செவ்வாயின் சூட்சுமங்கள்… C – 010

நவக்கிரகங்களில் முக்கால் பாபர் எனப்படுபவரும், மேஷம் விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு அதிபதியும், வீரத்திற்கு காரணமானவர் என்றும் புகழப்படும் செவ்வாய் பகவானைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

என்னைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கும் பாலஜோதிடம் வாசகர்களுக்கு ஆரம்பத்திலேயே ஒன்றைச் சொல்லி விடுகிறேன்,

இப்பொழுது நான் சொல்லப்போகும் சில விஷயங்கள் இதுவரை நீங்கள் படித்ததிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக, வேறுபட்டதாக இருக்கலாம். ஆயினும் கீழே சொல்லப்படும் சூட்சும விஷயங்கள் சில வருடங்களுக்கு முன்பே என்னால் எழுதப்பட்டவைதான்.

ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கும் மேலான என்னுடைய ஜோதிட அனுபவத்தில்  மிகப் பெரும்பாலான நாட்கள் ராகு, சனி, செவ்வாய் ஆகிய பாபக்கிரகங்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் பற்றி ஆராய்வதற்கே நான் செலவிட்டிருக்கிறேன்.

அதேபோல எதையும் நான் மேம்போக்காக எழுதுவது இல்லை. அரைத்த மாவையே அரைக்கும் விஷயத்தையும் நான் ஒருபோதும் செய்வதில்லை. என்னுடைய ஒவ்வொரு வார்த்தைகளையும் நான் கவனமாக தேர்ந்தெடுக்கிறேன். எனது ஒவ்வொரு எழுத்தையும் மறுக்க நீங்கள் பெரிதும் சிரமப்பட வேண்டியிருக்கும்.

downloadஜோதிடத்தில் யாராக இருந்தாலும் புரியும் தகுதிநிலை என்பது மிகவும்  முக்கியமான ஒன்று. இதன் காரணமாகவே அனைத்து முக்கிய சூட்சுமங்களையும் ஞானிகள் படிப்படியாகவே நமக்குப் புரியும்படி அமைத்திருக்கிறார்கள் என்று நான் அடிக்கடி எழுதி வருகிறேன்.

இதே கருத்தை என்னுடைய “பாதகாதிபதி பற்றிய ரகசியங்கள்” கட்டுரையில் “சித்தர்களும் ஞானிகளும் கணக்கு வாத்தியார்கள் அல்ல… உங்களின் காதுகளைத் திருகி ஜோதிட ரகசியங்களைக் கற்றுத் தருவதற்கு” என்று குறிப்பிட்டிருக்கிறேன்

ஜோதிடத்தின் அனைத்து சூட்சுமங்களும் புரிவதற்கு உங்கள் ஜாதகத்தில் புதன் அதற்கேற்ற வலுவுடன் இருக்க வேண்டும். உங்களின் நீடித்த அனுபவத்தைக் கொண்டும், உங்கள் ஜாதகத்தில் புதன் இருக்கும் வலுவைக் கொண்டுமே சில விஷயங்கள் உங்களுக்குப் படிப்படியாகத் தெளிவாகும்படி இங்கே சில நிலைகள் ஞானிகளால் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு ஜோதிடருக்கு அவரது ஜாதகத்தில் புதன் இருக்கும் வலுவைக் கொண்டே இந்த தெய்வீக சாஸ்திரத்தில் சில சூட்சுமங்கள் தெரிய அனுமதிக்கப் படுகின்றன. அதனால்தான் ஒருவர் வெற்றிகரமான ஜோதிடராக இருக்கும் நிலையில் இன்னொருவர் வாழ்நாள் முழுக்கக் கற்றுக் கொள்ளும் நிலையில் இருக்கிறார்.

அடுத்து, காலத்திற்கு ஏற்ப பலன் சொல்ல வேண்டும் என்பது ஜோதிடத்தில் ஒரு முக்கியமான விதி..

ஒரு ஜோதிடர் பலன் சொல்லும் பொழுது காலம் தேசம் உள்ளிட்ட இன்னும் சில விஷயங்களையும் கவனத்தில் கொண்டே பலன் உரைக்க வேண்டும் என்று நமது மகரிஷிகள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.

