சனி எப்போது நன்மை செய்வார்? – 37

வேதஜோதிடத்தில் கணிக்கச் சிரமமான சனிபகவானின் சுப மற்றும் சூட்சும நிலைகளைப் பற்றி இந்த வாரமும் தொடர்ந்து பார்க்கலாம்..

ஏற்கனவே செவ்வாயைப் பற்றிய பகுதியில் செவ்வாய் எவ்வாறு சுபத்துவம் அடைகிறார் என்று விளக்கும்போது சனியைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன். இப்போது சனியின் நிலைகளைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்…


முதலில் ஒரு கிரகத்தின் சுபத்துவம் என்பது அந்தக் கிரகம் மனிதனுக்கு நன்மை செய்யும் அமைப்பில் இருப்பது என்று பொருள்படும். சுபஒளி பொருந்திய கிரகங்களே மனிதனுக்கு தேவைப்படும் நன்மைகளைத் தரும் தகுதிகளை பெறுகின்றன.

சுப ஒளியை இழந்த கிரகங்கள் பாபக்கிரகங்கள் எனவும் மனிதனுக்கு நன்மை செய்ய இயலாத தீயசெயல்பாடுகளை கொண்டவைகளாகவும் ஞானிகளால் நமக்குச் சொல்லப்பட்டிருக்கின்றன.

அதேநேரத்தில் ஒளியிழந்த நிலையில் இருக்கும் இந்த பாபக்கிரகங்கள் சுபக் கிரகங்களிடம் இருந்து ஒளியை பெறும் போது மட்டும் மனிதனுக்கு நன்மை தரக்கூடிய சுபத்துவம் எனும் நிலையை அடைகின்றன.

அதாவது பாபக்கிரகங்கள் சுபரின் பார்வையைப் பெறும்போதும் அவர்களுடன் சேரும்போதும் சுபத்துவம் அடைந்து தங்களின் இயல்புநிலை மாறி மனிதனுக்கு நன்மைகளைச் செய்கின்றன.

இந்த சுபத்துவ நிலையிலும் ஒரு நுணுக்கமான சூட்சும நிலையாக பாபர்கள் தங்களின் அருகில் இருக்கும் சுபரிடம் இருந்து ஒளியைப் பெறும்போது மட்டுமே அதிக நன்மைகளைத் தரும்.

அதன்படி செவ்வாய் தனக்கு அருகில் இருக்கும் ஒளிபொருந்திய கிரகமான சந்திரனின் தொடர்பையும் பார்வையையும் பெறும்போது அதிக நன்மைகளைச் செய்வார். தன்னிடமிருந்து அதிக தூரத்தில் இருக்கும் குருவின் பார்வையை விட அருகே இருக்கும் சந்திரனின் பார்வையைப் பெறும்போது மட்டுமே செவ்வாய் சுபத்துவம் அடைவார்.

இவ்வாறு சுபத்துவம் அடையும் நிலைகளில் தனது உண்மையான இயல்பான ரவுடித்தனம், ஆயுதம் தூக்குதல், முரட்டுசுபாவம், முன்கோபம், முன்யோசனை இல்லாமல் எதையும் செய்தல் போன்ற குணங்களை மாற்றி காவல்துறை ராணுவம் விளையாட்டு மருத்துவம் அதிகாரப்பணி போன்ற துறைகளில் ஜாதகரை ஈடுபடுத்துவார்.

இதில் சந்திரனின் வலுவைப் பொறுத்து செவ்வாயின் சுபத்துவம் இருக்கும். அதாவது சந்திரன் பவுர்ணமி தினத்தை நெருங்கி அதிக ஒளியுடன் சூரியனுக்குக் கேந்திரங்களில் இருந்து பார்க்கும்போது செவ்வாய் அதிக சுபத்துவம் அடைவார்.

உதாரணமாக காவல்துறையில் பணிபுரிபவர்கள் அனைவரும் செவ்வாயின் சுப ஆதிக்கத்தில் உள்ளவர்களே. செவ்வாயின் சுபத்துவநிலையைப் பொறுத்து அவர்களின் பணிநிலைகள் அமைகின்றன.

