ரிஷபம்: 2016 ராகு – கேது பெயர்ச்சிப் பலன்கள்

ரிஷபம்

ரிஷபராசிக்கு இதுவரை ஐந்தாமிடத்தில் இருந்து பிள்ளைகள் விஷயங்களில் மன வருத்தங்களையும், நிம்மதியற்ற நிலைகளையும், அதிர்ஷ்டக் குறைவையும் கொடுத்துக் கொண்டிருந்த ராகுபகவான் தற்போது நான்காமிடத்திற்கு மாறி குருபகவானுடன் இணைவது உங்களுக்கு மிகவும் சாதகமான பலன்களை தரக்கூடிய அமைப்பு.


அதேநேரத்தில் இதுவரை லாபஸ்தானம் எனப்படும் பதினோராமிடத்தில் இருந்து உங்களுடைய வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நல்ல பலன்களை கொடுத்து வந்த கேதுபகவான் பத்தாமிடம் எனப்படும் ஜீவன ஸ்தானத்திற்கு மாறுகிறார். இது சாதகமான பலன் தரும் அமைப்பு அல்ல.

பொதுவாக நம்முடைய மூலநூல்களில் கேந்திர ஸ்தானங்களில் அமரும் ராகு–கேதுக்கள் அந்த வீட்டின் பலனைக் கெடுத்து தங்களின் பலன்களைத் தருவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அதன்படி தற்போது நான்காம் வீட்டிற்கு மாறும் ராகுபகவானால் உங்களுக்கு வீடு, வாகனம், தாயார், கல்வி ஆகிய விஷயங்களில் பின்னடைவுகள் இருக்கும் என்றாலும் பெயர்ச்சியின் ஆரம்பத்தில் இருந்து சுமார் ஆறு மாதகாலங்கள் ராகு பகவான் குருவுடன் இணைந்தும் கேதுபகவான் குருவின் பார்வையை பெற்றும் அமைவதால் மேற்சொன்ன சாதகமற்ற போக்குகள் எதுவும் உங்களுக்கு அடுத்த குருப்பெயர்ச்சி நடக்கும் ஆகஸ்ட் மாதம் வரை எவ்வித பாதிப்புகளையும் தராது.

2016 ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு ரிஷபராசிக்காரர்களின் வயது, தகுதி, வாழ்க்கைமுறை, இருக்கும் நாடு ஆகியவற்றைப் பொறுத்து வீடு, வாகனம், தாயார், கல்வி, தன்சுகம் எனப்படும் ஆரோக்கியம் ஆகியவற்றில் சில பின்னடைவுகள் ஏற்படும்.

இதுவரை நல்ல வீட்டில் இருந்தவர்கள் சற்று வசதிக் குறைவான வீட்டிற்கு மாறுவீர்கள். வீட்டினை அடமானம் வைத்து தொழில் செய்பவர்கள், வீட்டின் பேரில் பணப்பிரச்னைகள் மற்றும் வங்கிக்கடன் உள்ளவர்கள், வீட்டின் மீது நீதிமன்ற வழக்குகள் இருப்பவர்கள், வீடு சம்பந்தமான பாகப்பிரிவினை சிக்கல்கள் உள்ளவர்களுக்கு நான்காமிட ராகுவினால் பாதிப்புகள் இருக்கும்.

மேலும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் புதிதாக வீட்டுப்பத்திரத்தை ஈடாகவோ, அடமானமாகவோ வைத்து தற்போது புதிதாக தொழில் ஆரம்பிக்க வேண்டாம். இந்தப் பெயர்ச்சி நடக்கும் முன்பே சில மாதங்களுக்கு முன்பு வீட்டினை வைத்து தொழில் செய்ய ஆரம்பித்தவர்கள் இந்த ஒன்றரை வருட காலங்கள் மிகவும் கவனமுடன் பங்குதாரர்களை நம்பாமல் சிக்கனமுடன் தொழில் செய்வது நல்லது.

அடுத்து வாகனவிஷயங்களில் செலவுகளும், விரையங்களும், மாற்றங்களும் இருக்கும் என்பதால் புதுவாகனம் வாங்கும் போதோ, இருக்கும் வாகனத்தை மாற்றும் போதோ அதிக கவனம் எடுத்துக் கொள்ளுவது நல்லது.

வயதான தாயாரைக் கொண்டவர்கள் அவரின் ஆரோக்கியத்தின் மேல் விழிப்புடன் இருங்கள். தாயாரால் விரையங்கள் இருக்கும் என்பதால் கவனம் தேவை. குறிப்பிட்ட சிலருக்கு தாயாருடன் மனக்கசப்புகளும், தாயாரைப் விட்டு பிரிதலும், பெற்றோரை விட்டு தூர இடங்களில் அல்லது வெளிநாடுகளில் பணிபுரிவது போன்ற பலன்கள் இப்போது நடக்கும்.