உதாரணமாக, ராஜயோகம் உடைய ஜாதகம் ஆயினும் அவன் பிறந்த குலத்தைக் கணக்கில் கொண்டே அவனுக்குப் பலன் சொல்ல வேண்டும் என்றொரு சுலோகம் சொல்கிறது.

மன்னராட்சி முறை இருந்த அந்தக் காலத்தில் ஒரு குடியானவனுக்கு நாடாளும் அமைப்பு எனப்படும் அரசயோகம் இருந்தாலும் அவன் அரசனாவான் என்று சொல்லப்படவில்லை. அரசகுலத்தைச் சேர்ந்தவனுக்கு மட்டுமே ராஜாவாகும் யோகம் இருப்பதாக குலத்தின் அடிப்படையில் பலன் சொல்லப்பட்டது. அது சரியாகவும் இருந்தது,

சாமான்யனும் முதல்வர் ஆகலாம், பிரதமர் ஆகலாம் என்ற ஜனநாயக முறை வந்துவிட்ட இந்தக் காலத்தில் ராஜயோக ஜாதகமுடைய அமைப்பில் பிறந்த ஒருவருக்கு நீ முதல் மந்திரியாக முடியாது, பிரதமர் பதவி உனக்கு கிடைக்காது என்று நாம் பலன் சொல்ல முடியுமா? எனவே ஜோதிட விதிகளும் காலமாற்றத்திற்கு உட்பட்டவைதான் என்பது உறுதி.

download-1அதேநேரத்தில் ஜோதிடத்தின் அடிப்படை விதிகள் மாற்ற முடியாதவை. மாறவும் மாறாதவை. ரிஷிகள் சொன்னதை மீறி பத்தாவதாக ஒரு கிரகத்தையும் பதிமூன்றாவதாக ஒரு ராசியையும் ஜோதிடத்தின் உள்ளே நுழைத்து விட முடியாது.

இப்போது செவ்வாய்க்கு வருவோம்.

செவ்வாயின் முக்கியமான காரகத்துவங்களில் ஒன்றாகச் சொல்லப்படுவது வீரம்.

இந்த வீரத்தைக் காலத்திற்கு ஏற்ப நாம் இரண்டு பிரிவாக பிரிக்க முடியும். ஜோதிட விதிகள் வகுக்கப்பட்ட- சட்டம், ஒழுங்கு இல்லாத- தனிமனிதனுக்கு பாதுகாப்பற்ற அந்தக்காலத்தில், ஒருவர் தன்னையோ, தன்னைச் சார்ந்தவரையோ அல்லது தனது இனத்தையோ பாதுகாக்கும் பொருட்டு, ஒருவரை அல்லது ஒரு குழுவை ஆயுதங்களால் வெட்டுவது, முரட்டுத்தனமாக அழிப்பது, கொல்வது வீரம் எனப்பட்டது.

ஆனால்  சட்டம், ஒழுங்கு நிலை நாட்டப்பட்டு ஜனநாயக ஆட்சி நடைபெறும் இன்றைய காலகட்டத்தில் ஒரு மனிதன் தன்னைப் பாதுகாப்பதன் பொருட்டுக்  கூட இன்னொருவரை ஆயுதங்களைக் கொண்டு தாக்கினால், அழித்தால் அது வீரம் எனப்படுவதற்கு பதிலாக குற்றம் எனப்படும்.

அப்படியானால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு வீரனை உருவாக்கிய பலம்பெற்ற செவ்வாய் இந்த நூற்றாண்டில் வீரனை உருவாக்குவாரா? குற்றவாளியை உருவாக்குவார?

பதிலை உங்களின் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

ஜாதகத்தில் செவ்வாய் நேரடியாக வலுப்பெற்றால் ஜாதகர் அசட்டுத் துணிச்சல் உள்ளவராகவும் முன்கோபக்காரராகவும் இருப்பார். மூர்க்கத்தனம் அவரின் பிறவிக்குணமாக இருக்கும்.