காவல்துறையில் கான்ஸ்டபிள் முதல் டிஜிபி வரை அதிகாரநிலை அடுக்கு உள்ளது. இதில் சிலர் காவலராக பணியில் சேந்து சப் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெறுகிறார்கள். இன்னும் சிலர் சப் இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்து ஏஎஸ்பி வரை பதவி உயர்வு பெற்று ஓய்வு பெறுகிறார்கள்.

மிகச்சிலர் மட்டும் பணியில் சேரும்போதே ஏஎஸ்பியாகச் சேர்ந்து அதன் உச்ச நிலையான டிஜிபிவரை சென்று ஓய்வு பெறுகிறார்கள். காவல்துறை என்றாலே செவ்வாய் சுபத்துவமாக இருக்க வேண்டும் எனும் நிலையில் இந்த பணிநிலை வேறுபாடுகள் செவ்வாயின் சுபத்துவத்தைப் பொறுத்தே அமைகின்றன.

ஒருவர் கடைசி வரை காவலராகவே இருக்க இன்னொருவர் மட்டும் அதே துறையில் காவலர் தலைவனாக டிஜிபியாக எப்படி இருக்கிறார் எனும் கேள்விக்கு செவ்வாயின் சுபவலுவும் அதனை சுபத்துவப்படுத்தும் சந்திரன் மற்றும் குருவின் ஒளியளவுகளின் ஏற்ற இறக்கங்களே இந்த வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன என்பதை நான் ஆதாரப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

ஜோதிடப்படி ஆதாரப்பூர்வமாக விஞ்ஞான ரீதியில் இதை என்னால் விளக்கவும் முடியும்.

சந்திரன் மற்றும் குருவுடன் தொடர்பு கொள்ளும் செவ்வாய் சுபத்துவம் அடைந்து தனது சுபகாரகத்துவங்களை அதாவது மனிதனுக்குத் தேவையான நல்ல செயல்பாடுகளைச் செய்வார். இதில் பூரணச் சந்திரனாக பவுர்ணமிக்கு அருகில் அல்லது பவுர்ணமியாக இருந்து செவ்வாயை பார்க்கும் நிலையில் இன்னொரு சுபரான குருவின் தொடர்பும் கிடைக்கப் பிறந்தவர் உயர்நிலைக்குச் செல்வார்.

சந்திரன் வளர்பிறையின் ஆரம்ப நிலையிலோ குறைவான ஒளியோடு இருக்கும் நிலையிலோ, குருவும் அதுபோல ஒளிநிலை பாதிக்கப்பட்டு குறைவான ஒளியோடு செவ்வாயோடு தொடர்பு கொள்ளும் நிலையில் பிறந்தவர் காவலர் பணியில் சேர்ந்து சப் இன்ஸ்பெக்டராக ஒய்வு பெறுவார்.

இதுவே சுபத்துவத்தின் சூட்சுமம்.

ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகளின் ஜாதகங்களை தெளிவாக ஆராய்ந்துள்ள என்னால் இதனை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும்.

இந்த சுபத்துவ நிலைகளில் இந்த வார தலைப்புக் கிரகமான சனியைப் பற்றி பார்ப்போமேயானால் சனிபகவான் சந்திரன் மற்றும் தனது நண்பரான சுக்கிரனின் பார்வையைப் பெறுவதை விட தனக்கு அருகில் இருக்கும் குருவின் பார்வை எனப்படும் ஒளி வீச்சினை பெறும் போது மட்டுமே தனது தீமைகளை தரும் நிலை மாறி அந்த மனிதனுக்கு நன்மைகளை தரும் தகுதியை பெறுவார்.

குருவுக்கு அடுத்து அவர் சுக்கிரனின் பார்வையாலும், சேர்க்கையாலும் அதனை அடுத்து தனித்த புதனின் பார்வையாலும் அதனை அடுத்து வளர்பிறைச் சந்திரனின் பார்வையாலும் அவர் பாபத்தன்மை நீங்கி சுபத்துவம் எனப்படும் நன்மை தரும் அமைப்பைப் பெறுவார்.

