குருபகவானின் சூட்சுமங்கள் C – 20

நவக்கிரகங்களில்இயற்கைச் சுபரானவரும் ஒரு மனிதனுக்குத் தேவையான அனைத்து நன்மைகளையும் செய்பவருமான குருபகவானின் ஜோதிட சூட்சுமங்களை இந்த வாரம் முதல் பார்க்கலாம்….

மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு தனிச் சிறப்பு குருவிற்கு வேத ஜோதிடத்தில் எப்பொழுதும் உண்டு. எந்தக் கிரகம் வலுவிழந்தாலும் ஒரு ஜாதகத்தில் குருபகவான் மட்டும் வலுவிழக்கக் கூடாது என்பது ஜோதிடத்தில் ஒரு மறைமுக விதி.


மேலும் இன்னுமொரு சொல்லப்படாத ஆனால் உணரக் கூடிய விதியாக எந்த ஒரு ராஜயோக ஜாதகத்திலும் லக்னத்தையோ ராசியையோ குறைந்தபட்சம் லக்னாதிபதியையோ குருபகவான் பார்த்தே தீருவார். அல்லது வலுப்பெற்று இருப்பார்.

அதோடு ஒரு ஜாதகத்தில் ஏராளமான தோஷங்கள் எவ்வளவு கெடுக்கும் நிலையிலும் இருந்தால் கூட குருவின் பார்வையோ தொடர்போ அந்த தோஷ அமைப்புக்கு இருந்தால் அது கெடுதல்களைச் செய்யாது என்பதும் குருவிற்கே உள்ள தனிச் சிறப்பு.

வேத ஜோதிடத்தில் “குருவின் பார்வை கோடி நன்மை” என்று சிறப்பித்துச் சொல்லப்படும் இந்தக் குருவின் பார்வையை நான் ஒரு வீட்டோ அதிகாரத்துக்கு ஒப்பிடுவேன்.

அதாவது ஐ நா சபையில் உலகின் இரு நூறுக்கும் மேற்பட்ட நாடுகள் சேர்ந்து ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி தீர்மானம் கொண்டு வந்தாலும் ஒரு தனி நாடான அமெரிக்காவோ ரஷ்யாவோ சீனா இங்கிலாந்து பிரான்ஸ் போன்ற வீட்டோ அதிகாரம் படைத்த தனி நாடுகளோ தங்கள் அதிகாரத்தின் மூலம் அவற்றை ரத்து செய்து அந்த விஷயத்தை செயலற்றதாக மாற்றுவதைப் போல ஜாதகத்தில் இருக்கும் அனைத்துக் கெடுபலன் தரும் அமைப்புகளையும் குருபகவான் தனது பார்வை மற்றும் தொடர்புகளால் மாற்றி அவற்றைச் செயலற்றதாக மாற்றுவார்.

(இதே அமைப்பு ஜாதகத்தில் சனி பகவானுக்கும் கோட்சாரத்தில் நடக்கும் ஏழரைச்சனி அஷ்டமச்சனி போன்ற அமைப்புகளுக்கும் உண்டு. ஆனால் குரு நன்மை செய்ய வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவார் என்றால் சனி தீமைகளுக்கு அதனைப் பயன்படுத்துவார். இதனைப் பற்றி சனியின் சூட்சுமங்களில் விரிவாகச் சொல்கிறேன்.)

குருவின் சிறப்பியல்புகளாக சொல்லப்படுவது நல்ல நடத்தை நற்சிந்தனை ஒழுக்கம் ஆகியவை. ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தோடு குருபகவான் சம்பந்தப்படுவாரேயானால் அந்த மனிதர் மிகவும் நல்லவராகவும் அன்பு கருணை மன்னிக்கும் தன்மை போன்ற குணங்களைக் கொண்டவராகவும் இருப்பார் என்று நமது மூலநூல்கள் புகழ்ந்து சொல்கின்றன.