சிலருக்கு கல்வியில் ஆர்வம் குறையும். அக்கறை எடுத்து படித்தாலும் மதிப்பெண் கிடைப்பது கடினமாக இருக்கும். கல்வியில் தடை வரும். பருவவயதுக் குழந்தைகளுக்கு படிப்பைத் தவிர மற்ற விஷயங்களில் ஆர்வமும், நாட்டமும் இருக்கும் என்பதால் பதின்பருவத்தில் இருக்கும் ரிஷபராசிக் குழந்தைகளை பெற்றோர்கள் அக்கறையுடன் கவனிப்பது நல்லது.

நடுத்தரவயதைக் கடந்தவர்களுக்கு சில ஆரோக்கிய குறைபாடுகள் இருக்கும் என்பதால் சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகளுக்காக ஒரு முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுவது நல்லது.

பத்தாமிடத்திற்கு கேதுபகவான் மாறினாலும் முதல் ஏழு மாதங்கள் குருவின் பார்வையில் இருப்பதாலும் பத்தாம் இடத்திற்கு அதிபதி ஏழாம் இடத்தில் அமர்ந்து உங்களின் ராசியைப் பார்ப்பதாலும் ரிஷபத்தினரின் தொழில் வேலை வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் மிகப்பெரிய சங்கடங்கள் எதுவும் வந்து விடாது.

மேலும் சர்ப்பக்கிரகங்களில் ராகுதான் வலிமையானது என்றும் தலை என்றும் சொல்லப்படுவதாலும் கேது வலிமையற்ற வால் போன்றதுதான் என்பதாலும் பத்தாமிடத்தில் ராகு இருந்தால் மட்டுமே ஜீவன அமைப்புகளில் தொந்தரவுகள் வரும் என்றும் சொல்லபட்டிருக்கிறது.

எனவே இந்தமுறை கேதுபகவான் தொழில் ஸ்தானத்திற்கு இடம் பெயருவதால் வேலை தொழில் வியாபாரம் போன்றவை பாதிக்குமோ என்று ரிஷபராசிக்காரர்கள் கவலைப்படத் தேவையில்லை.

மேலும் கடந்த இரண்டு வருடங்களாகவே ரிஷபராசிக்கு குருபகவான் சாதகமற்ற இடங்களில் இருந்து வருகிறார். 2016 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியின் மூலம் குருபகவான் உங்களுக்கு மிகவும் நன்மைகளைத் தரக்கூடிய ஐந்தாமிடத்திற்கு மாறி ஒரு வருடத்திற்கு நிலை கொண்டிருப்பார் என்பதால் இப்போது நடக்க இருக்கும் ராகுகேது பெயர்ச்சியின் சாதகமற்ற பலன்கள் நிச்சயமாக உங்களைப் பாதிக்காது.

உங்களில் சிலர் வெளிநாட்டுத் தொடர்பால் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது. வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவுவார்கள்.

தந்தைவழி உறவில் மிகவும் நல்ல பலன்கள் இருக்கும். கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு ஏதேனும் பரிசு அல்லது விருது கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. வேலையில் பாராட்டப் படுவீர்கள்.

மறைமுகமான வழிகளில் சிலருக்கு வருமானம் உண்டு. குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் வீடு கட்டித் தரும் புரமோட்டர்கள் போன்றவர்களுக்கு தொழிலில் நல்ல மாற்றங்கள் இருக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். நிறைய செலவுகளும் விரயங்களும் இருப்பதை கிரகங்கள் காட்டுகின்றன. வருமானத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள்.

உறவினர்களிடம் சுமுக உறவு தடைபடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவர்களிடம் கொடுக்கல் வாங்கல் எதுவும் இந்த வருடம் செய்ய வேண்டாம். சொத்துப் பிரிவினை, நிலப்பிரச்னைகள் போன்றவற்றில் கவனமாக இருங்கள்.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இதுவரை வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பதவி உயர்வு உண்டு. இடமாற்றம், கேட்டபடியே கேட்கும் இடத்தில் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக்குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம். 

மாமியார் மாமனாருடன் கருத்து வேறுபாடுகளும் தந்தையுடன் உடன் பிறந்த அத்தைகளுடன் சிறிய பிரச்னைகளும் வரலாம்.

கோவில் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ஞானிகளின் திருத்தலங்களுக்கு பயணம் செல்வீர்கள். மகாபெரியவரின் அதிஷ்டானத்திற்கு சென்று அவரின் அருளைப் பெறும் பெரிய பாக்கியம் கிடைக்கும். ஷீரடி மந்திராலயம், பகவான் சத்யசாயியின் திரு இடம் போன்ற புனிதத் தலங்களுக்கு போக முடியும்.

