குருபகவானின் மகிமைகள் C– 21

நவக்கிரகங்களில் மிக உன்னத இடத்தை வகிப்பவரும் ஒரு ஜாதகத்தில் ஏற்படும் குற்றம், குறைகள் அனைத்தையும் தனது பார்வையாலும், தொடர்பாலும் நீக்கிவைப்பவருமான குருபகவானின் சூட்சுமங்களை இந்த வாரமும் தொடர்ந்து பார்க்கலாம்.

கிரகங்களுக்குள் இருக்கின்ற நட்பு, பகை அமைப்பில் குருபகவானின் ஜென்ம விரோதி சுக்கிரன் என்பது நம் அனைவருக்கும் தெரியும். சுக்கிரனை அடுத்து புதனை தன்னுடைய எதிர்த் தன்மையுள்ள கிரகமாக குருபகவான் கருதுவார். சுக்கிர புதனின் நண்பரான சனியின் மேல் சற்று மென்மையான போக்கு குருபகவானுக்கு உண்டு என்பதால் சனிக்கு குரு எதிரி அல்ல.

அதே போல ராகு – கேதுக்களில் கேது பகவானை குருவுக்குப் பிடிக்கும். கேதுவுடன் அவர் இணையும் போது கேளயோகம் எனப்படும் ஒரு வரை நல்ல நிதிநிலை அமைப்பைக் கொண்டவராக உருவாக்குவார். கேதுவுடன் இணையும் குருபகவான் பலவீனம் அடைய மாட்டார் என்பதால் குருவிற்கு கேது பிடித்தவர்.

ஆனால் ராகுவுடன் இணையும் குருபகவான் சேரும் தூரத்தையும், ராசியையும் பொறுத்து தன் வலிமையை ராகுவிடம் பறிகொடுப்பார் என்பதால் குருவிற்கு ராகு ஆகாதவர். இதே நிலைமையை வேறு வகையாக சொல்லப் போனால் இணையும் எவரையும் நல்லவராக்கும் கன்றுக் குட்டியான குருபகவான் ராகுவை புனிதப்படுத்தி தனது வலிமை இழப்பார்.

குருவின் நட்பு நிலையைப் பார்க்கப் போவோமேயானால் நவக்கிரகங்களில் சந்திரன் அவருக்கு மிகவும் பிடித்த நண்பர். சந்திரனும், குருபகவானும் ஒருவருக்கொருவர் நேரெதிர் நிலைகளில் இருந்து சமசப்தமமாக தங்களது ஒளியினை பார்வை என்ற பெயரில் பரிமாறிக் கொள்ளும் போது இருவருமே மிகச் சிறந்த வலிமையைப் பெறுவார்கள். சந்திரனுக்கு ஏழில் குரு இருப்பது இருவருக்கும் உன்னதமான நிலை.

அதே நேரத்தில் சந்திரனுக்கு ஐந்து, ஒன்பதில் குரு இருந்து அந்த குரு பகவான் வலிமையாகவும் இருந்து சந்திரனைப் பார்க்கும் போது நிலவுக்கு தனது ஒளியோடு சேர்த்து குருவின் ஒளியும் இணையும் போது அந்த ஜாதகத்திற்கு வலுக்கிடைக்கிறது. இதனால் அந்த ஜாதகர் மேன்மை அடைவார். இதன் பொருட்டுத் தான் ராசியைக் குரு பார்ப்பது நமது கிரந்தங்களில் மிகச் சிறந்த பாதுகாப்பு அமைப்பாகவும் யோகமாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது.

சந்திரனையடுத்து செவ்வாயுடன் நட்பு பாராட்டுவார் குருபகவான். இயல்பாகவே சந்திரனும், செவ்வாயும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காத நன்கு புரிந்து கொண்ட நண்பர்கள் என்பதால் நண்பனுக்கு நண்பன் எனக்கும் நண்பன் என்ற முறையில் செவ்வாயும், குருபகவானும் நண்பர்கள் ஆவார்கள்.

சில நிலைகளில் குரு பகவானின் பார்வையும், தொடர்பும் செவ்வாயின் நிஜ காரகத்துவங்களைக் கட்டுப்படுத்தும். செவ்வாயின் கோபத்தையும் முன் யோசனை இல்லாத அவசரக்குடுக்கைத் தனத்தையும் வலுப்பெற்ற குருபகவான் துடைத்தெறிந்து செவ்வாயின் குணங்களைத் தலைகீழ் ஆக்குவார். செவ்வாயை நல்ல பலன்களை செய்ய வைப்பதில் குருவிற்குச் சிறந்த இடம் உண்டு.

