குரு தரும் கோடீஸ்வர யோகம்…!- C – 025 – Guru Tharum Koteeswara Yogam…!

குருச் சந்திர யோகம்

குரு சந்திரனுடன் இணைந்தோ, சந்திரனுக்கு திரிகோணங்கள் எனப்படும் ஐந்து ஒன்பதாமிடங்களில் அமர்ந்து சந்திரனைப் பார்ப்பதாலோ உண்டாகும் அமைப்பு குருச் சந்திர யோகம் என்று அழைக்கப் படுகிறது. இந்த யோகத்தைத் தரும் குரு வலுவாக இருக்கும் நிலையில் அனைத்து லக்னங்களுக்குமே இது சிறந்த பலனை அளிக்கும்.

சென்ற அத்தியாயங்களில் நான் குறிப்பிட்டதைப் போல ஒரு யோக ஜாதகத்தில் லக்னத்தையோ, ராசியையோ குரு பார்ப்பார் என்பதன்படி, ஒரு ஜாதகத்தில் ராசி எனப்படும் சந்திரனைக் குரு பார்ப்பது நல்ல அமைப்பு.

லக்னமோ, லக்னாதிபதியோ பலவீனம் பெற்றிருந்தாலும், ஜாதகத்தில் ராசி எனப்படும் சந்திரன் இருக்கும் வீட்டிற்கு ஐந்து, ஒன்பதில் குரு வலுப் பெற்று அமர்ந்து சந்திரனைப் பார்ப்பது குருச் சந்திர யோகம் என்றாகி, லக்னம் வலுவிழந்த நிலையில் ராசி உயிர் பெற்று, லக்னப்படி அல்லாமல் ராசிப்படி ஜாதகம் பலன் தரும். இந்த அமைப்பு வலுவாக இருக்கும் நிலையில் ராசிப் படியே திருமணம், தொழில் போன்றவைகள் அமையும்.

குரு மங்கள யோகம்

மங்களன் எனப்படும் செவ்வாயும், அவரது நண்பரான குருவும் இணைவதாலோ, ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளுவதாலோ, தங்களுக்குள் நான்கு, ஏழு, பத்தில் இருவரும் அமர்ந்திருப்பதாலோ இந்த யோகம் ஏற்படுகிறது.

இந்த அமைப்பால் இயற்கைப் பாபக் கிரகமான செவ்வாய் தன்னுடைய பாபத் தன்மையை இழந்து குருவால் புனிதமடைந்து சுபத் தன்மை பெற்று ஜாதகருக்கு நன்மை செய்வார். இந்த அமைப்பினால் செவ்வாயின் சுப காரகத்துவங்களான விளையாட்டு, ராணுவம், காவல்துறை, மருத்துவம், பூமிலாபம் போன்ற அமைப்புகளில் ஜாதகர் சிறந்து விளங்குவார். மேற்கண்ட இனங்களில் ஜாதகருக்கு நன்மைகளும் இருக்கும்.

இரண்டு கிரகங்கள் நண்பர்களாக இருந்து, அவர்கள் ஒருவருடன் ஒருவர் இணைந்து பகை, நீச வீடுகளில் இல்லாமல், நட்பு வீடுகளில் வலுப் பெற்று அமர்வதே முதல் தரமான யோகம். அதைவிட யோகத்தைத் தரும் கிரகங்கள் அந்த லக்னத்தின் அதிபதிக்கும் நண்பர்களாக இருந்தால் யோகம் முழுப்பலன் தரும்.

யோகத்தைத் தரக்கூடிய அமைப்பில் இருப்பவர்கள் லக்னாதிபதிக்கு எதிரிகளாக அமைந்தால் அது எந்த வகையான நல்ல யோகம் என்றாலும் முழுமையான யோகம் கிடைக்காது. யோகம் தருபவர்கள் லக்னாதிபதிக்கு சமக் கிரகங்களாக இருக்கும் பட்சத்தில் யோகம் ஓரளவு கிடைக்கும்.

இதையும் மீறி எதிரிக் கிரகங்கள் யோகம் செய்தே ஆகவேண்டும் எனில் ஜாதகத்தில் அந்தக் கிரகங்கள் மூன்று, ஆறு, பத்து, பதினொன்று எனப்படும் உபசய ஸ்தானங்களில் நட்பு வலுவுடன் இருக்க வேண்டும்.

சில மூல நூல்களில் லக்னாதிபதிக்கு எதிர்த் தன்மையுடைய அவயோகக் கிரகங்கள் 3,6,10,11 ல் இருந்தாலே நன்மைகளைச் செய்யும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

எனது நீண்டகால ஆய்வின்படி அவ யோகிகள், மேற்கண்ட உபசய ஸ்தானங்களில் நட்பு வலுவில் இருந்தால் மட்டுமே நன்மைகளைச் செய்கிறார்கள். ஆட்சி, உச்ச வலுவுடன் இருந்தால் நல்லதை விட தீயதையே வலுவுடன் தருகிறார்கள். எனவே லக்ன எதிரிகள் உபசய ஸ்தானங்களில் நட்பு வலுவுடன் இருப்பது மட்டுமே நன்மை.

