குருபகவான் என்ன தருவார்? – C 025

ஒருவரின் ஜாதகத்தில் வலுப்பெற்ற நிலையில் யோகம் தரும் அமைப்பில் இருக்கும் குருபகவான் எந்த வழிகளில் நன்மைகளைச் செய்வார் என்பதை இந்த வாரம் பார்க்கலாம்.

நல்லநெறி, நன்னடத்தை, கருணைஉள்ளம், வேதஅறிவு, ஆன்மீக ஈடுபாடு, தூய சிந்தனை, நல்ல குழந்தைகள், அளவில்லா தனம், வங்கி, நீதித்துறை, ஆராய்ச்சி, நிதி அமைப்புகள், பணம் புரளும் இடங்கள், கோவில்கள், அமைச்சர் பதவி, சொல்லிக்கொடுத்தல், மதம், அரண்மனை போன்ற வீடு, அறிவு, நல்ல குணமுள்ள வாழ்க்கைத்துணை, அழகான பொன்நிறம், தங்கம், அருள்வாக்கு, சாஸ்திரம், சுகபோகம், அதிர்ஷ்டம், வட்டித் தொழில் ஆகியவற்றை வலிமை பெற்ற குருபகவான் ஒருவருக்குத் தருவார்.


குருபகவான் வலுப்பெறுவதால் உண்டாகும் ஹம்சயோகத்தின் முழுப்பலனையும் அனுபவிப்பவர்கள் சர லக்னங்களான மேஷம் கடகம் துலாம் மகர லக்னத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். உபயலக்னங்களான தனுசு, மீனம், மிதுனம், கன்னி ஆகியவற்றில் பிறந்தவர்களுக்கும் இந்த யோகம் அமையப் பெறும். ஆனால் குருவின் கேந்திராதிபத்ய தோஷத்தினால் அவர்களுக்கு யோகம் முழுமை பெறாது.

சர லக்னங்களுக்கு குருபகவான் கடகத்தில் உச்சம் பெற்றும், உபய லக்னங்களுக்கு தனுசு மீனத்தில் ஆட்சி பெற்றும் ஹம்சயோகத்தை அளிப்பார். குருபகவான் பலம் பெறுவதால் அவரது சுபகாரகத்துவங்கள் ஜாதகருக்கு மேலோங்கி நிற்கும்.

மேற்கண்ட உபய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு லக்னத்தில் அமர்ந்திருந்தால் மட்டுமே குரு முழுயோகம் அளிப்பார். மேலும் எந்த ஒரு லக்னத்திற்குமே குருபகவான் லக்னத்தில் அமர்வது ஒரு சிறப்பான நிலைதான். ஒரு இயற்கைச் சுபர் லக்னத்தில் அமர்வது நல்லது என்ற நிலையையும் விட ஒரு கிரகம் பெறும் ஆறுவிதமான வலிமைகளில் ஆட்சி உச்சத்திற்கு நிகரான இரண்டாவது பலமான திக்பலத்தை அவர் லக்னத்தில் அடைவதே இதன் முதல் காரணம்.

ஹம்சயோகம் தரும் நிலையில் குருபகவான் திக்பலமும் பெற்றிருந்தால் இரட்டிப்பு பலன் தருவார். அதே நேரத்தில் உச்சம் பெறும் குருவை செவ்வாயும், சனியும் உச்சம் பெற்றுப் பார்க்கக் கூடாது. இந்த அமைப்பு யோகத்தைப் பங்கப்படுத்தி வலுவிழக்கச் செய்து விடும்.

ஸ்திர லக்னங்களான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய லக்னங்களுக்கு குரு கேந்திர ஸ்தானங்களில் ஆட்சியோ, உச்சமோ அடைவதில்லை என்பதால் இந்த லக்னங்களில் பிறந்தவர்கள் ஹம்சயோகம் பெறும் வாய்ப்பு இல்லை. ஆனால் மேற்கண்ட ஸ்திர லக்னங்களுக்கு ஐந்து ஒன்பதாமிடங்களில் அமரும் நிலையில் குருபகவான் நன்மைகளைச் செய்வார்.

