நீசச் சுக்கிரனின் நிலைகள் – C- 032

சென்றவாரம் கிரகங்களின் வக்ரநிலையைப் பற்றி நான் சொன்ன விஷயங்களை சிலர் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

ஜோதிடம் என்பது பலவகையான சூட்சுமங்களும், நுணுக்கங்களும் நிரம்பியது. இதில் சில ஆழமான விஷயங்களை வெகு எளிமையாகச் சொல்வது மிகவும் கடினமான ஒன்று.


ஜோதிடத்தில் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் ஆதிபத்தியங்களுக்கும், காரகத்துவங்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்களைப் புரிந்து கொள்ளுவது கொஞ்சம் சிரமம்தான் என்றாலும் எனது கட்டுரைகளில் சில கடினமான பகுதிகளைத் திரும்பத் திரும்ப நீங்கள் படிப்பதன் மூலம் அவைகளை நிச்சயமாகப் புரிந்து கொள்ள முடியும்.

காரகத்துவம் என்பதை தமிழில் செயல்பாடு எனப் பொருள் கொள்ளலாம்.

ஒரு கிரகம் மனிதருக்கு எதைத் தர விதிக்கப்பட்டிருக்கிறதோ அந்தச் செயல் அந்தக் கிரகத்தின் காரகத்துவம் என்று சொல்லப்படுகிறது. உதாரணமாக குருபகவான் பணம் குழந்தைகள் இவற்றைத் தர பொறுப்பாவார். இது அவருடைய காரகத்துவம். சனிபகவான் கடன் நோய் தரித்திரம் ஆயுள் இவற்றைத் தர பொறுப்பானவர். எனவே இவைகள் சனியின் காரகத்துவம்.

ஒரு கிரகம் எதை முதன்மையாகத் தரக் கடமைப்பட்டதோ அதன் பெயரிலேயே அதன் காரகன் என்று அழைக்கப்படும். எடுத்துக்காட்டாக குருவை புத்திரகாரகன் என்றும் சனியை ஆயுள்காரகன் என்றும் சொல்வது இதனைத் தெளிவாக்கும்.

ஆதிபத்தியம் என்பதை மேஷம் முதல் மீனம் வரை பனிரெண்டு ராசி வீடுகளும் ஒரு ஜாதகத்தில் எத்தனையாவது வீடாகிறதோ அந்த வீட்டின் செயல்பாடு எனலாம்.

உதாரணமாக இரண்டாம் வீடு ஒரு மனிதனுக்குப் பணம் அவனது சொல், மற்றும் பேச்சு, மேலும் அவனுக்கு அமையப் போகும் குடும்பம் ஆகியவற்றைக் குறிக்கும். ஆறாம் வீடு அவனது எதிரிகள் நோய் கடன் போன்றவைகளைக் குறிக்கும். இந்த வீடுகள் தரும் செயல் எனப்படும் விளைவே ஆதிபத்தியம் எனப்படுகிறது.

ஒரு கிரகத்தின் செயல்பாடும் ஒரு ராசியின் செயல்பாடும் இணைந்தே அந்த மனிதனுக்கு நடக்கப் போவதைத் தீர்மானிக்கின்றன. இதில் அந்த வீடு பெற்ற வலுவையும் கிரகம் பெற்ற வலுவையும் வைத்தே அனைத்து விஷயங்களிலும் அவனுக்கு நன்மைகள் உண்டா தீயவை நடக்குமா என்பது உணரப்படுகிறது.

எனவே ஜோதிடத்தின் அடிநாதமே இந்த ஆதிபத்தியங்களும் காரகத்துவங்களும்தான் எனும் போது ஒரு கிரகமோ அல்லது ஒரு ராசியோ சுப வலுவாக இருக்கிறதா இல்லை பாபத்துவம் பெற்றிருக்கிறதா என்பதைத் துல்லியமாகக் கணித்து அந்த வீட்டின் ஆதிபத்தியம் மற்றும் அந்த வீட்டிற்கு அதிபதியாகும் கிரகத்தின் காரகத்துவத்தின் சுப அசுபங்களை நன்மை தீமைகளை தெளிவாக உணர்வதில்தான் பலன் சொல்லும் சூட்சுமம் அடங்கியிருக்கிறது.

