குரு அருளும் ராஜயோகம் C – 23

சென்ற வாரம் சகடயோகம் எனப்படும் குருவுக்கு ஆறு, எட்டு, பனிரெண்டில் சந்திரன் அமர்வதால் உண்டாகும் யோகத்தைப் பற்றிச் சொல்லிருந்தேன். அதைப் பற்றிய இன்னும் சில நுணுக்கங்களை இப்போது பார்க்கலாம்…

சகடயோகம் என்ற அமைப்பில் குருவுக்கு ஆறு, எட்டில் சந்திரன் இருக்கும் பொழுது குருபகவானும் சந்திரனுக்கு ஆறு எட்டில் இருக்கும் நிலை பெறுவார்.

இந்த அமைப்பைப் பற்றி நமது மூலநூல்கள் சந்திராதியோகம் என்ற நல்ல யோகமாகச் சொல்லுகின்றன. அதாவது சந்திரனுக்கு ஆறு, ஏழு, எட்டில் சுபக்கிரகங்கள் எனப்படும் குரு, சுக்கிரன், தனித்த புதன் ஆகியோர் இருக்கும் பொழுது ஏற்படும் யோகத்திற்கு சந்திராதி யோகம் என்று பெயர்.

ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் இரண்டாவது தலையாய ஒளிக்கிரகம் சந்திரன் என்பதாலும் நம் பூமிக்கு மிக நெருங்கியிருந்து சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் கிரகம் சந்திரன் என்பதாலும் சந்திரனின் பார்வை எனப்படும் ஒளி சிறப்பித்துச் சொல்லப்படுகிறது.

சந்திரனுக்கு ஆறு ஏழு எட்டில் கிரகங்கள் இருப்பது அதி யோகம் எனப்படுவதன் சூட்சுமம் என்னவெனில் ஒரு கிரகம் தன் நேர் எதிரில் இருக்கும் கிரகத்தையும் ஏழாவது வீட்டையும் பார்க்கும் என்றாலும் அந்த ஒளியின் சிதறல்கள் ஏழாம் வீட்டின் முன்பின் இருக்கும் ஆறு, எட்டாம் வீடுகளிலும் விழும் என்பதே.

பொதுவாக ஒரு கிரகத்தின் பார்வை என்பது அதன் நேரெதிர் புள்ளியை மையமாக வைத்து முன்பின் பத்து டிகிரி அளவில் வலுவாக இருக்கும். அதனையடுத்த முன்பின் ஐந்து டிகிரிக்குள் ஓரளவு வலுவாக இருக்கும். சரியாக முன்பின் பதினைந்து டிகிரியாகிய முப்பது டிகிரியில் அந்த கிரகத்தின் பார்வை எனப்படும் ஒளிவீச்சு முடிந்து விடுவதில்லை.

முன்பின் பதினைந்து டிகிரி எனப்படும் நிலைக்குப் பிறகும் ஓரளவு அந்த கிரகத்தின் ஒளிச்சிதறல்கள் அதாவது பார்வையின் தாக்கம் இருந்தே தீரும். அதாவது ஒரு கிரகம் தனக்கு நேர் எதிரில் உள்ள வீட்டை மட்டும் தனது ஏழாம் பார்வையால் பார்த்தாலும் அந்தப் பார்வையின் வலிமையைப் பொறுத்து அதன் தாக்கம் ஏழாம் பாவத்தின் முன்பின் வீடுகளான ஆறு எட்டிலும் இருக்கும்.

அதிலும் பூமிக்கு மிக அருகில் இருந்து இரவில் ஒளியை வெள்ளமென நமக்குத் தரும் சந்திரனின் பார்வை ஏழாம் வீட்டைத் தவிர்த்து அதன் இருபுறங்களிலும் உள்ள ஆறு, எட்டாம் வீடுகளிலும் கூடுதலாகவே விழும். இந்த அமைப்பு சூரியனுக்கும் பொருந்தும்.