குருபகவான் லக்னத்தோடு சம்பந்தப்படுவது மற்றும் கேந்திரங்களில் ஆட்சி உச்சம் பெறுவது ஹம்சயோகம் என்றும் அது ஒரு மிகச் சிறப்பான அமைப்பு எனவும் நமது கிரந்தங்கள் போற்றிக் கொண்டாடுகின்றன. ஆனால் காலத்திற்கேற்ப ஜோதிட பலன்கள் சொல்லப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் நான் குருபகவான் லக்னத்தோடு சம்பந்தப்படும்போது அந்த ஜாதகனை நல்லவன் என்று சொல்வதை விட இளிச்சவாயன் ஏமாளி என்றே பலன் சொல்கிறேன்.

குருபகவான் ஜாதகத்தில் வலுப்பெற்று லக்னத்தோடு சம்பந்தப்படும் நிலையில் ஜாதகர் மிகவும் நல்லவராக இருந்து தன்னைப் போலவே பிறரையும் நல்லவர்களாக நினைத்து சனியின் ஆதிக்கம் பெற்றவர்களிடம் ஏமாறுவார்.

சாதுர்யமும் பொய் புனைவும் மனசாட்சியை துறத்தலும் மிகுதியாகி தவறுகளும் வாழ்வின் அங்கமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட ராகுவின் ஆதிக்கத்தில் சென்று கொண்டிருக்கும் இந்த யுகத்தில் ஒருவர் நல்லவராக இருப்பதை விட வல்லவராக இருப்பதே முக்கியம் என்பதால் ஜோதிடத்தில் துல்லிய பலன் சொல்ல நினைக்கும் ஒரு ஜோதிடருக்கு குருவைப் பற்றிய தற்காலப் புரிதல் இருக்க வேண்டியது அவசியம்.

இந்தப் புற உலகம் தாண்டி அக உலகை அறிமுகப்படுத்தும் ஆன்மீக சிந்தனைகளுக்குச் சொந்தக்காரர் குருபகவான். இவற்றில் ஆன்மீகம் என்பது குரு சனி கேது ஆகிய மூன்று கிரகங்களின் கூட்டுச் சேர்க்கையினைக் குறிக்கும். ஆன்மீகத்தில் இம்மூன்று கிரகங்களும் தனித்தனிப் பரிணாமத்தைக் காட்டுபவை.

ஆன்மீகத்தில் குருவிற்கும் சனிக்கும் உரிய நுண்ணிய வித்தியாசத்தைச் சொல்கிறேன்….

பரம்பொருளுடன் கலப்பதற்கு தேவைப்படும் எண்ணங்களையும் வழிகளையும் காட்டும் ஆன்மீகம் எனப்படும் ஒரு செயல் நிகழ்வில் குருபகவான் எதிர்பார்ப்பு இல்லாத ஆன்மீகத்தையும் சனிபகவான் எதிர்பார்ப்புடன் கூடிய ஆன்மீகத்தையும் தருவார்.

ஒருவரின் ஜாதகத்தில் குருபகவான் நேரிடையாக வலுப்பெற்று லக்னம் ஐந்து ஒன்பதாமிடங்களில் தொடர்பு கொள்வாரெனில் அவர் பிரம்மத்தை எவ்வித சுயலாபமுமின்றி வேண்டுபவராக இருப்பார்.

பரம்பொருளிடம் செய்யப்படும் பிரார்த்தனைகளில் உலகமும் மக்களும் நன்றாக இருக்கவேண்டும் என்று தனக்கென எதுவும் இல்லாமல் பொதுநலத்திற்காக வேண்டிக் கொள்பவராகவும் அதன்படி நடக்கக் கூடியவராகவும் இருப்பார். இது துறவு எனப்படும் ஞான நிலை.

சனிபகவான் தனித்து சூட்சும வலுப்பெற்று குருவை விட மேலான வலிமையில் ஒரு ஜாதகத்தில் இருந்து ஐந்து ஒன்பதாமிடங்களைப் பார்க்காமல் வேறு வகையில் தொடர்பு கொண்டாரெனில் அந்த ஜாதகர் எதிர்பார்ப்புடன் கூடிய ஆன்மீக  நிலையில் இருப்பார்.

சனி வலுப்பெற்றவர் பிரம்மத்தை வேண்டுகையில் “பரம்பொருளே எனக்கு சித்து நிலைகளைக் கொடு. அவற்றின் மூலம் நான் இந்த உலகத்தில் நல்லவைகளை வாழ வைக்கிறேன்” என்று வேண்டுபவராக இருப்பார். இது சித்து எனப்படும் சித்தநிலை.