இதன்படி மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய லக்னங்களுக்கு மட்டுமே குரு மங்கள யோகம் முழுமையான பலன்களைத் தரும். மற்ற லக்னங்களுக்கு லக்னம் வலுவிழந்து, ராசி வலுப் பெற்று அந்த ராசி குரு, செவ்வாய், சந்திர, சூரியனின் ராசிகளாக இருக்கும் பட்சத்தில் நல்ல பலன் தரும்.

அஷ்டலட்சுமி யோகம்

ஒரு ஜாதகத்தில் குரு ஒன்று, நான்கு, ஏழு, பத்து எனப்படும் கேந்திர ஸ்தானங்களில் இருந்து ராகு ஆறாமிடத்தில் இருந்தால் இந்த யோகம் அமைவதாக சில நூல்கள் சொல்கின்றன.

ஆறாமிடத்தில் அசுபக் கிரகமான ராகு இருப்பதால், அந்த வீட்டின் கெட்ட ஆதிபத்தியங்களான கடன், நோய், எதிரி ஆகியவை ஒழிக்கப்பட்டு அந்த பாவம் ஜாதகருக்கு சுப விஷயங்களைச் செய்யும் என்பது ஜோதிட விதி.

இதுபோன்ற ஒரு நிலையில் ஆறாம் பாவம் சுப வலுப் பெற்று ஒரு மனிதன் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் இல்லாமல், தன்னிறைவுடன் இருக்கும் அமைப்பைப் பெறும் போது, தன காரகன் எனப்படும் குருவும் அந்த ஜாதகத்தில் வலுப் பெற்று இருக்கும் நிலையில், நமது சாஸ்திரங்களில் ஒப்பற்ற எட்டு விஷயங்களாக சொல்லப்படும் தன, தான்ய, தைரிய, விஜய, ஆதி, வித்யா, கெஜ, சந்தான எனப்படும் விஷயங்கள் ஜாதகருக்கு முழுமையாக கிடைக்கும் என்ற அடிப்படையில் இந்த யோகம் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த யோகத்தில் நுணுக்கமான சில விஷயங்கள் அடங்கி இருப்பதால் அனைத்து லக்னங்களுக்கும் இது பலன் அளிப்பதில்லை. மேலும் அனுபவத்திலும் இந்த யோகம் சரிவர வேலை செய்வதில்லை.

கேள யோகம் எனப்படும் கோடீஸ்வர யோகம்

குருவும், கேதுவும் இணைந்து ஒரு பாவத்தில் அமர்ந்திருப்பது கேள யோகம் எனப்படும் கோடீஸ்வர யோகம் என்று சொல்லப்படுகிறது.

பொதுவாக கேது, ராகுவைப் போல ஒரு பாவத்தை வலிமையாகக் கெடுப்பதில்லை. ராகு, கேதுக்களை பாம்பாக உருவகப் படுத்திக் கொண்டால் விஷம் இருக்கும் தலைப்பகுதி ராகுவாகவும், விஷமற்ற வால்பகுதி கேதுவாகவும் நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.

ராகுவைப் போல தன்னுடன் இணையும் கிரகத்தின் வலிமையைக் கேது கவர்வது இல்லை. மேலும் கேது ஒரு முழுமையான ஞானக் கிரகம் என்பதால் குருவுடன் சேரும் நிலையில் சில நிலைகளில் மிகப்பெரிய யோகத்தைச் செய்வார்.

குறிப்பாக கேதுவிற்கு வலிமையான இடங்களாகச் சொல்லப்படும் விருச்சிகம், கன்னி, கும்ப வீடுகளிலும், சர ராசிகளான மேஷம், கடகம் ஆகியவற்றிலும் இந்த அமைப்பு குரு மற்றும் கேது தசைகளில் ஜாதகருக்கு நல்ல யோகத்தைச் செய்யும். சர ராசிகளில் இந்த இணைப்பு இருக்கும் நிலையில் ஜாதகரை வெளிமாநிலம், வெளிதேசத்திற்கு அனுப்பி உயர்ந்த செல்வ நிலையை அளிக்கும்.               

குரு, சுக்கிரன் இணைவதும், பார்ப்பதும் நன்மை தருமா?

ஜோதிடத்தில் நன்மைகளைச் செய்யும் சுபர்களாக குருவும், சுக்கிரனும் உள்ள நிலையில், இவர்கள் இருவரும் தமக்குள் விரோதிகள் என்பதைத் தெளிவாக்கும் விதமாக தேவர், அசுரர் எனும் இரு பெரும் பிரிவுகளின் ராஜகுருக்களாக இந்தக் கிரகங்களை ஞானிகள் உருவகப்படுத்துகிறார்கள்.

