செவ்வாய் தோஷம் சில உண்மைகள்…C – 012

தமிழ்நாட்டில் திருமணவயதில் ஆணையும், பெண்ணையும் வைத்திருக்கும் பெரும்பாலான பெற்றோர்களின் தூக்கத்தைக் கெடுக்கும் வார்த்தை இந்த செவ்வாய் தோஷம்.

தோஷம் எனப்படும் சம்ஸ்க்ருத வார்த்தைக்கு தமிழில் குற்றம் அல்லது குறை என்று பொருள் கொள்ளலாம்.

வேதஜோதிடத்தில் ஞானிகளால் சொல்லப்பட்ட எத்தனையோ உன்னத விஷயங்கள் ஜோதிடர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சில அனுபவமற்றவர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு அபத்தமாக்கப்பட்ட விஷயங்களில் இந்த செவ்வாய் தோஷத்திற்கு முதலிடம் உண்டு. ஜோதிடத்தை மூடநம்பிக்கை என்று சொல்பவர்களின் வாய்க்கு முதலில் கிடைக்கும் அவலும் இந்த செவ்வாய்தோஷம்தான்.

பூகோளரீதியாக வடஇந்தியா, தென்னிந்தியா என இரண்டு பிரிவாக உள்ள பாரததேசத்தில் வடஇந்தியாவில் செவ்வாய் மங்களகாரகன் என்றே போற்றப்படுகிறார். அங்கும் திருமணம் என்று வரும்போது செவ்வாயின் நிலை கவனிக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தை தாண்டி வேறு எந்த மாநிலத்திலும் செவ்வாய் தோஷத்திற்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

ஒவ்வொரு ஜோதிடரும் தங்கள் மனத்திற்கேற்ற கருத்தையும், பலன்களையும் சொல்லும் இந்த செவ்வாய் தோஷத்தைப் பற்றி நமது ஜோதிட மூலநூல்கள் குறிப்பான விதிகள் எதையும் சொல்லவே இல்லை.  அதிலும் இவ்வளவு பெரிய தோஷமாக நமது எந்த ஆதாரகிரந்தமும் செவ்வாயைப் பற்றிப் பயமுறுத்தவில்லை.

ஒரு கிரகம் என்ன பலனை ஜாதகருக்குச் செய்யும் என்பதற்கு பல விதிகள் மற்றும் விதிவிலக்குகளுடன் நுட்பமான கணிப்புகளும் தேவைப்படும் இந்த மகா சாஸ்திரத்தில் செவ்வாய் இந்த இடத்தில் இருப்பதால் இன்ன பலன் என்பதைக் நுணுக்கமாகக் கணிக்கத் தெரியாத ஜோதிடர்கள் பொத்தாம் பொதுவாகச் சொல்லும் விஷயமே இந்த செவ்வாய் தோஷம்.

முதலில் ஜோதிடர்களைப் பற்றி ஒரு வருத்தத்திற்குரிய கருத்தை நான் முன் வைக்கிறேன்..

எல்லாத்துறையிலும் அனுபவமுள்ளவர்கள், அனுபவமற்றவர்கள், திறமைசாலிகள், திறமைக் குறைவானவர்கள் என்ற இருபிரிவுகள் இருப்பதைப்போல உலகின் மிக மூத்ததுறைகளில் ஒன்றான ஜோதிடத்துறையிலும் உண்டு.

ஒரே மகனுக்கு திருமணகாலம் வந்து விட்டதா என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் வந்த அப்பாவித் தாய்தகப்பனிடம் இன்னும் ஆறுமாதத்தில் செத்துப்போகப் போகிறவனுக்கு எதற்குக் கல்யாணம்? என்று கேட்ட ஜோதிடரையும் நான் அறிவேன்.

ஒரு ஜோதிடன் என்பவன் மிகச்சாதாரண மனிதன். அவன் ஒருபோதும் கடவுளாக முடியாது. என்ன நடக்கலாம் என்று கணிப்பவன் மட்டுமே ஜோதிடன்.. ஆனால் என்ன நடக்கும் என்று தீர்மானித்து அதை நடத்தியும் காட்டுவது பரம்பொருள்.

