கடகம்: 2016 ராகு – கேது பெயர்ச்சிப் பலன்கள்

கடகம்

கடகராசிக்காரர்களுக்கு இதுவரை சாதகமான மூன்றாம் இடத்தில் இருந்து வந்த ராகுபகவான் அங்கிருந்து மாறி தனம், வாக்கு, குடும்பம் எனப்படும் இரண்டாமிடத்தில் இன்னும்   ஒன்றரை வருடங்களுக்கு நிலை கொண்டு இருக்கப் போகிறார்.


அதேபோல அவரின் இயல்பான துணைக் கிரகமான கேதுபகவானும் தற்போது இருக்கும் ஒன்பதாமிடத்தில் இருந்து அஷ்டமஸ்தானம் எனப்படும் எட்டாமிடத்திற்கு மாறி இன்னும் ஒன்றரை ஆண்டுகள் அங்கே நிலை கொண்டிருப்பார்.

பொதுவாக நமது மூலநூல்கள் இரண்டு, எட்டாம் இடங்களில் ராகு கேதுக்கள் இருப்பதை சிறப்பான ஒரு அமைப்பாகச் சொல்லவில்லை.

அதைவிட இரண்டாமிடத்தில் இருக்கும் ராகுபகவான் தனம், வாக்கு, குடும்பம் எனப்படும் இந்த ஸ்தானத்தில் அமர்வதன் மூலம் ஒருவருக்கு பொருளாதார சிக்கல்களையும், வாக்குறுதி பலிக்காத ஒரு நிலைமையும், குடும்பத்தில் பிரச்சினைகள் தருவார் என்பதும் நமது ஞானிகள் நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது.

இருப்பினும் கோட்சாரபலன்களில் எதையும் மேலோட்டமாகச் சொல்லாமல் நுட்பமாக கணித்துச் சொல்லியே பழக்கபட்ட நான் இம்முறை ராகுவின் இந்தப் பெயர்ச்சிப் பலனை கடக ராசிக்காரர்களுக்கு இரண்டு நிலைகளாகப் பிரித்துப் பலன் சொல்லுவேன்.

முதலாவதாக தற்போது சென்ற குருப்பெயர்ச்சியின் மூலமாக ஏற்கனவே இரண்டாம் வீட்டில் நிலை கொண்டிருக்கும் குருபகவானுடன் ராகு இணைவதால் இணையும் கிரகத்தின் பலனை ராகுபகவான் எடுத்துச் செய்வார் என்பதன்படி பெயர்ச்சியின் முதற்பகுதியான 2016 வருடம் ஆகஸ்ட்வரை உங்களுக்கு நல்ல பலன்களையே செய்வார்.

அடுத்த குருப்பெயர்ச்சியில் ராகுவிடமிருந்து விலகி குருபகவான் மூன்றாம் இடத்திற்கு மாறியவுடன் ராகு சுபத்தன்மை நீங்கப்பெறுவதால் 2016-ம் வருடம் பிற்பகுதியில் இருந்து உங்களுக்கு உங்களின் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தை முழுமையாக ஆக்கிரமித்து மேற்கண்ட இடங்களில் சாதகமற்ற பலன்களைத் தருவார் என்பதால் இப்போதே அதற்கேற்ப முன்னேற்பாடான செயல்களைச் செய்து கொள்வதன் மூலம் கடகராசிக்காரர்கள் எவ்விதமான பின்னடைவுகளும் இல்லாமல் நிச்சயமாக இந்த ராகு-கேதுப்பெயர்ச்சிக் காலத்தை கடந்து விட முடியும்.

