சனிபகவானின் சூட்சுமங்கள் – 34

ஒன்பது கிரகங்களிலும் மிகவும் தனித்தன்மையான குணங்களைக் கொண்ட அதிகம் கவனிக்கப்படும் கிரகமான சனியைப் பற்றி இந்த வாரம் முதல் பார்க்கலாம்.

வருடக்கிரகங்கள் எனப்படும் ராகு-கேது குரு சனி ஆகியோரின் கிரகப் பெயர்ச்சிகளில் மற்றவைகளை விட சனிப்பெயர்ச்சிக்குத்தான் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ள ஜோதிடம் அறிந்த ஒருவருக்கு அஷ்டமச்சனியோ ஏழரைச்சனியோ வரப்போகிறது என்றாலே மனக் கலக்கம்தான்.


மனித வாழ்க்கையே இன்பம், துன்பம், கஷ்டம், நஷ்டம், ஏற்றம், இறக்கம், இருள் ஒளி என இரு வேறு எதிரெதிர் நிலைகளைக் கொண்டதுதான். பிரபஞ்சத்தின் அனைத்து உருவாக்கங்களும் இதுபோல இரண்டு வெவ்வேறு எதிர்நிலைகளைக் கொண்டவையே.

நவக்கிரகங்களும் இதுபோலவே ஒருமனிதனுக்குத் தேவையான நன்மைகளைத் தரும் கிரகம், தீமைகளைத் தரும் கிரகம் எனும் அர்த்தத்தில் சுபக்கிரகம், அசுபக்கிரகம் என ஞானிகளால் பிரித்துச் சொல்லப்பட்டுள்ளன.

இந்த இரண்டு பிரிவுகளில் அசுபக்கிரகங்கள் எனப்படும் சனி, செவ்வாய், சூரியன், பாபியருடன் சேர்ந்த புதன் தேய்பிறைச் சந்திரன், ராகு-கேதுக்கள் ஆகியவற்றில் சனிபகவான் மட்டுமே ஒரு முழுமையான பாபக் கிரகமாவார்.

இந்த பாபக்கிரக வரிசையை ஞானிகள் நமக்குச் சொல்லும் போது செவ்வாயை முக்கால் பாபர் என்றும், சூரியனை அரைப்பாபர் என்றும் சனியை முழுப்பாபர் என்றும் விவரித்துச் சொல்லி இருக்கிறார்கள்.

இதில் மறைந்திருக்கும் சூட்சுமம் என்னவெனில் செவ்வாய் பகவான் முக்கால் பாபராகச் செயல்பட்டாலும் மீதி கால்பகுதி சுபராக மனிதனுக்குத் தேவையான சிலவற்றைத் தருபவராகவும் சூரியன் பாதி அசுபராக இருந்தாலும் மீதி சுபராகவும் செயல்படுவார்கள் என்பதுதான்.

தேய்பிறைச் சந்திரன், பாபியருடன் சேர்ந்த புதன் ஆகியோரில் சந்திரன் பவுர்ணமி நிலையில் இருந்து நீங்கி அமாவாசையை நோக்கிச் செல்லும் போது மட்டும் பாபராக இருப்பார் என்றும் வளர்பிறை அமைப்புகளில் அவர் சுபராக செயல்படுவார் என்றும் நமது மூலநூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

அதேபோல தனித்திருக்கும் புதன் மற்றும் சுபர்களுடன் சேர்ந்திருக்கும் புதன் சுபத்தன்மையுடன் நன்மைகளைச் செய்வார் என்றும் பாபர்களுடன் இணைந்தால் கெடுபலன்களைத் தருவார் என்றும் நமக்குத் தெளிவாக்கப் பட்டிருக்கிறது.

ராகுகேதுக்களை எடுத்துக் கொண்டால் அவைகளும் தீய கிரகங்களாகவே சொல்லப்பட்டாலும் சொந்தவீடு இல்லாமல் பிறருடைய வீட்டை ஆக்கிரமிக்கும் தன்மை கொண்ட இவைகள் சிலநிலைகளில் இயற்கைச் சுபகிரகங்களின் வீடுகளில் அவற்றிற்குரிய சுபவிதிகளின்படி அமரும் பட்சத்தில் முழுச்சுபராக மாறி ஒரு மனிதனுக்கு அளப்பரிய நன்மைகளைத் தரும் தன்மை கொண்டவை என்பதால் சர்ப்பக்கிரகங்களும் முழுமையான பாபராகச் செயல்படுவதில்லை.

