குருபகவானின் சிறப்புக்கள்… -C 024

குருபகவானால் உண்டாகும் மேலும் சில யோகங்களின் விளக்கங்களைப் பார்த்து விட்டு அவரது சிறப்பு அம்சங்களை இந்த வாரம் பார்க்கலாம்…

குருச்சந்திர யோகம்

குருபகவான் சந்திரனுடன் இணைந்தோ சந்திரனுக்கு திரிகோணங்கள் எனப்படும் ஐந்து ஒன்பதாமிடங்களில் அமர்ந்து சந்திரனைப் பார்ப்பதால் உண்டாகும் அமைப்பு குருச்சந்திர யோகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த யோகத்தைத் தரும் குருபகவான் ஒரு ஜாதகத்தில் வலுவாக இருக்கும் நிலையில் அனைத்து லக்னங்களுக்குமே இது மிகச் சிறந்த பலனை அளிக்கும்.


சென்ற வாரங்களில் நான் குறிப்பிட்டதைப் போல ஒரு யோகஜாதகத்தில் லக்னத்தையோ, ராசியையோ குரு பார்ப்பார் என்பதன்படி ஒரு ஜாதகத்தில் ராசி எனப்படும் சந்திரனை குருபகவான் பார்ப்பது மிகச்சிறந்த அமைப்பு.

லக்னமோ, லக்னாதிபதியோ பலவீனம் பெற்றிருந்தாலும் அந்த ஜாதகத்தில் ராசி எனப்படும் சந்திரன் இருக்கும் வீட்டிற்கு ஐந்து, ஒன்பதில் குரு வலுப்பெற்று அமர்ந்து சந்திரனைப் பார்ப்பது குருச்சந்திர யோகம் எனும் நிலைபெற்று லக்னம் வலுவிழந்த நிலையில் ராசி உயிர் பெற்று லக்னப்படி அல்லாமல் ராசிப்படி ஜாதகம் வேலை செய்யும். இந்த அமைப்பு வலுவாக இருக்கும் நிலையில் ராசிப்படியே திருமணம் தொழில் போன்றவைகள் அமையும்.

குருமங்கள யோகம்

மங்களன் எனப்படும் செவ்வாயும் அவரது நண்பரான குருபகவானும் இணைவதாலோ, ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளுவதாலோ, கேந்திரங்கள் எனப்படும் நான்கு, ஏழு, பத்தில் ஒருவருக்கொருவர் அமர்ந்திருப்பதாலோ இந்த யோகம் ஏற்படுகிறது.

இந்த அமைப்பால் இயற்கைப் பாபக்கிரகமான செவ்வாய் தன்னுடைய பாபத்தன்மையை இழந்து குருபகவானால் புனிதமடைந்து சுபத்தன்மை பெற்று ஜாதகருக்கு நன்மை செய்வார். இந்த அமைப்பினால் செவ்வாயின் சுப காரகத்துவங்களான விளையாட்டு, ராணுவம், காவல்துறை, மருத்துவம், பூமிலாபம் போன்ற அமைப்புகளில் ஜாதகர் சிறந்து விளங்குவார். மேற்கண்ட இனங்களில் ஜாதகருக்கு நன்மைகளும் இருக்கும்.

இரண்டு கிரகங்கள் நண்பர்களாக இருந்து அவர்கள் ஒருவருடன் ஒருவர் இணைந்து பகை நீச வீடுகளில் இல்லாமல் நட்பு வீடுகளில் வலுப்பெற்று அமர்வதே முதல்தரமான யோகம் என்பதுடன் யோகத்தைத் தரும் கிரகங்கள் அந்த லக்னத்தின் அதிபதிக்கும் நண்பர்களாக இருந்தால் மட்டுமே முழு யோகமும் கிடைக்கும்.

யோகத்தைத் தரக்கூடிய அமைப்பில் இருப்பவர்கள் லக்னாதிபதிக்கு எதிரிகளாக அமைந்தால் அது எந்தவகையான நல்லயோகம் என்றாலும் முழுமையான யோகம் கிடைக்காது. யோகம் தருபவர்கள் லக்னாதிபதிக்கு சமக்கிரகங்களாக இருக்கும் பட்சத்தில் யோகம் ஓரளவு கிடைக்கும்.

இதையும் மீறி எதிரிக்கிரகங்கள் ஒரு லக்னத்திற்கு யோகம் செய்தே ஆகவேண்டும் எனில் அந்தக் கிரகங்கள் ஜாதகத்தில் மூன்று, ஆறு, பத்து, பதினொன்று எனப்படும் உபசயஸ்தானங்களில் நட்புவலுவுடன் இருக்க வேண்டும்.

