான நேர்மையான ஆன்மீகவாதி ஆக்குவார். ஒருவரைச் சித்து நிலைக்குச் கொண்டு செல்வதில் முக்கியப் பங்கு வகிப்பவர் சனிபகவான்தான்.

இந்த அமைப்பினை நான் குருபகவானைப் பற்றிய சூட்சுமங்களில் குறிப்பிட்டிருக்கிறேன். ஒருவருடைய ஆன்மீக ஆர்வத்திற்கும் ஈடுபாட்டிற்கும் குரு சனி கேது ஆகிய மூன்று கிரகங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. மேற்கண்ட இந்த கிரகங்கள் லக்னம் அல்லது ராசியோடு சுபத்துவம் மற்றும் சூட்சுமவலுப் பெற்று தொடர்பு கொள்கையில் ஒருவர் ஆன்மீகத்தில் உச்சநிலையினை அடைவார்.

ஒருவர் ஆன்மீகத்தில் உயர்வடைய வேண்டும் எனில் குருபகவான் ஐந்து ஒன்பதாம் இடங்களில் இருக்க வேண்டும். லக்னம் அல்லது ராசியோடு தொடர்பு கொண்டிருக்க வேண்டும். சனி ஐந்து ஒன்பதாம் வீடுகளில் இருக்கக் கூடது.

ஒருவரை குருபகவான் எதிர்பார்ப்புகளற்ற ஆன்மீகவாதியாக்குவார். சனி எதிர்பார்ப்புகள் உள்ள ஆன்மீகவதியாக்குவார். இதில் உள்ள சூட்சும நிலைகளை குரு பற்றிய கட்டுரைகளில் நான் விளக்கி விட்டதால் இங்கே மீண்டும் விவரிக்கத் தேவையில்லை.

சனிபகவான் சூட்சுமவலுப்பெற்று லக்னம் மற்றும் ராசியோடு தொடர்பு கொண்டால் ஒருவருக்கு ஆன்மீகத்தேடல் இருக்கும். குறிப்பாக சென்ற பிறவியில் நான் என்னவாக இருந்தேன் இறந்தபின் என்ன ஆவேன் போன்ற விடை காண முடியாத கேள்விகளுக்கு சொந்தக்காரர் சனிபகவான்தான்.

ஒரு கிரகம் இரு வேறுபட்ட முரண்பாடான நிலைகளைத் தரும் என்பதை சில வருடங்களுக்கு முன் வெளிவந்த உங்கள் ஜாதகம் யோக ஜாதகமா கட்டுரைகளில் விளக்கியிருந்தேன்.

அதன்படி ஒரு மனிதனுக்குத் தேவையற்ற அனைத்து விஷயங்களையும் தருவதற்கு விதிக்கப்பட்ட கிரகமான சனிபகவான் தான் முற்றிலும் நேர்வலு இழந்து சூட்சும சுபத்துவவலுப் பெறும் நிலைகளில் மனித சமுதாயம் பரம்பொருளால் படைக்கப்பட்ட நோக்கமான மனிதனுக்கு முற்றிலும் தேவையான பரம்பொருளை உணர வைக்கும் தேடல்களில் ஒரு மனிதனைக் கொண்டு செல்வார்.

அடுத்த வியாழன் தொடருவோம்….

ஜோதிடத்தில் பலன் தவறுவது ஏன் ?

எந்த ஒரு ஜோதிடராலும் உலகின் எத்தகைய ஜோதிட முறையிலும் நூறு சதவிகித சரியான பலனைச் சொல்லவே முடியாது.

ஜோதிடம் என்பது எதிர்காலத்தைக் காட்டும் ஒரு இயல் என்பதால் ஒரு ஜோதிடனால் எதிர்காலத்தை துல்லியமாகச் சொல்ல முடிந்தால் அவன் கடவுளுக்கு அருகில் செல்வான்.

நேற்றையும், இன்றையும், நாளையும் அறிந்தது பரம்பொருள் மட்டுமே என்பதால் எந்த ஒரு ஜோதிடராலும் நூறு சதவிகித துல்லியபலன் சொல்வது என்பது இயலாத ஒன்று.