தெய்வாம்சம் பொருந்திய நமது ஞானிகள் பாபக்கிரக வரிசையில் தெள்ளத் தெளிவாக சனிபகவானை மட்டுமே முழுமையான பாபர் என்று எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி குறிப்பிடுவதால் சனியைப் பற்றிய என்னுடைய முப்பது ஆண்டுகளுக்கும் மேலான மாறுபட்ட தீர்க்கமான ஆய்வு முடிவுகளைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக நம்மிடையே கிரகங்கள் பலம் பெற்றால் நன்மைகளைச் செய்யும் என்ற ஒரு மேம்போக்கான கருத்து நிலவி வருகிறது. துல்லியமான நுட்பங்களுக்குள் சென்று ஆழமாக ஜோதிடத்தை உணர்வோமானால் நம்முடைய ஞானிகள் வலுப்பெற்ற கிரகங்கள் நன்மைகளை செய்யும் என்று எந்த ஒரு இடத்திலும் சொல்லவே இல்லை.

வலுப்பெற்ற கிரகங்கள் தன்னுடைய காரகத்துவங்கள் என்று சொல்லப்படும் தனது குணங்களான செயல்பாடுகளை ஜாதகருக்கு வலுவாகத் தரும் என்றுதான் சொல்லியிருக்கிறார்களே தவிர ஒரு கிரகம் ஆட்சி உச்சம் பெற்றால் நன்மைகளைத் தரும் என்று ஞானிகள் எந்த ஒரு இடத்திலும் சொல்லவே இல்லை.

பிறந்த அமைப்பில் ஒன்பது கிரகங்களும் வலுப்பெறுவது ஒருவருக்கு நன்மைகளைத் தராது. ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி எனப்படும் அந்த ஜாதகத்தை வழிநடத்தும் தலைவன் வலிமையாகவும் அந்த லக்னாதிபதிக்கு துணையிருக்கும் அவரது மூன்று நண்பர்கள் வலுப்பெற்ற நிலையில் இருந்தால் மட்டுமே அது யோக ஜாதகமாகக் கருதப்படும்.

இப்படியல்லாது லக்னாதிபதிக்கு எதிரிகள் எனப்படும் அந்த ஜாதகத்தின் பாபிகள் வலுப்பெற்றால் ஜாதகர் மேன்மை நிலைக்கு வரமுடியாமல் தவிப்பார். வலுப்பெற்ற லக்ன எதிரிகளின் தசை நடக்குமேயானால் ஜாதகர் முன்னேறுவதற்குத் தடை இருக்கும். ஒரு மனிதனுக்குரிய சராசரி சுகங்களை அவர் அனுபவிக்க முடியாது. தேவையான பாக்கியங்களும் கிடைக்காது.

மனிதர்களாகப் பிறந்தவர்களின் ஜாதகங்களில் மிகவும் உன்னத ஜாதகமாக நம்முடைய வேதஜோதிடத்தில் சொல்லப்படுவது ஶ்ரீராமபிரானின் ஜாதகமே. அவரது ஜாதகத்தில் சூரியன் குரு சுக்கிரன் செவ்வாய் சனி ஆகிய ஐந்து கிரகங்கள் உச்சமாக இருந்தன.

ஐந்து கிரகங்கள் உச்சம் பெற்ற நேரத்தில் பிறந்ததாலேயே ஶ்ரீராமபிரான் தெய்வ நிலைக்கு உயர்ந்து பரம்பொருளின் மனித உருவாக ஒரு அவதாரமாக இன்றும் நம்மால் ஆராதிக்கப்படுகிறார். ஆயினும் ராமபிரான் மனித வாழ்வின் சராசரி சுகங்களைப் பெற்றது இல்லை.

தந்தையின் வழிகாட்டுதல் தேவைப்படும் முக்கியமான தருணத்தில் ஸ்ரீராமர் அவரை இழந்தும், அரண்மனையில் மனைவியோடு உல்லாசங்களை அனுபவிக்க வேண்டிய சமயத்தில் காட்டில் அலைந்தும் திரிய வேண்டியதாயிற்று. எதிரியை அழித்த பின்னரும் அவரால் மனைவியோடு சேர்ந்திருக்க முடியவில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக பிறந்த குழந்தைகளைப் பார்த்துக் கொஞ்ச முடியாமல் அவற்றின் மழலைப் பருவத்தில் உடனிருக்க முடியாமல் பிள்ளைகள் தனக்கு எதிராகப் போருக்கு நிற்கும் போதுதான் அது தன் குழந்தைகள் என்றே அவருக்குத் தெரிய வந்தது.

ஒரு அவதாரமாக அவர் இருந்தாலும் மனித வாழ்வின் முறையான சுகங்களான மனைவி குழந்தைகள் பாக்கியங்களை அவர் நீடித்து முறையாக தேவையான நேரத்தில் அனுபவித்தது இல்லை. இது அவரது கடக லக்னத்தின் பாவிகளான சனியும் சுக்கிரனும் கேந்திர கோணங்களில் உச்ச வலுப் பெற்றதால்தான்.

