சுக்கிரனின் செயல்பாடுகள் – 33

சுக்கிரனைப் பற்றிய பொதுவான முக்கிய விஷயங்களைப் பற்றி சென்ற வாரங்களில் பார்த்துவிட்ட நிலையில் பலன் சொல்லும்போது கணிப்புகளைத் தவற.வைக்கும் சில துணுக்கமான நிலைகளான உச்சம் நீசம் மற்றும் இவற்றின் அதிஉச்ச பரமநீச பாகைகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.


சுக்கிரன் மீனராசியில் அதிகபலம் எனும் உச்சநிலையையும் கன்னி ராசியில் நீசம் எனப்படும் வலுவிழக்கும் தன்மையையும் அடைவார். சுக்கிரனின் இந்த நிலையிலும் ஒரு முரண்பாடு இருக்கிறது.

அவர் அதிகவலுவை அடைவது அவரது ஜென்ம விரோதியின் வீட்டில். தனது பலத்தை சுத்தமாக இழப்பது தனக்கு மிகவும் நெருக்கமான நண்பரின் வீட்டில். இதைப்பற்றிய விளக்கத்தை நான் முன்பே விளக்கியிருக்கிறேன். தெரியாதவர்கள் ஏன் என்று யோசித்துப் பாருங்கள்.

உச்சநீச பாகைக் கணக்கில் ஒரு நுண்ணிய நிலையாக சுக்கிரன் மீனராசியில் இருபத்தி ஏழு டிகிரி வரை மட்டுமே உச்சபலத்துடன் இருப்பார். கடைசி மூன்று டிகிரியில் இருக்கும்போது அவர் உச்சநிலையில் இருப்பது இல்லை.

அதாவது ராசிச்சக்கரத்தின் இறுதிபாகமான மீனராசியின் முன்னூற்றி ஐம்பத்தியேழு டிகிரி முதல் முன்னூற்றி அறுபது டிகிரி வரையிலான கடைசி மூன்று டிகிரிகளில் சுக்கிரன் உச்சபலத்துடன் இருப்பது இல்லை. அதே நேரத்தில் அது அவருக்கு ஆட்சி நிலையும் அல்ல.

உச்சபலமும் இல்லாமல் அதற்கு இணையான வலுவும் இல்லாத ஒரு திரிசங்கு நிலையில் அங்கு சுக்கிரன் இருப்பார். துல்லியமாகச் சொல்லப் போனால் ரேவதி நான்காம் பாதத்தில் உச்சமாகி வர்க்கோத்தமமாக இருக்கும் சுக்கிரபகவான் தன் உச்சபலன்களைத் தருவது இல்லை. இதை நான் சில ஜாதகங்களில் அனுபவப் பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

கிரகங்களின் அதிஉச்ச பரமநீச பாகை விஷயங்களில் மிக நுணுக்கமான சூட்சுமம் மறைந்துள்ளது. அதை விரிவாக விளக்க வேண்டும் என்றால் மாலைமலரின் எளிமையான தலைப்பிலான கட்டுரைகளில் உங்களுக்கு கணிதத்துடன் நான் படம் போட்டு விளக்க முடியாது. பின்னொரு நாளில் வேறு சந்தர்ப்பத்தில் இந்த அதிஉச்ச பரமநீச பாகையில் உள்ள சூட்சுமங்களை விளக்குகிறேன். தற்போது இந்தப் பாகைநிலைகளை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.

கன்னியில் சுக்கிரன் ராசியின் முதல் இருபத்தியேழு டிகிரி வரையே நீசநிலையைப் பெறுவார். ராசியின் இறுதிப் பகுதியான கடைசி மூன்று டிகிரிகளில் சுக்கிரன் வலுவிழப்பதில்லை.

இந்த பரமநீச அதிஉச்ச பாகை விஷயங்களை நீங்கள் அனுபவபூர்வமாகவே ஜாதகங்களில் உணர முடியும். உதாரணமாக துலாம் ராசியில் சூரியன் நீசம் எனும் போது முதல் இருபது டிகிரியில் அதாவது துலாம் ராசிக்குள் அவர் நுழைந்த இருபது நாட்களுக்குள் ஐப்பசி இருபதாம் தேதிக்குள் பிறந்தவர்களுக்கு மட்டுமே சூரியன் வலுவிழந்து தன் காரகத்துவங்களைச் செய்யும் சக்தியற்று இருப்பார்.