இதில் ஒரு முக்கிய சூட்சுமமாக சனியை சுபத்துவப் படுத்தும் அந்த சுபக்கிரகம் முழுப்பார்வைத் திறனுடனும் முழு வலிமையுடனும் இருக்கும் பட்சத்தில் சனி பகவான் முழுமையான சுபராவார். இல்லையெனில் சம்பந்தப்படும் சுபகிரகத்தின் வலுவுக்கேற்ப சனியின் சுபத்துவம் இருக்கும்.

அதாவது சனியுடன் தொடர்பு கொள்ளும் சுபக்கிரகம் முழுத்திறனுடன் இருக்க வேண்டும். உதாரணமாக விருச்சிகத்திலோ அல்லது சிம்மத்திலோ அசுபத் தன்மையுடன் இருக்கும் சனிபகவானை குரு தனுசிலோ, மீனத்திலோ ஆட்சி பெற்று தனது ஒன்பதாம் பார்வையாக முழுத்திறனுடன் பார்க்கும்போது சனி சுபத்தன்மை பெறுவார்.

ஆனால் குருபகவான் தனித்திராமல் அவருக்கு எதிரான வேறு கிரகங்களுடன் இணைந்தோ சூரியனுடன் இணைந்து அஸ்தமனமாகியோ ராகுவுடன் சேர்ந்தோ அம்சத்தில் பலவீனம் பெற்றோ ராசியின் ஆரம்பம் அல்லது முடிவில் இருந்தோ அல்லது இதுபோன்ற வேறு சில பலவீனமான அமைப்புகளில் இருந்து சனியைப் பார்த்தாரானால் சனி சுபத்துவம் அடையமாட்டார். சனியால் நன்மைகள் இருக்காது. சனி கொடூரமான பலன்களை செய்வார்.

இதுபோன்ற நிலைகளில் மேம்பாக்காக அந்த ஜாதகத்தில் குருபகவான் ஒன்பதாம் பார்வையாக சனியைப் பார்க்கிறார் என்று தோன்றினாலும் குருவுக்கே பார்வை இல்லாத நிலையில் ஜோதிடரின் கணிப்பு தவறும்.

எனவே ஒரு பாபக்கிரகம் சுபத்துவம் அடைந்திருக்கிறதா என்று கணிப்பதற்கு முன்பு அதனை சுபத்துவப் படுத்தும் அந்த சுபக்கிரகம் வலிமையுடன் இருக்கிறதா என்று ஆராய வேண்டியது அவசியம்.

மாய்ந்து மாய்ந்து மறுபடி மறுபடி நான் விளக்கும் இந்த சுபத்துவ நிலைகளை இதனைப் படிக்கும் எனது மாணவர்கள் தெளிவாகப் புரிந்து கொண்டீர்களேயானால் கிரகங்களின் சில விசித்திர நிலைகளுக்கும் மனிதர்களின் ஏற்றத்தாழ்வுக்கும் அர்த்தம் புரியும்.

மேலும் பிளஸ்டூ படிக்கும் தனது மகனை எந்தத் துறையில் கொண்டு செல்லலாம் என்று கேட்க வந்த தகப்பனிடம் உங்கள் மகன் இன்ன வருடம் இந்த மாதம் ஐஏஎஸ் அதிகாரியாவான் என்று பலன் சொல்லி அந்த மகன் தந்தையுடன் நேரில் வந்து “அய்யா உங்கள் வாக்குப்படி நாளை நான் சப் கலக்டராகப் பதவி ஏற்கிறேன்” என்று நேரில் வந்து ஆசி வாங்கும்போது ஏற்படும் பூரிப்பையும் அனுபவிக்க முடியும்.

பலன் சொல்வதில் உங்களை முழுமையாக்குவது மற்றும் துல்லியமாக்குவது கிரகங்களின் சுபத்துவமும் சூட்சுமவலுவும்தான்.