ஜோதிடத்தை ஒருநாளும் பயமுறுத்தும் கலையாக நமது தெய்வாம்சம் கொண்ட ஞானிகள்  சொல்லவே இல்லை ஆனால் புனிதமான இந்த தெய்வீகக் கலை இன்று சிலர் கையில் பணம் கொழிக்கும் கலையாக மாறிப் போனதும் ஒருவகையான காலமாற்றம்தான்.

இந்த நூற்றாண்டில் தமிழ் ஜோதிடஉலகிற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம், எங்களைப் போன்ற இளைய தலைமுறை ஜோதிடர்களுக்கு எத்தனையோ நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்த ஆசான், குருநாதர், ஜோதிஷ வாசஸ்பதி ஆத்தூர் மு. மாதேஸ்வரன் அய்யா அவர்கள் தனது மேலான ஆய்வு நூல்களில் நிறைய இடங்களில் இந்த செவ்வாய்தோஷத்தைப் பற்றிய உண்மை நிலையை விளக்கியிருக்கிறார்கள்.

அதுபோலவே குருநாதர், பாலஜோதிடம் ஆசிரியர், ஜோதிடபானு அதிர்ஷ்டம் சி. சுப்பிரமணியம் அய்யா அவர்களின் செவ்வாய் சனி பற்றி நுணுக்கமாக விளக்கும் பதில்களும் ஒவ்வொரு வளரும் ஜோதிடரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

ஜோதிடமும் பிரபஞ்சமும் ஒருவகையில் ஒன்று என நான் சொல்வேன். பிரபஞ்சத்தை எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் ஒரே மாதிரியான தோற்றத்தைக் கொண்டிருக்கும் என்பதைப்போல ஜோதிடமும் பார்ப்பவரின் கண்களிலும் கவனத்திலும் இருக்கும்.

அறுபதுவயது வரை ஆசிரியர் பணியில் இருக்கும் ஒருவர் ஓய்வு பெற்றதும் ஜோதிடத்தை மூன்றுமாதம் கற்றுக் கொண்டு ஒரு தனியார் பயிற்சிமையம் தரும் ஜோதிடமணி ஜோதிடஒளி போன்ற பட்டத்தைப் பெற்ற பின் வீட்டின் வெளியே ஜோதிட வெளிச்சம் குப்புசாமி என்று ஒரு போர்டு மாட்டி விடுகிறார் கூடவே மறக்காமல் அடைப்புக்குறிக்குள்  ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் என்பதையும் குறிப்பிட்டிருப்பார்.

பொதுமக்களும் இவரின் புருவம் கூட நரைத்துவிட்டது பெரும் அனுபவஸ்தர் என்று அவர் சொல்லும் செவ்வாய்தோஷத்தைப் பற்றி என்னிடம் வந்து கேள்விமேல் கேள்வி கேட்பார்கள். இதில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் என்பது ஒரு ஜோதிடருக்கு தகுதியா தகுதிக்குறைவா என்பதைக்கூட சிலர் யோசிப்பது இல்லை.

தன் வாழ்வின் இறுதிப்பகுதியில் ஜோதிடத்தைத் தெரிந்து கொண்டு வயதின் காரணமாக அனுபவஸ்தராகக் காட்டிக் கொள்ளும் இது போன்றவர்களின் பெயரும் ஜோதிடர்தான். ஜோதிடம் தவிர வேறு எதுவும் தெரியாமல், வேறு எதையும் செய்யாமல் தன் வாழ்நாள் முழுவதையும் ஜோதிட ஆராய்ச்சியிலேயே கழித்துக் கொண்டிருக்கும் மேலே சொன்ன என் குருநாதர்களின் பெயரும் ஜோதிடர்தான்.

ஜோதிடம் என்பது கல்வியல்ல. அது ஒருவகை ஞானம். எவ்வளவு முயன்றாலும் கொடுப்பினை இருந்தால்தான் கைகளுக்குள் அகப்படும்.