அதனையடுத்த நாட்களில் குறிப்பாக ஐப்பசி கடைசியில் பிறப்பவர்களுக்கு சூரியன் தனது காரகத்துவங்களைத் தரும் வலிமையுடனேயே இருப்பார். இந்த நிலையை உங்களுக்கு நன்கு தெரிந்த ஜாதகங்களில் ஒப்பிட்டு நீங்கள் உணர முடியும்.

ஒருவருக்கு ஜாதகபலன் தவறும்போது நாம் நம்முடைய கணிப்பில் எங்கோ தவறு நேர்ந்து விட்டது என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொண்டால் ஞானிகள் சொல்லியுள்ள இதுபோன்ற அதிஉச்ச பரமநீச பாகை போன்ற சூட்சும நிலைகளை உணர முடியாது.

ஒரு கணிப்பில் தவறு ஏற்பட்டவுடன் தவறு ஏன் ஏற்பட்டது என்று ஆராய்ந்து உணர்பவனே வெற்றிபெற்ற ஜோதிடர் ஆகிறான். உதாரணமாக சூரியன் நீசமடைந்திருப்பதாக கணித்துப் பலன் சொல்லி அது தவறும்போது ஒரு ஜோதிடர் சூரியன் வேறுவகையில் நீசபங்கம் அடைந்திருக்கலாம் அல்லது அம்சத்தில் பலமாக இருந்திருக்கலாம் என்பது போன்ற நொண்டிச்சாக்குக் காரணங்களை தனக்குத்தானே சொல்லிக் கொள்ளாமல் உச்ச நீசங்களில் ஞானிகள் சொன்ன இதுபோன்ற நுட்பநிலைகளைக் கவனித்தாலே துல்லிய பலன் சொல்லி விடலாம்.

சுக்கிரன் துலாம் ராசியில் உச்சத்திற்கு அடுத்த மூலத்திரிகோண நிலையையும் ரிஷபத்தில் ஆட்சிநிலையையும் பெறுவார். புதன் மற்றும் சனியின் வீடுகளான மிதுனம், மகரம், கும்பம் ஆகிய வீடுகளில் நட்பு நிலையை அடைவார். சூரியனும், சந்திரனும் அவரது எதிரிகள் என்பதால் கடக சிம்மத்தில் இருக்கும் சுக்கிரன் பகை நிலை பெற்று தன் பலத்தை இழப்பார். இதனை நீசத்தை நோக்கி அவர் போய் கொண்டிருக்கும் போது ஏற்படும் சக்தி இழப்பு என்றும் சொல்லலாம்.

மேஷம், விருச்சிகம், தனுசு ஆகிய இடங்களில் அவர் நட்பு நிலைக்கு கீழாகவும், பகைநிலைக்கு மேலாகவும் உள்ள நிலையான சமம் எனப்படும் வலுவை அடைவார். பொதுவாக எந்த நிலையில் இருந்தாலும் வர்க்கோத்தமம் எனப்படும் ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே வீட்டில் இருக்கும் கிரகம் ஆட்சி நிலையை அடையும் என்பதால் ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் வர்க்கோத்தமம் அடைவது நல்லது.

அடுத்து இந்த கட்டுரைகளில் ஏற்கனவே நான் சொன்னதை போல எந்த ஒரு ஜாதகத்திலும் இயற்கைச் சுபக்கிரகங்களான குருவும், சுக்கிரனும் வலுவிழக்கவே கூடாது. அதாவது முற்றிலும் தன் செயல்பாடுகளை தன் சக்திகளை இவர்களில் ஒருவர் இழந்தாலும் அது யோகஜாதகம் அல்ல. இது போன்ற சில நிலைகளில் சுக்கிரனும், குருவும் பரிவர்த்தனை பெறுவது மிகவும் அதிர்ஷ்டமான ஒரு அமைப்பு.

முக்கூட்டுக் கிரகங்கள் எனப்படும் சூரிய சுக்கிர புதன் மூவரும் எப்போதும் சூரியனை நெருங்கியே இருப்பார்கள் என்பதால் புதனும் சுக்கிரனும் அடிக்கடி அஸ்தமனம் அடைவார்கள். அஸ்தமனம் அடையும் கிரகங்கள் வலு இழப்பார்கள் என்பது ஜோதிடவிதி.

இதில் புதனுக்கு மட்டும் அஸ்தங்கம் எனப்படும் அஸ்தமன தோஷம் இல்லை என்று நமது மூலநூல்கள் ஒருமித்துச் சொல்கின்றன. ஆனால் சுக்கிரனுக்கு அஸ்தமன தோஷம் உண்டு என்றும் இல்லை என்றும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆயினும் அஸ்தமனம் பெற்ற சுக்கிரன் பரிவர்த்தனை அடைந்திருந்தால் இழந்த வலுவைப் பெறுவார்.

