காதலைத் தரும் சுக்கிரன் …– C -028

இந்த உலகில் ஒருவருக்கு முறையான வழியிலோ, முறையற்ற வழியிலோ கிடைக்கும் அனைத்து சுகங்களுக்கும் காரணம் சுக்கிரபகவான் ஒருவர்தான்.

ஜாதகத்தில் சுக்கிரன் சுபஆதிபத்தியமும், சுபத்துவமும் அடைந்திருக்கும் நிலையில் அந்த ஜாதகர் இவ்வுலகின் அனைத்து சுகங்களையும் சரியான பருவத்தில் நேர்மையான முறைகளில் பெற்று மகிழ்வார். அதேநேரத்தில் ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் பாபர்களுடன் இணைந்து பாபஆதிபத்தியமும் வலுவும் பெற்றிருந்தால் தனது சுகங்களை கெட்ட வழிகளில் முறையற்ற விதத்தில் அனுபவிக்க வைப்பார்.


சுக்கிரன் எல்லாவகையிலும் நல்லவைகளை மட்டுமே தருவதற்கு விதிக்கப்பட்ட கிரகம். அவர் ஒரு சுபக்கிரகம் என்பதால் பாபக்கிரகங்களான சனி செவ்வாய் மற்றும் ராகு கேதுக்களுடன் இணைவது நல்லநிலை அல்ல.. அதேநேரத்தில் சூரியன் சுக்கிரன் புதன் ஆகிய மூவரும் முக்கூட்டுக் கிரகங்கள் என்பதால் அவர் பெரும்பாலும் சூரியனை ஒட்டியே இயங்கியாக வேண்டும் என்பது ஜோதிட விதி.

கிரகங்களுக்கிடையேயான பகை நட்பு எனும் உறவுமுறைகளில் சுக்கிரனுக்கு சூரியனும் சந்திரனும் பகைவர்கள் என்று நமது ஞானிகளால் சொல்லப் பட்டிருந்தாலும் எனது அனுபவத்தில் ஒரு ஜாதகத்தில் அவர் சூரியனுடனோ சந்திரனுடனோ இணையும் நிலையில் மிகப்பெரிய துன்பங்கள் எதையும் தந்து விடுவதில்லை.

ஆனால் நான் மேலே சொன்ன சனி செவ்வாய் ராகு போன்ற பாபர்களுடன் அவர் சேரும்போது இணையும் டிகிரி அளவிலான தூரத்தைப் பொறுத்தும் இணைவு நடைபெறும் ராசியைப் பொறுத்தும் தன் இயல்புகளை மாற்றிக்கொண்டு தனது தசை புக்திகளிலோ அல்லது தான் தொடர்பு கொண்ட கிரகங்களின் தசை புக்திகளிலோ ஒரு ஜாதகரை முறைகேடான சுக வழிகளில் செல்ல வைப்பார்.

சுருக்கமாகச் சொல்லப்போனால் பூமியில் சகல உயிரினங்களும் மனிதனும் பிறப்பதும் இருப்பதும் இயங்குவதும் காமத்தின் அடிப்படையில்தான். நிஜவாழ்வில் கூட ஒருமனிதனின் வாழ்க்கை இங்கே காமத்தை அடிப்படையாக்கித்தான் ஆரம்பமாகிறது. ஆணாகட்டும் பெண்ணாகட்டும் காமத்திற்கு உடல்ரீதியாக அவர்கள் தயாராகும் போதுதான் முழுமையான மனிதர்கள் ஆகிறார்கள்.

இன்றைய நாகரிக சமூகத்தில் ஒரு முழுமையான மனிதனின் காமம் கூட முறைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே அது திருமணத்தின் மூலமாக ஒருவருக்கு அனுமதிக்கப்படுகிறது. இவையனைத்தும் முறையான வழிகளில் நடைபெற சுபத்துவம் பெற்ற சுக்கிரன் துணை புரிவார்.