சிலநேரங்களில் ஜோதிடர் சொல்லும் பலனில் தவறு ஏற்படுவதும் இந்தப் பார்வை பற்றிய கணிப்பில் உள்ள குறையினால்தான். எப்படியெனில் ஒரு கிரகம் எந்த நிலையிலும் தனக்கு நேரெதிரில் உள்ள 180-வது டிகிரி புள்ளியில் இருக்கும் கிரகத்தை மிக வலுவாகப் பார்க்கும். பார்க்கப்படும் கிரகம் 170 அல்லது 190 டிகிரியில் இருக்குமாயின் அதன்மேல் விழும் பார்வைக்கு வலு சற்றுக் குறைவாக இருக்கும்.

கிரகத்தின் பார்வைக்கோணம் பத்து டிகிரியில் இருந்து விலகுமாயின் சில நிலைகளில் மேம்போக்காக ராசிக்கட்டத்தில் பார்க்கும்பொழுது அந்தக் கிரகத்தின் மேல் பார்வை படுவது போலத் தோன்றினாலும் உண்மையில் அங்கே பார்வை இருப்பதற்குச் சாத்தியமில்லை.

ஒரு ராசியின் ஆரம்பம் முடிவு போன்ற சந்தி நிலைகளில் இருக்கும் கிரகங்களின் அமைப்பில் இதுபோன்ற பார்வை விலகல் கோணங்கள் பெரும்பாலும் அமையும். இதைப்போன்ற நுணுக்கமான நிலைகளில் ஜோதிடரின் கணிப்பு தவறக்கூடும்.

சந்திராதி யோகமும் இப்படிப்பட்ட நுணுக்கமான ஒன்றுதான். சந்திரன் வலுவான நிலையில் இருந்து அதற்கு எதிரில் ஆறு, ஏழு, எட்டு ஸ்தானங்களில் சுபக்கிரங்கள் வலிமை இழந்த நிலையில் இருந்தாலும் சந்திர ஒளியால் அவை வலுவூட்டப்பட்டு வலிமையான கிரகங்களாக மாற்றப்படுகின்றன. இதற்கு சந்திரன் பலமான நிலையில் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.

சந்திரன் நீசமாகவோ அல்லது ஏதேனும் ஒரு வகையில் பாதிப்படைந்து பார்வை பலம் இல்லாத நிலையில் இருந்தாலோ சந்திராதியோகம் பலன் தருவது இல்லை.

குரு சண்டாள யோகம்

அடுத்து மிகவும் முக்கியமான குருபகவான் பாபக் கிரகங்களுடன் சேர்வதால் உண்டாகும் குருசண்டாள யோகம் பற்றிச் சொல்லுகிறேன்.

ஜோதிடத்தில் பாபக்கிரகங்களாகச் சொல்லப்படும் ராகுவும், சனியும் சுபத்துவமின்றி வலிமையாக இருக்கும் நிலைகளில் கீழ்நிலைப் பணிகளைச் செய்ய வைக்கும் கிரகங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. இவ்விரு கிரகங்களுடன் உயர்நிலை வேலைகளைச் செய்ய வைக்கும் அந்தணக் கிரகமாக சொல்லப்படும் குருபகவான் இணையும்பொழுது ஏற்படும் நிலை சண்டாள யோகம் எனப்படுகிறது.

இந்த அமைப்பில் இரண்டு வேறு சூட்சுமநிலைகள் உள்ளன. முதலில் பன்றியுடன் சேரும் கன்றும் எதையோ சாப்பிடும் என்ற நிலைப்படி சனி மற்றும் ராகுவுடன் சேரும் வீட்டையும் இணையும் தூரத்தையும் பொறுத்து குருபகவான் தனது வலிமையை சனியுடனோ ராகுவுடனோ பறி கொடுப்பார்.

அதாவது தன்னுடைய நல்லதன்மையை அவர்களுக்குக் கொடுத்து தான் வலிமை இழந்து பன்றியாக இருந்த அவர்களை பசுவாக்கி பசுவாக இருந்த தான் தன் இயல்பை இழப்பார்.

அடுத்த நிலையில் தான் வலிமையாக இருந்து சனியுடனோ, ராகுவுடனோ ஒரே வீட்டில் இருந்தாலும் மிக நெருக்கமாக இணையாத பட்சத்தில் தன்னுடைய வலிமை குறையாமலும் தன் இயல்பை இழக்காமலும் சனியைப் புனிதப்படுத்தி பரிபூரண ஆன்மீகக் கிரகமாக்கி ஜாதகனை முழுக்க முழுக்க தெய்வநம்பிக்கை உள்ளவனாகவும் ஆன்மீகவாதியாகவும் மாற்றுவார்.