ஆயினும் நல்ல அனுபவமும் பரம்பொருளால் தனிப்பட்டுத் தரப்பட்ட ஜோதிட ஞானமும் கைவரப்பெற்ற ஒரு ஜோதிடரால் ஏறத்தாழ எழுபது சதவிகிதம் வரை துல்லியமான பலனைச் சொல்ல முடியும்.

ஜோதிடம் என்றுமே பொய்ப்பதில்லை. ஜோதிடர்களும் மனிதத் தவறுகளுமே ஜோதிடத்தைப் பொய்க்க வைக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வி.ஐ.பி. குடும்பத்தின் மூலம் எனக்கு அறிமுகமான ஒரு தொழிலதிபர் குறுகிய காலத்தில் என்னுடைய நெருங்கிய நண்பரானார். ஜோதிடத்தை நம்பாத பகுத்தறிவு கொள்கைகளைக் கொண்ட அவரது குழந்தைகளுக்கு நான் சொன்ன மிகச்சரியான பலன்களை வைத்து ஜோதிடத்தை என்னுடன் விவாதித்து ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு உயர்ந்தார்.

குழந்தைகளுக்கு மிகச்சரியாகப் பலன் சொல்லும் நீங்கள் எனக்குச் சொல்பவை எதுவுமே சரியாக இல்லை என்ற மனத்தாங்கல் அவருக்கு எப்போதும் என்னிடம் உண்டு.

உடற்பயிற்சி செய்வதில் மிகுந்த ஆர்வமும், கட்டான உடலையும் கொண்டு மிகப்பெரிய உடற்பயிற்சி நிலையத்தின் அதிபருமான அவருடைய தொழில் விஷயத்தில் என்னுடைய கணிப்புகள் தவறின.

அறிமுகமான சமயத்திலேயே அவருடைய குழந்தைகள் இரண்டும் வெளிநாட்டில் மருத்துவப் படிப்பு படிப்பார்கள் என்று சொல்லியிருந்தேன். ஒரே மகனையும் மகளையும் வெகுதூரம் அனுப்ப எனக்கும் என் மனைவிக்கும் விருப்பம் இல்லை என்று மகன் பிளஸ்டூ முடித்த நிலையில் மீண்டும் ஜாதகத்தை தூக்கிக் கொண்டு வந்தார்.

2014-ம் வருடம் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் உங்கள் மகன் கிழக்கு நாடு ஒன்றில் மருத்துவக் கல்லூரியில் சேருவான் என்று உறுதி கூறினேன். வாய்ப்பே இல்லை என்று மறுத்துச் சொன்னவர் சில சம்பவங்களுக்குப் பிறகு நான் சொன்ன தேதியில் மகன் சிங்கப்பூரில் மருத்துவம் படிக்கக் கிளம்பிச் சென்ற அன்று மெய்மறந்து குழந்தைகளுக்கு சொல்வதெல்லாம் நடக்கிறது. எனக்குத்தான் நடப்பதில்லை என்றார்.

கடந்த சில மாதங்களாக வெளித்தோற்றத்தில் மிக ஆரோக்கியமான அவருக்கு உடல்நலப்பிரச்னை வந்தபோது ஜோதிடக்கணிப்பின்படி அவருக்கு ஒன்றும் ஆகாது என்று உறுதி கூறினேன். அவரது ஜாதகப்படி அவருக்கு மீனலக்னமாகி தர்மகர்மாதிபதிகளின் தசைபுக்தி அதாவது குருதசையில் செவ்வாய் புக்தி நடந்து கொண்டிருந்தது. ஆனால் நான்கு தினங்களுக்கு முன் இவர் மரணம் அடைந்து என்னை மிகப்பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

தர்மகர்மாதிபதிகளின் தசைபுக்தி நடக்கும்போது ஒரு மனிதனுக்கு மரணம் வருவதற்கு சாத்தியமே இல்லை. அதிலும் மீனலக்னத்தின் தர்மகர்மாதிபதிகளான குருவும் செவ்வாயும் நண்பர்கள் எனும் நிலையில் இது அசாத்தியமான ஒன்று.