பரிவர்த்தனை என்பது இரண்டு கிரகங்கள் தங்களது வீடுகளில் மாறி அமர்வதாகும். வேதஜோதிடத்தில் இந்த அமைப்பு மிகவும் அதிர்ஷ்டம் தரும் ஒரு அமைப்பாகக் குறிப்பிடப்படுகிறது. அதிலும் ஒரு மனிதனுக்கு மிகவும் தேவையான நன்மைகளை தரக்கூடிய குருவும், சுக்கிரனும் பரிவர்த்தனை அடையும் போது இருவரும் தங்களது சொந்த வீடுகளில் ஆட்சியாகும் நிலை பெறுவார்கள்.

ஜாதகத்தில் இவர்கள் மறைவுநிலை பெற்று பலவீனமாக இருந்தால் கூட பரிவர்த்தனையின் மூலம் மறைவு எனும் வலுவற்ற நிலை நீங்கி அந்த ஜாதகருக்கு தங்களது சொந்தவீடுகளில் இருந்து நன்மைகளை செய்யும் தகுதியை பெறுவார்.

அதே நேரத்தில் பரிவர்த்தனை யோகம் சம்பந்தப்பட்ட கிரகங்களின் தசையில் மட்டுமே வேலை செய்வதை என்னுடைய அனுபவத்தில் நான் உணர்ந்திருக்கிறேன். சில சூட்சுமமான விசேஷ நிலைகளும், யோகங்களும் ஒரு கிரகத்தின் புக்திகளில் பலன் தருவது இல்லை. தசைகளில் மட்டும்தான் அந்த யோகத்தின் பலனை ஒரு கிரகம் அளிக்கும்.

இதன் காரணம் என்னவெனில் தசையின் உள்ளே இருக்கும் பிரிவான புக்திகளில் இருக்கும் புக்திநாதர்கள் தசாநாதனுக்கு கட்டுப்பட்டவர்கள். தசாநாதனை மீறி புக்திநாதர்கள் தன்னிச்சையாக செயல்பட முடியாது. தசையின் அதிபதி அரசன் என்றால் புக்திநாதன் மந்திரி மட்டுமே. எந்த ஒரு தசையிலும் அந்தத் தசையை நடத்துபவர் மட்டும்தான் தலைவர்..

நம்முடைய ஜனநாயக அமைப்பில் இந்த விஷயத்தை விளக்கிச் சொல்வோமேயானால் தசாநாதன் முதலமைச்சரைப் போலவும் புக்திநாதன் அவருக்குக் கீழே இருக்கும் மந்திரியைப் போலவும், அந்தரநாதன் ஒரு கவுன்சிலரைப் போலவும் செயல்படுவார்கள்.

எனவே பரிவர்த்தனை யோகம் போன்ற நேரடியாக வலுப்பெறாமல் மறைமுகமாக வலுவடையும் சூட்சுமநிலைகளில் ஒரு கிரகம் புக்திநாதனாக வரும் போது தசையின் அதிபதியை மீறி செயல்பட முடியாது என்பதால் தன்னுடைய ஆளுகை காலமான தசை வரும்போது மட்டுமே தனது காரகத்துவங்களை முழுமையாகச் செய்ய முடியும்.

தனது நண்பரான புதனுடன் இணைந்திருக்கும்போது சுக்கிரன் தனது முழுபலன்களையும் குறையின்றித் தருவார். மீனத்தில் புதன் நீசமடையும் போது அவருடன் உச்சனாகி இணைந்திருக்கும் சுக்கிரன் தன்னுடைய உச்சபலத்தை அவருக்கு அளித்து அவரை வலுவாக்கி தான் வலுவிழப்பார். இதையே மகா புருஷர் காளிதாசரும் நீசனுடன் சேரும் கிரகம் சூன்யபலத்தைப் பெறுகிறது என்று குறிப்பிடுகிறார்.

தன்னுடைய இன்னொரு நண்பரான சனியுடன் சேரும்போதும் சனியைப் புனிதராக்கி தான் வலுவிழப்பார். இதுபோன்ற நிலையில் சனிபகவான் வேறு வகையிலும் சுபத்துவமாகி இருந்தால் சனிதசை முழுக்க நன்மைகளையும், சுக்கிரதசை மத்திம பலன்களையும் தரும்.