ராகுவுடன் மிக நெருங்கி அந்த வீடு ராகுவிற்கு வலிமையான இடமாகவும் குருவிற்கு வலுக்குறைவான இடமாகவும் இருந்தால் ராகுவின் ஆதிக்கம் மேலோங்கி ராகுவின் இயல்பான கடவுளே இல்லை என்று சொல்லும் பகுத்தறிவுவாதி என்று சொல்லப்படும் நாத்திகனாக ஜாதகர் மாறுவார்.

இப்படிப்பட்ட சண்டாளயோகம் எனப்படும் சனியுடனோ, ராகுவுடனோ குருபகவான் மிக நெருக்கமாகச் சேரும் நிலையில் குருதசை நன்மைகளைச் செய்யாது போகலாம். ஆனால் ராகுதசையிலும், சனிதசையிலும் அபரிதமான நன்மைகள் ஜாதகருக்கு இருக்கும்.

குறிப்பாக ராகுபகவான் தன்னுடன் இருப்பவரின் பலனைக் கவர்ந்து இணைந்திருப்பவரின் பலனை எடுத்துச் செய்பவர் என்பதால் குருவுடன் சேர்ந்த ராகுதசையில் ராகு முழுக்க முழுக்க குருபகவானாக மாறி குருவின் காரகத்துவங்களான தனம் புத்திரம் எனப்படும் அளவற்ற பணம் மற்றும் நல்ல குழந்தைகளைத் தருவார். இந்தநிலையில் ராகுதசை ஜாதகருக்கு மறக்க முடியாத அளவிற்கு மேன்மைகளைத் தரும்.

அதே நேரத்தில் ராகுவோடு மிக நெருங்கி எட்டு டிகிரிக்குள் குருபகவான் இணைந்திருந்தால் குருதசை தன் இயல்பை இழந்து குருவினால் கிடைக்கும் எவ்வித நன்மைகளையும் செய்யாது.

இதைப்போலவே சனிதசையிலும் சனியை குருபகவான் புனிதபடுத்துவதால் குருவோடு சேர்ந்த சனிதசையில் அபரிதமான தனலாபமும் ஆன்மீக ஈடுபாடும் ஜாதகருக்கு இருக்கும். சனியின் கெட்ட காரகத்துவங்கள் எதுவும் ஜாதகருக்கு இருக்காது. அதேநேரத்தில் குருவோடு இணையும் தூரத்தைப் பொறுத்து இந்த பலன்கள் வேறுபடும்.

மற்ற பாபக்கிரகங்களான செவ்வாய் சூரியன் இருவரும் குருபகவானின் நண்பர்கள் என்பதால் இவர்களுடன் தொடர்பு கொள்ளும் குருவின் யோகங்கள் அவர்களின் பாபத்தன்மையை நீக்கி   குருவையும் செழுமைப்படுத்தி நல்லயோகங்களாக அமைகின்றன.

நல்ல குணங்கள் கொண்ட நண்பனுடன் தொடர்பு கொள்ளும் கெட்டவனும் நல்லவன் ஆவான் என்பது இதில் உள்ளடங்கியிருக்கும் சூட்சுமம். அந்த வகையில் செவ்வாயோடு குருபகவான் தொடர்பு கொள்வது குருமங்கள யோகம் எனப்படுகிறது. (செவ்வாய்க்கு மங்களன் என்பது இன்னொரு பெயர்) சூரியனுடன் குரு தொடர்பு கொள்வது சிவராஜயோகம் எனப்படுகிறது.

இந்தவாரம் குருவால் பெறப்படும் ராஜயோகமான சிவராஜயோகத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அடுத்த வாரம் குருமங்கள யோகத்தைப் பற்றி விளக்குகிறேன்.

ஒருவரை அரசனாக்கும் சிவராஜ யோகம்…!

சூரியனுக்கு நேரெதிரில் ஏழாமிடத்தில் அதிவக்ர கதியில் குருபகவான் இருக்கும் பொழுது இந்த சிவராஜயோகம் ஏற்படுகிறது.

