பாபக்கிரகம் என்றால் என்ன ? – C – 011

உலகில் உள்ள அனைத்துமே இருவேறு எதிர்நிலைகளைக் கொண்ட மாறுபாடான சமன்பாடுகள்தான். வேறுவேறு எதிரெதிர்நிலைகள் இல்லையெனில் உலகில் எவையுமே இல்லை. இரவு-பகல், ஆண்-பெண், நன்மை-தீமை, இன்பம்-துன்பம் போன்றவைகள் இதில் அடக்கம்.

இருட்டு இருந்தால்தானே அங்கு வெளிச்சத்திற்கு வேலை…?

உலகில் எல்லோருமே நல்லவர்களாக இருந்து விட்டால், எல்லாமே சுபமாக இருந்து விட்டால் பிரச்னைகளே உலகில் இல்லையே…!

“ஒன்றைப்போலவே இன்னொன்று, ஆனால் எதிரானது” என்பது பிரபஞ்ச விதி என்பதால்தான் நவக்கிரகங்களிலும் நல்லகிரகம், கெட்டகிரகம் என்ற ரீதியில் சுபர், பாபர் என இரு பிரிவுகளை ஞானிகள் நமக்கு வேறுபடுத்திச் சொன்னார்கள்.

அதாவது மனிதனுக்கு தேவையான செயல்பாடுகளைக் (காரகத்துவங்கள்) கொண்ட கிரகங்கள் சுபக்கிரகங்கள் எனவும், தேவையற்ற செயல்பாடுகளை கொண்டவைகள் பாபக்கிரகங்கள் எனவும் ஞானிகளால் பிரிக்கப்பட்டன.

இதில் சுபர்கள், பாபர்கள் என்ற பிரிவுகளும், குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைச் சந்திரன், செவ்வாய், சனி என சுப, அசுப வரிசைகளும் ஞானிகளால் எவ்வாறு அமைக்கப்பட்டன என்பதையும் நான் ஏற்கனவே விஞ்ஞானரீதியாக ஆராய்ந்து விளக்கியிருக்கின்றேன்.

இதுபற்றிய எனது ஆய்வு முடிவுகள் ஒருவருடத்திற்கு முன்பு “உங்கள் ஜாதகம் யோக ஜாதகமா?” என்ற தலைப்பில் பாலஜோதிடத்தில் தொடராக வெளிவந்தன.

அதை இங்கே சுருக்கமாகச் சொல்லப் போனால் மனிதன் உருவாகத் தேவையான ஆத்மஒளியை, அவனை வழி நடத்தத் தேவையான குறிப்பிட்டவகை கதிர்வீச்சை சூரியனிடமிருந்து வாங்கி சரியான விகிதத்தில் பூமியின் மேல் செலுத்தி மனிதனிடம் நல்ல தாக்கத்தை உண்டு பண்ணும் கிரகங்கள் குரு, சுக்கிரன் போன்ற சுபர்கள்.

மேலே சொன்ன நல்ல கதிர்வீச்சை, ஆத்மஒளியை சரியாகப் பிரதிபலிக்க முடியாதவைகள் சனி செவ்வாய் போன்ற பாபர்கள்.

சூரியனிடமிருந்து பெறும் ஒளியை வைத்தே, அதைப் பிரதிபலிக்கும் அளவை வைத்தே சுப அசுப பிரிவுகள் நமது ஞானிகளால் அமைக்கப்பட்டன. அவ்வகையில் சூரியனின் ஆத்மஒளியைப் பெற முடியாத தூரத்தில் இருக்கும் சனி முதன்மைப் பாபராகவும், தேவையற்ற சிகப்புக் கதிர்களை அதிகமாக பிரதிபலிக்கும் செவ்வாய் இரண்டாவது பாபராகவும் நமக்குச் சொல்லப்பட்டது.

அதிர்ஷ்டம் எனக் கருதப்படும் யோகங்களை முறையான வழியில் அளிப்பவைகள் சுபக்கிரகங்கள் மட்டும்தான். சுபர்களால் கிடைக்கும் யோகங்களை மட்டுமே நீங்கள் வெளியே கௌரவமாக சொல்லிக் கொள்ள முடியும். பயமின்றி தக்க வைத்துக் கொள்ளவும் முடியும்.

அதேபோல ஒரு பாபக்கிரகம் எப்போது புனிதப்படுகிறது என்பதை, அதாவது மனிதனுக்கு தேவையானவைகளை செய்யக் கூடிய தகுதிகளைப் பெறுகிறது என்பதையும் நமது ஞானிகள் சிலநிலைகளில் வரையறுத்துச் சொல்லியிருக்கிறார்கள். இன்னும் சில சூட்சுமங்களை நமக்குக் கோடிட்டும் காட்டியிருக்கிறார்கள்.