பொதுவாக கடகம் மற்றும் சிம்மராசிக்காரர்களுக்கு ராகு-கேதுக்கள் நல்ல பாவங்களில் அமர்ந்தாலும் நன்மைகளைச் செய்வது இல்லை. ஏனென்றால் கடக, சிம்ம ராசிகளின் அதிபதிகளான சூரிய, சந்திரர்களை ராகு-கேதுக்கள் கடுமையான பகைவர்களாக கருதுவதாலும் ஒளிக்கிரகங்களான மேற்கண்டவர்களை கிரகணம் என்ற பெயரில் மறைப்பதாலும் நெருக்கடியான   நிலைகளில் அமர்ந்தால் மட்டுமே ராகு-கேதுகள் கடக, சிம்மத்திற்கு நன்மைகளைச் செய்வார்கள்.

அதன்படி இப்போது குருவின் இணைவை ராகு பெறுவதால் மிகப்பெரிய கெடுபலன்கள் எதையும் கடகராசிக்கு ராகுவால் தர இயலாது.

அடுத்து இதுவரை ஒன்பதாமிடத்தில் இருந்த கேதுபகவான் இந்தப் பெயர்ச்சி மூலம் எட்டாமிடத்திற்கு மாறுகிறார். அஷ்டமஸ்தானம் எனப்படும் எட்டாம் வீட்டில் பாபக்கிரகங்கள் அமர்வது கெடுபலன்களைத் தரும் என்று நமது மூல நூல்கள் சொல்லுவதால் இதுவும் ஒரு சாதகமற்ற நிலைமைதான்.

ஆயினும் குருவின் பார்வையைப் பெற்ற கேது கெடுதல்களை செய்யமாட்டார் என்ற விதிப்படியும் கும்பத்தில் அமரும் கேது நல்லபலன்களை மட்டுமே தருவார் என்ற விதிப்படியும் அஷ்டமகேது அப்படி ஒன்றும் பெரிய கெடுபலன்களை கடகத்திற்குத் தந்துவிடப் போவதில்லை.

அதேநேரத்தில் எட்டாமிடம் சூதாட்டம், பங்குச்சந்தை, எம்.எல்.எம். எனப்படும் மல்டிலெவல் மார்க்கெட்டிங் போன்ற பண இரட்டிப்பு விஷயங்களைக் குறிப்பிடும் இடம் என்பதால் இது போன்ற துறைகளில் உங்கள் பணத்தை முதலீடு செய்து ஏகப்பட்ட லாபங்களை சம்பதிக்கலாம் என்று ஆசை காட்டி கேதுபகவான் மோசம் போகச் செய்வார்.

எனவே இந்த ராகு-கேது பெயர்ச்சிக் காலத்தின் முழுமையான ஒன்றரை வருட காலத்திற்கும் சூதாட்டம், பங்குச்சந்தை போன்ற விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டாமல், அதிகவட்டிக்கு ஆசைப்படாமல், சுலபமாக பணம் சம்பாதிக்கலாம் என்று தூண்டில் போடப்படும் விஷயங்களில் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். இதன் மூலம் எட்டாமிடத்து கேதுபகவான் நிச்சயம் ஏமாற்றங்களைத் தருவார்.

ஏற்கனவே பங்குச்சந்தை துறையில் இருப்பவர்கள் அகலக்கால் வைக்காமல், அதிகமான முதலீடு செய்யாமல் கவனமுடன் இருப்பது நல்லது. மேலும் லாட்டரி போன்ற சூதாட்டங்களில் அதிகமாக ஈடுபட்டு பணத்தை இழக்கும் அமைப்பு இருப்பதால் லாட்டரி, கிரிக்கெட் போன்ற சூதாட்டங்களின் பக்கம் தலை வைத்துப் படுகாமல் இருப்பது உங்கள் பணத்திற்குப் பாதுகாப்பு.

குறிப்பாக பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்கள், சீனியர் சிட்டிசன் எனப்படும் முதியவர்கள், மற்றும் ஏதேனும் ஒருவழியில் ஒரு பெரியதொகை கிடைக்கப்பெற்று அதை முதலீடு செய்து வட்டி மூலம் வாழ்க்கை நடத்த விரும்புபவர்கள் அதிக வட்டிக்கு ஆசைப்படாமல் பொதுத்துறை வங்கிகள் போன்ற நம்பகமான அமைப்புகளில் மட்டும் டெபாசிட் செய்து வாழ்க்கை நடத்துவது நல்லது.