குருபகவான் வலுப்பெற்றால் அவர் எதிர்பார்ப்பற்ற துறவியாகவும் குருவை விட சனி வலுப்பெற்றால் அவர் எதிர்பார்ப்பும் தேடலும் கூடிய குண்டலினி சக்தி கூடு விட்டு கூடுபாயும் சித்துநிலைகள், சென்ற பிறவியில் நான் என்னவாக இருந்தேன் அடுத்த பிறவியில் நான் என்னவாக இருப்பேன் என்ற தேடுதல் கேள்விகள் உள்ள சித்தராகவும் இருப்பார். இந்த இரு நிலைகளையும் இணைக்கும் பாலம் போல கேது பகவான் செயல்படுவார்.

வேத ஜோதிடத்தில் குருபகவான் பணத்தையும் குழந்தைகளையும் தருபவர் என்ற அர்த்தத்தில் தனகாரகன் புத்திரகாரகன் என்று குறிப்பிடப்படுகிறார். என்னுடைய சாயா கிரகங்களின் சூட்சும நிலைகள் கட்டுரைகளில் ஒரு முறை தனி ஒரு கிரகம் எந்த ஒரு சம்பவத்தையோ அல்லது ஒரு செயலையோ செய்ய  முடியாது என்று சொல்லியிருக்கிறேன்.

ஒரு சம்பவம் அல்லது செயல் என்பது கிரகங்களின் கூட்டால் செய்யப்படுவது. தனி ஒரு கிரகத்தால் எதையும் செய்ய முடியாது. இதில் ஒரு விசித்திரமாக பணத்தைத் தருபவர் குருபகவான். ஆனால் அதைச் செலவு செய்து அதன் மூலம் கிடைக்கும் விளைவுகள் மற்றும் இன்பங்களுக்கு சொந்தக்காரர் குருவின் பரம விரோதியான சுக்கிரன்.

அதேபோல குருவின் குழந்தை பாக்யம் தரப்படுவது சுக்கிரனின் காமத்தின் மூலமாக…! இது போன்ற அமைப்புகளே ஜோதிடத்தின் மிக நுண்ணிய முரண்பட்ட சில சூட்சும நிலைகளையும், வாழ்க்கையே முரண்களின் மேல்தான் நமக்கு அமைத்துத் தரப்படுகிறது என்பதையும் உணர வைக்கும். இதைப் புரிந்து கொண்டவர்கள் மேலானவர்கள்.

குருவும் சுக்கிரனும் பூமிக்கு எப்போதும் எதிரெதிர் நிலைகளில் இருப்பவர்கள் என்பதனாலேயே நமது ஞானிகளால் எதிர்நிலையில் உள்ளவர்கள் என்று நமக்கு தெளிவாகப் புரியவைக்க தேவகுரு அசுரகுரு என்று எதிரிகளாக சொல்லப்பட்டார்கள்.

வானில் பூமிக்கும் சூரியனுக்குமான உள்வட்டத்தில் இருப்பவர் சுக்கிரன். அதற்கு நேர் எதிரே உள்ள வெளிவட்டத்தில் பூமிக்கு வெளிப்புறத்தில் அமைந்திருப்பவர் குருபகவான். இந்த எதிர்நிலைகளே இவர்கள் எதிரிகளாக உருவகப்படுத்தப்பட்டதில் உள்ள வானியல் உண்மையை நமக்கு உணர்த்தும்.

அடுத்து வரும் வியாழக்கிழமைகளில் குருபகவானின் சூட்சுமங்களைத் தொடர்ந்து பார்ப்போம்.

குருபகவான் தருவது பேரின்பம்… சுக்கிரன் தருவது சிற்றின்பம். சூட்சுமம் என்ன?

வலுப்பெற்ற குருபகவான் ஒரு துறவறவாசியையும் சுக்கிரன் இல்லறவாசியையும் குறிப்பார். இந்த இரண்டு வேறுபட்ட நிலைகளில் பேரின்பம் என்பது குருபகவான் தருவது சிற்றின்பம் சுக்கிரனைச் சேர்ந்தது.