சென்ற வாரங்களில் நான் எழுதியதைப் போல ஒரு அமைப்பை ராஜயோகம் என்று ஞானிகள் தனிப்பட்டு அடையாளப்படுத்திக் காட்டினாலே அது உண்மையிலேயே ஒருவரை அரசனைப் போல வாழ வைக்கும் யோகத்தைத் தருவதாகும்.

ஒருவரின் ஜாதகத்தில் ராஜயோகம் என்ற பெயரில் நமது மூலநூல்கள் சுட்டிக்காட்டும் ஓரிரு யோகங்கள் இருந்து தர்மகர்மாதிபதி யோகம் மற்றும் பஞ்சமகா புருஷ யோகம் போன்ற யோகங்கள் அவற்றிற்குத் துணையிருந்தால் ஒரு ஜாதகர் உண்மையிலேயே அரசனாவார்.

அரசயோகம் எனப்படும் அமைப்பு உண்மையில் ஒருவரை அதிகாரம் செலுத்தக்கூடிய பதவியில் இருக்க வைக்கும் என்பதால் தலைமைக்கு உரிய கிரகமான சூரியனின் வலு ஒரு ஜாதகத்தில் மிக முக்கியமானது. அதேபோல திடமான மனதோடு சரியான முடிவையும் எடுக்க வைக்கும் இன்னொரு ஒளிக் கிரகமான சந்திரனின் வலுவும் முக்கியமானது.

அந்த வகையில் அதிகாரம் செய்ய வைக்கும் சூரியனை குருபகவான் நேருக்கு நேர் நின்று பார்க்கும் சிவராஜ யோகம் ராஜயோகங்களில் முக்கியமானது.

இந்த யோகத்தின் வழியாக ஒரு சூட்சும விஷயத்தையும் ஞானிகள் நமக்குச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது சூரியனுக்கு ஐந்து, ஒன்பதாம் இடங்களில் இருந்து சூரியனைக் குருபகவான் பார்த்தால் சிவராஜயோகம் என்று சொல்லப்படவில்லை.

சூரியனுக்கு சமசப்தமமாக நேர் ஏழாமிடத்தில் வக்ரகதியில் இருக்கும் குருபகவான் சூரியனைப் பார்த்தால் மட்டுமே சிவராஜயோகம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

கிரகங்கள் அனைத்தும் சூரியனிடமிருந்தே ஒளியைப் பெற்று பிரதிபலிக்கும் நிலையில் சூரியனிடமிருந்து பெற்ற ஒளியை தன்னுள் வாங்கி தனது நல்ல கதிர்களைக் கலந்து வேறுபடுத்தி சூரியனுக்கே திரும்பக் கொடுத்து பிதாவாகிய சூரியனை வலுப்படுத்தி குருபகவானும் சூரியஒளி எனும் பார்வையால் வலுப்படும் நிலையில் உலகையாளும் இந்த யோகம் அமைகிறது.

இந்த யோகம் உண்மையான ராஜயோகத்தைத் தர வேண்டுமெனில் சூரியனும், குருவும் நல்ல ஸ்தானங்களில் பகை நீசம் பெறாமல் வலுவுடன் இருக்க வேண்டியது முக்கியமானது.

(ஜூலை 2 – 2015 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

4 Comments on குரு அருளும் ராஜயோகம் C – 23

 1. Guru + Kethu what will happen Guruji…As per Dr.B.V.Raman this is called KOTEESWARA YOGAM…How do y say about this …

  • வணக்கம்
   இலவச பதில்களுக்கு மாலைமலர் முகவரிக்கு தபால் அனுப்பவும்.
   ஏதேனும் சந்தேகங்களுக்கு எனது 8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
   வணக்கம்
   தேவி
   ADMIN

 2. சூரியனும் குருவும் இணைந்து இருந்தால் சிவராஜ யோகம் என்றே இதுவரை படித்திருக்கிறேன். ஆனால் தங்களின் இந்தப் பதிவு தகவல் சமசப்தமபார்வை படுவதை வைத்தே என்று விவரிப்பதால் இது எந்த நூலில் விவரிக்கப்பட்டிருக்கிறது என்று அறிந்து கொள்ள விரும்புகின்றேன்.

Leave a Reply

Your email address will not be published.


*


Retype the CAPTCHA code from the image
Change the CAPTCHA codeSpeak the CAPTCHA code