அதே நேரம் சுக்கிரபகவான் சனி செவ்வாய் ராகு போன்ற பாபக்கிரகங்களுடன் இணைந்து தசை நடத்தினாலோ தொடர்பு கொண்டாலோ அல்லது இவரது ரிஷப துலாம் வீடுகளில் பாபக்கிரகங்கள் பாபவலுவுடன் இருந்து அவைகளின் தசை நடந்தாலோ மேலே நான் சொன்ன பலன்கள் தலைகீழாக இருக்கும்.

ஒருவருக்கு உடலுறவில் ஈடுபாடு இருக்குமா இருக்காதா? அதில் எந்தவகையில் அவருக்கு நாட்டம் இருக்கும் என்பதை ஒரு ஜாதகத்தின் ஏழாமிடமும் அவர் உறவின்போது எத்தகைய வலிமையுடன் இயங்குவார் அவரது வீரியம் என்ன என்பதை அவரது மூன்றாமிடமும் அந்த உறவின் மூலம் அவர் எந்த முறையில் இன்பங்களை அனுபவிப்பார் அவருக்கு எப்படிப்பட்ட போக சுகம் கிடைக்கும் என்பதை அவரது பனிரெண்டாம் பாவமும் சுட்டிக்காட்டும்.

இந்த மூன்று பாவங்களோடு சுக்கிரன் தொடர்பு கொள்ளும் நிலையில் சுக்கிரன் சுபத்துவம் பெற்றிருந்தால் அவருக்கு முறையான வழிகளில் வாழ்க்கைத்துணை மூலமாக திகட்டத் திகட்ட காமம் கிடைக்கும். சிறிது பிசகி பாபசம்பந்தத்தை சுக்கிரன் பெற்றிருந்தார் என்றால் வேறு வழிகளில் காமம் அறிமுகப்படுத்தப் பட்டு சம்பந்தப்பட்ட புக்திகளில் இவை நடந்து புக்தி முடிந்ததும் விலகும்.

இன்னொரு விசித்திர நிலையாக சுக்கிரனுடன் ராகு மிகவும் நெருக்கமாக இணையும் நிலையில் ஒருவருக்கு காமம் மறுக்கப்படும். ஒரு சுகம் அல்லது பாக்கியம் கிடைப்பதை ராகு தடுப்பவர் என்பதால் ராகுவோடு சுக்கிரன் மிகவும் நெருங்கும் சூழலில் தன் சக்தியை இழந்து அந்த ஜாதகருக்கு திருமணம் தாம்பத்யசுகம் போன்ற தனது காரகத்துவங்களைத் தரும் வலிமையை இழப்பார்.

ஆனால் இதுவே தலைகீழ் நிலையாக சுக்கிரனுடன் இணைந்த ராகுதசையில் அந்த ஜாதகருக்கு பலவித நிலைகளில் பல வழிகளில் காமம் வழங்கப்படும். ஒரு கிரகத்திடமிருந்து பறித்ததை ராகு தன் தசையில் தருவார் எனும் ஜோதிட விதிக்கேற்ப இது நடக்கும்.

எனவே எந்த ஒரு விதிப்படியும் ராகு சுக்கிரனுடன் இணைவது ஒரு ஜாதகருக்கு சுக்கிரனின் காரகத்துவங்களை மாறுபட்டே தரும் என்பதால் சுக்கிர ராகு தொடர்பு நல்லநிலை அல்ல. சுக்கிரனுடன் ராகு இணைவது மட்டும்தான் இந்த நிலைகளைத் தரும் என்பது இல்லை. சுக்கிரனின் வீட்டில் அமர்ந்த வலிமையான ராகுதசை புக்திகளிலும் இந்த பலன்கள் நடக்கும்.

அதுபோலவே சுக்கிரனுடன் இணையும் அல்லது தொடர்புகொள்ளும் அல்லது அவரது வீட்டில் இருக்கும் பாபவலுப் பெற்ற சனிபகவான் சுக்கிரன் அல்லது சனி தசை புக்திகளில் ஜாதகரை காதல் அல்லது முறைகேடான காம விஷயங்களில் அசிங்கப்படுத்துவார். தலைகுனிய வைப்பார். இதுபோன்ற நிலைகளில் ஜாதகர் கீழ்நிலைக் காமத்திற்கு அடிமையாக இருப்பார்.