குரு ரா
சனி ராசி
 செவ்
சூ கே
சுக்,பு
சந்

என்னுள் இருக்கும் ஜோதிடத்தேடலை கேள்விக்குறியாக்கி என்னைத் தூங்க விடாமல் செய்த என் உயிர்நண்பரின் மரணம் அதன் ஜோதிட காரணத்தைத் தேடியபோது அவரது பிறந்த நேரம் தவறு என்ற விடையில் வந்து முடிந்தது.

இதுவும் ஒரு வகையில் பரம்பொருளின் விளையாட்டுத்தான். எத்தனை விஞ்ஞான முன்னேற்றங்கள் வந்தாலும் பிரபஞ்சத்தின் இரகசியத்தையே மனிதகுலம் கண்டறிந்தாலும் ஜனனத்தையும் மரணத்தையும் அவன் கையில் இருந்து பறித்துக் கொள்ளவே முடியாது.

எனது நண்பரின் பிறந்தநேரம் 25-12-1964 பகல் 12-30 சென்னை என்பதிலிருந்து பகல் 1-30 என்பதைப் பிறகு உணர்ந்தேன். பிறந்த நேரம் சரியானதும் அவருக்கு நான் சொன்ன தவறான கணிப்புகள் அனைத்தும் நேரானது. வேதஜோதிடம் ஒருபோதும் பிழை செய்யாது என்பதை எடுத்துச் சொன்னது.

பிறந்த நேரம் அறியப்பட்டதும் அவரது லக்னம் மீனத்தில் இருந்து மேஷமாக மாறியது. அவரது கட்டுடலுக்கும் உடற்பயிற்சி ஆர்வத்திற்கும் முன்கோபத்திற்கும் எந்த ஒரு விஷயத்திலும் இருந்த துடிதுடிப்பிற்கும் கடந்த சில வருடங்களாக அவருக்கு இருந்த பிரச்னைகளுக்கும் விடை கிடைத்தது.

மாறிய லக்னத்தால் தர்மகர்மாதிபதிகள் அஷ்டம விரயாதிபதிகள் ஆனார்கள். லக்னாதிபதி ஐந்தில் அமர்ந்து எட்டைப் பார்த்து லக்னாதிபதி என்பதை விட அஷ்டமாதிபதி எனும் நிலை பெற்றார்.

ஒருவரின் மரணத்தின்போது அன்றைய கிரகநிலையான கோட்சாரத்தில் லக்னாதிபதியோ ராசிநாதனோ அஷ்டமாதிபதியோ முழுவதுமாக வலுவிழந்து இருப்பார்கள். என் நண்பரின் இறுதிநாளன்று அவரது லக்ன அஷ்டமாதிபதியான செவ்வாய் ராகுவுடன் எட்டுடிகிரிக்குள் இணைந்து முற்றிலும் பலவீனமாகி இருந்தார்.

சரி.. இந்த பிறந்தநேரத் தவறை நீ முன்னரே உணர்ந்திருக்க முடியாதா என்று நீங்கள் கேட்பீர்களேயானால் எத்தனை பெரிய ஜோதிடன் ஆனாலும் அவனும் ஆசாபாசம் உள்ள சாதாரண மனிதன்தான். நெருங்கியவர்களின் மரணத்தை அவன் மனம் விரும்பாதபோது அவனது கண்கள் ஏதோ ஒரு வகையில் கட்டப்படும்.( நவ 26 – 2015 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

1 Comment on சனிபகவான் ஆன்மீகம் தரும் நிலைகள்…- 42

  1. எந்த ஒரு சோதிடனும் நூறு சதவீத பலனை கூறமுடியாது.எழுபது சதவீத பலனை சொல்வதற்கு கூட ஒருவருக்கு பரம்பொரூளின் அருளால் நல்ல குரு கிடைக்கவேண்டும்.நான் செய்த புண்ணியபலனால் நீர் நல்ல குருவாய் உங்களது பதிவால் வழிநடத்துகிறீரிர்கள்.நன்றி ஐயா

Leave a Reply

Your email address will not be published.


*