அடுத்து தான் நண்பராகக் கருதும் ராகுவுடன் இணையும்போது சனிக்குச் சொன்னது போலவே பலன் இருக்கும். அதேநேரத்தில் ராகுவுடன் இணையும் தூரத்தைப் பொறுத்து சுக்கிரனின் வலுவிழப்பு இருக்கும். சூரிய, சந்திரர்களுடன் சுக்கிரன் இணைவது நன்மைகளைத் தராது. செவ்வாயுடன் இணைவதும் அப்படியே.

செவ்வாயுடன் சேரும் போது சுக்கிரன் முழுக்க தன் நிலை மாறி வலுவிழப்பார். ஒரு பரிபூரண ஆணிடம் ஒரு பெண் தன் வசமிழப்பதைப் போன்றது இது. அதிலும் சுக்கிரன் பகை நீசம் போன்ற நிலை பெற்று செவ்வாயுடன் இணைவது ஒரு ஜாதகரை முழுக்க சுக்கிரனுடைய இயல்புகளைப் பெற தகுதியற்றவராக்கி விடும். குருவுடன் அவர் இணையக் கூடாது என்பதை சுக்கிரனைப் பற்றிய முதல் கட்டுரையிலேயே விளக்கி இருந்தேன். கேதுவுடன் இணைவது தீய நிலை அல்ல.

அடுத்த வியாழன் முதல் சனிபகவானைப் பற்றிப் பார்க்கலாம்.

சுக்கிரன் எதன் மூலம் நன்மை செய்வார்?

ஒருவருக்கு சுப வலுப்பெற்ற சுக்கிரன் கீழ்க்காணும் அமைப்புகளின் மூலம் நன்மைகளைச் செய்வார்.

கலைத்துறை, இசை, நடனம், அழகிய பெண்கள், அழகுணர்ச்சி, தொலைக்காட்சி, ஹோட்டல் தொழில், அழகிய வீடு, கன்னிப்பெண், செல்வம், ஓவியம், சிற்பம், முடிதிருத்துவோர், பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள், அவசியமற்ற பொருட்கள், ஆடம்பரம், டெக்ஸ்டைல்ஸ், சூதாட்டம், திருமணம், கேளிக்கை விளையாட்டுக்கள், சந்தோசம், இளமைத்துடிப்பு, காதல், உயர்தரவாகனம், பெண்தரும் இன்பம், விந்து, காமம், உல்லாசம், நகை, கப்பல், கவிதை, இலக்கியம், சினிமா, உடல்உறவு விஷயங்கள், அந்தரங்க உறுப்புகள், பெண்தெய்வ வழிபாடு, புதியஆடை, வெள்ளைநிறம் கொண்ட பொருட்கள், மனைவி, பூக்கள், இளமை, வசீகரம், அழகுப்பொருட்கள், அலங்காரமான விஷயங்கள், நீர் சம்பந்தப்பட்டவை, வெள்ளி, வாகனங்கள், பெண்களால் லாபம், கண், அழகு, தென்கிழக்குத் திசை, உணர்ச்சி வசப்படுதல், நீச்சல், இளம்பருவம், இசைக்கருவிகள், வண்ணம், நறுமணப்பொருட்கள், வைரம், புளிப்புச்சுவை, அதிகமான பணம், பிராமணர் போன்றவைகளில் லாபங்களை தருவார்.

அதேநேரத்தில் சுக்கிரன் சுபவலு இழந்து பாபத்தன்மை பெற்றிருந்தால் மேற்கண்ட விஷயங்களில் தலைகீழாக கெடுபலன்கள் நடக்கும்.

(செப் 24 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

3 Comments on சுக்கிரனின் செயல்பாடுகள் – 33

 1. An absolute explanation..in more easier way it is explained to understand the uccha..,neecha bavas in which planet Venus gets power..
  Respected Guruji…please explain us more about the combination effect of Venus with Rahu

 2. Makara lakinathil sukiran,4′ 11 kuriya Sevvai 9midam kannil saniyudan ,sanibagavan sevvai saram pertru natputan erukirar enna palan Guruji.

  • வணக்கம்,

   குருஜி அவர்களின் அனைத்து சேவைகளுக்கும் கட்டணம் உண்டு. இலவச பதில்களுக்கு மாலைமலர் முகவரிக்கு தபால் அனுப்பவும். ஏதானும் சந்தேவங்களுக்கு எனது
   8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர் கொள்ளுங்கள்.

   வணக்கம்,

   தேவி
   -Admin

Leave a Reply

Your email address will not be published.


*


Retype the CAPTCHA code from the image
Change the CAPTCHA codeSpeak the CAPTCHA code