எனவே பாபக் கிரகங்கள் ஒருவருக்கு கேந்திர கோணங்களில் வலுப்பெறுவது நன்மைகளைத் தராது. அதேநேரத்தில் இயற்கைச்சுபர், இயற்கைப் பாபர் என இரண்டு பிரிவுகள் இருப்பதைப் போலவே ஒரு ஜாதகத்தில் அந்த ஜாதகத்தின் அமைப்பின்படி லக்னசுபர், லக்ன அசுபர் என்ற இருபிரிவுகளும் உள்ளன.

சென்ற சில வாரங்களில் ஆதிபத்தியம், காரகத்துவம் ஆகியவற்றை நான் தனித்தனியே விளக்கியதைப் போல இந்த இயற்கைச்சுபர், லக்ன சுபர் என்ற அமைப்பையும் மிக நுணுக்கமாக விளக்கப் போவோமேயானால் ஒரு இயற்கைச் சுபக்கிரகம் ஒரு ஜாதகரின் லக்னப்படி அவருக்கு தீமை செய்யும் பொறுப்பை ஏற்குமானால் அந்தக்கிரகம் கேந்திர கோணங்களில் வலுப்பெற்று அமர்ந்து அதன் தசை வரும் போது அந்த கிரகத்தின் காரகத்துவங்களின் செயல்பாடுகள் வழியே அவருக்கு தீமைகள் நடைபெறும்.

அதேபோல ஒரு இயற்கைப் பாபக்கிரகம் அந்த லக்னத்திற்கு நன்மை செய்ய விதிக்கப்படும் நல்ல ஆதிபத்தியப் பொறுப்பை ஏற்பாராயின் தான் கேந்திர கோணங்களில் ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும் சுபத்துவமோ சூட்சும வலுவோ அடைந்திருந்தால் தனது தசையில் தனது தீய காரகத்துவங்களின் வழியே மட்டுமே அதாவது மனிதனுக்கு நன்மை தராத செயல்பாடுகளின் வழியே மட்டுமே அந்த ஜாதகருக்கு நன்மைகளைச் செய்யும்.

இதுவே கிரகங்களின் வலுவில் உள்ள சூட்சுமம்.

இதில் ஞானிகளால் முழுமையான பாபக்கிரகமாகச் சொல்லப்பட்ட சனிபகவான் தான் முழு பாபராக அமைந்த கடகம், சிம்மம் போன்ற லக்னங்களுக்கும் பாப ஆதிபத்தியம் பெறும் மற்ற லக்னங்களுக்கும் எந்த இடத்தில் வலுப்பெற்றாலும் சூட்சும வலுவோ, சுபத்துவமோ பெறாமல் ஆட்சி உச்சம் எனப்படும் நேர்வலுவை அடைந்தால் தீமைகளைச் செய்வார்.

அவர் பரிபூரண யோகர் எனப்படும் ரிஷபம், துலாம் லக்னங்களுக்கும் மேலே நான் சொன்னபடி சுபத்துவமோ, சூட்சும வலுவோ அடையாமல் வெறும் ஆட்சி அல்லது உச்சம் எனும் நிலையை அடைந்தாலும் நன்மைகள் இருக்காது.

அவரை லக்னாதிபதியாக கொண்ட மகரம், கும்பம் லக்னங்களுக்கு கூட அவர் சுபத்துவமின்றி லக்னத்தில் ஆட்சி பெறுவதோ, அல்லது ஒன்பது, பத்தாம் இடங்களில் உச்சம் பெறுவதோ நன்மைகளைத் தராது.

சுருக்கமாகச் சொல்லப்போனால் சனிபகவான் ஒரு முழுமையான பாபக்கிரகம். என்பதால் அவர் சூட்சுமவலு அல்லது சுபத்துவம் அடைய வேண்டும் என நான் சொல்லும் சில நிலைகளை உங்களால் முழுமையாக கணிக்கவோ புரிந்து கொள்ளவோ இயலவில்லை எனில் ஒரு ஜாதகத்தில் சனி என்ன செய்வார் என்பதையும் தெரிந்து கொள்ள முடியாது.

அடுத்து வரும் வாரங்களில் இதுபோன்ற சனிபகவானின் மிக நுண்ணிய சூட்சுமநிலைகளைச் சொல்கிறேன்…..


(அக் 1 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

4 Comments on சனிபகவானின் சூட்சுமங்கள் – 34

  1. சனியின் சூட்சுமங்களை அழகாகவும்,எளிமையாகவும் புரிந்துகொள்ளும்படியாக விளக்கிய குருஸி அய்யாவுக்கு நன்றி

Leave a Reply

Your email address will not be published.


*


Retype the CAPTCHA code from the image
Change the CAPTCHA codeSpeak the CAPTCHA code