வக்ரச் சுக்கிரன் என்ன செய்வார்…?– 31

ஜோதிடம் எனும் தேவரகசியம் தொடரைப் படித்து வரும் வாசகர்கள் வக்ரம் எனும் நிலையை விளைவுகளோடு விளக்கிச் சொல்லும்படி அடிக்கடி கேட்டுக் கொள்வதால் வக்ரநிலை பெறும் ஒரு கிரகம் என்ன பலன் தரும் என்ற விஷயத்தை சுக்கிரனைப் பற்றிய இந்த அத்தியாயத்திலேயே சொல்லுகிறேன். 


வக்ரம் எனப்படுவதற்கு மாறுதலான இயக்கம் என்று பொருள்.

ஜோதிடத்தில் உள்ள மாயத்தோற்றங்களில் இதுவும் ஒன்று. ஜோதிடமே ஒரு மாயத்தோற்றம்தான் எனும் நிலையில் அதிலும் உள்ள ஒரு கணிக்கச் சிரமமான அமைப்பு இந்த வக்ரம் எனப்படும் நிலை.

ஜோதிடத்தை ஏன் மாயத்தோற்றம் என்று நான் குறிப்பிடுகிறேன் என்றால் சூரியன் நிலையானது, பூமி உள்ளிட்ட கிரகங்கள்தான் சூரியனைச் சுற்றி வருகின்றன எனும் உண்மைநிலையை மீறி நம் கண்ணுக்குத் தெரியும் தோற்றமான பூமியைச் சூரியன் சுற்றிவருவது போன்ற நிலையை வைத்தே ஜோதிடம் கணிக்கப்படுகிறது.

இந்த ஒரு அமைப்பை வைத்தே ஜோதிடம் உண்மைக்கு மாறானது என்று வாதாடுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால் வானியல் பற்றி நன்கு அறிந்த விஞ்ஞானிகள் கூட ஜோதிடத்தின் இதுபோன்ற பார்வைத்தோற்ற நிலையைக் குறை சொல்லுவது இல்லை.

வானசாஸ்திரம் இரண்டு விதமான கோட்பாடுகளைக் கொண்டே இருக்கிறது. ஒன்று சூரியமையக் கோட்பாடு எனும் நிஜதோற்றம். இரண்டாவது பூமி மையக் கோட்பாடு எனும் ஜோதிடம் சொல்லும் பார்வைத் தோற்றம்.

நவீன விஞ்ஞானிகள் பூமிமையக் கோட்பாட்டை ஏற்று கொண்டே இருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை இன்றைய நிலையில் குருபகவான் சிம்மராசியில் இருக்கிறார் என்பது நூறு சதவீத உண்மை. ஆனால் சிம்மத்தில் குரு இருப்பதால் இது நடக்கும் என்று பலன் சொல்ல ஆரம்பிக்கும்போதுதான் விஞ்ஞானம் அதிலிருந்து விலகும்.

ஜோதிடம் சொல்லும் ஒரு கிரகம் தற்போது இந்த ராசியில் இருக்கிறது எனும் கிரகத்தின் ராசி இருப்பு நிலை சரியே என்று ஒத்துக்கொள்ளும் நவீன விஞ்ஞானம் அந்த ராசியில் அந்தக் கிரகம் இருப்பதால் இந்த விளைவு என்று பலன் சொல்லுவதைத்தான் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

அதேநேரத்தில் அந்த பலன் உண்மைதானா.? அவ்வாறு நடக்க சாத்தியம் உள்ளதா? ஏற்கனவே அவ்வாறு நடந்திருக்கிறதா? என்று ஆராயவும் மறுத்து கண்களை மூடிக் கொள்கிறது. ஆயினும் ஜோதிடத்திலும் ஜெனட்டிக் சமாச்சாரத்தைப் போல ஏதோ ஒன்று ஒளிந்திருக்கிறதே என்று ஆராய இப்போது சிலர் முனைந்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம்.