சென்ற வாரம் சுபக்கிரகம் வக்ரமானால் என்ன பலன்களை தரும் என்பதை சுருக்கமாகப் பார்த்த நிலையில் பாபக்கிரகங்களான சனி, செவ்வாய் இருவரும் வக்ரமானால் என்ன பலன்கள் நடக்கும் என்பதையும் சுருக்கமாகப் பார்க்கலாம்.

பாபக்கிரகங்கள் ஆட்சி வக்ரமானால் தன்னுடைய காரகத்துவங்களை அதாவது செயல்பாடுகளை வலிமையாக செய்யும் என்பதை சென்ற வாரம் குறிப்பிட்டேன். அது போலவே சனியும், செவ்வாயும் ஆட்சி பெற்று சுபத்துவம் இழந்து வக்ரமானால் தனது பாபத்துவ செயல்கள் மூலம் அந்த ஆதிபத்தியத்தைக் கெடுப்பார்கள்.

உதாரணமாக ஏழாம் வீட்டில் சனிபகவான் ஆட்சி பெறுவது சிறப்பான நிலை அல்ல. இது கடக, சிம்ம லக்னங்களுக்கு உரியது. ஏழாமிடத்தில் சனி ஆட்சி பெறுவதால் நடைபெறும் கெடுபலன்களை விட அவர் ஆட்சி வக்ரம் பெறுவதால் கூடுதலான பலன்கள் சனிதசையில் இருக்கும்.

செவ்வாயும் அப்படிதான். வக்ரம் பெறும் செவ்வாய் சந்திரனுடனோ குருவுடனோ தொடர்பு பெறாத நிலையில் தனது தீய காரகத்துவங்களை வலுவாகத் தரும் அமைப்பைப் பெறுவார்.

வக்ரம் பெறும் ஒரு கிரகம் தன் இயல்புக்கு மாறானதைச் செய்யும் தகுதி பெறுவதால் சுபக்கிரகங்கள் தன்னுடைய நல்ல செயல்பாடுகளைத் தரும் தகுதியை இழக்கும். பாபக்கிரகங்கள் தன்னுடைய கெட்ட செயல்பாடுகளை அதிகமாக தரும் தகுதியை பெறும். இதுவே ஆட்சி வக்ர கிரகங்களின் சுருக்கமான நிலை.

இதுபோலவே அனைத்து கிரகங்களுக்கும் அவற்றின் செயல்பாடுகள் எனப்படும் காரகத்துவங்களின் பலனை நிர்ணயிக்க வேண்டும். மேலும் நட்பு நிலை பெற்று ஒரு கிரகம் வக்ரத்தில் இருக்கும் போது அது நட்பு நிலைக்கும் கீழான வலுவான சமம் பகை போன்ற அமைப்பில் இருக்கும் பலனைச் செய்யும்.

அடுத்து நீச நிலையில் வக்கிரமாக இருக்கும் ஒரு கிரகம் அந்த நீசத்துவம் நீங்கி நேர்மாறான உச்ச நிலையை அடையும். அப்போது அந்த கிரகத்தின் காரகத்துவங்கள் எனப்படும் செயல்பாடுகளை அது ஜாதகருக்கு முழுமையாக தரும் நிலையைப் பெறும். ஆயினும் முதலில் அனைத்தையும் கெடுத்தே பிறகு அந்த கிரகம் தன் செயல்களைத் தரும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

நேரடியான உச்சநிலை என்பதற்கும், நீசனாகி வக்ரம் பெற்று உச்சநிலை பெறுவதற்கும் நுண்ணிய வேறுபாடுகள் உள்ளன. அதேபோல ஒரு நீசக்கிரகம் உச்சனுடன் இணைந்து நீசபங்கம் ஆகி அதன் மூலம் உச்சநிலை அடைவதற்கும் வித்தியாசங்கள் உள்ளன.