இதுவரை திருமணமாகாத இளைய பருவத்தினத்தினருக்கு 2016ம் வருடம் குருபலம் வருவதால் இனிமேல் நல்லபடியாக திருமணம் நடக்கும். ரிஷப ராசிக்காரர்கள் வீட்டில் இந்தப் பெயர்ச்சியால் நிச்சயமாக ஏதேனும் ஒரு சுபகாரியம் உண்டு. மேலும் ராகுகேதுக்கள் இம்முறை புத்திரகாரகனாகிய குருவுடன் சம்பந்தப்படுவதால் இதுவரை குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதிலும் ஒரு விஷேச நிலையாக பெண் குழந்தைகள் மட்டும் இருந்து ஆண் குழந்தைக்கு ஏங்கும் தம்பதிகளுக்கு இம்முறை ஆண் வாரிசு கிடைக்கும்.

அதுபோலவே முதல் திருமணத்தில் தடுக்கி விழுந்து வாழ்க்கை கோணலாகி போய் துன்பத்தில் இருப்பவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை தற்பொழுது நல்ல விதமாக அமையும். இந்த வாழ்க்கை நிலையாகவும் நீடித்தும் மனதிற்கு பிடித்த வகையிலும் இருக்கும்.

யூக வணிகத்துறையில் அதிக முதலீடுகள் செய்ய வேண்டாம். பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும் என்பதால் நஷ்டங்கள் ஏற்படலாம். கவனத்துடன் இருங்கள். திரவப்பொருட்கள், வெள்ளைநிறம் சம்பந்தப்பட்ட தொழில், ஆற்றுமணல் கட்டுமானப்பொருள் தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு.

யூனிபாரம் அணிந்து வேலை செய்யும் துறைகளில் இருப்போருக்கு கடும் வேலை நெருக்கடியிலும் சில நல்ல பலன்கள் நடக்கும். தந்தையைப் பெற்ற பாட்டன் வழியில் பூர்வீக சொத்து ஒன்று கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த வருடம் நீங்கள் செய்யும் ஒரு நல்ல உதவியால் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும்.

சொத்து பிரச்சினை, பங்காளித்தகராறு, கணவன்-மனைவி விவாகரத்து பிரச்சினைகள் சம்பந்தமாக காவல்நிலையம், நீதிமன்றம் என அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு வழக்குகள் சாதகமாக முடிவிற்கு வந்து நிம்மதியைத் தரும். வருடத்தின் பிற்பகுதி உங்களுக்கு மிகவும் நல்ல பணவரவைத் தரும். ஆகவே அதற்கேற்ப திட்டங்கள் தீட்டி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுங்கள். சோம்பலை உதறித்தள்ளி சுறுசுறுப்பாக காரியம் ஆற்ற வேண்டியது அவசியம்.

கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு:

இதுவரை நல்லவேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு மனதுக்கு பிடித்த வகையில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள், ஊடகம் பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது வசந்த காலமாகும். கலைத்துறையினர் இதுவரை இல்லாத நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள். வாய்ப்புகள் வந்து வாசல்கதவைத் தட்டும்.

ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு:

கடன் பிரச்னைகளிலும் வழக்கு விவகாரங்களிலும் சிக்கித் தவித்து தூக்கத்தை இழந்திருந்தவர்களுக்கு அவைகள் நல்லபடியாக ஒரு முடிவுக்கு வந்து நிம்மதியைத் தரும். இதுவரை காணாமல் போயிருந்த உங்களின் விடாமுயற்சியும் தைரியமும் மீண்டும் உங்களிடம் தலையெடுத்து அனைத்து பிரச்னைகளையும் நீங்கள் தனியொருவராகவே சமாளித்து தீர்க்கப் போகிறீர்கள். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் மறையும். ஏற்கனவே தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தொழில் நல்ல முன்னேற்றமாக நடக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்களுக்கு:

வேலையில் இருப்பவர்கள் தங்களின் மேலதிகாரிகளிடம் அனுசரித்துப் போவது நல்லது. வேலையில் மாற்றம் ஏற்படும் காலம்தான் இது என்றாலும் தேவையில்லாமல் வேலையை விட வேண்டாம். பிறகு அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. பொருத்தமில்லாத வேலையில் இஷ்டமில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு உடனடியாக மாற்றங்கள் உருவாகி நினைத்த மாதிரியான வேலை கிடைக்கும்.

பரிகாரங்கள்:

வேலூர் வாலாஜாபேட்டையில் அமைந்திருக்கும் ஸ்ரீ தன்வந்திரிபீடத்தில் நடைபெறும் யாகத்தில் கலந்து கொள்ளுங்கள். அங்கே மகான் கயிலை ஞானகுரு ஸ்ரீலஸ்ரீ முரளிதர சுவாமிகளால் ஒரே கல்லில் ஸ்தாபிக்கப்பட்ட ராகு கேதுக்களை வணங்கி முறையான பரிகாரங்களைச் செய்யுங்கள். மேலும் அன்னை மீனாட்சியின் தவப்புதல்வர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகளின் அருள் பொழியும் திருமுகத்தை தரிசியுங்கள். அனைத்து பிரச்னைகளும் பஞ்சாய் பறந்து போகும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*