இறுதியாக சூரியனையும் நண்பராக ஏற்றுக் கொண்டவர் குருபகவான். இதில் சூரியனும், குருவும் நண்பர்கள் என்றாலும் நேருக்கு நேர் நின்று பார்த்துக் கொள்ளும் நிலையில் சூரியனை புனிதப்படுத்தி அவரிடம் இருந்து பெற்ற ஒளி எனும் பார்வையை அவரிடமே இழந்து அதிவக்ரம் எனும் வலுக்குறைந்த நிலையை குருபகவான் பெறுவார்.

அதே நேரத்தில் சூரியனுக்கு ஐந்து, ஒன்பதாமிடங்களில் நின்று சூரியனைப் பார்க்கும் குருபகவானால் சூரியனின் வலுக்குறைந்த நிலைகளை நீங்கச் செய்து அவரை வலுப்படுத்த முடியும்.

அடுத்து செவ்வாயின் மேஷ, விருச்சிக லக்னங்களுக்கு குருபகவான் பாக்கியாதிபதி பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி எனும் ஒன்பது மற்றும் ஐந்திற்குடையவனாகி யோக நிலை பெற்று தனது தசையில் மிகச்சிறந்த யோகங்களை அளிப்பார்.

சந்திர, சூரியர்களின் கடகத்திற்கு பாக்கியதிபதியாகவும், சிம்மத்திற்கு பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியாகவும் குருபகவான் யோகம் தருவார். மேற்கண்ட நான்கு லக்னங்களுக்கும் வலிமையற்ற நிலையில் பகை, நீசம் போன்றவைகளை அடைந்திருந்தாலும் கெடுதல்களைச் செய்ய மாட்டார். கூடுமான வரை அந்த ஜாதகனை காப்பாற்றிக்கரை சேர்க்கவே முயற்சி செய்வார்.

அதே நேரத்தில் அவரது சொந்த வீடுகளான தனுசு, மீனம் உபய வீடுகளாவதாலும் உபய லக்னங்களுக்கு லக்னநாதன் கேந்திர கோணங்களில் வலுப்பெறுவது நன்மைகளைத் தருவதில்லை என்பதாலும் மீன லக்னத்திற்கு அவர் உச்சம் பெறுவது மிகப் பெரிய யோகங்களைச் செய்வது இல்லை. அதைவிட அவர் ஒன்பதாம் இடமான விருச்சிகத்தில் அமர்ந்து லக்னத்தைப் பார்ப்பது யோகநிலை.

அவரது இன்னொரு லக்னமான தனுசுவிற்கு அவர் உச்சமடைவதே எட்டில் தான் என்பதால் மறைவு ஸ்தனத்தில் வலுப்பெறுவதால் உச்சமடையும் குருபகவான் நன்மைகளைச் செய்வார். அதேபோல அவரது அதிநட்பு வீடான ஒன்பதாமிட சிம்மத்தில் அமர்ந்து லக்னத்தை பார்க்கும் போதும் விசேஷ யோகங்களைச் செய்வார்.

மேற்கண்ட இரு லக்னங்களுக்கும் அவர் கேந்திரங்களில் அமர்வது நன்மைகளைத் தருவதில்லை. பொதுவாகவே ஒரு இயற்கைச் சுபக்கிரகமான குருபகவான் எந்த ஒரு லக்னத்திற்கும் கேந்திரங்களில் வலுப்பெறுவது முழுமையான யோகத்தைத் தருவதில்லை. சில நிலைகளில் இது கேந்திராபத்திய தோஷமாக மாறி கெடுதல்களையும் செய்யும்.

அதே நேரத்தில் முதன்மை இயற்கைச் சுபரான குருபகவான் நமது ஞானிகள் சொன்ன விதிப்படி ஐந்து, ஒன்பது எனப்படும் திரிகோண இடங்களில் இருப்பது அவருக்கும் அந்த ஜாதகத்திற்கும் மிகுந்த வலுவைத் தரும். மேற்கண்ட இடங்களில் இருக்கும் குருபகவான் வலிமையற்ற நிலையில் இருந்தால் கூட தீமைகளைச் செய்யமாட்டார்.