குரு பகவான் ஆட்சி உச்சம் பெற்று ஹம்சயோகம் தரும் நிலையில் அவருக்கு எதிர்த்தன்மை உடைய கிரகங்களான சுக்ரன் சனி புதன் ஆகியோர் அவருடன் சேருவது மற்றும் அவரைப் பார்ப்பது யோகத்தைக் கெடுக்கும். அதேநேரத்தில் குருவின் நண்பர்களான சந்திரன், சூரியன், செவ்வாய் ஆகியோர் லக்னசுபர்களாகவும் ஆகி குருவைப் பார்த்தாலோ, இணைந்தாலோ யோகம் இன்னும் வலுப்பெறும்.

வலுப்பெற்ற குருபகவான் பத்தாமிடத்தோடு சம்பந்தப்படும் நிலையில் ஒருவரை பணத்தை இரட்டிப்பாக்கும் வட்டித்தொழிலில் ஈடுபட வைத்து மிகப்பெரிய லாபங்களைத் தருவார். குருபகவான் தனம் மற்றும் புத்திரகாரகன் என்பதால் அவரது தசையில் பணம் அதிகமாகப் புரளும் இடங்களிலோ பணம் எண்ணும் அமைப்புகளிலோ பணத்தை வைத்துச் செய்யும் தொழில்களிலோ ஒரு மனிதரை ஈடுபட வைப்பார்.

வலுப்பெற்ற குருபகவான் தொழில் ஸ்தானம் எனப்படும் பத்தாமிடத்தோடு சம்பந்தப்படுகையில் ஒருவருக்கு சீட்டுப் பிடிப்பது எனும் சிட்பண்ட் போன்ற தொழில்களும் வங்கித்துறையில் வேலையும், நிதி சம்பந்தப்பட்ட நிதித்துறை அமைப்புகளில் வருமானங்களும் உண்டாகும்.

நீதித்துறையில் ஒருவரை ஜொலிக்க வைப்பவரும் குருபகவான்தான். சட்டத்துறையில் ஒருவர் வக்கீலாக பணிபுரிபவதற்கு சனிபகவானின் கருணைப் பார்வை தேவை என்றால் நீதித்துறையின் உயர்நிலையான நீதிபதி எனும் அமைப்பைப் பெறுவதற்கு குருவின் தயவு ஒருவருக்குக் கண்டிப்பாகத் தேவை.

உலக வரலாற்றில் மிகச்சிறந்த தீர்ப்புகளுக்காக புகழப்பட்டவர்கள் அனைவரும் ஜாதகத்தில் குரு வலுப்பெற்றவர்கள்தான். நீதிநெறி பிறழாத நேர்மையான நீதிபதிகளை உருவாக்குபவர் குருபகவான்தான். குரு வலுப்பெற்ற நிலையில் இருக்கும் ஒருவர் தன் மனசாட்சியை மீறி ஒருபோதும் தவறுகளுக்கு துணைபோக மாட்டார்.

தன்னுடைய கட்சிக்காரர் தவறு செய்திருந்த போதிலும் இவர் குற்றவாளி இல்லை நிரபராதி என்று வாதாடும் வக்கீல்களை சனிபகவான் உருவாக்குவார் என்றால் அந்த வக்கீல்களின் வாதத்தை கேட்டு குற்றம் சாட்டப்பட்டவரைத் தண்டிக்கவோ விடுவிக்கவோ செய்யும் அதிகாரத்தை உடையவர் சனியோடு தொடர்பு கொண்ட குருபகவான்.

அடுத்து சொல்லிக்கொடுக்கும் துறைக்கும் குருபகவானே காரணமாவார். தன்னுடைய பெயரையே குரு என்று கொண்டதனால் தனக்குத் தெரிந்த வித்தைகளை சொல்லிக் கொடுக்கும் குருமார்களை உலகத்தில் உருவாக்குபவரும் குருபகவான்தான்.

பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களாக, பேராசிரியர்களாக பணிபுரியும் அனைவரும் குருபகவானின் தயவு பெற்றவர்கள்தான். ஒருவர் சொல்லிக்கொடுக்கும் துறையில் சிறப்பாக இருக்கிறார் என்றால் அவர் ஜாதகத்தில் குருபகவான் மேன்மையாக இருக்கிறார் என்று அர்த்தம்.