முதலாவது நேரடியான உச்சநிலை என்பது ஒரு கிரகம் தனக்கு விதிக்கப்பட்ட செயல்களை தன்னுடைய ஆதிபத்திய பாவங்களின் மூலம் அந்த ஜாதகருக்கு எவர் தூண்டுதலும் இன்றிச் செய்வதைக் குறிக்கும். இது வெளிப்படையாக நடைபெறுவது.

அதாவது சுக்கிரன் மீனத்தில் எவ்வித பங்கமும் இன்றி உச்சம்பெறும் நிலையில் தன்னுடைய காரகத்துவம் எனும் செயல்பாடுகளான வீடு, வாகனம், பெண்கள், காமம், கேளிக்கை, ஆடம்பரம் போன்றவற்றை அந்த ஜாதகருக்கு தனது ஆதிபத்தியங்களின் வழியே தன் தசை புக்திகளில் தருவார். அவர் தரும் நன்மைகள் நீடித்து இருக்கும்.

அவர் மீனத்தில் உச்ச வக்ரம் பெற்று வலிமை குறைந்த நிலையில் இருந்தாலும் உச்சம் பெற்று பின்பு அதற்கு மாறான நிலையை அடைந்ததால் முதலில் உச்சத்திற்கான செயல்பாடுகளை வீடு, வாகனம், மனைவி போன்றவைகளில் நல்ல பலன்களை தனது தசை புக்திகளில் தந்து அவற்றை நீடிக்க விடாமல் தடைகளை குறைகளை ஏற்படுத்துவார்.

சுக்கிரன் நீசபங்கம் இன்றி கன்னியில் முழுமையாக நீசமாக இருக்கும் நிலைகளில் அவருடைய மேற்சொன்ன வீடு, வாகனம், மனைவி, பெண்கள் காமம் போன்ற விஷயங்கள் கிடைக்காது. சரியான பருவத்தில் அனுபவிக்க வேண்டிய வயதில் திருமணம் ஆகாது. பெண் சுகம் கிடைக்காது. சொந்த வீடு அமைப்பு இருக்காது.

அதே நேரத்தில் அவர் அங்கே நீசத்தில் வக்ரம் அடைந்திருந்தால் முதலில் இவைகள் கிடைப்பதற்கு தாமதமும் தடைகளும் இருக்கும். தசையின் அல்லது புக்தியின் ஆரம்பத்தில் இவைகள் கிடைக்காமல் இருந்ததாலும் தடைகளுக்குப் பிறகு கிடைத்து ஜாதகருக்கு இறுதி வரை நீடித்தும் இருக்கும்.

ஆனால் நீசபங்கம் என்பது அதற்கு உண்டான விதிகளில் முறையாக அமையும் பட்சத்தில் உச்சத்தை விட மேலான ஒரு அமைப்பைத் தரும் என்பதால் கன்னியின் நீசம் பெற்று சந்திரகேந்திரத்தில் உச்சபுதனுடன் இருக்கும் சுக்கிரன் முதலில் நீச நிலைக்குரிய ஒன்றும் இல்லாத அமைப்பை உருவாக்கி பிறகு தனது செயல்பாடுகளில் அபரிதமான அமைப்பை ஜாதகருக்குத் தந்து அவரை உயர்த்துவார்.

இது போன்ற அமைப்பை கலைத்துறையில் ஜெயித்த சிலரின் ஜாதகங்களில் நான் பார்த்திருக்கிறேன். குறிப்பாக அன்றைய காலகட்ட பெரும் மீடியாவான வானொலியிலும் பின் சினிமாவிலும் வாய்ப்பு கிடைக்காமல் நிராகரிக்கப்பட்டு பிறகு சூப்பர் ஸ்டார் நிலைக்கு உயர்ந்த அமிதாப்பச்சன் ஜாதகத்தில் கன்னியில் நீசபங்க நிலையில் சுக்கிரன் உள்ளதைக் குறிப்பிடலாம்.