பேராசைப்பட வைத்து இருப்பதையும் இழக்க வைப்பவர் அஷ்டமகேது என்பதால் இந்த ராகு கேது பெயர்ச்சியில் பண விவகாரங்கள் அனைத்திலும் கூடுதல் விழிப்புடன் இருங்கள்.

அரசு தனியார்துறை பணியாளர்கள் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் சொல்வதை கேட்டு நடந்து கொள்வது நல்லது. அலுவலகங்களில் உங்களைப் பிடிக்காதவர்கள் கை ஓங்கும் சூழ்நிலை வரலாம். சில நேரங்களில் சுவர்களுக்கு கூட கண்களும் காதுகளும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உடன் வேலை செய்பவர்களிடம் வீண் அரட்டை, மேல் அதிகாரியின் செயல் பற்றிய விமரிசனங்கள் போன்ற விஷயங்களை தவிருங்கள்.

சொந்தத்தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் இந்தப்பெயர்ச்சி கெடுபலன்கள் எதுவும் தராது. கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு அலைச்சல்களும் மந்த நிலையும் ஒருபுறம் இருந்தாலும் இன்னொரு புறம் தொழில் முன்னேற்றமும் வருமானமும் கண்டிப்பாக இருக்கும்.

சுபக்கிரகமான குருபகவான் எட்டாமிடத்தைப் பார்த்து வலுப்படுத்துவதால் சில தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு உங்களுடைய நல்ல பெயரைக் கெடுத்துக் கொள்வீர்கள். தேவையற்றவர்களுக்கு ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது இப்போது கூடாது. அதனால் சிக்கல்கள் வரலாம். பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிட செயல்களால் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள்.

வீண்விவகாரங்களில் தலையிடுவதும் அடுத்தவர்களுக்காக பரிந்து பேசி வம்பை விலைக்கு வாங்குவதும் இந்த காலகட்டங்களில் நடைபெற்று விரோதங்கள் வரும் என்பதால் எங்கும் எதிலும் எச்சரிக்கை தேவை. சிலருக்கு பயணம் சம்பந்தமான வேலைகள் அமைந்து அலைச்சல்களும் பிரயாணங்களும் அதிகமாக இருக்கும். பயணங்களால் லாபமும் இருக்கும்.. உறவினர்களிடம் சுமூகமான உறவு ஏற்படுவது கடினம்.

பெண்களுக்கு இந்தப்பெயர்ச்சி நல்ல பலன்களைத்தான் அதிகம் தரும். இதுவரை உங்களை புரிந்துக் கொள்ளாத கணவர் இனிமேல் உங்களை புரிந்து கொண்டு, உங்கள் மனம் போல் நடந்து கொள்ள ஆரம்பிப்பார். பிள்ளைகள் உங்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். உங்களின் அந்தஸ்து உயரும். கூட்டுக் குடும்பத்தில் மருமகளின் பேச்சு மாமியாரால் ஏற்கப்படும்.

கூடுமானவரை நேர்வழியிலேயே செல்ல முயற்சி செய்யுங்கள். குறுக்குவழி வேண்டாம். அரசுத்துறை, தனியார்துறை ஊழியர்கள் மேல்வருமானத்திற்கு ஆசைப்பட்டு விதிகளை மீறி யாருக்கும் சலுகை காட்ட வேண்டாம். மேலதிகாரிகளுக்கு தெரியாமல், அவர்களின் எழுத்துப்பூர்வமான அனுமதி இல்லாமல் எதுவும் செய்யாதீர்கள். பின்னால் தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

பேச்சின் மூலம் வாழ்க்கை நடத்துபவர்களுக்கு மந்தநிலை இருக்கும். ஆசிரியர் பணி, பேச்சாளர்கள், மார்க்கெட்டிங் துறையினர், கவுன்சிலிங் செய்பவர்கள் வழக்குரைஞர்கள் போன்றவர்களுக்கு தீவிர முயற்சிக்குப் பின்பே காரியங்கள் நடக்கும். யாருக்காவது பரிதாபப்பட்டு உதவி செய்து அதனால் நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் அமைப்பு இருப்பதால் யாருக்கும் எதற்காகவும் ஜாமீன் போட வேண்டாம்.