அடிக்கடி நான் சொல்லும் இந்த சூட்சும வலுவைப்பற்றி விளக்குமாறு இப்போது நேரிலும் தபாலிலும் ஏராளமானவர்கள் கேட்கிறீர்கள். ஏற்கனவே பாபக் கிரகங்களின் சூட்சுமவலு தியரியைப் பற்றி மாலைமலரிலும் பாலஜோதிடத்திலும் தனிக்கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். www.adityaguruji.in எனப்படும் எனது இணையதளத்திலும் அந்தக் கட்டுரை உள்ளது.

அடுத்து நான் மேலே சொன்னபடி குரு, சுக்கிரன், தனித்த புதன் வளர்பிறை சந்திரன் ஆகியோரின் பார்வையைப் பெறும் சனிபகவான் புனிதமடைந்து தான் அந்த ஜாதகருக்கு ஆதிபத்திய சுபராக இருக்கும் பட்சத்தில் தனது தீய செயல்பாடுகளில் அதாவது தனது காரகத்துவங்கள் எனப்படும் தீய செயல்பாடுகளில் வழியே ஒரு மனிதனுக்கு நன்மைகளைத் தருவார்.

இங்கே சனியின் தீயசெயல்பாடுகள் என்று நான் குறிப்பிடுவது ஒரு மனிதனுக்குத் தேவையற்ற அவனை அழிக்கக் கூடிய சாராயம், மது போன்றவைகளை விற்பது, உயிரினங்களைக் கொன்று இறைச்சி வியாபாரம், தோல்பொருட்கள், நீசத்திரவங்கள், பெட்ரோல், கருப்பு நிறமுள்ள பொருட்கள், பிறரை நம்ப வைத்து ஏமாற்றுவது, குப்பை கழிவுப்பொருட்கள் போன்றவைகளில் சனி ஒரு மனிதனுக்கு நன்மைகளைச் செய்வார்.

சனிபகவான் உச்சம் பெற்றிருந்தாலே நன்மைகளை அள்ளித் தருவார் என்று ஒரு சிலர் தவறாக நினைக்கிறார்கள். தனித்து உச்சம் பெற்ற சனி ஒரு போதும் நன்மைகளைச் செய்வது இல்லை.

அதுபற்றி அடுத்த வியாழன் பார்க்கலாம்…

(அக் 22 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

10 Comments on சனி எப்போது நன்மை செய்வார்? – 37

  1. சனி எப்போது நன்மையை தருவார் என ஒரு சிறு குழந்தைக்கு பாடம் நடத்துவதுபோல அழகாக விளக்கியுள்ளீர்கள்.நன்றி குருஸி ஐயா

  2. சனி சுபகிரகத்துடன் பரிவர்த்தனை அடைந்து இருந்தால் சனி நன்மை

    செய்வாரா ?சுபத்துவம் அடைவாரா? இல்லையா?

  3. Respected guruji
    My name is adaikkalam. Dob is 20.6.86,time6.41am. place palani. Now i am 32 yrs old. Till now marriage is very complicated one. Please help me when will my marriage happened? A lot of depression in my life.please guide me for my life

    • வணக்கம்,

      குருஜி அவர்களின் அனைத்து சேவைகளுக்கும் கட்டணம் உண்டு. இலவச பதில்களுக்கு மாலைமலர் முகவரிக்கு தபால் அனுப்பவும். ஏதானும் சந்தேவங்களுக்கு எனது
      8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர் கொள்ளுங்கள்.

      வணக்கம்,

      தேவி
      -Admin

    • வணக்கம்,

      குருஜி அவர்களின் அனைத்து சேவைகளுக்கும் கட்டணம் உண்டு. இலவச பதில்களுக்கு மாலைமலர் முகவரிக்கு தபால் அனுப்பவும். ஏதானும் சந்தேவங்களுக்கு எனது
      8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர் கொள்ளுங்கள்.

      வணக்கம்,

      தேவி
      -Admin

  4. Respected sir,
    Name:P.D.Ayyappan,DoB:1.12.1976,Time:10am,Place:chengalpattu.Divorced,Whenmysecondmarriagewillhappen?loveorarrange?

Leave a Reply

Your email address will not be published.


*


Retype the CAPTCHA code from the image
Change the CAPTCHA codeSpeak the CAPTCHA code