ஒரு பாபக் கிரகம் தன் முழு வலிமையை நேரடியாக அடையாமல், அதாவது உச்சம் ஆட்சி போன்ற ஸ்தானபலம் பெறாமல், அப்படியே பெற்றாலும் சுபகிரகங்களின் தொடர்புகளால், அல்லது வேறு சில வழிகளில் நேர்வலு இழந்து சூட்சுமவலு அடையும் நிலையில் மட்டுமே மனிதனுக்கு நல்லது செய்ய முடியும்.

அப்போது கூட அந்தக்கிரகம் தனது முறையற்ற வழிகளில்தான், ஏமாற்று வழிகளில்தான் மனிதனுக்கு யோகம் செய்யும். நேர்வழியில் செய்யாது. தேள் எந்த நிலையிலும் கொட்டத்தான் செய்யும். முத்தம் தராது.

இதையே நான் “பாபக் கிரகங்களின் சூட்சும வலுத்தியரி” என்கிறேன்.

என்னிடம் ஜாதகம் பார்க்க வரும் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் என்னிடம் திரும்பத் திரும்பக் கேட்கும் கேள்வி எனக்கு சந்திரமங்கள யோகம் இருக்கிறது ஆனால் வேலை செய்யவில்லையே ஏன்? என் ஜாதகத்தில் குறிப்பிடப் பட்டுள்ள குருமங்கள யோகம் எப்போது வேலை செய்யும்? என்பதுதான்.

இதைப்பற்றி நான் முன்னரே தெளிவாக விளக்கியிருந்தாலும் செவ்வாயைப் பற்றிய இந்த அத்தியாயத்தில் மீண்டும் சொல்வதும் அவசியம்தான். எனவே சுருக்கமாக விளக்குகிறேன்.

நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் கிரகங்களை மனித ரூபமாக்கியதற்கும் அவற்றிற்கு தந்தை மகன் போன்ற மனித உறவுகளை உண்டாக்கியதற்கும் இடையில் ஆயிரம் சூட்சுமங்கள் உள்ளன.. இதை இந்தத் தொடரின் ஆரம்பக் கட்டுரையில் இலேசாக விளக்கியிருக்கிறேன்.

ஒரு ஜாதகருக்கு ஒரு யோகம் வேலை செய்யுமா செய்யாதா என்பதைக் கணிப்பதற்கு முன் அந்தக் கிரகம் யாருக்கு என்ன உறவு? அந்தக் கிரகத்தின் நிரந்தர மற்றும் தற்காலிக நட்பு பகை விபரத்தை ஒரு ஜோதிடர் ஆழமாக அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

உதாரணமாக உங்கள் ஊரிலிருக்கும் ஒருவருக்கும் உங்களுக்கும் இடையே பரம்பரை பரம்பரையாக விரோதம் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு ஒரு தவிர்க்க முடியாத ஒரு சூழ்நிலையில் நீங்கள் ஒரு நல்லது செய்ய வேண்டியிருக்கிறது என்றால் நீங்கள் முழுமனதுடன் அதைச் செய்வீர்களா?

ஒரு பெரிய மனிதர் அவருக்கு அந்த நன்மையைச் செய்யச் சொல்லி உங்களுக்கு உத்தரவே போட்டாலும் கூட நீங்கள் முணுமுணுத்துக்கொண்டே எங்கடா சந்து கிடைக்கும் இவனிடமிருந்து தப்பித்து ஓடலாம் என்றுதான் பார்ப்பீர்களே தவிர அந்த எதிரிக்கு முழுமனதுடன் நன்மை செய்ய மாட்டீர்கள்…

கிரகங்களும் அப்படித்தான்…

ஒரு கிரகம் தன்னுடைய நட்புக்கிரகத்தின் லக்னங்களில் பிறந்தவர்களுக்கு மட்டுமே தன்னுடைய யோகங்களை முழுமையாகச் செய்யும். எதிரிக்கிரகத்தின் லக்னங்களில் பிறந்தவர்களுக்கு யோகம் தரும் அமைப்பில் இருந்தாலும் முழுமையாகச் செய்யாது. இன்னும் சொல்லப்போனால் .சிலநிலைகளில் முழுக்கவே எந்த நன்மைகளையும் செய்யாது.

செவ்வாய் சம்பந்தப்பட்ட சந்திரமங்கள யோகம், குருமங்கள யோகம் போன்றவை செவ்வாயின் நட்புக்கிரகங்களான சூரிய சந்திர குருபகவானின் லக்னங்களான கடகம் சிம்மம் தனுசு மீனம் ஆகியவற்றில் பிறந்தவர்களுக்கும், செவ்வாயின் மேஷம் விருச்சிகம் ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களுக்கும் மட்டுமே முழுப்பயன் தரும்.

செவ்வாயின் எதிர்த்தன்மையுடையவர்களான சுக்கிரன் புதன் சனி ஆகியோரின் ரிஷபம் மிதுனம் கன்னி துலாம் மகரம் கும்பம் ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு பயன் இருக்காது.

இந்த லக்னங்களுக்கு பரிபூரண நல்ல அமைப்பில் இருக்கிறார் என்ற நிலையில் கூட அரைகுறையாகவே யோகம் தந்து பின்பு அது சம்பந்தமான சிக்கல்களையும் செவ்வாய் தருவார்.