ஒரு ராஜயோக ஜாதகத்தில் இயற்கை சுபக்கிரகங்கள் திரிகோணத்திலும் இயற்கைப் பாவர்கள் கேந்திரங்களிலும் இருப்பார்கள்.

இந்தத் திரிகோண அமைப்பு ஏன் குருபகவானுக்கு அழுத்திச் சொல்லப்படுகின்றது என்றால் ஐந்து, ஒன்பதாமிடங்களில் இருக்கும் குருபகவான் லக்னத்தைப் பார்ப்பார். லக்னமோ லக்னாதிபதியோ வலுவிழந்த நிலையில் ஒரு ஜாதகத்தை தூக்கி நிறுத்துவது குருவின் லக்ன பார்வை மட்டுமே.

அதிலும் குருபகவான் ஐந்து, ஒன்பதில் வலுப்பெற்ற நிலையில் இருந்தால் அது நிச்சயமாக அவரது நண்பர்களது லக்னங்களாகவோ அல்லது அவரது சொந்த தனுசு, மீன லக்னங்களாகவோ தான் இருக்க முடியும். எனவே அவரது நண்பர்கள் லக்னாதிபதிகளாக இருந்து வலுவிழக்கும் நிலையில் ஐந்து, ஒன்பதாமிடங்களில் இருக்கும் குருபகவான் லக்னத்தைப் பார்த்து லக்னாதிபதி வலுவிழந்த குறையை நீக்குவார்.

உதாரணமாக சிம்ம லக்னத்திற்கு சூரியன் நீசமான நிலையில் ஐந்தில் ஆட்சி பெற்ற குரு அமர்ந்து லக்னத்தைப் பார்ப்பதும் மேஷத்திற்கு செவ்வாய் நான்கில் நீசம் பெற்றோ எட்டில் மறைவு பெற்றோ இருக்கும் நிலையில் ஒன்பதில் ஆட்சி பெற்ற குரு அமர்ந்து லக்னத்தைப் பார்த்து வலுப்படுத்தி லக்னாதிபதியின் குறையை நீக்கி அந்த ஜாதகத்தை யோக ஜாதகமாக மாற்று வதையும் சொல்லலாம்.

அதே போல கடக லக்னத்திற்கு லக்னாதிபதி சந்திரன் நீசமாகி வலுக்குறைந்த நிலையில் குருபகவான் ஒன்பதில் அமர்ந்து லக்னத்தையும் சந்திரனையும் பார்வையிட்டால் அது யோக ஜாதகமே. சந்திரன் இங்கே வலிமை பெற்று லக்னத்தை இயக்கும் வலுவினைப் பெற்று விடுவார்.

ஆனால் பார்க்கும் குருபகவான் ராகுவுடன் இணைந்து கிரகணமோ சூரியனுடன் சேர்ந்து அஸ்தமனமோ சனிச் சேர்க்கையோ இன்றி அவர் வலுவாக இருக்க வேண்டும். குரு வலுவாக இருந்தால்தான் அவரது பார்வைக்கும் வலு இருக்கும். பலவீனம் அடைந்திருந்தால் அவரது பார்வையின் நன்மை அளவு குறையும். சில நிலைகளில் முழுக்கக் குரு கெட்டிருந்தால் அவருக்குப் பார்வைபலம் இருக்காது.

அடுத்த வியாழக்கிழமையும் குருபகவான் பற்றிய சூட்சுமங்களைப் பார்ப்போம்.

குருவின் பார்வை எல்லா லக்னங்களுக்கும் கோடி நன்மையா?

நான் அடிக்கடி எழுதி வருவதைப் போல சில சூட்சுமங்கள் வேத ஜோதிடத்தில் படிப்படியாக உங்களுடைய அனுபவம் கூடும் போது மட்டுமே உங்கள் அறிவுக்கு புலப்படும் படியாக ஞானிகளால் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்று இந்த குருவின் பார்வை.

ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கும் ஜோதிடத்தை மேலோட்டமாக புரிந்து கொண்டவர்களுக்கும் குரு பார்க்கக் கோடி நன்மை என்பது எப்போதும் சற்றுக் குழப்பத்தைத் தரும் விஷயமாக இருக்கும். சிலர் எந்த லக்னத்திற்கும் குருபார்வை விஷேசம் தான் என்று தானும் குழம்பி பலன் பார்க்க வருபவர்களையும் குழப்பி விடுவார்கள்.