முக்கியமாக மருத்துவராக இருக்கும் அனைவரின் ஜாதகத்திலும் செவ்வாய் வலுப்பெற்று இருப்பது எப்படி? அரசில் அங்கம் வகிக்கும் ஒருவருக்கு சூரியன் வலுவாக இருக்கிறாரே ஏன் என்பது போன்ற ஆராய்ச்சிகள் இப்போது நடக்க ஆரம்பித்திருப்பது காலவியல் விஞ்ஞானம் என்று நான் பெருமையுடன் குறிப்பிடும் இந்த ஜோதிடசாஸ்திரத்தை என்றேனும் ஒருநாள் நவீன விஞ்ஞானம் ஏற்று கொள்ளும் போது தெரியவரும்.

ஒரு கிரகத்தின் வக்ரநிலை என்பது அந்த கிரகம் தன் நிலையில் இருந்து பின்னோக்கி செல்வது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை பூமியில் இருந்து பார்க்கும் நமக்கு அளிப்பதைக் குறிக்கும்.

உதாரணமாக அருகருகே ஒரே வேகத்தில் பயணம் செய்யும் ரெயில் பெட்டிகளில் இருக்கும் இருவர் ரெயில் போகும் வேகத்தையும் இரண்டு ரயில்களுக்கும் இடையில் இருக்கும் தூரத்தையும் பொறுத்து ஒரே இடத்தில் அசையாமல் இருப்பதைப் போல உணர்வார்கள்.

இரண்டு ரெயில்களில் ஏதேனும் ஒன்றின் வேகம் மாறுபட்டு தூரமும் விலகும்போது அவர் பின்னோக்கிப் போவது போல தோற்றம் ஏற்படும். அதாவது அருகருகே இருக்கும் இரண்டு பொருட்களின் வேகத்தையும் விலகும் தூரத்தையும் பொறுத்து பார்க்கும் காட்சி மாறுபடும்.

வக்ரநிலையும் இதுபோன்றதுதான். பூமிக்கு அருகே ஒரு கிரகம் வரும் போது சில நிலைகளில் பூமியின் வேகமும் அருகில் வரும் கிரகத்தின் வேகமும் மாறுபடும் போது அதாவது பூமியோ அல்லது அந்த கிரகமோ ஒன்றை ஒன்று விலகிச் செல்லும்போது அல்லது பூமி சூரியனைச் சுற்றும் தன் சுற்றுப்பாதையின் வளைவில் திரும்பும் போது அருகில் இருக்கும் கிரகத்தின் ராசி இருப்பு நிலை பூமியில் இருப்பவர்களுக்கு மாறுபாடானதாகத் தோன்றும்.

உதாரணமாக சிம்மராசியில் குரு இருக்கும்போது பூமி மற்றும் குருவிற்கு இடையிலான தூரம் மாறுபடும்போதோ அல்லது பூமியின் சுற்றுப்பாதை மாறுபடும் போதோ பூமியில் இருந்து பார்க்கும் நமக்கு குருபகவான் பின் நோக்கி செல்வது போலவும் அதன் மூலம் கடகத்தில் இருப்பது போலவும் தோற்றம் ஏற்படும்.

இதுவே கிரகங்களின் வக்ரநிலை எனப்படுகிறது. உண்மையில் வக்ரம் எனப்படுவது நாம் காணும் ஒரு பார்வைத்தோற்றம் மட்டும்தான். உண்மை நிலை அல்ல. கிரகங்களின் சுழல் வேகங்கள் ஒரு போதும் கூடுதலாகவோ குறைவாகவோ மாறுதல் ஆவதில்லை. அவற்றின் வேகங்கள் நிலையானவை. ஆனால் பூமியில் இருக்கும் நமக்கு கிரகங்களுக்கு இடையிலான தூர வித்தியாசங்களால் ஒரு கிரகம் பின்னோக்கி செல்வது போல தோற்றம் ஏற்படுகிறது.