வலுப்பெற்ற செவ்வாய் கிரிமினல்தனத்தை உருவாக்கி தைரியமாகக் குற்றங்களைச் செய்ய வைப்பார், ரவுடி ஆக்குவார். ஜாதகருக்கு அடிப்பதிலும், தண்டிப்பதிலும் ஆர்வம் இருக்குமாதலால் காவல்துறை அல்லது ராணுவத்தில் பணி புரிய வைப்பார்.

இன்னொன்றையும் நான் உறுதிபடக் கூறுவேன்….

நமது மூலநூல்கள் செவ்வாய் வலுப்பெற்றவனை மாபெரும் வீரன், யுத்தத்தில் ஆயிரம் தலைகளைக் கொய்பவன், சேனாதிபதி, மஹாதைரியசாலி, பூமியை வெல்பவன் என்றுதான் புகழ்கின்றனவே தவிர இவன் நல்லவன், இளகிய மனம் படைத்தவன் கருணை வடிவானவன், மகாகோடீஸ்வரன், அரண்மனையில் சொகுசு வாழ்க்கை வாழ்பவன், வேகமாகச் செல்லும் ரதங்களில் கட்டிளம் மங்கையரை அருகில் வைத்துக் கொண்டு இவ்வுலக இன்பங்களை அனுபவிப்பவன் என்றோ, அல்லது வேதாந்தம் பேசிக்கொண்டு கடவுளுக்கு அருகிலேயே இருந்து அவருக்கு சேவை செய்து அவரின் திருவடிகளைப் போற்றும் அவ்வுலக இன்பத்தை அனுபவிப்பவனாகவோ ஒரு போதும் குறிப்பிடவில்லை.

radha_govindaji_by_vishnu108இதன் காரணமாகவே நான் செவ்வாய் எந்த ஒரு ஜாதகத்திலும் நேரடியாக வலுப்பெறக்கூடாது அப்படி வலுப்பெற்றால் அந்த நபர் வீரம் என்ற பெயரில்  குற்றங்களைச் செய்வார். நேரிடையாக வலுப்பெறாமல் சூட்சும வலுப்பெற்றால் மட்டுமே குற்றங்களைச் செய்யமாட்டார். என்று சொல்கிறேன்.

ஒரு கிரகத்தின் இது போன்ற கால மாற்ற காரகத்துவ நுண்ணிய நிலைகளை நீங்கள் புரிந்து கொண்டால் மட்டுமே ஒரு ஜாதகத்தில் பாபக்கிரகங்கள் எவ்வாறு பலன் செய்யும் என்பதை நீங்கள் துல்லியமாகச் சொல்ல முடியும்.

செவ்வாய் ஒரு பாபக்கிரகம் என்பதால் அவர் நேரிடையாக ஒரு ஜாதகத்தில் ஆட்சி உச்சம் என்ற ஸ்தானபலத்தை அடையவே கூடாது. அவர் லக்னாதிபதியாகவே இருந்தாலும் ஆட்சி உச்சம் அடைவது நல்ல பலன்களைச் செய்யாது.

சரி… பாபக்கிரகம் என்றால் என்ன? அது ஏன் பாபக்கிரகம் ஆக்கப் பட்டது? அந்தக் கிரகம் எந்த நிலையில் இருந்தால் நன்மைகள் கிடைக்கும்?

( மார்ச் 19, 2015 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது )

4 Comments on செவ்வாயின் சூட்சுமங்கள்… C – 010

 1. லக்லத்தில் குரு ஏழில் சனி இருக்க சபசப்த பார்வையால் சனி புதமடைவாரா அல்லது சனியின் பார்வையால் குரு பாதிக்கபடுவாரா குரு சனி இனைவு தோஷமா .

  • வணக்கம்,

   குருஜி அவர்களின் அனைத்து சேவைகளுக்கும் கட்டணம் உண்டு. இலவச பதில்களுக்கு மாலைமலர் முகவரிக்கு தபால் அனுப்பவும். ஏதானும் சந்தேவங்களுக்கு எனது
   8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர் கொள்ளுங்கள்.

   வணக்கம்,

   தேவி
   -Admin

Leave a Reply

Your email address will not be published.


*


Retype the CAPTCHA code from the image
Change the CAPTCHA codeSpeak the CAPTCHA code