உலகின் உன்னத மதமான நமது மேலான இந்துமதம் இல்லற இன்பத்தின் மூலமான பரம்பொருளைக் காணுதலையும், இல்லறம் காணா நேரடி துறவறத்தின் மூலமாக பரம்பொருளைக் காண்பதையும் அனுமதிக்கிறது.

இதில் பகவான் ராமகிருஷ்ணர் முதல் வகையையும் மகாபெரியவர் இரண்டாம் வகையையும் சேர்ந்தவர்கள்.

இவர்கள் இருவரின் அவதார ஜாதகத்திலும் மீனத்தில் சுக்கிரன் உச்சமாக இருப்பார். ஆனால் மகாபெரியவருக்கு உச்ச சுக்கிரனுடன் ராகு இணைந்து, போகஸ்தானாதிபதி சந்திரன் நீசம் பெற்றதால் நான் ஒருமுறை அந்த தெய்வத்தைப் பற்றி குறிப்பிட்டதைப் போல “காமாட்சி என்ற பெயரைத் தவிர பெண்ணின் வாசனை கூட அறியாதவர்.”

பகவான் ராமகிருஷ்ணர் இல்லறம் கண்டவர். அன்னையை தேவியின் வடிவாக தரிசித்தவர். அவருடைய சில ஆத்ம பரிசோதனைகள் நாம் அறிந்தவை. அவருக்கு சுக்கிரன் உச்சம் என்றாலும் அம்சத்தில் நீசம் என்பதால் சுக்கிரன் முற்றிலும் வலுவிழக்கத்தான் செய்தார். என்ன.. உச்சமாகி பின் வலுவிழந்தார்.

அசுர குருவான சுக்கிரன் தருவது சிற்றின்பம்…. தேவ குருவான குருபகவான் தருவது பேரின்பம் என்பதன் சூட்சும விளக்கம் என்னவென்றால்…

மனிதனுக்குக் கிடைக்கும் இன்பங்களில் ஆண் பெண் உறவின்போது ஏற்படும் உச்சநிலையில் சில நொடிகள் உண்டாகும் எண்ணங்களற்ற இன்பமான பரவச நிலையே முதன்மை இன்பமாகக் கருதப்படுகிறது. இந்த சுகத்திற்காகவே உலகில் பல சாம்ராஜ்யங்கள் சரிந்திருக்கின்றன. பல உலகை மாற்றிய திருப்புமுனைகள் நடந்திருக்கின்றன.

இந்த சில நொடி இன்பத்தை அதாவது சிற்றின்பத்தை காமத்தின் மூலமாகத் தருபவர் சுக்கிரன். சுக்கிரன் தரும் இந்த இன்பத்திற்கு பெண்ணின் துணை வேண்டும்.

ஆனால் இதே இன்பத்தை ஒரு மனிதன் பெண்ணின் துணையின்றி தவம் தியானம் குண்டலினிசக்தி போன்ற மெய்ஞான அனுபவங்களின் மூலமாக தான் நினைக்கும் போது பெற்று நீண்ட நேரம் அனுபவிப்பது பேரின்பம்.

ஞானிகள் தன்னிலை மறந்த பரவச நிலையில் பரம்பொருளுடன் ஒன்றும் போது இதையே அனுபவிக்கிறார்கள். இதை அருளுபவர் தேவகுருவான குருபகவான். எனவேதான் சுக்கிரபலம் ஒரு இல்லறவாசிக்கே தேவை என்றும், துறவறம் காண்போருக்கு குருபகவானின் பலம் தேவை என்றும் சொல்லப்பட்டது.

(ஜூன் 11 – 2015 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது) 

3 Comments on குருபகவானின் சூட்சுமங்கள் C – 20

  1. Sir,

    Very recently I came across your website and writings. Your insights are very valuable and practical.
    You are a born genius. I am happy to have found a genuine person in the dubious world of astrology. May the Almighty God bless you and your noble services to this suffering humanity.

Leave a Reply

Your email address will not be published.


*


Retype the CAPTCHA code from the image
Change the CAPTCHA codeSpeak the CAPTCHA code