adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
குரு நல்லவர்.. சனி கெட்டவர், ஏன்? (B-018)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

வேத ஜோதிடத்தின் சில மூல விஷயங்கள் ஞானிகளைத் தவிர வேறு எவரும் அறியாதவை.

உதாரணமாக நம்மைச் சுற்றியுள்ள இந்த விண்வெளி 360 டிகிரியாகப் பாவிக்கப்பட்டு சமமான பனிரெண்டு ராசியாக ஏன் பிரிக்கப்பட்டது? இதை பதினெட்டு ராசியாக ஏன் பிரித்திருக்கக் கூடாது?  யாருக்கும் தெரியாது. இது கேள்விக்கு அப்பாற்பட்ட மூல விஷயம்.

அதுபோலவே காலங்காலமாகவே நமக்கு குரு நன்மைகளைத் தரும் இயற்கைச் சுப கிரகம் என்றும் சனி தீமைகளைத் தரும் பாபக் கிரகம் என்றும் போதிக்கப்பட்டு வந்திருக்கிறது. இதுவும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஏன், எப்படி என்று ஞானிகளைத் தவிர வேறு எவரும் அறிந்ததில்லை.

மேலும் சுப பாபக் கிரகங்களின் வரிசையான குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைச் சந்திரன், சனி, செவ்வாய் என்பது எப்படி ஏற்படுத்தப்பட்டது என்பதும் இந்த வரிசை ஏன் புதன், குரு, சந்திரன், சுக்கிரன் என்று இல்லை என்பதும் ஞானிகளுக்கு மட்டுமே தெரியும்.

என்னுடைய 33 வது வயதில் எனக்கு சந்திர தசை, புதன் புக்தி நடக்கும் போது ஒரு விதமான தீவிர ஆய்வுச் சிந்தனை மனநிலையில் நான் இருந்த போது இது பற்றிய சூட்சும விளக்கங்கள் எனக்கு இறையருளால் கிடைத்தன.

ஜோதிடம் தோன்றி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகியும் கிரகங்கள் சுபர்கள், அசுபர்கள் என ஏன், எப்படி, எதனால் அளவிடப்பட்டு பிரிக்கப் பட்டார்கள் என்ற இந்த சூட்சுமங்களை மனிதர்கள் எவரும் அறியாத நிலையில், இவற்றை நான் கண்டு பிடித்தேன் என்பதை விட பரம்பொருள் இவற்றை அறிவதற்கு என்னை அனுமதித்தது என்பதே உண்மை.

இந்த நிலைகளைத் தெரிந்து கொண்டால் பலன் அறிவதில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியும் என்பதால் இந்த அத்தியாயத்தில் இதை விளக்குகிறேன்.

நாம் அனைவரும் ஒரு நல்லதைக் கொண்டுதான் கெட்டதை அடையாளப் படுத்திக் கொள்கிறோம். இன்பம் என்னவென்று தெரிந்தால்தான் துன்பம் இப்படித்தான் இருக்கும் என்று புரிந்து கொள்ள முடியும். இருள் இருந்தால் தானே அங்கு வெளிச்சத்திற்கு வேலை..?

அந்தவகையில் சனி ஏன் பாபக் கிரகமானார் என்பதை ஜோதிட ரீதியாக விளக்கும் போது குரு ஏன் சுப கிரகமானார் என்றும் விளக்குவது தவிர்க்க முடியாதது. ஆகவே எந்தக் காரணத்தினால், குரு முதல் நிலை சுபரானார்? சனி ஏன் முதல் நிலை பாபரானார் என்ற ஜோதிட சூட்சுமத்தை இப்போது தெரிந்து கொள்வோம்.

நாம் அனைவருமே ஒளியால் பிறந்தவர்கள். ஒளியால் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள். நமது ஜோதிடமே ஜோதி (ஒளி) இஷம் தான். அதாவது அறிவாகிய ஒளியைப் பற்றிச் சொல்வதுதான்.

நமக்குக் கிடைக்கும் இந்த ஒளியின் மூல நாயகனான சூரியன் எனும் நடுத்தர வயதுள்ள, ஏறத்தாழ நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த இந்த நட்சத்திரத்தினால்தான் நாம் எனும் உயிர்கள், ஜீவன்கள் இந்த உலகில் பிறந்தோம்... வளர்ந்தோம்... வாழ்கிறோம்...

சூரியனைச் சுற்றி வரும் பூமி உள்ளிட்ட அனைத்துக் கிரகங்களுக்கும் ஒளி இல்லை. அவை சுயமாக ஒளி தர முடியாதவை. நம் சூரிய மண்டலத்தின் தலைவனான சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று அதைப் பிரதிபலிக்கின்றன.