குருவின் பார்வை என்பது மிகவும் நுட்பமாகக் கணிக்க வேண்டிய சூட்சுமமான ஒரு விஷயம். தெளிவாக சொல்லப் போனால் துலாம் லக்னத்திற்கும் ரிஷப லக்னத்திற்கும் கேந்திராதி பத்தியம் பாதகாதி பத்தியம் பெறும் லக்னங்களுக்கும் குருவின் பார்வை சில நிலைகளில் கெடுதல்களைத் தரும். ஆயினும் அவர் இயற்கைச் சுபர் என்பதால் அவரால் பார்க்கப்படும் பாவம் வளரும்.

குழப்பமாக இருக்கிறதா,,?

ஆரம்பத்தில் பிடிபடாத நிலையில் ஜோதிடம் உங்களுக்கு கண்ணாமூச்சி வித்தைதான் காட்டும். பிடிபட்டு விட்டாலோ கட்டுண்ட பசு போல உங்களுக்குப் பின்னாலேயே வரும். எப்போது பிடிபடும், எப்படிப் பிடிபடும் என்பது உங்கள் ஜாதகத்தில் புதன் இருக்கும் நிலையையும், பரம்பொருளின் கருணையையும் பொறுத்தது.

உதாரணமாக ஒரு துலாம் லக்ன ஜாதகத்தில் குருபகவான் மூன்றில் ஆட்சியாக அமர்ந்து மூலநட்சத்திரத்திலோ பாதகாதிபதியான சூரியனின் உத்திராட நட்சத்திரத்திலோ அமர்ந்து அந்த ஜாதகத்தின் ஏழு ஒன்பது பதினொன்றைப் பார்க்கும் போது அந்த பாவங்கள் வளருமே தவிர ஜாதகருக்குப் பயன் இருக்காது.

இந்த நிலையில் செவ்வாய் மற்றும் ஏழாம் பாவத்தின் நிலையைப் பொறுத்து ஜாதகருக்கு திருமணம் இருக்காது. அல்லது மனைவியுடன் நிம்மதியாக வாழ முடியாது. தந்தை இருப்பார். இவருக்கு பிரயோஜனமாக இருக்கமாட்டார். அண்ணன் அக்காக்கள் இருப்பார்கள். அவர்களால் ஒரு உதவியும் இருக்காது.

ஜோதிடமே விதி விதிவிலக்கு என பல்வேறு கணக்கீடுகளை உள்ளடக்கியதுதான். இதில் மூல அமைப்புகளைத் தவிர மாறாத விதி என்று எதுவுமே கிடையாது. இவற்றை நன்கு ஆராய்ந்து பலன் சொல்வதில்தான் ஒரு ஜோதிடரின் மேதமை அடங்கியிருக்கிறது.

(ஜூன் 11 – 2015 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது) 

3 Comments on குருபகவானின் மகிமைகள் C– 21

  1. குருவின் சூட்சுமங்களை ஞானக்குருவாக இருந்து எங்களுக்கு எடுத்தியம்பிய தாங்களுக்கு நன்றி.தங்களது ஒவ்வொறு அனுபவமும் எனது சோதிட பயணத்திற்கு நல்வழிகாட்டிய அமைந்து நல்ல சோதிடனாக என்னை மாற்றிக்கொள்ள உதவியாக உள்ளது.நன்றிகள் பல.

  2. ஐயா மிகவும் பயன் படக்கூடிய அளவில் இந்த பதிப்பு இருந்தது நன்றி

    பெரும்பாலான கிரகங்கள் வக்கிரம் பெற்றால் அவை வாழ்வின் குறிப்பிட்ட பகுதியில் அதன் காரகத்துவதை பொறுத்து நல்ல அல்ல தீய(முந்தய ஜென்ம ) பலன்களை தரும் என்னும் கருத்து சரியா.

    மேலும் ரிஷப லக்கினத்திற்கு 7 ம் இடத்தில வக்கிரம் பெற்று ஆட்சிபெற்ற சனியினால் பார்க்கப்படும் குரு(புதன் சாரம்) எவ்வாறான பலன்களை நல்கும்.

  3. Raj, Guru will give good result because Guru in Bhudan charam(2 & 5th lord for Rishaba), SANI yogakaraga so Guru will give good result…according to me knowledge…..IS IT CORRECT GURU JI???

Leave a Reply

Your email address will not be published.


*