இதன்படி குரு, செவ்வாய், சூரியன், சந்திரன் ஆகியோரின் மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய லக்னங்களுக்கு மட்டுமே குரு மங்கள யோகம் முழுமையான பலன்களைத் தரும். மற்ற லக்னங்களுக்கு லக்னம் வலுவிழந்து ராசி வலுப்பெற்று அந்த ராசி குரு செவ்வாய் சந்திர சூரியனின் ராசிகளாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் பலன் தரும்.

அஷ்டலட்சுமி யோகம்

ஒரு ஜாதகத்தில் குருபகவான் ஒன்று, நான்கு, ஏழு, பத்து எனப்படும் கேந்திர ஸ்தானங்களில் இருந்து ராகு ஆறாமிடத்தில் இருந்தால் இந்த யோகம் அமைவதாக சில மூலநூல்கள் சொல்கின்றன.

ஆறாமிடத்தில் அசுபக்கிரகமான ராகு இருப்பதால் ஒரு ஜாதகத்தில் அந்த வீட்டின் கெட்ட ஆதிபத்தியங்களான கடன் நோய் எதிரி ஆகியவை ஒழிக்கப்பட்டு அந்த பாவம் ஜாதகருக்கு சுபவிஷயங்களைச் செய்யும் என்பது ஜோதிட விதி.

இதுபோன்ற ஒரு நிலையில் ஆறாம்பாவம் சுபவலுப் பெற்று ஒருமனிதன் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் இல்லாமல் தன்னிறைவுடன் இருக்கும் அமைப்பைப் பெறும்போது தனகாரகன் எனப்படும் குருபகவானும் அந்த ஜாதகத்தில் வலுப்பெற்று இருக்கும் நிலையில் நமது சாஸ்திரங்களில் ஒப்பற்ற எட்டு விஷயங்களாக சொல்லப்படும் தன, தான்ய, தைரிய, விஜய, ஆதி, வித்யா, கெஜ, சந்தான எனப்படும் விஷயங்கள் ஜாதகருக்கு முழுமையாக கிடைக்கும் என்ற அடிப்படையில் இந்த யோகம் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த யோகத்தில் நுணுக்கமான சில விஷயங்கள் அடங்கி இருப்பதால் அனைத்து லக்னங்களுக்கும் இது பலன் அளிப்பதில்லை. மேலும் அனுபவத்திலும் இந்த யோகம் சரிவர வேலை செய்வதில்லை.

கேளயோகம் எனப்படும் கோடீஸ்வர யோகம்

குருவும், கேதுவும் இணைந்து ஒரு பாவத்தில் அமர்ந்திருப்பது கேளயோகம் எனப்படும் கோடீஸ்வர யோகம் என்று சொல்லப்படுகிறது.

பொதுவாக கேதுபகவான் ராகுவைப் போல ஒரு பாவத்தை வலிமையாகக் கெடுப்பதில்லை. ராகு, கேதுக்களை பாம்பாக உருவகப்படுத்திக் கொண்டால் விஷம் இருக்கும் தலைப்பகுதி ராகுவாகவும், விஷயமற்ற வால்பகுதி கேதுவாகவும் நமக்கு எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

ராகுவைப் போல தன்னுடன் இணையும் கிரகத்தின் வலிமையைக் கேது கவர்வது இல்லை. மேலும் கேது ஒரு முழுமையான ஞானகிரகம் என்பதால் குருவுடன் சேரும் நிலையில் சில நிலைகளில் மிகப்பெரிய யோகத்தைச் செய்வார்.

குறிப்பாக கேதுவிற்கு வலிமையான இடமாகச் சொல்லப்படும் விருச்சிகம், கன்னி, கும்பம் மற்றும் சர ராசிகளான மேஷம், கடகம் ஆகியவற்றில் இந்த அமைப்பு குரு மற்றும் கேது தசைகளில் ஜாதகருக்கு மிகப்பெரிய யோகத்தைச் செய்யும். சர ராசிகளில் இந்த இணைப்பு இருக்கும் நிலையில் ஜாதகரை இந்த யோகம் வெளிமாநிலம், வெளிதேசத்திற்கு அனுப்பி உயர்ந்த செல்வநிலையை அளிக்கும்.

அடுத்த வியாழனும் குருபகவானைப் பற்றிய சிறப்புக்களைத் தொடருவோம்…

குருவும் சுக்கிரனும் இணைவது நன்மை தருமா?