சரி… விஷயத்திற்கு வருவோம்…

லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ இரண்டு, நான்கு, ஏழு, எட்டு, பனிரெண்டு ஆகிய  பாவங்களில் செவ்வாய் அமர்ந்தால் அது செவ்வாய்தோஷம் எனச் சொல்லப்படுகிறது..

சிலர் சுக்கிரனுக்கு இரண்டு, நான்கு, ஏழு, எட்டு, பனிரெண்டில் இருந்தாலும் செவ்வாய்தோஷம்தான் என்று சொல்கின்றனர். சில நூல்களிலும் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அனுபவத்தில் அது சரியாக வரவில்லை. அதேபோல வட இந்திய முறைப்படி செவ்வாய் லக்னத்தில் இருந்தாலும் தோஷம்தான்.

செவ்வாய் ஒரு பாபக்கிரகம் என்பதால் அவர் இருக்கும் இடம் மற்றும் அவரது பார்வைபடும் இடங்கள் பலவீனம் அடையும். என்ற கருத்தில் இந்த தோஷம்  சொல்லப்பட்டது.

அதாவது குடும்பஸ்தானம் எனும் இரண்டாமிடம், கற்பு எனும் ஒழுக்கத்தைக் குறிக்கும் நான்காமிடம், வாழ்க்கைத்துணையைச் சொல்லும் ஏழு, கணவனின் ஆயுளைக் காட்டும் எட்டு, தாம்பத்திய சுகத்தை குறிப்பிடும் பனிரெண்டு ஆகிய பாவங்களில் செவ்வாய் அமர்ந்தால் அந்த இடங்கள் நல்லபலனைத் தராது என்ற அடிப்படையில் இது கணிக்கப்பட்டது.

அதேபோல செவ்வாய் ஏழில் இருந்தால் தனது கொடிய எட்டாம் பார்வையால் இரண்டாமிடத்தைப் பார்ப்பார். நான்கில் இருந்தால் நான்காம் பார்வையாக ஏழாமிடத்தையும், பனிரெண்டில் இருந்தால் எட்டாம் பார்வையாக ஏழாமிடத்தையும், எட்டில் இருக்கும்போது நேரிடையாக குடும்பஸ்தானமான இரண்டாம் இடத்தையும், இரண்டில் இருந்தால் எட்டாமிடத்தையும் பார்த்துக் கெடுப்பார் என்பதாலும் இது தோஷம் எனச் சொல்லப்பட்டது.

ஆயினும் மேற்கண்ட பாவங்களில் இருக்கும் செவ்வாய் என்ன நிலையில் இருக்கிறார்? அவர் அந்த லக்னங்களுக்கு தீமை செய்பவரா? கெடுதல் செய்யும் அமைப்பில் இருக்கிறாரா? வலுவாக இருக்கிறாரா? பலவீனமாக இருக்கிறாரா? யாருடன் இணைந்திருக்கிறார்? சுபத்துவம் அடைந்திருக்கிறாரா? சூட்சும வலு பெற்றிருக்கிறாரா? யாருடைய பார்வை அவருக்கு இருக்கிறது? கெடுதல் செய்வார் என்றால் எந்த வயதில் எப்போது செய்வார்? அவருடைய தசை வருகிறதா? போன்ற அனைத்தையும் கணித்தபிறகே செவ்வாய் தோஷத்தை அளவிட வேண்டும்.

இவை அனைத்தையும் விட மேலாக மற்றொரு பாபக்கிரகமான சனிபகவானும் அந்த ஜாதகத்தில் “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள்” கணக்காக திருமண பந்தத்தைக் கெடுக்கும் அல்லது தாமதப்படுத்தும் அமைப்பில் இருக்கிறாரா? என்பதையும் கணித்த பிறகே செவ்வாய் என்ன செய்வார் என்ற முடிவிற்கு வர முடியும்.