பஞ்சபூதக் கிரகங்களான குரு, செவ்வாய், சனி சுக்கிரன் புதன் ஆகிய ஐவருக்கு மட்டுமே இந்த வக்ரநிலை ஏற்படும். அதிலும் குரு செவ்வாய் சனி ஆகிய பூமிக்கு வெளிவட்டத்தில் இருக்கும் கிரகங்கள் அதாவது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் இல்லாமல் பூமிக்கு வெளிப்புறத்தில் இருக்கும் கிரகங்கள் பூமியை நெருங்கும்போது இந்த விளைவு ஏற்படும்.

ஜோதிடத்தில் சிலநிலைகளில் சூரியன் என்ற சொல்லை பூமி என்று மாற்றிப்போட்டால் ஜோதிடம் வானியல் விஞ்ஞானமாக மாறும் என்பதன்படி சூரியனுக்கு ஐந்தாமிடத்தில் இருந்து ஒன்பதாமிடத்திற்குள் இருக்கும் குரு செவ்வாய் சனி ஆகிய கிரகங்களுக்கு வக்ரநிலை எனப்படும் மாயத் தோற்றம் ஏற்படும்.

பூமியின் உள்வட்டம் எனப்படும் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் இருக்கும் கிரகங்களான சுக்கிரனுக்கும் புதனுக்கும் நமது பார்வைத் தோற்றத்தின் காரணமாக இவைகளுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் மாறுபடும்போது வக்ரநிலை ஏற்படுகிறது. இந்த வக்ரநிலை சூரியனுக்கும் அவற்றிற்கும் உள்ள டிகிரிரீதியிலான விலகல் அமைப்பைப் பொறுத்தது.

நம் பார்வைக் கோணத்தில் இவை இரண்டும் எப்போதும் சூரியனுக்கு அருகிலேயே இருக்கும் என்பதால் சூரியனை விட்டு உச்சபட்ச விலகல்தூரத்தை இவை அடையும்போது நமது பூமியின் நிலையை பொறுத்து இவைகளுக்கு வக்ரநிலை அமையும்.

கிரகங்களின் வக்ர நிலையை இயற்கைச் சுபக்கிரகங்களின் வக்ரநிலை, பாபக் கிரகங்களின் வக்ரநிலை என இரண்டாகப் பிரித்துப் பகுத்தாய்ந்தே பலன் சொல்வதே பலனைத் துல்லியமாகும். இன்னும் துல்லியமாகச் சொல்வோமேயானால் இதிலும் பிரித்து லக்ன சுபர் லக்ன அசுபர் என்றும் பிரித்துப் பார்க்க வேண்டும்.

வக்கிரமடைந்த கிரகம் தன் இயல்புக்கு மாறான பலனை செய்யும் என்பது பொது விதி. சில நிலைகளில் பாபக்கிரகங்கள் வக்ரம் அடையும்போது தன் ஆதிபத்தியத்தை கெடுத்து காரகத்துவங்களை வலிமையுடன் தரும். சுபக்கிரகங்கள் வக்ரம் அடையும் போது தன் காரகத்துவங்களைக் கெடுத்து ஆதிபத்திய பலனை வலுவுடன் தரும்.

உதாரணமாக சுக்கிரன் வக்ரம் அடைவதால் ஒரு நபருக்கு திருப்தியான மணவாழ்க்கை இல்லாமல் போகும். எனது அனுபவத்தில் சுக்கிரன் வக்ரமடைந்த ஒருவருக்கு இணையான சரியான ஜோடி என சொல்லப்படும் அளவிற்கு துணை கிடைப்பதில்லை.

சுக்கிரனின் முக்கியமான காரகத்துவம் காமம் எனப்படும் தாம்பத்திய சுகம் என்பதால் சுக்கிரன் வக்ரமடையும் நிலையில் அந்த ஜாதகருக்கு தாம்பத்திய சுகத்தில் ஆர்வம் இன்றிப் போகலாம். அல்லது அவரது ஆர்வத்திற்கேற்ப துணை கிடைக்காமல் போகலாம். இதுபோலவே சுக்கிரன் தனது மற்ற காரகத்துவங்களான வீடு வாகனம் போன்றவைகளையும் நல்லவிதமாகத் தரும் வலுவை வக்ரம் அடையும் போது இழப்பார்.