ஜோதிடத்தில் மிகப்பெரிய நன்மைகளைச் செய்யும் சுபக்கிரகங்களாக குருவையும், சுக்கிரனையும் நமது மூலநூல்கள் வர்ணிக்கும் நிலையில் இவர்கள் இருவரும் தமக்குள் ஜென்மவிரோதிகள் என்பதையும் நமக்கு தெளிவாக்கும் விதமாக தேவர், அசுரர் எனும் இருப்பெரும் பிரிவுகளின் ராஜகுருக்களாக இந்தக் கிரகங்களை உருவகப்படுத்துகின்றன.

இதேபோல சூரிய, சந்திரர்களுக்கும் சனிபகவானுக்கும் சமரசத்திற்கு உள்ளாகாத கொடிய பகை இருப்பதாக தெளிவாக நமது ஞானிகளால் அறிவுறுத்தப்படுகிறது.

ஜென்ம விரோதிகளான இரண்டு நபர்கள் தவிர்க்க முடியாமல் ஒரு பொதுவான இடத்தில் சேர்ந்திருக்கும் நிலை ஏற்பட்டால் அந்த இடத்தில் ஒரு பதட்டமும் அவர்களுக்குள் கோபமும் எரிச்சலும் ஏற்படுவது இயற்கை.

அதுபோலவே குருவும் சுக்கிரனும் இணையும் நிலையில் இணையும் ராசியைப் பொறுத்தும் தூரத்தையும் பொறுத்து இருவருமே தங்களது சுய இயல்பையும் தங்களது காரகத்துவங்களைத் தரும் சக்தியையும் இழப்பார்கள். 

இதுபோன்ற ஒரு அமைப்பில் இருவரும் அடுத்தவரின் செயலை செய்ய விடாமலும் தடுப்பார்கள். சுக்கிரனும் குருவும் சமசப்தமமாக நேருக்கு நேர் பார்த்துக் கொள்வதும் இதே பலனையே செய்யும்.

குருவும் சுக்கிரனும் சம்பந்தப்படுவதால் ஒருவருக்கு சுக்கிரன் தரும் தாம்பத்திய சுகமும் குருபகவானால் கிடைக்கப்பெறும் புத்திரபாக்கியமும் கிடைக்காத நிலை இருக்கும். அல்லது இவ்விரு பாக்கியங்களும் கிடைக்கத் தாமதமாகலாம்.

என்னுடைய முப்பதாண்டுகளுக்கும் மேலான ஆய்வில் ஏராளமான ஜாதகங்களில் இதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். குருவும் சுக்கிரனும் பத்து டிகிரிக்குள் இணைவார்களேயானால் ஒருவருக்கு திருமணமோ அல்லது திருமணமாகி குழந்தை பாக்கியமோ இல்லாது போகலாம். இருபது டிகிரிக்கு மேல் விலகி இருந்தால் இந்த பலன்கள் நடப்பது இல்லை.

இன்னுமொரு பலனாக இவ்வாறு இருவரும் இணைந்திருக்கும் நிலையில் குருதசை சுக்கிரபுக்தி அல்லது சுக்கிரதசை குருபுக்தியில் கணவன் மனைவிக்குள் பிரிவு இருக்கும். இருவரின் சுபஅசுப வலுவைப் பொறுத்து இந்தப் பிரிவு கருத்து வேறுபாடுகளாலோ கணவன் வேலை விஷயமாக வெளிநாடு போவது போன்ற அமைப்பாலும் இருக்கலாம்.

இந்த அமைப்பை மகாபுருஷர் காளிதாசரும் தனது ஒப்புயர்வற்ற நூலான உத்தரகாலாம்ருதத்தில் குருதசையில் சுக்கிரபுக்தியும் சுக்கிரதசையில் குருபுக்தியும் நன்மைகளைச் செய்வது இல்லை என்று சுருக்கமாகச் சொல்கிறார்.

இணையும் வீடு யாருக்கு ஆட்சி உச்ச நட்புவீடாக இருக்கிறதோ அவர் அடுத்தவரின் செயலைத் தடுக்கும் வேலையை முழுமையாகச் செய்வார். இருவரும் சம்பந்தப்படும் போது யார் வலிமையான நிலையில் இருக்கிறார்களோ அவர் அடுத்தவரின் காரகத்தை செய்ய விடாமல் தடுப்பார். சம வலிமையாக இருக்கும் நிலையில் இருவருமே சக்தி இழந்து தங்களது முக்கிய காரகத்தை ஜாதகருக்குத் தரும் இயல்பை இழப்பார்கள்.


(ஜூலை  9 – 2015 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


Retype the CAPTCHA code from the image
Change the CAPTCHA codeSpeak the CAPTCHA code