இதேபோல சூரிய, சந்திரர்களுக்கும், சனிக்கும் சமரசத்திற்கு உள்ளாகாத பகை இருப்பதாக தெளிவாக நமது ஞானிகளால் அறிவுறுத்தப்படுகிறது.

ஜென்ம விரோதிகளான இருவர் தவிர்க்க முடியாமல் ஒரு பொதுவிடத்தில் சேர்ந்திருக்கும் நிலை ஏற்பட்டால், அங்கே ஒரு பதட்டமும், அவர்களுக்குள் கோபமும், எரிச்சலும் ஏற்படுவது இயற்கை.

அதுபோலவே ஒரு ராசியில் குருவும், சுக்கிரனும் இணையும் நிலையில் இணையும் ராசியைப் பொருத்தும், தூரத்தைப் பொருத்தும், இருவருமே தங்களது சுய இயல்பையும், தங்களது காரகத்துவங்களைத் தரும் சக்தியையும் இழப்பார்கள். இதுபோன்ற அமைப்பில் இருவரும் அடுத்தவரின் செயலைச் செய்ய விடாமல் தடுப்பார்கள். சுக்கிரனும், குருவும் நேருக்குநேர் பார்த்துக் கொள்வதும் இதே பலனையே செய்யும்.

குருவும் சுக்கிரனும் இணைந்தாலோ, நேருக்கு நேர் பார்த்துக் கொண்டாலோ சுக்கிரன் தரும் தாம்பத்திய சுகத்தை குரு தடுப்பார். குரு தரும் புத்திர சுகத்தை சுக்கிரன் தடுப்பார்.

இதை என்னுடைய முப்பதாண்டுகளுக்கும் மேலான ஆய்வில் ஏராளமான ஜாதகங்களில் அனுபவப் பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். இதற்கு ஆதாரமாக  எண்ணற்ற ஜாதகங்களை என்னால் காட்ட முடியும்.

சமீபத்தில் என்னுடைய இந்த ஆய்வு முடிவை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான ஜோதிட அனுபவம் வாய்ந்த பெருஆசான், ஜோதிஷப் பராசரா, ஜோதிட பீஷ்மர் சின்னாளப்பட்டி ஆர். தங்கவேலு அய்யா அவர்கள் ஒரு ஜோதிடப் பொது மேடையில் அங்கீகரித்துப் பேசி என்னை ஆசிர்வதித்தது எனக்குக் கிடைத்த பெரும் பேறு.

குருவும், சுக்கிரனும் பத்து டிகிரிக்குள் இணைவார்களேயானால் ஜாதகருக்கு திருமணமோ அல்லது திருமணமாகி, குழந்தை பாக்கியமோ இல்லாது போகலாம். தாம்பத்திய சுகம் மறுக்கப்படலாம். அல்லது அவருக்கு அதில் விருப்பம் இல்லாது போகலாம். இணையும் தூரம் அதிகமானால் இந்த பலன்கள் நடப்பது இல்லை.

இன்னுமொரு பலனாக குரு தசை, சுக்கிர புக்தி அல்லது சுக்கிர தசை, குரு புக்தியில் கணவன் மனைவிக்குள் பிரிவு இருக்கும். இருவரின் சுப, அசுப வலுவைப் பொறுத்து இந்தப் பிரிவு கருத்து வேறுபாடுகளாலோ, கணவன் வேலை விஷயமாக வெளிநாடு போவது போன்ற அமைப்பாலும் இருக்கலாம்.

இந்த அமைப்பை மகாபுருஷர் காளிதாசர் உத்தர காலாம்ருதத்தில் குரு தசையில் சுக்கிர புக்தியும், சுக்கிர தசையில் குரு புக்தியும் நன்மைகளைச் செய்வது இல்லை என்று சுருக்கமாகச் சொல்கிறார்.

இணையும் அல்லது பார்க்கும் வீடு யாருக்கு ஆட்சி, உச்ச, நட்பு வீடாக இருக்கிறதோ அவர் அடுத்தவரின் செயலைத் தடுக்கும் வேலையை முழுமையாகச் செய்வார். இருவரில் யார் வலிமையான நிலையில் இருக்கிறார்களோ அவர் அடுத்தவரின் காரகத்தை செய்ய விடாமல் தடுப்பார். சம வலிமையாக இருக்கும் நிலையில் இருவருமே சக்தி இழந்து தங்களது முக்கிய காரகத்தை ஜாதகருக்குத் தரும் இயல்பை இழப்பார்கள்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


Retype the CAPTCHA code from the image
Change the CAPTCHA codeSpeak the CAPTCHA code