இந்த ஒளி, அதாவது கதிர்வீச்சின் மூலமே மற்ற அருகருகே இருக்கும் ஏனைய  கிரகங்களின் மீது அவை தங்களின் ஆதிக்கத்தைச் செலுத்துகின்றன. ஒன்றுக்கொன்று ஒளியைப் பரிமாறிக் கொள்கின்றன. இந்த ஒளிக் கலப்பினால்தான் உயிர் பிறக்கத் தோதான இடமாக நமது பூமி மாற்றப்பட்டு நாம் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஒளியால் பிறந்த நம்மை, அந்த ஒளியைத் தந்த தனித் தனிக் கிரகங்களும் தங்களுக்கே உரித்தான காரகத்துவங்கள் மூலம் அதாவது செயல்பாடுகள் மூலம் நம்மைக் கட்டுப்படுத்தி இயக்குவதைத்தான் ஜோதிடம் சூட்சும வழிகளில் முன் கூட்டியே சொல்லுகிறது.

உயிர்கள் வாழ்வதற்கும் வளர்வதற்கும் தேவையான இந்த ஒளியின் அளவை, அதாவது கிரகங்களின் கதிர்வீச்சை மகாபுருஷர் காளிதாசர் தனது “உத்திர காலாம்ருதம்” எனும் ஒப்புயர்வற்ற நூலில் ‘கிரக களா பரிமாணம்’ என்ற பெயரில் மிகத் தெளிவான அளவாகப் பிரித்துச் சொல்கிறார்.

‘கிரக களா பரிமாணம்’ என்ற சொல்லிற்கு கிரகங்களின் கதிர் அளவு என்று அர்த்தம். (இதைப் பற்றி ஏற்கனவே எழுதிய ஒரு கட்டுரையில்  சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன்)  

மகரிஷி காளிதாசர் மற்ற கிரகங்களிடமிருந்து பூமிக்கு கிடைக்கும் ஒளியின் அளவை கீழ்க்காணும் அளவுகளில் கணக்கிட்டு நமக்கு அளித்துள்ளார்.

சூரியனின் கதிர் அளவு – 30

சந்திரன் – 16

புதன் - 8

சுக்கிரன் – 12

செவ்வாய் – 6

குரு – 10

சனி – 1

இந்த ஒளி அளவுக் கணக்கில் ஒரு ஆதிபத்தியக் கிரகங்களான சூரியனுக்கும், சந்திரனுக்கும் தரப்பட்ட 30 மற்றும் 16 ஐ மட்டும் விட்டு விட்டு மற்ற இரு ஆதிபத்தியக் கிரகங்களான குரு, சுக்கிரன், புதன், சனி, செவ்வாய் ஆகிய பஞ்ச பூதக் கிரகங்களின் எண்களை இரட்டிப்பாக்கினால் இந்த ஒளி அளவு எண்ணிக்கை மொத்தம் 120 ஆக வரும்.

அதாவது அப்போது ஒளி அளவுச் சக்கரம் கீழே உள்ளது போல இருக்கும்.

இந்த எண்  120 என்பது ஜோதிடத்தில் ஒரு தலையாய எண் என்பது நமக்குத் தெரியும்.

உலகின் எந்த நாட்டு ஜோதிட முறையிலும் இல்லாத, நம் இந்திய ஜோதிடத்திற்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பான, மனித வாழ்வை பிறப்பு முதல் இறப்பு வரை துல்லியமாகப் பிரித்துப் பலன் சொல்லும் முறையை விம்சோத்ரி தசா புக்தி வருடங்கள் எனும் பெயரில் நமக்கு அளித்த மகரிஷி பராசரர் ஒட்டு மொத்த தசை வருடங்களுக்கும் இந்த எண்ணைத்தான் பயன்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும் ராசிச் சக்கரத்தில் அசுவினி முதல் ஆயில்யம் வரையிலான நவ கிரகங்களின் ஆளுகை கொண்ட ஒரு பகுதியின் டிகிரி அளவும் இந்த 120 எனும் எண்தான். இது போன்ற மூன்று பகுதிகளை ஒட்டு மொத்தமாகச் சேர்த்ததே நமது ராசிச் சக்கரத்தின் மொத்த அளவான 360 டிகிரி என்பது ஆகும்.

இந்த நூற்றியிருபது என்பது பூமி சூரியனைச் சுற்றி வரும் சூரியப் பாதையின் ஒட்டு மொத்த அளவான 360 டிகிரியையும், ஒன்பது கிரகங்களையும் பெருக்கினால் வரும் எண்ணான 3240 ஐ 27 நட்சத்திரங்களால் வகுத்தால் கிடைக்கும் எண். 