இங்கே நான் தொடர்பு கொள்வது என்று குறிப்பிடுவது சனிபகவான் சுக்கிரனைப் பார்ப்பது அல்லது சாரம் தருவது உள்ளிட்டவைகளைக் குறிக்கிறது. வலுப்பெற்ற சனி சுக்கிரனுடன் சம்பந்தம் பெறும்போது ஜாதகர் காமத்திற்கு அடிமையாக இருப்பார். காமத்திற்காக எதையும் செய்வார். தனது நற்பெயர் கல்வி வேலை அந்தஸ்து போன்றவற்றை துச்சமாக மதிப்பார். இது போன்ற நிலைகளில் காமம் ஒன்றே இவரது சிந்தனை முழுவதையும் ஆக்கிரமித்திருக்கும்.

மேலும் சனிபகவான் நீசம் பெற்று சூட்சுமவலுப் பெறாமல் சுக்கிரனோடு தொடர்பு கொள்ளும் நிலை மிகவும் தொல்லைகளைக் கொடுக்கக் கூடியது. இதுபோன்ற அமைப்பில் சனியோ சுக்கிரனோ தொழில் அமைப்புகளோடு சம்பந்தப் படுவார்களாயின் ஜாதகரின் தொழிலும் நீசவழிகளில் இருக்கும். சனிபகவான் சுபத்துவவோ சூட்சும வலுவோ அடைந்தால் மட்டுமே இந்த பலன்கள் மாறும்.

பொதுவாகவே சுபத்துவம் அடைந்தாலும் சனி சுக்கிர இணைவோ தொடர்போ நல்லது அல்ல. இதுபோன்ற அமைப்பில் அந்த ஜாதகரின் லக்னாதிபதியும் வலுவிழந்தால் ஜாதகருக்கு மனக்கட்டுப்பாடு இல்லாது போகும். எனவே இதுபோன்ற நிலையுள்ள ஜாதகருக்கு தான் செய்வதே சரி என்ற நிலைப்பாடோ அல்லது நான் இப்படித்தான் உலகம் என்னைப் பற்றி என்ன நினைத்தாலும் கவலை இல்லை என்ற மனப்போக்கோ இருக்கும்.

மேலும் சுக்கிரன் சுபவலுப் பெற்றவர்கள் பெண்களால் விரும்பப் படுபவர்களாகவும் பெண்களை மதிப்பவர்களாகவும் இருப்பார்கள். ஒரு பெண்ணைப் புரிந்து கொள்ள சுக்கிரனின் சுபவலு முக்கியம். அதேநேரத்தில் இத்தகையவர்கள் எந்த சூழலிலும் பெண்ணைப் பாதுகாப்பார்கள் என்பதினால்தான் பெண்களின் விருப்பமானவராக இருப்பார்களே தவிர காதலினாலோ அதன் மூலமான காமத்தினாலோ அல்ல.

அடுத்து செவ்வாய் பகவான் ஒரு பரிபூரண ஆண் கிரகம். ஒரு ஆணின் உடல் மன வலிமைகளையும் எதிர்பார்ப்புகளையும் குறிப்பவர். ஒரு ஆணுக்கு எல்லாவிதங்களிலும் தீராத ஆசைகளையும் புதிது புதிதான எதிர்பார்ப்புகளையும் வேட்கையையும் தருபவர் செவ்வாய் பகவான்.

மேலும் ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ வீரியத்தை அளிப்பவரும் செவ்வாய்தான். தீர்க்க முடியாத வேட்கைகளைக் கொண்ட எதிலும் திருப்தி அடையாத தன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள கடினமான வழிகளையும் தேர்ந்தெடுக்கக் கூடிய பேராசையுள்ள முன்யோசனையற்ற ஒரு ஆண்கிரகமான செவ்வாய் முழுக்க முழுக்க பெண்மைத்தனத்தைக் கொண்ட பெண்கிரகமான சுக்கிரனுடன் இணைவது சுக்கிரனை முழுக்க சுயத்தன்மையை இழக்க வைக்கும்.