அதேநேரத்தில் ஒரு கிரகத்தின் நீசநிலை என்பது அது முழுக்க வலிமையில்லாத அதாவது தனது செயல்பாடுகளில் நன்மைகளைத் தர முடியாத தனது காரகத்துவங்களில் ஆசை காட்டி ஒரு மனிதனின் வாழ்வை வீணாக்கக் கூடிய அமைப்பு என்பதால் இயற்கைச் சுபக்கிரகமான சுக்கிரன் ஒருவர் ஜாதகத்தில் நீசமாக இருப்பது நல்ல நிலை அல்ல.

அமிதாப்பச்சன் போன்ற நீசபங்க எடுத்துக்காட்டுகள் மிகவும் அரிதாக மிகவும் சரியான அமைப்பில் கோடியில் ஒருவருக்குத்தான் அமையும் என்பதால் சுக்கிரன் நீசம் பெற்று உச்ச புதனுடன் அமர்ந்த எல்லோருக்கும் இது பொருந்தாது.

இதுபோன்ற நிலைகளில் சுக்கிரன் அந்த ஜாதகருக்கு யோகராகவும் அமையும் பட்சத்தில் தனது காரகத்துவமான சினிமா தொலைக்காட்சி போன்றவற்றில் ஜாதகரை ஈடுபடுத்தி அதில் ஜெயிக்கவும் விடாமல் அதைவிட்டு வெளியேறவும் விடாமல் தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும் என்ற இக்கட்டில் வாழ்க்கையைத் தொலைக்க வைப்பார்.

தனிப்பட்ட வாழ்விலும் நீசச்சுக்கிரன் அமைதியில்லாத வாழ்வு, கடுமையான பொருளாதாரச் சிக்கல்கள், வசதியான வீட்டில் இருக்க முடியாத நிலை, சொந்த வீடு இருந்தாலும் அதில் இருக்க முடியாத அல்லது அதைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் விற்கும் நிலை போன்றவற்றைச் செய்வார்.

வலிமையற்ற சுக்கிரன் தனது தசை புக்திகளில் தன்னுடைய செயல்பாடுகளான உணவு விடுதிகள், துணிக்கடை, பெண்கள் சம்பந்தப் பட்ட பொருட்கள், ஆட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை வைத்து நடத்தும் டிராவல்ஸ், வெள்ளை நிறம் போன்றவைகளில் ஜாதகரை ஈடுபடுத்தி நஷ்டங்களைத் தருவார். சுபத்துவமாக வலிமையுடன் இருக்கும் நிலைகளில் மேற்சொன்னவைகளில் அபரிதமான லாபம் இருக்கும்.

நீசம் பெற்று பாபகிரகங்களின் தொடர்பு மற்றும் இணைவைப் பெற்றுள்ள நிலையில் ஜாதகரின் நடத்தையில் மாற்றத்தைச் செய்வார். சில நிலைகளில் சுக்கிரன் வாழ்க்கைத்துணையைக் குறிப்பவர் என்பதால் இதுபோன்ற அமைப்பில் துணையின் போக்கால் நிம்மதியற்ற நிலைகள் சிலருக்கு இருக்கும்.

பொதுவாக எந்த ஒரு சூழ்நிலையிலும் இயற்கைச் சுபக்கிரகமான சுக்கிரன் ஒரு ஜாதகத்தில் வலிமையிழப்பது நன்மைகளைத் தராது. ஏதேனும் ஒரு வகையில் இது போன்ற அமைப்பு மன அமைதியைக் கெடுக்கும்.

அடுத்த வாரமும் சுக்கிரனைத் தொடர்வோம்….

(செப் 10 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

4 Comments on நீசச் சுக்கிரனின் நிலைகள் – C- 032

  1. அஸ்தங்கம் பற்றி சொல்லுங்கள் குருஜி

  2. குருஸு வணக்கம் தங்களிடம் நேரில் ஜதாகம் பார்க்க வேண்டும் நேரம் தேதி சொல்லவேண்டும் குருஸு

Leave a Reply

Your email address will not be published.


*


Retype the CAPTCHA code from the image
Change the CAPTCHA codeSpeak the CAPTCHA code