குருவின் நிறம் பொன்மஞ்சள் என்பதால் பொன்னும், மஞ்சளும் குருவிற்கு உரியதாகிறது. பொன் எனப்படும் தங்கத்திற்கு அதிபதியும் குருவே. உலகெங்கிலும் உள்ள நகைக்கடை நடத்துபவர்கள் தங்கத்தால் பிழைப்பவர்கள் நகை செய்யும் ஆசாரிகள் அனைவரும் குருவால் உருவாக்கப்பட்டவர்கள். தங்கத்தின் விலையில் வரும் ஏற்றத்தாழ்வு அனைத்தும் குருபகவான் பெறும் வலிமையைப் பொறுத்துதான் இருக்கிறது.

குருபகவான் ஒருவரை ஆன்மீகவழியில் ஜீவனத்தை அமைத்துக் கொள்ள வைப்பவர். ஆலயங்களில் இறைவனுக்குத் தொண்டு செய்யும் அர்ச்சகர்கள் திருக்கோவில்களில் பணிபுரிபவர்கள் போன்ற அனைவருக்கும் குருபகவான் வலிமையான நிலைகளில் இருக்க வேண்டும்.

அதேபோல புகழ்பெற்ற திருத்தலங்களைச் சுற்றிக் கடை வைத்திருப்பவர்கள் திருத்தல மகிமையை விளக்கும் சுவாமி புகைப்படங்கள் போன்ற ஆலயம், ஆன்மீகம் சம்பந்தப்பட்ட பொருள்களை விற்பனை செய்பவர்களும் குருபகவான் ஜாதகத்தில் பத்தாமிடத்தோடு சம்பந்தப்பட்டவர்களாகவோ அல்லது குரு லக்னாதிபதியாகவோ இருப்பவர்கள்தான்.

மேலும் நவதானியம் எனப்படும் அரிசி, பருப்பு மற்றும் மளிகைப்பொருட்களை மொத்தவிலைக்கு விற்பனை செய்கின்ற நிலையங்கள், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள் மற்றும் சகலபொருட்களும் கலந்து விற்பனை செய்யப்படும் பலசரக்குக் கடைகள் போன்றவற்றிற்கு வியாபாரி எனப்படும் புதனும், குருவும் ஜீவனஸ்தானத்தோடு தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.

புதனும், குருவும் நெருக்கமாக பத்தாமிடத்தோடு சம்பந்தப்படும் நிலையில் வித்தைக்கதிபதி புதன் என்பதாலும் சொல்லிக் கொடுப்பதில் சிறந்தவர் குரு என்பதாலும் இருவரும் சுபத்துவத்தொடு தொடர்பு கொள்ளும் நிலையில் கல்வி நிலையங்களை நடத்துபவர்களை உருவாக்குவார்கள்.

மிகப்பெரிய என்ஜினீயரிங் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிகல்லூரி போன்றவைகளை நடத்துவதற்கு ஒருவரின் ஜாதகத்தில் பத்தாமிடத்தோடு குருவும், புதனும் தொடர்பு கொள்ள வேண்டும். ஆனால் மருத்துவக் கல்லூரி நடத்துவதற்கு குரு, புதன், செவ்வாய் மூவரும் ஜீவனஸ்தானத்தோடு சம்மந்தப்பட வேண்டும்.

இவை அனைத்திலும் முக்கியமாக வாழ்க்கையில் ஒருவரின் பிறப்பின் அர்த்தத்தை முழுமையாக்கும் சந்தானபாக்கியம் எனப்படும் குழந்தைச்செல்வத்தை அருளுபவர் குருபகவான். ஒருவரின் ஜாதகத்தில் குரு வலிமையாக இருந்தால் அவரின் குழந்தைகள் நல்ல நிலைமையில் இருப்பார்கள்.

வலிமையான குருதசை ஒருவருக்கு நடக்கும்போது அவரது குழந்தைகளும் மேன்மையான நிலையில் இருப்பார்கள். மக்களைப் பற்றிய நல்ல செய்திகளை குருபகவான் தனது தசையில் கேட்க வைப்பார். வயதான காலத்தில் வரும் குருதசையில் குருபகவான் தன புத்திரகாரகன் என்பதால் குழந்தைகள் மூலம் வருமானமும் நிம்மதியும் தருவார்..