அதே நேரத்தில் பாபக்கிரகங்கள் வக்ரமடைவதால் தனது காரகத்துவங்க்களை அதிகமாகத் தரும் பலத்தைப் பெறும். அதாவது தனது பாப காரகத்துவங்களின் கெடுபலன்களை ஜாதகருக்கு தரும் என்பதால் வக்ரமடைந்த பாபக்கிரகங்கள் நன்மைகளைச் செய்வதில்லை.

இந்த நிலையையே குருநாதர் பாலஜோதிடம் ஆசிரியர் ஜோதிடபானு அதிர்ஷ்டம் சி.சுப்பிரமணியம் அய்யா அவர்கள் அடிக்கடி வக்ரத்தில் உக்ரபலம் என்று குறிப்பிடுகிறார்.

மேலும் வக்ரநிலையில் நுணுக்கமான பலன் சொல்லத் திணற வைக்கும் சூட்சுமங்களும் உள்ளன. அவற்றில் ஆட்சி வக்ரம், உச்ச வக்ரம் எனும் இரண்டு நிலைகளும் அடங்கும். இதில் உச்சவக்ரம் என்பது முழுவதுமாக நீச நிலையைக் குறிக்கும். அதே நேரத்தில் அந்தக் கிரகம் நேரடியான நீச நிலையை போல் முழு பலத்தையும் இழக்காது.

இதுபோன்ற நிலையில் தனது காரகத்துவத்தைச் செய்யும் வலிமை அந்த கிரகத்திற்கு நிச்சயமாக இருக்கும். என்னதான் உச்சவக்ரம் என்பது நீசநிலை என்றாலும் அந்த கிரகம் உச்சமாகி பின்புதான் அதற்கு நேர் எதிரான நிலையை அடைகிறது என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

அதேநேரத்தில் ஆட்சி வக்ரம் என்பது முற்றிலும் வித்தியாசமானது. நான் மேலே சொன்ன ஆதிபத்திய காரகத்துவ நுணுக்கங்கள் ஆட்சி வக்ரத்திற்கு முற்றிலுமாகப் பொருந்தும். உதாரணமாக கும்பலக்னத்திற்கு குருபகவான் இரண்டு, பதினொன்றுக்கு உரியவராகி பதினொன்றாம் வீட்டில் வக்ரநிலையில் இருந்தால் அவருடைய ஆதிபத்தியங்களில் பாபத்துவக் கெடுபலன்களை மட்டுமே செய்வார். சுபத்துவங்களை செய்யமாட்டார்.

உதாரணமாக இரண்டாமிடம் என்பது தனம் வாக்கு, குடும்பம் எனப்படும் சுப ஆதிபத்தியங்களை கொண்டது என்றாலும் மாரகம் எனப்படும் இன்னொரு பாப ஆதிபத்தியமும் இரண்டாம் வீட்டிற்கு உண்டு.

சுபக்கிரகமான குருபகவான் பதினொன்றாம் வீட்டில் மூல திரிகோண மற்றும் ஆட்சி வலுப்பெற்று வக்ரம் அடையும் நிலையில் தன் தசையின் முற்பகுதியில் பதினொன்றாமிட ஆதிபத்திய விஷயங்களான மூத்தசகோதரம், லாபம் போன்றவைகளை முற்றிலும் கெடுத்து தசையின் பிற்பகுதியில் இரண்டாமிட ஆதிபத்திய சுபச்செயல்களான தனம், வாக்கு, குடும்பம் ஆகியவற்றை முழுமையாகச் செய்யாமல் வக்ரம் பெற்றதால் ஜாதகருக்கு மாரகம் அல்லது மரணத்திற்கு நிகரான துன்பம் ஆகியவற்றைத் தருவார்.

மீதி நிலைகளை அடுத்த வியாழன் பார்க்கலாம் ….

(செப் 3 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*