செவ்வாயுடன் இணையும் சுக்கிரன் என்ன பலன் தருவார் என்பதை அடுத்த வியாழக்கிழமை பார்ப்போம்..

பள்ளிப்பருவச் சுக்கிரன் என்ன செய்வார்?

ஒருவருக்கு பள்ளி கல்லூரி செல்லும் இளமைப் பருவத்திலேயே முறையற்ற காமம் காதல் என்ற பெயரிலோ அல்லது வேறுவகையிலோ அறிமுகப் படுத்தப்படுவது சுக்கிரன் பாபவலுப்பெறும் நிலைகளில்தான். அதிலும் இந்தப் பருவத்தில் சுக்கிரதசையோ சுக்கிரன் சம்பந்தப்பட்ட ராகு கேது போன்ற பாபர்களின் தசையோ இளையபருவத்தினருக்கு வருமாயின் அவரது பெற்றோருக்கு நிச்சயம் தலைவலிதான்.

பாத்திரத்தில் பொங்கும் பால் அந்த பாத்திரத்திற்குள்ளேயே கொதிப்பதே பாலுக்குப் பெருமை. மாறாக கொதித்து வெளியே சிந்தினால் அதனால் நன்மைகள் இல்லை. இதைக் குறிக்கவே சிறுவயதில் வரும் சுக்கிரதசை செய்யும் வேலைகளை சுருங்கச் சொல்ல “குட்டிச்சுக்கிரன் கொட்டிக் கவிழ்க்கும்” என்பது போன்ற பழமொழிகள் நமது பெரியவர்களால் சொல்லப்பட்டன.

நான் ஏற்கனவே செவ்வாய் மற்றும் புதனைப் பற்றிய கட்டுரைகளில் உடலை இளமையாக வைத்திருக்க வைப்பவர் செவ்வாய்,. மனதை இளமையாக வைத்திருப்பவர் புதன் என்று குறிப்பிட்டதைப் போல இந்த உடல், மனம் இரண்டையும் இளமைத்துடிப்புடன் இருக்க வைக்கும் இளமை வேகத்தையும், அந்த வேகத்தினால் கிடைக்கும் இன்பங்களையும் அனுபவிக்க வைக்கும் இளமைநாயகன் சுக்கிரன் ஆவார்.

உலகிலுள்ள இளைய பருவத்தினர் அனைவரையும் காதல் என்ற பெயரில் கட்டி வைப்பவர் இவர்தான். காதலின் அதிபதியும் இவரேதான். சுக்கிரன் வலுப்பெற்ற ஒருவர் நல்ல காதலனாக இருப்பார். எழுத்தின் நாயகனான புதனுடன் சுக்கிரன் இணைந்து வலுப்பெற்று இருந்தால் அந்த ஜாதகர் கவிதை பாடும் காதலனாகவும் இருப்பார்.

உணர்ச்சி வசப்படும் காதலர்களை உருவாக்குபவர் சுக்கிரன். இவரே காமத்திற்கும் அதிபதி என்பதால் அந்தக் காமம் துணையின் சம்மதத்துடன் கிடைப்பதற்கும் எதிர்பாலினம் காமத்திற்கு உடன்படுவதற்கும் சரியான சமயத்தில் இருவருக்குள் காதலை விதைப்பார்.

படிக்க வேண்டிய டீன்ஏஜ் பருவத்தில் ஒரு ஆணோ, பெண்ணோ காதல் வயப்படுகிறார். படிப்பைத் தவிர்த்து திசைமாறிச் செல்கிறார் என்றால் நிச்சயம் அவருக்கு சுக்கிர தசையோ, புக்தியோ அல்லது சுக்கிரனின் வீடுகளில் அமர்ந்த கிரகங்கள் அல்லது சுக்கிரனோடு தொடர்பு கொண்ட கிரகங்களில் தசை புக்தியோ நடக்கும்.


(ஆக 6 – 2015 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

2 Comments on காதலைத் தரும் சுக்கிரன் …– C -028

Leave a Reply

Your email address will not be published.


*