இவை எதையும் கணிக்காமல், கணிக்க இயலாமல் செவ்வாய் ஏழில் இருக்கிறார்  செவ்வாய் எட்டில் இருக்கிறார். இது செவ்வாய் தோஷம் என்று   ஒரு ஜோதிடர் சொல்வாரேயானால் அதைவிட சாஸ்திர துரோகம் வேறு எதுவும் இருக்க முடியாது. அதைத்தான் ஒரு அனுபவமற்ற, கணிக்கத் தெரியாத, திறமைக் குறைவான ஜோதிடர் செய்கிறார்.

இதுபோல நடக்கக் கூடும் என்பதை முன்பாக உணர்ந்ததால்தான் இந்த செவ்வாய் தோஷத்திற்கென ஏராளமான பொதுவான விதிவிலக்குகளும் நமது நூல்களில் சொல்லப்பட்டுள்ளன. அதன்படி பார்த்தால் லட்சத்தில் ஒருவருக்கு கூட செவ்வாய் தோஷம் இருக்காது. ஆனால் அதையும் இந்த ஜோதிடர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்

செவ்வாய்தோஷ விதிவிலக்குகள் சிலவற்றைத் தனி இணைப்பாகக் கொடுத்துள்ளேன். இவற்றிலும் முரண்பாடுகள் உள்ளன. அது என்ன என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்… செல் 8428 99 8888

                        செவ்வாய் தோஷ விதிவிலக்குகள்   

1.   மேற்சொன்ன இரண்டு, நான்கு, ஏழு, எட்டு, பனிரெண்டாம் வீடுகளில் செவ்வாய் ஆட்சியாகவோ, உச்சமாகவோ, நீசமாகவோ இருந்தால் தோஷம் இல்லை.

2.   குருவின் வீடுகளிலோ, குருவுடன் இணைந்தோ, குருவின் பார்வையைப் பெற்றிருந்தாலோ தோஷம் இல்லை.

3.   சுக்கிரனின் வீடுகளான ரிஷபம், துலாமில் இருந்தாலும் தோஷம் இல்லை.

4.   சுக்கிரனுக்கு நான்கு, ஏழு, பத்து ஆகிய கேந்திரங்களில் செவ்வாய் இருந்தாலும் தோஷம் இல்லை.

5.   மேற்கண்ட வீடுகளில் செவ்வாய் சந்திரனுடனோ, புதனுடனோ அல்லது இருவரும் சேர்ந்து இணைந்திருந்தாலோ தோஷம் இல்லை.

6.   ராகு, கேதுக்களுடன் செவ்வாய் நெருக்கமாக இணைந்து பலவீனம் பெற்றிருந்தால் தோஷம் இல்லை.

7.   மேஷம் விருச்சிகம் கடகம் சிம்மம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை.

8.   சிம்மத்தில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.

9.  செவ்வாய் சனியுடன் இணைந்தால் தோஷம் இல்லை

10. அஸ்தமன செவ்வாய்க்கு தோஷம் இல்லை.

11. செவ்வாய் பரிவர்த்தனை பெற்றிருந்தால் தோஷம் இல்லை.

 

  ( ஏப் 16 – 2015 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது )

4 Comments on செவ்வாய் தோஷம் சில உண்மைகள்…C – 012

 1. Excellent please let people be aware about it.sorry to say because of mad society many children are not married to the right time

 2. Sir enaku risabha raasi. Mirugasirisa natchthiram.. Thosam yethum illai… Naan chevvai dosam ULA pennai marriage panikalama? Ithanaal ethum paathippu varuma?

  • வணக்கம்
   குருஜி அவர்களின் அனைத்து சேவைகளுக்கும் கட்டணம் உண்டு. இலவச பதில்களுக்கு மாலைமலர் முகவரிக்கு தபால் அனுப்பவும்.
   ஏதேனும் சந்தேகங்களுக்கு எனது 8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
   வணக்கம்
   தேவி
   ADMIN

Leave a Reply

Your email address will not be published.


*


Retype the CAPTCHA code from the image
Change the CAPTCHA codeSpeak the CAPTCHA code