அதாவது

360*9/27 = 120

(இதை வேறு சில முறைகளிலும் விளக்கலாம். இந்த இடத்தில் அதைப் புரிந்து கொள்வது சிரமமாக இருக்கும் என்பதால் இதுவே போதும் என்று நினைக்கிறேன்.)

சந்திரன், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் பூமிக்கும், சூரியனுக்கும்  உள் புறத்தில் இருப்பதால்  உட் சுற்றுக் கிரகங்கள் எனவும் செவ்வாய், குரு, சனி ஆகியவை பூமிக்கு வெளிப் புறத்தில் இருப்பதால் வெளிச் சுற்றுக் கிரகங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.

சூரியனே நம் அனைவருக்கும் தலைமகன் என்பதாலும், சூரியனிடமிருந்தே அனைத்துக் கிரகங்களும் ஒளியைப் பெற்றுப் பிரதிபலிக்கின்றன என்பதாலும் சூரியனின் கதிர் அளவு எண் நிலையாக முப்பது எனத் தரப்பட்டது.

இந்தக் கிரகங்களில் சந்திரன் நமக்கு சுமார் நான்கு லட்சம் கிலோ மீட்டர் தூரத்திலும், உட்சுற்றுக் கிரகங்களான புதன், சுக்கிரன் இருவரும் நம்மிலிருந்து தோராயமாக பத்து கோடி கி.மீ. குள்ளும், வெளிச் சுற்றுக் கிரகமான செவ்வாய் சுமார் எட்டுக் கோடி கி.மீ. தூரத்திலும் இருக்கின்றன. குரு, சனி ஆகியவை இன்னும் அதிகமான தூரத்தில் உள்ளன.

இவற்றில் 16 அளவு ஒளியை நமக்கு பிரதிபலிக்கும் சந்திரன் நம்மிலிருந்து 4 லட்சம் கிலோ மீட்டர் அருகேயும், சூரியனிடமிருந்து ஏறத்தாழ 15 கோடி கி.மீ. தூரத்திலும் உள்ளது. சூரியனின் நிலையான ஒளி அளவு எண்ணான 30 என்பதோடு சந்திரனின் எண் பதினாறை ஒப்பிடும் போது பூமிக்கு கிடைக்கும் சந்திரனின் ஒளி அளவு சுமாராக 53.3 சதவீதம் ஆகும். 

அடுத்ததாக புதன் சூரியனிடமிருந்து ஐந்து கோடியே எண்பது லட்சம் கி.மீ. துரத்தில் உள்ளது. இது பூமிக்கு ஒளியை பிரதிபலிக்கும் அளவு எண் 8 . இதன் சதவிகிதம் 26.7 ஆகும்.

சுக்கிரன் சூரியனிடமிருந்து பத்துக் கோடியே எண்பது லட்சம் கி.மீ. தூரத்தில் உள்ளது. இது பூமிக்கு தரும் ஒளி அளவு எண் 12. இதன் சதவிகிதம் 40 ஆகும். இதனால்தான் வானத்தில் சுக்கிரன் எப்போதுமே பிரகாசமாகத் தெரிகிறது.

இந்த நான்கு கிரகங்களும் பூமிக்கும் சூரியனுக்கும் நடுவே இருக்கும் உட்சுற்றுக் கிரகங்கள் ஆகும். இவற்றிற்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தின் அளவு சுமார் பதினைந்து கோடி கி.மீ.க்குள் தான்.

இனி வெளிச் சுற்றுக் கிரகங்களான செவ்வாய், குரு, சனி இவைகளைப் பற்றிப் பார்ப்போமானால், செவ்வாயின் ஒளி நம்மை வந்தடைவது, அதாவது செவ்வாயின் சூரிய ஒளியை பிரதிபலிக்கும் திறன் வெறும் 6 என்ற எண் அளவில் மட்டும்தான். இதன் சதவீதம் 20 ஆகும்.

செவ்வாய் சூரியனிடமிருந்து ஏறத்தாழ 22 கோடியே 80 லட்சம் கி.மீ. துரத்தில் இருக்கிறது. ஆனால் நம் பூமிக்கு மிக அருகே ஒரு நிலையில் 8 கோடி கி.மீ. தூரத்தில்தான் இருக்கிறது.

அடுத்த அத்தியாயத்தில் தொடர்வோம்.

(பிப்ரவரி 01-07, 2012 திரிசக்தி ஜோதிடம் வார இதழில் வெளிவந்தது.) 

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537