ஒரு விதிவிலக்காக மேற்கண்ட லக்னங்களுக்கு செவ்வாயின் யோகங்கள் நல்ல பலனைத் தந்து கொண்டிருக்கிறது என்றால் அந்த ஜாதகத்தை நுணுக்கமாகக் கவனியுங்கள். சந்திரனின் சூட்சுமங்களில் கடந்த வாரங்களில் நான் விளக்கியதைப் போல அந்த ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவிழந்து, ராசிநாதன் பலன் தந்து கொண்டிருப்பார். அந்த ராசிநாதன் செவ்வாயின் நண்பராக இருப்பார்.

ஜோதிடம் என்பது ஒரு சூட்சுமக் கடல். ஆழமாக நீங்கள் மூழ்க மூழ்க அற்புத முத்துக்களை எடுத்துக் கொண்டே போகலாம். ஆனால் இந்தக் கடலில் நீங்கள் ஆனந்தமாக நீந்தி முத்துக்குளிக்க வேண்டுமென்றால் பரம்பொருளின் அருளுடன் உங்கள் ஜாதகத்தில் புதன் தனித்துவ வலுவுடன் இருக்க வேண்டும்.

திக்பலத்தின் சூட்சுமங்கள்.

ஒரு கிரகத்தின் வலுவை நிர்ணயிக்க ஞானிகள் நமக்குத் தந்த ஸ்தானபலம், திக்பலம், திருக்பலம், கால அயன சேஷ்டபலங்கள் என்ற ஆறு வகை பலங்களில் நான் மேலே குறிப்பிட்ட திக்பலம் என்பது வித்தியாசமான ஒன்று.

திக்பலம் என்பது ஒரு கிரகம் நிற்கும் திசையைக் குறிக்கிறது. இந்த பலத்தினை அடைந்த கிரகம் ஆட்சி வலுவில் நிற்பதற்கு ஒப்பான பலன்களைத் தரும். லக்னத்தில் குரு,புதனும் நான்கில் சந்திரன் சுக்கிரனும், ஏழில் சனியும், பத்தில் சூரியன் செவ்வாயும் திக்பலம் பெறுவார்கள்.

மேற்கண்ட ஒன்று நான்கு ஏழு பத்தில் இருக்கும் கிரகங்கள் முழு திக்பலத்தினைப் பெறுவார்கள். அதேநேரத்தில் திக்பலத்தினை நெருங்கும் கிரகமும் வலுப்பெற்றதுதான். நெருங்கும் தூரத்தைப் பொறுத்து அதன் பலம் இருக்கும்.

சிலநிலைகளில் பனிரெண்டில் மறைந்த குருவிற்கும் புதனுக்கும் வலு இருக்கிறது என்று நம் கிரந்தங்கள் சொல்வதன் காரணம் அவை பூரண திக்பலம் அடையும் நிலைக்கு அருகில் இருப்பதால்தான். மேலும் திக்பலத்தின் எதிர்முனையில் நிற்கும் கிரகங்கள் பலமிழந்து சூன்யபலம் என்ற அர்த்தத்தில் நிஷ்பலம் பெற்றவையாகவும் குறிப்பிடப்படுகிறது.

ஸ்தானபலம் எனப்படும் ஆட்சி உச்சத்திற்கு நிகராகவும் அதற்கு அடுத்ததாகவும் சொல்லப்படும் இந்த திக்பலம் பாபக்கிரகங்களுக்கு மட்டுமே சிறப்பாகச் சொல்லப்பட்டது. இதுவே திக்பலத்தின் சூட்சுமம். பாபக்கிரகங்கள் ஒரு ஜாதகத்தில் நேரிடையாக ஆட்சி உச்சம் போன்றவைகளை அடையாமல் மறைமுகமாக திக்பலத்தின் வழியாக வலுப்பெற்றால் மட்டுமே நல்ல பலன்களைச் செய்யும்.

செவ்வாய் பத்தாமிடத்தில் ஆட்சி பெறுவதை விட அங்கே திக்பலம் பெறுவதே நல்லது. இதைத்தான் நமது மூலநூல்கள் “தசம அங்காரஹா” எனும் சிறப்பான நிலையாகச் சொல்கின்றன. பத்தாமிடத்தில் நீசம் பெற்றாலும் செவ்வாய் அங்கே தன் திக்பலத்தால் நன்மைகளைச் செய்வார்.

ஆனால் பத்தில் செவ்வாய் ஆட்சி உச்சம் போன்ற நேர்வலுவினைப் பெற்று திக்பலமும் பெறுவது நல்லநிலை அல்ல. இதுபோன்ற அமைப்பில் அவர் சந்திரனுடனோ குருவுடனோ தொடர்பு கொள்ளும்போது மட்டுமே நன்மைகள் இருக்கும்.

( மார்ச் 26,  2015 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

2 Comments on பாபக்கிரகம் என்றால் என்ன ? – C – 011

Leave a Reply

Your email address will not be published.


*