யாருக்கும் எதுவும் செய்து தருவதாக தேவையில்லாத வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம். குறிப்பிட்ட சிலருக்கு சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்யும்படி இருக்கும். சகோதரிகளால் செலவு உண்டு. என்னதான் செய்தாலும் அண்ணன் எனக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று தங்கைகள் குறை சொல்வதையும் கேட்டு சகித்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

பொதுவில் கடகத்திற்கு சுமாரான பலன்கள்தான் என்றாலும் குருபகவான் நல்ல அமைப்பில் இருப்பதாலும் மற்ற யோகக்கிரகங்களின் தயவினாலும் அனைத்தையும் சமாளிப்பீர்கள் எனபது உறுதி.

புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு:

என்றைக்கோ ஒருநாள் பிரதிபலன் பாராமல் நீங்கள் ஒருவருக்கு செய்த உதவியால் இப்போது அவர் மூலமாக நல்லபலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்பால் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது. வேற்றுமதத்தினர் உங்களுக்கு உதவுவார்கள். தந்தைவழி உறவில் மிகவும் நல்ல பலன்கள் இருக்கும். கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு ஏதேனும் பரிசு அல்லது விருது கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. வேலையில் பாராட்டப்படுவீர்கள்.

பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு:

கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து பேசி எதிர்கால வாழ்க்கையை திருப்திகரமாக அமைத்துக் கொள்வீர்கள். நல்ல திட்டங்களைத் தீட்டி அதை செயல்படுத்தவும் செய்வீர்கள். அனைத்து சோதனைகளையும் வெற்றியாக, சாதனைகளாக மாற்றக்கூடியவர் நீங்கள் என்பதால் இந்த ராகுகேது பெயர்ச்சி பெரிதாக ஒன்றும் உங்களைப் பாதிக்காது. கையில் இருக்கும் சேமிப்பை கரைய வைக்கும். அவ்வளவுதான். அதேநேரத்தில் வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களில்தான் செலவுகள் இருக்கும்.

ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு :

பழைய வாகனங்களை வைத்திருந்து ரிப்பேர் செலவு பார்ப்பதை விட அதை மாற்றி வேறு வாகனம் வாங்குவது நல்லது. தாயாரின் உடல்நிலை கவனிக்கப்பட வேண்டும். சில மறைமுகமான வழிகளில் உங்களுக்கு வருமானம் கிடைக்கும். குறிப்பாக ரியல்எஸ்டேட் மற்றும் வீடு கட்டித்தரும் புரமோட்டர்கள் போன்றவர்களுக்கு தொழிலில் நல்ல மாற்றங்கள் இருக்கும். நிறைய செலவுகளும் விரயங்களும் இருப்பதை கிரகங்கள் காட்டுகின்றன. வருமானத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள்.

பரிகாரங்கள்:

தென்மாவட்டங்களில் இருப்பவர்கள் கும்பகோணம் அருகில் உள்ள ராகுபகவானின் திருத்தலமான திருநாகேஸ்வரத்திற்கு ஜென்ம நட்சத்திரம் அன்று சென்று வழிபட்டுத் திரும்புவது ராகுபகவானால் ஏற்படும் சிரமங்களைக் குறைக்கும். வடமாவட்டங்களில் இருப்பவர்கள் காஞ்சிபுரம் பஸ்நிலையம் அருகில் உள்ள அருள்மிகு சித்திரகுப்தன் ஆலயத்தில் ஒரு அபிஷேகம் செய்யுங்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*