அதேநேரத்தில் ஒரு ஜாதகத்தில் ஆறு எட்டு பனிரெண்டு போன்ற இடங்களில் மறைந்தோ பகை நீசம் பெற்றோ சனி ராகு போன்ற பாபக்கிரகங்களுடன் தொடர்பு கொண்டோ முழுமையான கேந்திராதிபத்தியதோஷம் பெற்றோ குரு இருப்பாராயின் குழந்தைகளையோ தனலாபத்தையோ தரும் சக்தியற்றவராகி விடுவார். இதுபோன்ற நிலையில் அந்த ஜாதகத்தின் புத்திர ஸ்தானாதிபதி எனப்படும் ஐந்திற்குடையவரும் வலிமையிழந்தால் அந்த ஜாதகருக்கு வாரிசு கிடைப்பது கடினம்.

அடுத்தவாரம் முதல் அசுரகுரு எனப்படும் சுக்கிரபகவானின் மேன்மைகளைப் பார்ப்போம்….

குருபகவானின் முறையான பரிகாரங்கள் என்ன?

ஜாதகத்தில் குருபகவான் வலிமை இழந்திருக்கும் நிலையில் நவக்கிரகத் தலங்களில் குருவிற்கு முதன்மைத்தலமாக சொல்லப்படும் கும்பகோணம் அருகே உள்ள திருவிடமான ஆலங்குடிக்குச் சென்று குருவருள் பெறுவது மிக நல்லது.

எந்த ஒரு பரிகாரமும் ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் அன்று செய்யப்படுவதே முழுமையான பலனைத் தரும் என்று நமது ஞானிகளால் வலியுறுத்தப்படுவதால் ஒருவர் பரிகாரம் செய்யவென்று திருக்கோவில்களுக்குச் செல்லும்போது அவர் பிறந்த நட்சத்திரம் அன்று செல்வதே முறையானது.

அதுபோலவே திருத்தலங்களுக்குள் கிரகவலுவினை நாம் பெறுவதற்காக இருக்கும் நேரமும் முக்கியமாகும். தடைகளை நீக்கியருளும் கண்கண்ட தலமான கண்ணப்பர் கண் தந்த ஸ்ரீகாளஹஸ்தியில் நமக்கு ஓரரிவு தங்கி பரிகாரம் செய்ய ஞானிகளால் விதிக்கப்பட்டதைப்போல ஆலங்குடியில் கோவிலுக்குள் ஒருவர் ஒரு ஜாமம் எனப்படும் இரண்டரை மணிநேரம் இருக்க வேண்டும்.

சென்னையில் இருப்பவர்கள் சேக்கிழார் பெருமானால் ஆயிரம் வருடங்களுக்கு முன் நிறுவப்பட்ட போரூரில் அருள்பாலிக்கும் அருள்மிகு ராமனாதீஸ்வரப் பெருமான் திருக்கோவிலுக்கு வியாழன்தோறும் சென்று வழிபடுவது குருபகவானின் திருவருளை குறைவின்றி அருளும். இத்திருத்தலம் வட ஆலங்குடி என போற்றப்படுகிறது.


(ஜூலை 16 – 2015 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

2 Comments on குருபகவான் என்ன தருவார்? – C 025

  1. Lagam tulam saneeesvaran 4thsun ragu pnthan 6thsugran sevvai 7th Jupiter 10thkethu12th moon kanni born 04/02/1953/11.24 minute Malaysia Taiping nowputhan tissai Sugran putti 63 years 5monthswhat about future asking always my god Siva cease my cycle of birth please give advise 3 boys good wife not much dowry but after marriage at the age of 38 my life gradually improved mother also with me living in Jaffna elder son employed in government smooth life my inner mind Always talking and informing about spiritual matter I am the only son to my parents father died when I was 9 years .my name -Sivasubramaniam.

    • வணக்கம்
      குருஜி அவர்களின் அனைத்து சேவைகளுக்கும் கட்டணம் உண்டு. இலவச பதில்களுக்கு மாலைமலர் முகவரிக்கு தபால் அனுப்பவும்.

      ஏதேனும் சந்தேகங்களுக்கு எனது 8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
      வணக்கம்
      தேவி
      ADMIN

Leave a Reply

Your email address will not be published.


*


Retype the CAPTCHA code from the image
Change the CAPTCHA codeSpeak the CAPTCHA code